மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )

This entry is part 1 of 18 in the series 26 ஜனவரி 2014
” செர்விக்ஸ் ” அல்லது தமிழில் கருப்பையின் கழுத்து என்பது கருப்பையின் குறுகலான கழுத்துப் பகுதியாகும். இது பெண் குறியின் உட்பகுதி.

          இதன் வழவழப்பான உட்சுவரில்தான் புற்றுநோய் செல்கள் ( Cancer Cells ) உருவாகின்றன. .சில பெண்களுக்கு இங்குள்ள ஆரோக்கியமான செல்கள் ( Healthy Cells ) உருமாறி அசாதாரமான செல்களாக ( Abnormal cells ) ஆகின்றன. இதை Displasia அல்லது உருமாற்றம் என்று அழைக்கின்றனர். இந்த உருமாறிய செல்கள் புற்றுநோய் செல்கள் இல்லை. ஆனால் மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி மாறினால் அதை Carcinoma in situ அல்லது துவக்க புற்றுநோய் எனலாம். இது உட்புறமாகப் பரவி தசைகளையும் துளைத்துக்கொண்டு சுற்று வட்ட உறுப்புகளைய்ம் தாக்கலாம். இரத்தத்தின் வழியாக தூரத்திலுள்ள வேறு உறுப்புகளையும் தாக்கி உடல் முழுதும் பரவலாம்.

          உருமாறும் செல்கள் 25 வயது முதல் 35 வயதுடைய பெண்களுக்கும் , புற்றுநோய் செல்கள் 30 முதல் 40 வயதிலும், பரவும் வகை 40 முதல் 60 வயதிலும் உண்டாகலாம்.

 

கருப்பைக் கழுத்து புற்றுநோய் உண்டாகும் விதம்

இதில் ஐந்தில் நான்கு பங்கு பாலியல் தொடர்பான வைரஸ் தொற்றால் உண்டாகிறது. இதில் முக்கியமாக ஜெநிட்டல் ஹெர்ப்பீஸ் ( Genital Herpes ) என்ற வைரஸ். இது தவிர Human Papilloma Virus ( HPV ) இனத்தைச் சேர்ந்த 60 வகையான வைரஸ்களில் சிலவற்றாலும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் உண்டாகின்றன. இவை பிறப்புறுப்பு மருக்களையும் ( Genital Warts ) உண்டுபண்ணுகின்றன.

18 வயதுக்குள் உடல் உறவு கொண்ட பெண்கள், பல ஆண்களுடன் உடல் உறவு கொண்டவர்கள், பல நிறைமாதக் குழந்தைகள் பெற்றவர்கள், பாலியல் தொடர்பான தொற்றுநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கே அதிக அளவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளது. பரம்பரை, புகைத்தல் , அதிக உடல் பருமன் , கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தல் போன்றவை இதர காரணங்கள்.

கருப்பைக் கழுத்து புற்றுநோய் அறிகுறிகள்

துவக்க காலத்தில் வலியோ அல்லது இதர அறிகுறியோ இருக்காது.

அதன்பின்பு முதன்முதலாகத் தோன்றும் சில அறிகுறிகள் வருமாறு.

* அதிகமான நீர் அல்லது இரத்தப்போக்கு. இது துர்நாற்றம் மிக்கது.

* உடல் உறவுக்குப்பின் இரத்தப்போக்கு.

* மதவிலக்குக்கு இடைப்பட்ட காலத்திலும் இரத்தப்போக்கு.

* மெனோபாசுக்குப் பின்பும் இரத்தப்போக்கு.

* மாதவிலக்கு நீண்டும் அதிக போக்கும் உள்ளதாக இருக்கும்.

புற்றுநோய் இதர உறுப்புகளுக்கு பரவியபின் உண்டாகும் அறிகுறிகள் வருமாறு.

* சிறுநீர் கழிப்பதில் சிரமம்.

* சிறுநீரில் இரத்தம்.

* இடுப்பு வலி, கால் வீக்கம்.

* வலியும், இரத்தமும் கலந்து மலம் கழித்தல்

* பசியின்மை, எடை குறைதல், சோர்வு, பலவீனம். .

             பரிசோதனை

பெண்கள் வருடத்தில் ஒரு முறையாவது பாலியல் உறுப்பு பரிசோதனையும் ( Pelvic exam ), பேப் ஸ்மியர் ( Pap Smear ) பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டும். இந்த இரு முறைகளாலும் வியாதியின் அறிகுறி தோன்றுவதற்கு பல காலத்துக்கு முன்பே 95 சதவிகிதமாக சரியாக கண்டறியலாம். இந்த பரிசோதனையில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து தரப்பட்டு மீண்டும் செய்யப்படும். அதிலும் குறை இருந்தால், பையாப்சி பரிசோதனை ( Cervical Biopsy ) மேற்கொள்ளப்படும்.

                      சிகிச்சை

பெரும்பாலான கருப்பைக் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை, மருத்துவம், கதிர் வீச்சு சிகிச்சை ஆகிய கூட்டு சிகிச்சை முறையில் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும்.

புற்றுநோய் கருப்பைக் கழுத்துப் பகுதியைத் தாண்டி பரவினால் ஹிஸ்டரக்டமி ( Hysterectomy ) எனும் அறுவை சிகிச்சை மூலம் கருப்பையும் அதன் கழுத்தும் அகற்றப்படும். அதன்பின்பு தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளது நல்லது.

                 தடுப்பு முறைகள்

* 18 வயதுடைய அல்லது குறைவான பெண்கள், உடலுறவில் ஈடுபட்டுவந்தால் , வருடம் ஒரு முறை பேப் ஸ்மியர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

* ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொள்ள நேர்ந்தால் பாதுகாப்பு சாதனம் ( Condom ) பயன்படுத்துவது நல்லது.

( முடிந்தது )

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *