கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே,
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ,
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி,
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ,
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்
திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ
”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள். “ “ஆமாம் எழுந்திரு”
”விடிந்ததற்கு அடையாளம் என்ன?
“பறவைகள் கத்துகிறதே, ஆனைச்சாத்தன் கீசுகீசென்று ஒலிக்கிறதே”
”ஓர் ஆனைச் சாத்தன் கூவினால் போதுமா? அதனால் பொழுது விடிந்ததாகிவிடுமா?”
”இல்லை, இல்லை, நிறைய ஆனைச் சாத்தன் கலந்து பேசுகிற ஒலி கேட்கிறதே, போதுமா?
ஆனைச் சாத்தன் என்பது வடமொழியில் ‘கஞ்ஜரிக’ என்று அழைக்கப்படும் பறவையாகும். தமிழில் அதற்கு ‘வலியன்’ என்று பெயர். அது பரத்வாஜப் பட்சி என்றழைக்கப்படும். அப்பறவையின் கண் மிக அழகாய் இருக்குமாம். இங்கு பரத்வாஜ மகரிஷியைப்போல் ஞானக்கண் என்பது உள்ளர்த்தமாகும்.
கீசு கீசு என்றால் என்ன பொருள்? அதற்குப் பொருள் நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் ஒலி நமக்கும் மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
”அவை கலந்து பேசின பேச்சரவம் உன் காதில் கேட்கவில்லையா? என்று கேட்க அவளோ,
”அப்பறவைகள் உங்கள் வருகையாலே ஒலித்திருக்கும்” என்றாள்.
”இல்லை, இல்லை பகலெல்லாம் பிரியப் போகிறோமே என்னும் ஏக்கத்தால் அவை கலந்து பேசுகின்றன. பறவைகள் தங்கள் பிரிவாற்றாமையால் பேசுகின்ற பேச்சுகளைக் கேட்டும் நீ எங்களைப் பிரிந்திருக்கலாமா? காது கேட்க வில்லையா? கண்ணன் மீது கொண்ட மயக்கம் தீர வில்லையா?” என்கிறார்கள்.
6—ஆம் பாசுரத்திலும் பறவைகள் “புள்ளும் சிலம்பின காண்” என்று சொல்லப்பட்டன. இப்பாசுரத்திலும் பறவைகள் ஏன் குறிப்பிடப் படுகின்றன என்றால் ஸ்ரீ வைஷ்ணவத்தில் பறவைகளுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது கதை கதையாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.
ஓர் யுகத்தில் திருவரங்கமே மண் மூடிக் காணாமல் போய்விட்டதாம். அப்போது விஷ்ணுதர்மா என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் காட்டில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். மேலே இரு கிளிகள் பேசிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு கிளி ஒரு ஸ்லோகம் சொல்லியது.
அதன் பொருள் : அங்கே விரஜை; இங்கே காவிரி; அங்கே நாராயணன்; இங்கே அரங்க நாதன்; அங்கே பரம்; இங்கே திருவரங்கம்.
விஷ்ணுதர்மா “இங்கே என்றால் எங்கே?” எனக் கேட்டான். அதற்கு அக்கிளி “இம் மரத்தடியில் தோண்டிப் பார்” என்றது.
அவன் தோண்டினான். அங்கே அரங்கன் கோயில் இருக்க மீண்டும் திருவரங்கம் கிடைத்தது.
இதே போல் இன்னொரு கதை உண்டு.
ஒரு முறை அந்நியர் படையெடுப்பு நிகழ நம்மாழ்வார் திருவிக்ரகத்தைக் காப்பாற்றி ஒரு பள்ளத்தாக்கில் கொண்டு போய் மண்மூடி மறைத்து வைத்தனர். பிறகு படையெடுப்பு அகல அதை எடுத்து வர அப்பள்ளத்தாக்கில் இறங்கவே அச்சப்பட்டனர். அப்போது ஆழ்வாரப்பன் என்பவர் துணிச்சலாக இறங்கித் தேடினார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு கருடப் பறவை ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘சடகோபா, சடகோபா’ என்றது. அந்த இடத்தில் தோண்ட திருவிக்ரகம் கிடைத்ததாம்.
இவ்வாறு பறவைகள் கூட பெருமாளின் பெருமையை உணர்ந்துள்ளனவாம்.
உள்ளே இருப்பவள் ‘இவர்களுக்கு இதுவேதான் வேலை’ எனப் பேசாமலிருந்தாள்.
இவர்களுக்கு அவள்மீது ஆற்றாமை பொங்குகிறது. எனவே அவளை ‘பேய்ப்பெண்ணே’ என்கிறார்கள். ஆனால் இது ஏளனமல்ல.
“அத்தா அரியே யென்று உன்னையழைக்கப்
பித்தரென்று பேசுகின்றார் பிறரென்னை” என்பார் திருமங்கையாழ்வார்.
”அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தராம் அவர்
பித்தரல்லர் மற்றையார் முற்றும் பித்தரே” என்பார் குலசேகரர்.
பேய்ப்பெண்ணே என்பதற்கு ’மதிகேடி’ என்பது வியாக்கியானம். பேய்கள் ராத்திரி வேளையில் முழித்திருந்து மற்ற வேளைகளில் தூங்கும். அதுவும் விடியல் வேளையான ப்ரம்ம முகூர்த்தத்தில் பேய்கள் உறங்க ஆரம்பிக்கும். எனவே அந்தக் காலத்தில் தூங்கினால் மனித வடிவில் பேய். அதனால்தான் ’பேய்ப்பெண்ணே’ என்கிறார்கள்.
உள்ளே இருப்பவளோ,
”பொழுது விடியாமலிருக்கும் பொழுது விடிந்தது என்கிற நீங்களன்றோ பேய்ப் பெண்கள். விடிந்தமைக்கு வேறு அடையாளம் சொல்லுங்கள்” என்று கேட்கிறாள்.
”இவ்வூர்ப் பெண்கள் தயிர் கடைவது கூட உன் காதில் விழவில்லையா?’ என்று கேட்கிறார்கள்.
”காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து” ஆய்ச்சியர்கள் தயிர் கடைவதாக ஆண்டாள் பாடுகிறார். ஆய்ச்சியர்கள் அணிகிற அச்சுத் தாலியும் ஆமைத்தாலியுமே இங்கு காசு, பிறப்பு, என்று காட்டப் படுகின்றன. அச்சாலே அடித்துப் போட்டு மாலையாகக் கோர்த்து அணிவதை அச்சுத்தாலி அல்லது வட்டத்தாலி என்பர். முளை முளையாகச் செய்து கோர்த்து அணிவதை ஆமைத்தாலி அல்லது நீண்ட தாலி என்பர்.
தயிர் கடையும்போது அந்த ஆபரணங்கள் ஒன்றோடொன்று உராய்வதால் ஏற்படும் ஒலி பேரரவமாக எழுந்ததாம்.
”ஆறு மலைக் கெதிர்ந்தோடும் ஒலி
அரவூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலி
கடல் மாறு சுழன்றழைக்கின்ற ஒலி
அப்பன் சாறுபட அமுதங் கொண்ட நான்றே
என்பது ஆழ்வார் பாசுரம். அதாவது அமுதம் பெற வேண்டி வாசுகியை நாணாக்கி மேருமலையை மத்தாக்கிக் கடல் கடைந்த ஒலியைப் போன்று ஆயர்பாடியில் தயிர் கடையும் பேரரவம் எழுந்ததாம்.
கை பேர்த்து என்பது கைக்குண்டான களைப்பைச் சொல்கிறது. ஏன் களைப்பாம்?. அது தயிரின் பெருமையாலும் கண்ணனினைப் பிரிந்த தாபத்தாலும் ஏற்பட்டதாம். அவன் இருந்தாலும் தயிரை மோராக்க விடமாட்டேன்.என்று கையைப் பிடித்து இழுக்கையாலெ உண்டான களைப்பாகவும் கொள்ளலாம்.
கண்ணன் வெண்ணெய் விழுங்கி மோர்க்குடம் உருட்டியதை,
”தாரார் தடந்தோள் உள்ளளவும் கைநீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போல்கிடந்தானை”
என்று திருமங்கையாழ்வார் சிறிய திருமடலில் அருளிச் செய்வார். தயிர் கடையும் ஆய்ச்சியர்கள் வாச நறுங்குழல் ஆய்ச்சியர்களாம். திருக்காட்கரை எனும் மலைநாட்டுத் திவ்யதேசத்தைக் குறிப்பிடும்போது ‘தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை’ என்னுமாப்போலே இங்கே ஊரை உறங்கவொட்டாமல் அவர்கள் தயிர் கடையும்போது கூந்தல் முடி அவிழ்ந்து அதன் பரிமளம் வெள்ளமிடுகிறதாம். இதைச் சொல்லி உள்ளே இருப்பவளிடம்,
‘நீ எப்படி உறங்குகிறாயோ?’ என்று கேட்கிறார்கள்.
அவளோ, ”இங்கு நிலைமை முன்போல் இல்லை. கிருஷ்ணன் பிறந்தபின் பசுக்கள் எல்லாம் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்களாய் அல்லவோ இருக்கின்றன. அவை பொழியும் பாலைத் தயிராக்கி இங்கே இரவும் பகலும் இடைவிடாமல் தயிர் கடைதலே பொழுதுபோக்காக அன்றோ இருக்கிறது. ஆகையால் இது பொழுது விடிந்ததற்கு அடையாளமன்று” என எண்ணிப் பேசாமல் கிடந்தாள்.
இப்போது இவர்கள் ‘நாயகப் பெண்பிள்ளாய்’ என்று கூப்பிடுகிறார்கள்.
”நீ எங்களுக்குத் தலைவி போன்றவள்; நீ பக்தி மிக்கவள்; நீ ஒளி படைத்தவள்; எம் கோஷ்டிக்கே நடுநாயகமாய் விளங்கும் உத்தமப் பெண் போன்றவள்; இப்படிப் படுத்துக் கொண்டிருக்கலாமா? ஹாரத்தின் நடுவில் பெரிய ரத்னம் நடுநாயகமாய் விளங்குமே; எனவே நீ நாயகப் பெண்பிள்ளை அல்லவா?” என்கிறார்கள்.
உள்ளே இருப்பவள்,
“நான் உங்களுக்கு அடிமையானவள். அப்படி இருக்கும்போது என்னை நாயகப் பெண்பிள்ளாய் என அழைக்கலாமா? நீங்கள் அழைக்கும் போது நான் வராமலே இருப்பேனா? என்கிறாள்.
அவள் பட்டென்று எழுந்து வருவதற்காக நாராயணமூர்த்தியான பெருமான் கேசவனை வதம் செய்ததைக் கூறுகிறார்கள். நாராயணன் என்றால் குற்றத்தைக் குணமாகக் கொள்பவன் என்பது பொருள். மூர்த்தி என்றால் திவ்யத் திருமேனி அழகுடையவன் என்று பொருள். மூர்த்தி என்பதற்கு தாய்த் தன்மையால் முகம் காட்டாது மறைந்து அருள்பவன் என்பது பொருள். இங்கே இடையர் பசுக்களோடு எளிமையாகக் கலந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். .
. கேசிஹந்தா என்ற பெயர் உடைய கேசி எனும் அரக்கன் குதிரை வடிவில் கண்ணனை மாய்க்கும் எண்ணத்துடன் வந்தான். அந்த அரக்கனின் வாயில் கையை விட்டுப் பிளந்ததால் கேசவ எனும் திருநாமம் வந்தது. அழகான கேசம் அதாவது தலை முடி உடையவராதலாலும் கேசவன் என்று பெருமான் அழைக்கப்படுகிறார்.
’கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன’ என்பார் நம்மாழ்வார்.
வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது ‘கேசவா’ என உச்சரித்து விட்டுக் கிளம்பினால் செல்லும் காரியத்தில் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
அப்படியும் அவள் எழுந்து வரவில்லை.
”நாராயணன், மூர்த்தி கேசவன் என்றெல்லாம் திருநாமங்கள் சொல்லியும் நீ பேசாமல் இருக்கலாமா? கர தூஷணர்களை வெற்றி கொண்ட சக்ரவர்த்தித் திருமகனை ஆலிங்கனம் செய்ய ஓடி வந்த சீதா பிராட்டியைப் போல நீ ஓடி வருவாய் என்றே கேசவனின் வெற்றியைச் சொன்னோம். அதுவே காரணமாகி நீ பயமெல்லாம் தீர்ந்துபோய் மார்பிலே கை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்கிறார்கள்
அவள் இவ்வளவுக்கும் பேசாமல் இருப்பதால் இவர்கள் சாவித்துவாரத்தின் வழியே பார்க்கின்றனர். அப்போது மிக்க அழகுடன் ஒளியுடன் அவள் படுத்துக் கொண்டிருப்பதை காண்கின்றனர்.
ஒளி பொருந்தியவளே எனும் பொருளில் தேசமுடையாய், என்றழைத்து,
”உன் ஒளி காட்டில் எரிந்த நிலவாய் ஆகாமல் உன்னைக் காணோமே என்று இருட்டடைந்து கிடக்கிற எங்கள் அந்தகாரத்தைப் போக்க வந்து கதவைத்திற” என்கிறார்கள்.
இந்தப் பாசுரம் குலசேகர ஆழ்வாரை எழுப்புகின்ற பாசுரமாகும்
ஆனைச் சாத்தன் எனும் பரத்வாஜப் பறவையானது மலையாள மொழியில் ’ஆனை சாதம்’ என்றழைக்கப்படும். குலசேகர ஆழ்வார் மலையாள நாட்டில் திருவஞ்சிக்களம் எனும் தலத்தில் அவதரித்தவள். எனவே ஆண்டாள் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
பேய்ப்பெண்ணே’ என்பதும்குலசேகராழ்வாருக்குப்பொருந்தும்
ஏனெனில் இவர்தம் பாசுரத்தில்,
பேய ரேயெனக் கியாவரும், யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்,
’ஆய னே!அரங் கா! என்ற ழைக்கின்றேன்,
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
[பெருமாள் திருமொழி—3.8}
என்று அருளிச் செய்கிறார்.
காசும் பிறப்பும் என்பவை ஆயர்குலப் பெண்களின் ஆபரணங்களாகும்.இவருக்கும் ஆபரணங்களுக்கும் தொடர்பு உண்டு. இவர் அரண்மனையில் எப்போதும் அடியார் கூட்டம் நிறைய இருக்கும் அதை விரும்பாத மந்திரிகள் சிலர் பகவானின் நகையைத் திருடி அப்பழியைப் பாகதவர்கள் மீது போட்டார்கள். குலசேகரரோ நம் அடியார் அது செய்யார் என்று சொல்லிச் சத்தியம் செய்ய,
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று, அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன்”
என்று பெரிய குடத்தில் விஷப்பாம்பை அடைத்து அதனுள் கையை இட்டார். பாம்பு வெளியே வந்து மூன்று முறை தலையை ஆட்டிச் சத்தியம் செய்து போக, நகைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்.
தேசமுடையாய் என்பது இவர்க்குப் பொருத்தமே. இவர் அரசர் குலத்தில் பிறந்தததால் தேஜஸ், பலம் வீர்யம் பலம் எல்லாம் முகத்தைப் பார்த்தாலே தெரியும்.
முன்னால் ஐந்து ஆழ்வார்கள்; பின்னால் ஐந்து ஆழ்வார்கள்; நடுவில் குலசேகரர் நடு நாயகமாக இருக்கிறார். எனவே நாயகப் பெண்பிள்ளாய் இவரே.
பிறப்பு என்பதைப் பிறவி எனப் பொருள் கொண்டால் ‘ஊனேறு செல்வத்து’ பதிகத்தில் திருமலையில் ஏதவதொரு பிறவியை விரும்பிப் பாடியவர் இவரே. தயிர் கடைதல், கேசி வதம் எல்லாவற்றையும் தம் பாசுரங்களில் வைத்து இவர் பாடியுள்ளார்.
இத்தகைய பொருத்தங்களால் இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை எழுப்புகிறது என்பது சாலப் பொருந்தும்.
- மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ”ஆனைச்சாத்தன்”
- கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்
- நீங்காத நினைவுகள் – 31
- வளரும் அறிவியல் – மின் இதழ்
- ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4
- தினம் என் பயணங்கள் – 2
- திண்ணையின் இலக்கியத் தடம்- 19
- சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்
- ஸ்ரீதரன் கதைகள்
- தாயகம் கடந்த தமிழ்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 17