மருமகளின் மர்மம் – 15

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

15

அலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். பேசியது ஓர் ஆண் குரல்: ‘யாரு? மிஸ்டர் ரமேஷா?’

‘ஆமாங்க. நீங்க யாரு?’

‘நான் யாருன்றதை யெல்லாம் அப்பால சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே?’  –  குரலில் ஒலித்த கிண்டலும் அழுத்தமும் அவனது கேள்வி ஏதோ விபரீதத்தை உள்ளடக்கி யிருந்ததாய் அவனுக்குத் தோன்றச் செய்தன.

‘நீங்க யாருங்க?’

‘லூசியோட மச்சான்.’

அவனுக்குத் திக்கென்றது.

‘என்னங்க! பேச்சு மூச்சைக் காணோம்?’

ரமேஷ் தன் கடுப்பை அடக்கிக்கொண்டு, ‘என்ன பேசணும் உங்களுக்கு என்னோட?’ என்றான். குரலில் பதற்றம் ஒலிக்காதவாறு கவனமாக இருந்தான்.

‘வேற ஒண்ணுமில்ல. லூசிக்கு நீங்க எழுதின லவ் லெட்டர்ஸ் எல்லாம் எங்ககிட்ட இருக்கு. உங்களுக்கு அதெல்லாம் திருப்பி வேணுமில்ல? அந்த லெட்டர்ஸ் எல்லாம் நீ கட்டப் போற பொண்ணு பார்வைக்குப் போனா நல்லாவா இருக்கும்?’

‘..  ..  ..’

‘என்னப்பா! ஒண்ணுமே பேச மாட்டேன்றே? எதுனா சொல்லுப்பா.’

‘நீதான் சொல்லணும். நீதானே •போன் பண்றே?’

‘அஞ்சு லச்சம் வெட்டிரு. அந்த லெட்டர்ஸை எல்லாம் பத்திரமா ரிஜிஸ்தர் தபால்ல அனுப்பிட்றோம்.’

‘..  .. ‘அனுப்பிட்றோம்’ னா யாராரு‘?’

‘லூசியும் நானும்தான். வேற யாரு?’

‘எங்கேருந்து பேசறே நீ?’

‘அது பத்தி உனக்கு என்னப்பா?’

‘பணம் குடுக்காட்டி?’

‘உன்னோட லெட்டர்ஸெல்லாம் அந்தப் பொண்ணு கைக்குப் போய்ச் சேந்துடும். என்ன சொல்றே?’

ரமேஷ¤க்கு நெற்றியில் வேர்வை அரும்பு கட்டியது. ஆனாலும், ஏதோ ஒரு துணிச்சலில், ‘தாராளமா அனுப்பிக்க. லூசி கிட்டவும் சொல்லு – அவ கிட்ட நான் மோசம் போன கதையை யெல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட ஏற்கெனவே நான் சொல்லியாச்சுன்னு. ஏன்னா, நான் யோக்கியமான ஆளு. உங்க மாதிரியான ஆளு இல்லே’ என்றான் அமர்த்தலாக.

மறு முனை அமைதி யாயிற்று.

‘என்னப்பா, பேச்சு மூச்சைக் காணோம்? லூசிக்கு என்னோட அனுதாபங்களைச் சொல்லு.’

‘லூசியைக் கன்சல்ட் பண்ணிட்டு அப்புறமா உன்னோட பேசறேன்.’ – அவன் தொடர்பைத் துண்டித்தான்.

ஒரு திடீர் எண்ணத்தில் அப்படிச் சொல்லிச் சமாளித்துவிட்டாலும், மிக அதிக அளவில் உள்ளுணர்வு படைத்த லூசி தான் சொன்னது வெறும் சமாளிப்புப் பொய் என்பதைப் புரிந்துகொண்டு கடிதங்களை யெல்லாம் நிர்மலாவுக்கு அனுப்பி வைத்துவிட்டால் என்ன செய்வது என்று அவன் உள்ளூற அஞ்சினான். சோமசேகரன் அவளைக் கண்காணித்து வந்துள்ளது போன்றே அவளும் தன் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளாள் என்று அவன் எண்ணினான்.

ஆனால், ஆழ்ந்து சிச்தித்த போது, அந்தக் கடிதங்களை யெல்லாம் அவசரப்பட்டு நிர்மலாவுக்கு அனுப்புவதில் பணரீதியாக அவளுக்கு ஆதாயமில்லை யாதலால், அவள் அப்படிச் செய்வதை ஒத்திப் போடுவாள் என்றும் அவனுக்குத் தோன்றியது. காலதாமதம் ஆனாலும் அச்சுறுத்திப் பணம் பறிக்கவே முயல்வாள்.

அவன் உடனே சோமசேகரனின் அலுவலகத்துக்குப் போய் அவரைச் சந்தித்தான். பதற்றத்தோடு அவன் சொன்னவற்றை யெல்லாம் பதறாமல் கேட்டுக்கொண்ட அவர் கண்களை மூடிக்கொண்டு நில நொடிகள் வரையில் யோசித்த பிறகு சொன்னார்: ‘எப்படியும் அவளோ இல்லாட்டி அவளோட ஆளோ •போன் பண்ணுவாங்க. அப்பவும் இதையே சொல்லு. உன்னால ஆனதைப் பாத்துக்க’ ன்னு சொல்லிடு. நான் ராஜரத்தினத்துக்குக் கால் போட்டுப் பேசறேன். மறுபடியும் அவளைக் கண்காணிக்கச் சொல்றேன். அந்த பிஸ்னெஸ்மேன் கைவிட்டுட்டதால  பணத்துக்கு அல்லாட்றான்னு நினைக்கிறேன். அதான் இப்ப ப்ளேக்மெயில்லே இறங்கி யிருக்கா.’

‘அவதான் வேலையில இருந்துக்கிட்டுச் சம்பாதிக்கிறாளேப்பா?’

‘கெட்ட பழக்கங்களுக்கு ஆளானவங்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாதுப்பா.’

‘மணி அஞ்சு ஆச்சுப்பா. கெளம்பலாமா?’

‘சரி.’

‘என்னோட பைக்லயே போயிடலாம். இன்னைக்கு ஆட்டோ சவாரி வேணாமே?’

‘சரி, ரமேஷ்.’
இருவரும் தெருவுக்கு வந்தார்கள். பைக்கின் பின்னிருக்கையில் ஏறும் முன் மெதுவாக அவன் தோளில் தட்டி, காதருகே வாய் வைத்து, ‘ரமேஷ்! நான் சொல்ற ஆளைக் கவனி. அதோ, அந்தப் பெட்டிக் கடையில கூல் ட்ரிங்க்கும் கையுமா நிக்கிறானே ஒரு தடியன் – சிவப்புல கறுப்புக் கட்டம் போட்ட ஷர்ட்டும், கறுப்புப் பேண்ட்டுமா –  அவனோடதான் அன்னைக்கு ஒரு நாள் லூசியை நான் ஒரு ஓட்டல்ல பார்த்தேன். அவந்தான் அந்த ராபர்ட்டா யிருக்கணும். நல்லாப் பார்த்து வெச்சுக்க.’  –  ரமேஷ¤ம் அப்படியே செய்தான். பிறகு இருவரும் புறப்பட்டார்கள்.

‘ரமேஷ்! நீ எதுக்கும் கவலைப்படாதே. நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும். இடையில துன்பம் வந்தாலும் வரலாம். ஆனா அது விலகிடும்ப்பா. நான் நினைக்கிறேன் –  லூசிதான் அவனை இங்கே அனுப்பி வெச்சிருக்கான்னு.’

‘அவளும் வந்திருக்களோ என்னமோ. அவ நிர்மலாவைச் சந்திச்சா எல்லாமே பாழாப் போயிடுமேப்பா?’
‘கவலைப்படாதே, ரமேஷ்! பார்க்கலாம். எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ, அதுதான் நடக்கும்.’

அன்றிரவே, சாரதா தூங்கிய பிறகு, சோமசேகரன் மும்பை ராஜரத்தினத்துடன் பேசினார்: ‘ராஜரத்தினம்!  நான்தாம்ப்பா, சோமசேகர் பேசறேன். அந்தப் பொண்ணு லூசி பாம்பேலதான் இருக்காளா, இல்லாட்டி இங்க மெட்ராஸ் வந்திருக்காளான்னு தெரியணும்.’

‘யூ ஆர் லக்கி! கொஞ்ச நேரத்துக்கு முந்தி நானே அவளை ஒரு தியேட்டர்ல பார்த்தேன். எனக்கு முன் வரிசையில இருந்தா. அதனால இங்கதான் இருக்கா.’

‘அவளோட வீட்டு அட்ரெஸ் ஞாபகம் இருக்கா?’

‘கொஞ்சம் லைன்ல இருங்க. குறிச்சு வெச்சிருக்கேன். பார்த்துச் சொல்றேன்.’

ராஜரத்தினம் சொல்லச் சொல்ல, அவர் எழுதிக்கொண்டார்
‘ஏதாச்சும் ப்ராப்ளமா?’

‘இப்ப எதுவும் இல்லே. ஆனா வரும்னு எதிர்பார்க்கிறாங்க. அப்படி வந்தா, உன்னை •போன்ல கூப்பிட்டு என்ன உதவி தேவைன்னு சொல்றேன், ராஜரத்தினம்.’

‘கண்டிப்பா. என்னாலான உதவியைச் செய்யிறதுக்கு நான் எப்பவும் ரெடி.’

‘தேங்க்ஸ், ராஜரத்தினம். குட் நைட்!’..  ..  ..’

‘ரமேஷ்! அவ பாம்பேலதான் இருக்காளாம். இந்தா, அவளோட அட்ரெஸ். டயரியில குறிச்சு வை. அதையும் அலமாரி லாக்கர்லயே வை.’

‘சரிப்பா.’

‘கவலைப்படாம் தூங்கு, போ.’

‘சரிப்பா. .’

இரண்டு நாள்கள் கழித்து, அலுவலக விஷயமாய் தில்லி போவதாய்ச் சொல்லிவிட்டு, சோமசேகரன் மும்பைக்குச் சென்று வந்தார். வந்து சேர்ந்த அன்றிரவு, சாரதா உறங்கிய பிறகு, தமது அறைக் கதவு சாத்திய தனிமையில், ‘ரமேஷ்!  உனக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கேன்.,’ என்று புன்னகை புரிந்தார்.

‘என்னப்பா?’

‘உண்மையில நான் பாம்பேக்குப் போய் அந்த லூசியை  வேவு பார்த்தேன். ஞாயித்துக் கிழமை அதிகாலையிலேயே போய்க் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவ என்னைப் பார்த்ததும் பேயறைஞ்ச மாதிரி நின்னா. ‘உன்னோட மாஜி வருங்கால மாமனார் வந்திருக்கேம்மா,’ ன்னு சொல்லிக்கிட்டே சடக்னு உள்ளே போயிட்டேன். நல்ல வேளையா அவ மட்டுந்தான் இருந்தா. நானே ஒரு நாற்காலியில உக்காந்தேன். கதவைச் சாத்திட்டு உள்ளே வந்தா. ‘உக்காரு,’ ன்னேன். உக்காந்தா. என் கைப் பையைத் திறந்து அதிலேர்ந்து பிஸ்டலை எடுத்தேன்.’
‘பிஸ்டலா!!’ என்ற ரமேஷ் விழிகள் விரிய அவரைப் பார்த்தான்.

‘ஆமாம்ப்பா. பிஸ்டல்தான். வெடிச்சா புகை மட்டும் வர்ற டம்மித் துப்பாக்கி. பிஸ்டலைப் பார்த்ததும் அவ அப்படியே பயந்து நடுங்கிட்டா. ‘ரமேஷோட லெட்டர்ஸை யெல்லாம் எடு. உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லேன்ற முடிவோடதான் இப்ப வந்திருக்கேன். வம்பு பண்ணாம குடுத்துட்டா, ஒண்ணும் பண்ணாம போயிடுவேன்!’ அப்படின்னேன். உடனே அலமாரியைத் திறந்து ஒரு பையை எடுத்துட்டு வந்து  குடுத்துட்டா. ‘வேற ஏதாச்சும் லெட்டர்ஸ் பாக்கி வெச்சிருக்கியா?’ ன்னு கேட்டேன். வேற எதுவும் இல்லேன்னு சத்தியம் பண்ணினா. ‘அந்த பிஸ்னெஸ்மேனைக் கல்யாணம் பண்ணிக்கலையா நீ! சாரி. என் கேள்வியே தப்பு. அவன் உன்னோட லச்சணம் தெரிஞ்சு உன்னை உதறிட்டுப் போயிட்டானாமே? என்ன முழிக்கிறே? உன்னோட ஒவ்வொரு அசைவையும் இங்கே இருக்கிற என்னோட மச்சான் – ஒரு போலீஸ் ஆ•பீசர் –  மூலமா கண்காணிச்சுக்கிட்டிருந்தேன். இப்பவும் கண்காணிக்கிறேன். அப்பப்ப அவரும் எனக்குத் தகவல் குடுத்துக்கிட்டே இருக்காரு. இல்லாட்டி உன் அட்ரெஸ் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? அந்தத் தடியன் ராபர்ட்டை மெட்ராஸ்க்கு அனுப்பி வெச்சிருக்கே போலிருக்கே? என்ன அப்படிப் பாக்கறே? எல்லாமே எனக்குத் தெரியும்’ அப்படின்னேன். ‘ரைட். நான் புறப்பட்றேன். அதுக்கு முன்னாடி நான் உனக்கு வாங்கித் தந்த தங்க நெக்லேஸை எடுத்துக் குடுத்துடு’ ன்னேன். ஒரு நொடி தயங்கினா. ஆனா எடுத்துக் குடுத்துட்டா. ‘நீ ரமேஷ¤க்கு எழுதின லெட்டர்ஸ் எல்லாம் பத்திரமா எங்கிட்டதான் இருக்கு. நீயும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே? அப்ப உன்னை ப்ளேக்மெய்ல் பண்றதுக்கு எனக்கு உதவியா யிருக்கும்’ னேன். ‘அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. இப்பதான் ஒருத்தரு என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன்வந்திருக்காரு. என் வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க’ ன்னு கெஞ்சிக் கை யெடுத்துக் கும்பிட்டா. மேலே எதுவும் பேசாம, ‘சே! நீ எல்லாம் ஒரு பொம்பளை!’ ன்னு சொல்லித் தூன்னு துப்பிட்டு வந்துட்டேன்.’

ரமேஷ் பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டான்.

‘அப்பா! எப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்திருக்கீங்க எனக்காக! நீங்க பாட்டுக்குத் தனியாப் போய் நின்ன்னுருக்கீங்களே? அப்ப எவனாச்சும் ரவுடி அவளோட இருந்திருந்தா?’

‘அதை எல்லாம் பாத்தா முடியுமா? வாழ்க்கையில சில ரிஸ்க்குகளை எடுத்துத்தான் தீரணும். நீ எனக்கு ஒரே மகன். உன் சந்தோஷந்தானேப்பா எனக்கு முக்கியம்?  இந்தா. முதல்ல உன்னோட எல்லா லெட்டர்ஸ¤ம் இருக்கான்னு பாரு.’

பார்த்தான்: ‘எல்லாம் இருக்குப்பா. ஏம்ப்பா? இனிமே அவளோட லெட்டர்ஸ் நமக்கு எதுக்குப்பா? கிழிச்சுடட்டுமா? கிழிச்சுட்டா மனசு லேசாயிடும். இன்னும் அதிக நிம்மதியா யிருக்கும்.’

‘இல்லே, ரமேஷ்! இப்ப ஒண்ணும் செய்யாதே. நீயும் அவளும் ஓட்டலுக்கு எத்தினியோ வாட்டி போய் உக்காந்து சாப்பிட்டிருக்கீங்க. அப்ப யாரையாச்சும் வெச்சு அவ உங்களை •போட்டோ எடுத்திருந்தான்னு வை. அதை வெச்சும் உன்னை அவ ப்ளேக்மெய்ல் பண்ணலாமில்ல? அப்ப நமக்கு அவ லெட்டர்ஸ்தான் துருப்புச் சீட்டாப் பயன்படும்.’

‘சரிப்பா.’

..  ..  அதற்குப் பிறகு லூசி அவள் வாழ்க்கையில் தானாகவோ அல்லது ராபர்ட் மூலமாகவோ குறுக்கிடவில்லை. பணக்காரன் ஒருவனை மணந்துகொண்டு பழைய கொட்டங்கள் பெரும்பாலானவை இல்லாமல் அவள் வாழ்ந்து வருவதாக ராஜசேகரனிடமிருந்து கொஞ்ச நாள் கழித்து அவருக்குச் சேதி வந்தது..  ..  ..

கடந்த கால நிகழ்வுகளை யெல்லாம் அசை போட்ட ரமேஷ¤க்கு அப்பா சொன்னபடி தான் அந்தக் கடிதங்களைப் பத்திர்மாய் வைத்திருந்திருக்கக்கூடாது என்று தோன்றியது. நிர்மலாவின் பார்வையில் அவை பட்டிருந்திருக்க வேண்டும் என்றும், அதனால்தான் அவளது போக்கில் அந்த மாற்றம் என்றும்  தீர்மானமாக நினைத்ததால், உறங்க முடியாமல் அவன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். மறு நாள் சோமசேகரனுடன்  அக்கடிதங்கள் பற்றிப் பேசவேண்டும் என்று அவன் முடிவு செய்தான். பின்னர் உறங்க முயன்றான்.

..  ..  ..  சகுந்தலாவும் மேரியும் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தன. தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், ஷைலஜாவை அனுப்பிவிட்டதற்காக விநாயக்ராம் குதிகுதியென்று குதித்தான். எந்தப் பள்ளி என்று அவளைக் குடைந்தான். அவள் அசையவில்லை: ‘விநாயக்ராம்! உங்க கையில நான் சிக்கிச் சீரழிஞ்சது போதும். அவளுக்குக் கடுகளவு தீங்கு ஏற்பட்றதையும் என்னால தாங்கிக்க முடியாது. அவளைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணினீங்க, நான் பொல்லாதவளாயிடுவேன். ஆமா! ஏன்? கொலைகாரியாவே ஆயிடுவேன். நீங்க அறிமுகப் படுத்திவெச்ச பெரிய பெரிய பொலீஸ் அதிகாரிங்கல்லாம் எனக்கு உதவுவாங்க. மறந்துறாதீங்க்!’

விநாயக்ராம் அப்போதைக்கு வாயை மூடிக்கொண்டாலும், தனது தேடலைக் கைவிடுவான் என்று சகுந்தலா நம்பபவில்லை. அவள் தனது மவுனத்தைத் தப்பாய்ப் புரிந்துகொண்டிருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை.

‘காபரே யிலிருந்து எப்ப என்னை விடுவிக்கப் போறீங்க?’ என்று  ஒரு தோதான நேரத்தில் அவள் வினவிய போது, அந்த யமகாதகன் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ‘அது இப்போதைக்கு இல்லே, கண்ணு! உன் பொண்ணு ஷைலஜா உன்னோட இடத்துக்கு என்னிக்கு வர்றாளோ அன்னிக்குத்தான்!’ என்றான்.

சகுந்தலா கொதித்துப் போனாள். அருகில் இருந்த கண்ணாடித் தம்ப்ளரை எடுத்து வீசினாள். ‘இத பாரு! அது மட்டும் நடக்காது. உன்ன மாதிரி ஒரு சாக்கடைப் பன்னி என் மகளைக் கண்ணால பார்க்கிறதைக் கூட நான் விரும்பல்லே. அந்த மாதிரி ஏதாச்சும் சதி பண்ணி அவளையும் சிக்க வெச்சே, உன்னைக் கொல்ல முடியாட்டியும், நான் பெத்த மகளை நானே கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன்! புரிஞ்சுக்கடா, நாயே!’ – சகுதலாவின் ஒருமை விளிப்பும் முதன்முறையான மரியாதையற்ற அவமதிப்புப் பேச்சும் விநாயக்ராமை அதிரவைத்துவிட்டன. அவன் வாயை மூடிக்கொண்டான். அதன் பிறகு சகுந்தலா எப்போதுமே அவனை ஒருமையில்தான் விளித்தாள்.  ..  ..

மேரியுடன் ஷைலஜா சென்றபிறகு ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் சகுந்தலா அவளைப் பொதுத் தொலைபேசிகளிலிருந்து அழைத்துப் பேசியதோடு சரி. ஒரு தரம் கூட அவளைச் சந்திக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தாள். அவளுடன் பேசிய போதெல்லாம் தனது நிலைமை, இயலாமை ஆகியவற்றைச் சகுந்தலா அவளுக்குப் புரியவைத்தாள். ஒவ்வொரு தடவையும் அழுதாள். இதனால், ஷைலஜாதான் அவளுக்கு அடிக்கடி ஆறுதல் கூறும்படி ஆயிற்று.

ஒரு நாள் இரவில், அவள் நடனம் ஆடிவிட்டுக் களைப்புடன் தன்னறைக்குத் திரும்பிய நேரத்தில், ‘அம்மா! ரொம்ப முக்கியமான விஷயம்மா’ என்றவாறு ஷைலஜாவுக்கு ஆயாவாக இருந்திருந்த நீலவேணி அவளை எதிர்கொண்டாள்.

‘அம்மா! முதல்ல கதவைச் சாத்தித் தாப்பாப் போடுங்கம்மா. இப்ப நான் சொல்லப் போற சங்கதி யார் காதுலேயும் விழுந்துடக் கூடாது. அதுக்குத்தான்!’ என்றாள்.
– தொடரும்

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *