தினம் என் பயணங்கள் – 4

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 

இன்றைய தின என் அலுவலகப் பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒற்றை ரோஜா. நெற்றியில் சின்னதாய் குங்கும நிற ஸ்டிக்கர். கண்ணாடியில் என்னைப் பார்த்து, தமிழ் இன்று நீ அழகாய் இருக்கிறாயே என்றேன். நிழல் தமிழ்ச்செல்வியின் முறுவலிப்பில் முழுதிருப்தி எனக்கு.  கொஞ்சம் விசிலடிக்க தோன்றியது. எப்போதாவது உற்சாக மனோநிலையில் மனதில் தோன்றும் ராகத்தை விசிலடிப்பது உண்டு. என் விசில் சப்தம் கேட்கும் போதெல்லாம் பாட்டி சொல்வாள், பெண்கள் விசிலடிப்பதும், சேவல் முட்டை யிடுவதும் கர்த்தருக்கு அருவருப்பான காரியம் என்று.

 

காற்றில் கலந்து எழுந்த விசில் சப்தத்தைக் கண்டனம் செய்ய இன்று பாட்டி இல்லை. என் தாய்வழிப் பாட்டி என்பதால் அவளை அம்மாச்சி என்று அழைப்பது வழக்கம். என் அம்மாச்சி ஆசிரியை. எப்போதும் ரிங் கொண்டை போட்டிருப்பாள். இயேசு கிறிஸ்துவை அதிகம் நம்புபவள். எப்பொழுதும் வேதாகமம், எப்பொழுதும் பிரார்த்தனை, பாடல் என்று போகும் அவள் நாட்கள். குண்டாய் குள்ளமாய், ஒரு கண்ணியமான அழகோடு ஆசிரியைக்கு உரிய மிடுக்கோடு இருப்பாள். எட்டுக் குழந்தைகள் பெற்றெடுத்த புண்ணியவதி. ஒன்பதாவதாக ஒரு ஆண்குட்டி போட்டிருந்தால், நான் செட்டில் ஆகி யிருப்பேனே என்றால், செல்லமாக கோபித்துக் கொள்வாள். நான் என்ன பன்றியாடி குட்டி போட என்பாள்.

 

ஒரு வழியாய் மூன்று சக்கர சைக்கிளோடு சாலையில் இறங்கிய போதுதான், இடது புற டயரில் காற்று கொஞ்சமும் இல்லை என்று உணர்ந்தேன். கட்டுரையின் முதல் வரியின் சிறப்பனுபவம் ஸ்டார்ட் (பாபா கௌண்டிங் ஸ்டார்ட் என்பது போல) வண்டி மிதி வாங்கியது. கைகள் வலிக்க துவங்கின. (கைல மிதிச்சா என்ன கால்ல மிதிச்சா என்ன, மிதி வண்டி மிதி வண்டி தானே) திசை திரும்பி பிரதான சாலையில் கலந்த போது தள்ளுவதற்கு என்று ஒரு ஆள் வந்தால் என்ன எண்ணுவீர்கள், நான் எண்ணிக்கொண்டேன் கடவுள் எனக்கு சைக்கிள் தள்ள வருவதாய். வேறு வழியில்லை படைத்தது அவன் தான். அவன் தான் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

 

“இப்போது அந்த மனிதர் பேசத் துவங்கினார். என்ன ஆச்சு ?

 

“சைக்கிள்ல காத்தில்ல.”

 

இதோ பக்கத்தில ஒரு பாய் கடை இருக்கு. அங்க அடிச்சுக்கயேன்

 

எதிர்ப்புறம் கிராஸ் செய்ய உடன் இருந்து உதவினார்.

 

பாய் கடையைச் சேர்ந்த மூவர் வெளியில் அமர்ந்து பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

 

“சைக்கிள் டயரில் கொஞ்சம் காத்தடிக்கனும்.”

 

யாரும் நிமிருவதாக தெரியவில்லை, வேலையில் அவ்வளவு மும்முரம்.

 

கொன்றை மரத்தடியில் இருந்தது அந்த சைக்கிள் கடை. அந்த மரத்தை தூரத்தில் இருந்து தினமும் பார்ப்பதுதான், நான் வீட்டிற்கு செல்ல திரும்ப வேண்டிய சாலையின்  வலது பிரதான சாலையில் அமைந்தி ருக்கிறது அந்த கொன்றை மரம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அடர்பச்சையில் சிவந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சேலையை ஒத்ததாய் இருக்கும். எப்போதும் மாலையில் வீடு திரும்பும் போது மரத்திற்கு மேல் மிதக்கும் மேகமும், பறவைகளின் பறப்புமாக சிறப்பு எழில் கனிந்திருக்கும்.

அதன் அடியில் முன்பெல்லாம் விநாயகர் கொலுவிருப்பார். இப்போது  ஏனோ அவரைக் காணவில்லை. தொப்பைக் கண்பதி அங்கு இல்லாதது ஒரு வெறுமைக் காட்சியைத் தந்தது !

 

பஞ்சர் ஒட்டியபடி இருந்த மும்மூர்த்திகளில் ஒருவரின் கவனம் இப்போது என்மேல் பட்டது, சற்று நகர்ந்து வந்து சக்கரத்தை அழுத்திப் பார்த்தார். பிறகு மின்சாரம் மூலம் காற்றடிக்கும் அந்த குழாயைச் சக்கரத்தின் நாபியில் பொறுத்தினார். இப்போது காற்று தடையில்லாமல் ட்யுபைக் கிழித்து வெளியேறியது. பஞ்சர் என்றார் முணு முணுப்பாக.

 

“சரி பஞ்சர் ஒட்டி விடுங்கள் நான் இறங்கிக்கட்டுமா,” என்றபடி இறங்க முற்பட்டேன். இப்போது அந்த சைக்கிள் தள்ளிய கடவுள், ஒரு ஸ்டுலை எனக்காக ஒதுக்கி, (அவர் மரத்தடியில் பழம் விற்கும் கடவுள் என்பது கூடுதல் சிறப்புங்கோ) தந்தார். நான் ஸ்டூலில் எப்பொழுதும் அமருவ தில்லை.  (ஒற்றைக் காலில் ஊன்று கோலுடன் உட்காரத் தடுமாறி எல்லாம் விழுந்து வாரின அனுபவம் தான் எனக்கு) ஸ்டூலை பிடிமானத்திற்காக பயன்படுத்திக் கொண்டேன்.

 

எல் போன்ற கருவியைக் கொண்டுவந்து டயரைக் கழட்டியபடி உருதில் பேசினார்கள் மூவரும். சைக்கிளைப் பற்றியதாக இருக்கவே…தமிழில் பேசினால் எனக்கும் புரியும் என்றேன்.

 

“ட்யுபின் மௌத் போயிடுச்சு வேற ட்யுப்தான் மாத்தனும்”.

 

“சரி மாத்தி விடுங்கள்”

 

கொஞ்ச நேர நிதானிப்பிற்கு பிறகு,

 

“ட்யுப் கைவசம் ஸ்டாக் இல்ல“ என்று பதில் வந்தது.

 

“என்னங்க எல்லாம் நீங்களே சொல்றீங்க, உங்க ஓனர்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க ட்யுப் வேற இடத்துல வாங்கி போட்டு தரமுடியுமான்னு“ என்றேன்

 

ஓனரிடமிருந்து பதில் வந்தது சாயந்திரம் வாங்க என்று.

 

“நான் இந்த ட்யுப் போட்டு தரேன் இப்படியே ஓட்டிட்டு போய்டுங்க“

 

“அய்யோடா, என்றாகிப் போனது எனக்கு”.

அந்த ட்யுபை அப்படியே போட்டுத் தரவில்லை, அதற்கு ஏதோ ஒட்டுப் போட்டுக் காற்றை நிரப்பி ஓட்டும் அளவிற்கு தந்தான் அந்தப் புண்ணிய வாளன்.

 

“எவ்வளவு தரணும் ?“

 

“பத்து ரூவா“

 

நூறு ரூபாய் தாள் ஒன்றை நீட்டினேன்.

 

“சில்லறை இல்லையா“

 

“நெறய காசிருக்கோ…கொடுக்கதான் மனசு வராது“ (இது பழம் விக்குற கடவுள்)

 

(உங்கப்பந்தானே நானே சம்பளம் இல்லாம கைல நயா பைசா இல்லாம காஞ்சி போய் கிடக்கேன். இது என்னோட மைண்ட் வாய்ஸ்)

 

“இல்லை“

 

அவன் இரண்டு கடைகளில் சில்லறை கேட்டு இறங்கினான் இல்லை என்ற பதிலோடு.

 

“நான் ஈவ்னிங் வாங்கிக்குறேன்“ என்று சைக்கிளைத் திருப்பினேன்.

 

“இந்தாங்க“ என்றபடி அவன் பர்சில் இருந்து எடுத்து நீட்டினான்.

 

90 ரூபாயை பெற்றுக் கொண்டு சாலையில் கலந்து, வாகனங்களுக்கு இடையில் ஊர்ந்து, நெளிந்து, தடையாக நின்ற பாதசாரிகளிடம் தாமதித்து பின் விலகி, காதைக் கிழிக்கும் ஹாரன் ஒலிகளுக்கு ஈடுகொடுத்து அலுவலக வாயிலை அடைந்த போது மணி காலை 10:10 !

 

சைக்கிளை அங்கிருந்த வேப்ப மரத்தடியில் ஒரு யு டேர்ன் போட்டு நிறுத்திய போது….புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..……….சத்தம் ! சக்கரத்தில் இருந்து காற்று உல்லாசமாய்த் தன் சிறையை விடுவித்துக் கொண்டது.

 

அட்டனென்சில் பெயர் இல்லை என்று எழுதி விட்டால் யார் தாசில்தார் அறையில் தண்டனைக் குற்றவாளி போல் எப்படி நான் போய் நிற்பது என்று எண்ணிய போது, உடலில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. பதட்டம் மூளைக்கு ஒவ்வாத உணர்வு என்று எண்ணுகிறேன். இந்த பதட்டத்திற்கான ஆணிவேர் என்ன வென்றால், தாமதமாக வருபவர் களை தாசில்தார் அம்மா கேட்கும் அத்தனை ஏச்சுக்களும் என் செவிகளைத் தீண்டிய பின்பே காற்றில் கலந்து எல்லா இடமும் பரவி அழியும் (அவங்க ரூம் பக்கத்து அறைதான் என் இருக்கை). என் சுயத்தைக் காயப்படுத்த யாரையும் நான் அனுமதிக்க முடியாது.

 

மனம் எப்போதும் நடுநிலையில் இருந்து விட்டால்  தொந்தர வில்லை.   தாமத மாக நான் வர மனம் தடுமாறத் துவங்கியதால்…..என் ஊன்று கோல் சறுக்கி விட நான் நிலை தடுமாறித், தலைக்குப்புற விழ தலை நங்கென்று சுவரில் மோத….என்னைத் தாங்கவென சுற்றி இருந்தவர்கள் சூழ, சற்று தூரத்தில் நின்றிருந்த சக ஊழியையும், நண்பியுமான மகேஸ்வரி ஓடி வந்து என்னைத் தூக்க முயல, சுற்றியிருந்தவர்கள் ஆளுக்கொரு கை என்று கொடுத்து என்னை இருக்கையில் கொண்டு போய் அமர வைத்திருந்தார்கள்.

 

இந்த ஒற்றுமை எல்லா ஆக்கமான செயல்களுக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

 

“அய்யோ ஒடம்பு ஒதறுது பாருங்க பயந்துட்டாங்க போல, கொஞ்சம் தண்ணி குடுங்க…”

 

“ஒரு டீ வாங்கியாப்பா….”

 

“அந்த ஃபேனைப் போடுங்க….”

 

“வியர்க்குது கொஞ்சம் துடைச்சு விடேம்மா.”

 

“தமிழ்ச்செல்வியா விழுந்துட்டா……….பார்த்து வரக்கூடாது.” (தாசில்தார் அம்மா) ஜெயசீலி இனி அட்டெண்டன்சை அவ சீட்டுக்கே எடுத்துட்டுப் போய் கையெழுத்து வாங்கிடு….இங்கவெல்லாம் வரவைக்காத பாரு வழுக்கி விட்டுடுச்சு………..

 

“விழுந்துட்டியா ? எப்படி என்னாச்சு, காலைல சாப்பிட்டாயா நீ….ரெண்டு இட்லி ஒரு வடை வாங்கியாப்பா……….இந்த பொண்ணு சாப்பிட்டிருக்க மாட்டா…….” (தேர்தல் துணை வட்டாட்சியருக்கு …………தேர்தல் துணை வட்டாட்சியர்………..உறவில் மாமா)

 

கொஞ்சம் தண்ணீர் குடித்து என்னை நிதானப் படுத்திக் கொண்டு மற்ற எல்லாவற்றிற்கும் (டீ..சாப்பாடு…வியர்வை துடைத்தல்) நன்றி சொல்லி என் பணியைத் துவங்கிக் கடகடவென்று டைப்செய்து தாசில்தார் டேபிளில் வைக்க சொல்லிவிட்டு… என் அம்மாவிற்கு ஃபோன் செய்தேன்.

 

தீனமான குரலில் “ஹலோ” சொன்னாள் அம்மா….

 

“அம்மா சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சு அன்புவைக் கொஞ்சம் வர சொல்றீயா….” (சின்னத் தம்பி)

 

“அவன் கடையில இருக்கான்.”

 

“ஆனந்த் (அக்கா மகன்)”

 

“அவனுக்கு வேலை இருக்கு, நீ சதாம்க்கு இல்லனா பாஷாக்கு கால் பண்ணேன்,” என்றாள்

 

எனக்கு எரிச்சல் வந்தது. “ஏன் உன் அக்காவிற்கு நீதான் செய்ய வேண்டும் போய் செய் என்று சொல்லித் தரவில்லை சிறுவயது முதலே…….”  கொஞ்சம் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

 

“சரி அருள் (பெரிய தம்பி) வந்தா நான் போன் செய்ய சொன்னதா சொல்லு.”

 

“கொஞ்சம்……..ம்ம்ம் என்றொரு இழுவைக்குப் பின் சரி சொல்றேன்,” என்று ஃபோனை வைத்து விட்டாள்.

 

இப்போது என் சைக்கிள் பஞ்சர் ஒட்டியதும், அதைக் கொண்டு வந்து எனக்குதவ, நான் ஒவ்வொருவருக்காக ஃபோன் செய்தேன்.

 

“பாஷா.”

 

“இதோ வந்துர்ரேன்மா”………..அடுத்த அழைப்பிற்கு எடுக்கவே இல்லை

 

“சதாம்.”

 

“நான் நாகூர்ல இருக்கேன் மா.”

 

“மைக்கேல் அண்ணா”

 

“பிரேயர்ல இருக்கேனம்மா.”

 

“உதய சூரிய பிரபா.”

 

“காலையில போன் பண்ணியிருந்தா வந்திருப்பேன் இப்ப முடியாதே.”

 

சங்கீதா,   இவள் என் சிநேகிதி நல்ல கருப்பு, அடர்ந்த சுருண்ட குழல்கள். கலையான முகம். படிப்பு வாசனை அற்றவள்…

 

“எழுதக் கற்று தரேன் வாடி என்றால்…ம்கூம் கழனில நீயா வந்து களை வெட்டுவ,” என்று எதிர்க் கேள்வி கேட்டுச் சிரிப்பவள். 19 வருடங்களை கடந்தும் உயிர்த்திருக்கும் நட்பு. கோபம், மகிழ்ச்சி, சலிப்பு, உரிமை பாராட்டல் என்று, அதற்கு அதிகமாகவும் வெளிப்படும் உணர்வுகள் அவளிடத்தில் இருந்து.

 

நான் உரையாட மறு முனையில் சங்கீதா அல்ல, சங்கீதாவின் கணவர் பாஸ்கர் அண்ணா….“என்னமா தமிழு“ என்றவரிடம்:

 

“சங்கீதா இல்லன்னா…” என்ற வினவினேன். “இல்லம்மா நெல்லு கூட்ட போயிருக்கா….”

 

“சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சுண்ணா, சங்கீதா வந்தா சொல்றீங்களா….?” “வந்ததும் சொல்றேம்மா…” என்றார்

 

கொஞ்ச நேரம் நான் பணியில் மூழ்கிவிட, வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்தாள் சங்கீதா…

 

“சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சுடி சாயந்திரம் எப்படி வீட்டுக்கு போறதுன்னு தெரியல“……….

 

“உங்க அண்ணன் சொல்லுச்சு, நெல்லு கூட்டுற இடத்துக்கே வந்துடுச்சுடி அதான் ஒடியாந்தேன்… எங்க காசை குடு, நான் போய் ஓட்டி எடுத்துனு வந்து வுட்டுட்டு போறேன்“ என்றவளிடம் பணத்தைக் கொடுத்தேன்.

 

எடுத்துக் கொண்டு கிராமத்துப் பாணி நடையோடு விடுவிடுவென்று கடந்தாள். (நெற்கட்டை சுமந்தபடி நடக்கும் பெண்களைப் பார்த்தவர் களுக்கு அது என்ன நடை என்று தெரிந்திருக்கும்)

 

ஃபோன் ரீங்காரம் செய்தது.

 

அம்மாதான், “அருள்கிட்ட சொன்னேன் மா ….அவன் ஆட்டோ எடுத்துக் கிட்டு போய்ட்டான் எதுவும் சொல்லல…..நீ வேற ஆட்டோ ல போட்டு சைக்கிள எடுத்துட்டு வந்துடுறியா…?”

 

(அம்மா அங்கு உதவிக்கு போகச் சொன்னாலும் யாரும் வரப் போவ தில்லை. அம்மாவை நோவதால் என்ன பயன் ?)

 

மனம் கனக்கத் துவங்கியது. என் பெரிய தம்பிக்காகத்தான் முன்புறம் நான் வசித்த நல்ல இடத்தை விட்டு…எந்த விதத்திலும் எனக்கு வசதி யில்லாத… யாருடைய உதவியும் இன்றிப் புழங்க முடியாத அந்த அறைக்குச் சென்றேன். இந்தச் சிறிய இன்னலில் கூட அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை. அவரவர் குடும்பம், அவரவர் பணி, அவரவர் வாழ்க்கை….. !  இதுதான் என் சுற்றுப் புறம் !  உதவி, உதவி என்று கதறினாலும் உதவ அன்று அருகில் யாருமில்லை !  என்ன இக்கட்டான நிலமை எனக்கு !

 

என் அம்மாவிற்கு பிறகு அந்த இல்லத்தில் என் நிலை என்னவாக இருக்கும் என்று மனம் முரண்பாடாக சிந்திக்க துவங்கிய அந்த நொடியில் தான் அந்த கறுப்பழகி வந்து நின்றாள். இந்தா என்று ட்யுபை நீட்டினாள். வேற ட்யுப் மாத்திட்டேன். 100 ரூபாடி…மாத்துறதுக்கு 20 ரூபாடி சாப்பாடு வாங்கியாந்தேன் 45 ரூபா நீ குடுத்த காசு சரியாபோச்சு சாப்பிடலாம் வா… காத்து வரலியா…ஏன் இப்படி வேர்க்குது…? முந்தானையால் என் வியர்வையை ஒற்றி எடுத்தாள், என் அனுமதி இன்றி…முந்தானையில் கொஞ்சம் மண்ணின் மணமும், நெல்லின் குணமும், அவள் இயல்பான அன்பும் கலந்து மணத்தது.

 

(நட்பு ஒன்று போதும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க, உறவுகளை எதிர்பார்க்காதே என்றது மனது !)

 

அவள் பேசியதிலேயே வயிறு நிரம்பிப் போனது. இன்றைய மதிய உணவு அவளோடு….அவள் என்னை விட்டு அகன்றபோது மணி பகல் 2:00

 

என் பணிகளை இலகுவாக முடித்துக் கொண்டேன். தட்டச்சு செய்வது என்பது மிகவும் இலகுவான ஒன்றாக இருந்தது. என்னைப் பொறுத்த வரையில்…

 

மணி ஆறு…

 

பறவைகள் இசைக்க துவங்கிவிட்டன. காற்றில் வெப்பம் குறைந்து விட்டது. வட்டாட்சியர் அலுவலகம் பொதுமக்களை வழியனுப்பிக் கொண்டிருந்தது. நான் வட்டாட்சியர் அலுவலகத்தின் அசோக ஸ்தூபியைக் கடந்து, மெயின் கேட்டைக் கடந்து… சாலையில் கலந்து, சற்று தூரம் வாகனங்களுடன் போட்டியிட்டு…தட்டச்சு பயிலும் என் மகளை அழைத்துக்கொண்டு, அவளோடு அவள் வகுப்புக் கதைகளை பேசியபடி என் இருப்பிடம் நோக்கிப் போகிறேன்.

 

மனதில் உற்சாகக் கீற்று தொத்திக் கொண்டது. தூசியில் சுழன்ற காற்று…. மாம்பழம் விற்கும் சிறுவன்………துணிக் கடைகள்….. துணிக்கடை வாசலில் காவல் நின்று காயிதம் தின்னும் பசு…! பாவம் ! பால் கறந்த பிறகு வெளியேறி அதுவே தீனி தேட வேணும் !  கடந்த வாகனம் ஒன்றின் வாகன ஓட்டி தலையில் முளைத்திருந்த சிவப்பு கொம்பு…முல்லை மணம்…மல்லிகையின் வாசம்… சாதி முல்லையின் சிணுங்கல், பாதசாரிகளின் முணகல்,

 

டாஸ்மாக் கடையின் வாடிக்கைக் குடிமகன்கள் கூத்து ! குப்பைகள், ஈமொய்க்கும் இறைச்சிக் கடை… !

 

இத்தனையும் கடந்து, வீட்டிற்கான சாலையில் கலக்கும்போது பார்க்கிறேன். கொன்றை மரம் பச்சை வெளிகளில் பதித்த பவள மலர்களோடு மகிழ்வுப் புன்னகை ஒன்றை வீசுகிறது எனக்காக…

 

இதுவும் கடந்து போகும்……………………………………………!

 

சைக்கிள் டியூப் பஞ்சர் ரிப்பேர் எனக்கொரு புதிய சோக அனுபவம்.  மறக்க முடியாத  அனுபவம் !  உறவுகள் யார், உதவுபவர் யார் என்று அறிந்து கொண்டேன்.  அது என் அனுதினக் கதை.  நிஜக் கதை !

 

என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும். – வேதாகமம்.

 

 

[தொடரும்]

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

3 Comments

 1. Avatar
  Benjamin R Ross says:

  என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும். – வேதாகமம்.
  அருமையான, ஒரு உண்மையான வாக்குத்தத்தம். ஆண்டவரின் ஆசிர்வாதங்கள்!

 2. Avatar
  Dr.G.Johnson says:

  படித்து இரசித்தேன் தமிழ்ச்செல்வி. பாராட்டுகள். … டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *