ஓவியம் விற்பனைக்கு அல்ல…

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

வியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது.

 

மழைக்காலம்  என்பதால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு புது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டு இருந்தது.

 

தாத்தா கட்டிய இந்த வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, இவைகள் தான், அவருக்கு சின்ன வயதிலே ஓவியனாக வேண்டும் என்ற அந்த வித்தை ஊன்றியது. பூத்துக் குழுங்கும் இந்த இயற்கையின் எழில், அவருக்கு உள்ளே இருந்த அந்த கலைஞனை தட்டி எழுப்பியது.

 

வீட்டுத்தோட்டத்தின் வண்ண வண்ண மலர்கள் அப்படியே அவர் மனதில் பதிந்து போக, அதுவே அந்த வண்ணங்களை தூரிகையில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையைக் கொடுத்தது.

 

இன்று அவர், இந்தியாவின் விரல் விட்டு எண்ணக். கூடிய தலைசிறந்த ஓவியர்களில் ஒருவராக இருக்க முடிகிறது என்றால் அதற்கு இந்த இடம் தான் காரணம்.

 

அப்படிப் பட்ட இந்த இடம் நாளை இடிக்கப் பட போகிறது….

 

 

ரு வருடத்திற்கு முன்பு..

 

டில்லியின் டான்சன் மார்க் பகுதி.

 

அவருடைய ஓவியக்கண்காட்சி ஒவ்வொரு முறையும் இங்குதான் நடைபெறும்.

 

இந்த முறை பாலு தன்னுடைய ஓவியக்கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்திருந்தார். அந்த அமைச்சரை வரவேற்பதற்காக அவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

 

அவர் தன் உதவியாளர் அருணிடம் அடிக்கடி அமைச்சரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.

 

இப்படி அவர் அமைச்சரை அழைத்திருப்பதும், அந்த அமைச்சரின் வருகைக்காக பரபரப்பாய் இருப்பதும், அருணுக்கு வியப்பாய் இருந்தது. பாலுவுக்கு அரசியல் வாதிகள் என்றாலே பிடிக்காதே… இது எப்படி சாத்தியம்…

 

ஒருமுறை லண்டனில் நடந்து கொண்டிருந்த தன்னுடைய கண்காட்சிக்கு, அப்போது அங்கு வந்திருந்த ஒரு  தமிழ் நாட்டு அமைச்சர் வர இருப்பதாகச் சொன்ன போது, வேண்டுமென்றே அவரின் வருகையைத் தவிர்த்தார் இந்த பாலு. அப்போது அதை கூட இருந்து பார்த்த அருண் கேட்டார்,

 

“ கேக்குணும்னு நேனச்சேன்… உங்களுக்கு அரசியல்வாதிங்கள பிடிக்காதே.. எப்படி இன்னிக்கு…”

 

அதற்கு பாலு,

 

“ என்னோட கிராமம், இந்த அமைச்சரோட தொகுதியில தான் வருது. இவரால எனக்கு ஒரு காரியம் ஆகணும். அதுக்கு தான் அவரை கூப்பிட்டிருக்கேன்…” என்றார்.

 

இதைக் கேட்ட அருணுக்கு ஆச்சர்யம். இப்படி இதுவரைக்கும்  பாலு சுயநலமாய் பேசியதில்லையே…

 

சுற்றிப் பார்த்த அமைச்சர் கேட்டார்.

 

“ உங்க ஓவியங்கள்ள  உலகப்பிரசித்தி பெற்ற நதிகளும், அதோட பாலங்களும் தான் அதிகமா இருக்கு.. இந்தியாவின் ஹௌரா பாலத்திலிருந்து, சான்பிராஸ்கோ பாலம் வரைக்கும்…..இந்த இடங்களை போய் நேர்ல பாத்து வரைஞ்சிங்களா… இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா..”

 

கொஞ்சம் யோசித்த பாலு, “ ஆமாங்க… நேர்ல பாத்து வரைஞ்சதுதான்.. நதிகளும், பாலங்களும்தான் என்னோட பேவரைட்.. கிராமத்தில எங்க வீடு நதிக்கரையிலதான் இருக்கு… சின்ன வயசிலிருந்தே ஓவியம் வரையறதுன்னா எனக்கு உயிர்… நதிகளைத்தான் நிறைய வரைஞ்சேன்.. ஓவியனாகும்னுங்கறது என்னோட  வெறி.. என்னோட முயற்சி முதல்ல தோல்வி அடைஞ்சுடுச்சு.. அதுக்கு காரணம் எங்க ஊரு ஆறுக்கு பாலம் இல்லாததுதான்…. இன்னும் கூட அந்த பாலம் எங்க ஊருக்கு வரலே…”

 

இதைக் கேட்ட அமைச்சர் யோசித்தார்.

 

எதற்காக அமைச்சரை பாலு அழைத்திருக்கிறார் என்று அருணுக்கு இப்போது புரிந்து விட்டது.

 

“ அப்படிங்களா… அதனால எப்படி உங்க முயற்சி தோல்வி அடைஞ்சது.. சொல்ல முடியுங்களா….” அமைச்சர்  கேட்க, பாலு பேச ஆரம்பித்தார்.

 

“ ஓவியத்தின் மீது இருந்த வெறியினால, எனக்கு படிப்பு மேல கவனம் குறைவாயிடிச்சு… அதனால எஸ்எஸ்எல்சி கூட என்னால பாஸ் பண்ண முடியில.. என்னோட நெலமையை பாத்து எங்க ஸ்கூல் டிராயிங் மாஸ்டர், பம்பாயிலிருந்து வந்த பிரபல ஓவியர் மைக்கேல் கோயம்புத்தூர் வந்து தங்கியிருக்கிறதாவும், உன்னோட ஓவியங்கள எடுத்துக் கிட்டு வா, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாரு… அவருக்கு உன்னோட ஓவியங்கள் பிடிச்சுதுன்னா, உனக்கு அபாரமான எதிர்காலம்ன்னாரு..  நானும், ராத்திரி பகலா வரைஞ்சேன், ஒரு ஓவியத்தை…. நான் புறப்பட போற முதல் நாள், எங்க ஆத்தில வெள்ளம் வந்துடிச்சி.. இருந்தும் நா அந்த ஓவியத்தை எடுத்துக்கிட்டு,  நீந்திப் போக ஆரம்பிச்சேன்… ஆனா நான் கஷ்டப்பட்டு வரைஞ்ச அந்த ஓவியம், அழிஞ்சிப் போயிடுச்சி… மைக்கேல நா பாக்க முடியல…..”

 

நிறுத்தினார் பாலு.. அவர் கண்கள் கலங்கியது போல் இருந்தது.

 

தொடர்ந்தார் பாலு.

 

“ அதுக்கு பிறகு, ரொம்ப கஷ்டப்பட்டு, ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி ஒரு நெலமைக்கு வந்தேன்… அப்ப எங்க ஊரு ஆத்துக்கு பாலம் இருந்திருந்தா நா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டி இருந்திருக்காது…”

 

பாலு மௌனமானார்.

 

சற்று யோசித்த அமைச்சர்,

 

“ என்னோட தொகுதியிலதான் உங்க ஊரு வருது. அந்த பாலம் சம்மந்தமான விபரங்களை என்னோட பி ஏ கிட்ட கொடுங்க… பாலம் கட்டறதுக்கான முயற்சி பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அவர்.

 

 

பாலம் கட்டுவதற்கான அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கியிருந்த சமயம்.

 

 

டில்லியில் இருந்த பாலுவை ஊருக்கு வருமாறு  கலைக்டர் அழைத்தார்.

 

“ பாலம் கட்ட நிலத்தை கொடுக்க, ஊர் மக்கள் கோப்ரேட் பண்ணமாட்டேங்கறாங்க… நீங்க வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்..”  என்று கூப்பிட்டிருந்தார்.

 

ஊர் மக்கள் பள்ளிக் கூடத்தில்  கூடி இருந்தார்கள். அது அவர் படித்த பள்ளிக்கூடம்தான். கலெக்டரும், தாசில்தாரும் உட்கார்ந்து இருந்தார்கள்.

 

தாசில்தார் எழுந்து, யார் யாருடைய நிலங்கள், எந்த எந்த அளவுக்கு தேவைப் படும் என்ற பட்டியலை படித்தார். ஒரு சென்ட் முதல் அரை ஏக்கர் வரை அந்த பட்டியல் நீண்டது.

 

பாலுவின் பெயர் வந்த போது, அவருடைய நிலம், ஆற்றை ஒட்டி இருப்பதால், அவருடைய நான்கு ஏக்கர் நிலம் முழுவதுமாய் பாலம் கட்ட தேவைப்படும் என்று தாசில்தார் படித்தார்.

 

அதைக் கேட்ட பாலுவுக்கு மனம் கலங்கியது.

 

பாலுவைத் தவிர வேறு எந்த ஒருவரின் நிலமும் இப்படி முழுமையாக கையகப் படுத்தப் படும் என்று தாசில்தார் படிக்க வில்லை.

 

பாலுவுக்கு தன் நிலம்,  இப்படி கொஞ்சம் கூட விட்டு வைக்காமல் முழுவதும் எடுத்துக் கொள்ளப் படும் என்று தெரிந்த போது, வருத்தமாய் இருந்தது. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.

 

ஆனால் மற்ற கிராமத்து மக்கள் நிறைய பேசினார்கள்.

 

ஒரு சென்ட் கொடுப்பவர்களில் இருந்து நிலம் கொடுக்க வேண்டியவர்கள் அனைவரும்   எழுந்து கூச்சல் போட்டார்கள்.  சிலர்   கோர்ட்டுக்கு போய் ஸ்டே ஆர்டர் வாங்கப் போவதாகச் சொன்னார்கள்.

 

சிலர் சுப்ரீம் கோர்ட வரைக்கும் போவேன் என்றார்கள்.

 

இதைக் கேட்ட கலைக்டரின் முகம் சுருங்கியது.

 

உடனே பாலு எழுந்து,

 

“ என்னோட நிலம் முழுசுமா கொடுக்க மனப்பூர்வமாய் சம்மதிக்கிறேன்…..எனக்கு பணம் எதுவும் வேண்டாம்… இனாமா என்னுடைய நிலத்தை கொடுக்கிறேன்.. எங்க ஊருக்கு பாலம் கண்டிப்பா வரணும்.. அதுதான் முக்கியம்…” என்றார்.

 

கூச்சல் போட்ட சிலர் இதைக்கேட்டு, எதுவும் கூறாமல் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள்.

 

பிறகு ஒரு ஆள் எழுந்து, “ பாலு, டில்லிக்கு போயி பெரிய பணக்காரரு ஆயிட்டாரு… அவருக்கு இந்த நெலம் தேவை இல்ல.. அதனால அதை கொடுக்க சம்மதிக்கிறேன்னு சொல்றாரு. எங்களுக்கு அப்படி இல்ல…நாங்க பொழப்புக்கு எங்க போறது… எங்களுக்கு இதை விட்டா வேறு ஏதும் வழி இல்ல…”என்றார்கள்.

 

தனக்கு இந்த நிலம் தேவையில்லை என்று ஊர்க்காரர்கள் சொன்னதைக் கேட்ட பாலுவுக்கு கோபம் வந்தது.

 

எனக்கு இந்த நிலம் தேவை இல்லையா.. இந்த நிலத்தின் மீது தான் வைத்திருக்கும் பாசத்தை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்….

 

யாரிடமும் எதுவும் பேசாமல் கலெக்டர் மீட்டிங்க்கிலிருந்து கிளம்பி டில்லிக்கு வந்து விட்டார்.

 

அடுத்த நாள் கலைக்டரிடம் இருந்து போன் வந்தது.

 

“ கிராமத்து மக்கள் தங்களோட  எதிர்ப்பை கைவிட்டு சம்மதத்தை தெரிவிச்சுட்டாங்க.. உங்களோட அப்ரோச் தான் அதுக்கு காரணம்… ரொம்ப தாங்ஸ் மிஸ்டர் பாலு…” என்றார்.

 

பாலுவுக்கு கலைக்டரின் பாராட்டு எந்த நெகிழ்வையும் கொடுக்க வில்லை.

 

அவர் பதில் எதுவும் பேசவில்லை. தான் நேசித்த தன் வீடும் தோட்டமும் தன்னை விட்டு போகிறதே என்று மனம் வலித்தது.

 

கொஞ்சம் இடைவெளி விட்டு, கலைக்டர்,

 

“ மத்தவங்களை எங்கரேஞ்ச் செய்யத்தானே நீங்க காம்பண்சேசன் வேணாம்னு சொல்லிட்டீங்க..” என்றார்.

 

“ இல்லை.. கண்டிப்பா அதுக்காக இல்லை.. என்னோட அந்த நெலத்துக்கு நீங்க கொடுக்கிற பணம், ஒரு காம்பண்சேசன் ஆக முடியாது.. அப்படி நான் பணத்தை வாங்கிக்கிட்டு அந்த நிலத்தைக் கொடுத்தா, நான் அந்த நெலத்து மேல  வைச்சிக்கிட்டு இருந்த பாசத்தை கொச்சைப் படுத்திட்டதா ஆயிடும்…. அதானல தான் தான் பணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்..” என்றார் பாலு.

 

கலைக்டருக்கு இந்த கலைஞர்களை புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றியது.

 

 

பாலம் கட்ட காண்டிராக்ட் எடுத்தவர்கள், எப்போது இடிக்கும் வேலையை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே பாலு வீட்டை காலி செய்துவிட்டு டில்லிக்கு கிளம்பினால் பரவாயில்லை என்று அவர்கள் எதிர்பார்ப்பது போலிருந்தது.

 

புறப்படுவதற்கான ஏற்பாடுகளை அவரும் உடன் வந்திருந்த அருணும் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அந்த காண்டிராக்டரை பார்த்து பாலு கூறினார், “ நான் போனதுக்கு அப்புறம், இடிக்க ஆரம்பிங்க. நான் இருக்கும் போது இடிக்காதீங்க. என்னால தாங்க முடியாது..” என்றார்.

 

அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

 

கடைசி முறையாக ஒருமுறை தோட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டார்..

 

அப்பாவும்  அம்மாவும் அவர்கள் இருக்கும்போது இந்த தோட்டத்தை எப்படி எல்லாம் பார்த்துக்கொண்டார்கள்.

 

தான் எவ்வளவோ கூப்பிட்டும் டில்லிக்கு வராமல் இங்கேயே இருந்து இதைப் பார்த்துக்கொண்டார்களே..

 

அவர்களுக்கு பின்னாலும், பாலு ஆட்களை அமர்த்தி இந்த தோட்டத்தையும் வீட்டையும் பாராமரித்துக் கொண்டுதான் இருந்தார்.

 

ஒவ்வொரு முறை கிராமத்துக்கு வரும்போதெல்லாம், தன் தோட்டத்து பின்ணணியில் ஒரு ஓவியம் வரைந்து எடுத்துக் கொண்டு டில்லி போவார்.

 

“ வீட்டு சாமான்களை என்ன பண்ணறது….” அருண் கேட்க

 

“ எல்லாம் வேலைகாரங்களுக்கு கொடுத்துடுங்க..” என்றார் பாலு.

 

சாமான்கள் காலியாகிக் கொண்டு இருந்தது.

 

ஞாபகமார்த்தமாக சில பொருட்களை  தன் டில்லி வீட்டுக்கு கொண்டு செல்ல  முடிவு செய்து அருணிடம் சொல்லி இருந்தார் பாலு.

 

அப்படி தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் முன்வாசலில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

 

ஒரு முறை அவைகளை நோட்டம் விட்டார். அவர் கண்ணில் தன் இளமைப் பருவத்தில் இருந்து, தான் ஓவியம் வரைவதற்கு உபயோகப்படுத்திய ஸ்டாண்ட், பிரஸ்கள் கண்ணில் பட்டது. இவைகளை தான் சின்ன வயதிலிருந்து உபயோகப் படுத்தியது ஞாபகம் வந்தது. டில்லிக்கு போன பிறகும் கூட ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் இவைகளை வைத்து, தன் வீட்டு தோட்டத்தை புதிது புதிதாய் ஓவியமாய் வரைந்து டில்லிக்கு எடுத்து போனது ஞாபகம் வந்தது.

 

உடனே அவர் மனதில் ஒரு பளிச்சென்று ஒரு எண்ணம் தோன்றியது.

 

இவைகளை உபயோகிப் படுத்தி, இந்த இடத்தை அழிப்பதற்கு முன் கடைசியாக ஒருமுறை வரைந்து விட்டால் என்ன..

 

தன் வீட்டையும், தோட்டத்தையும் பற்றி ஞாபகம் வரும் போதெல்லாம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமே..

 

வரைய ஆரம்பித்தார்….

 

அற்புதமாய் அமைந்தது அந்த ஓவியம். அதை எடுத்துக்கொண்டு டில்லி புறப்பட்டு சென்றார்..

 

டில்லிக்கு சென்ற அவர், அடுத்த நாள் தன் வீடு இடிக்கப் பட்டு விட்டதா என்று யாரிடமும் போன் செய்து கேட்க கூட அவருக்கு பிடிக்கவில்லை. அருணும் அதைப் பற்றி ஏதும் பேசவில்லை.

 

பாலம் கட்டி முடிக்கப் பட்டு திறப்புவிழாவிற்கு வருமாறு கலைக்டர் அழைப்பு அனுப்பியிருந்தார்.

 

பாலு திறப்பு விழாவிற்கு போகவில்லை.

 

அதற்கு காரணம் உண்டு. புதிதாய் தன் ஊருக்கு பாலம் கட்டப்பட்டதைப் பார்க்கணும் என்று தோன்றினாலும், தன் வீட்டு தோட்டம் அங்கு இருக்காது என்பதைப் நினைத்துப் பார்த்தார். திறப்புவிழாவிற்கு  போக பிடிக்கவில்லை. பிறகு ஒரு நாள் போய்க் கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டார்.

 

பாலு திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று தெரிந்த கலைக்டர், கலைஞர்கள் இப்படித்தான் என்று மறுபடியும் நினைத்துக் கொண்டார்.

 

டில்லியில் பாலு மற்றுமொரு ஓவியக் கண்காட்சி நடத்தினார்.

 

அந்த ஓவியக்கண்காட்சியில், கடைசியாய் வரைந்த தன் வீட்டு தோட்ட ஓவியத்தை வைத்தார்.

 

கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களின் மத்தியில் அந்த ஓவியம் அதிகமாய் பேசப் பட்டது. பாராட்டப் பட்டது.

 

அந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நிறைய பேர் போட்டி போடுவதாக அருண் வந்து பாலுவிடம் கூற,

 

பதறிபோன பாலு,

 

“ அதை விக்க முடியாது.. என் வீட்டு தோட்டத்து ஞாபகமா அது ஒண்ணு தான் என்கிட்ட இருக்குது.. அதை எப்படி விக்க முடியும்..  அதை நானே வைச்சுக்க போறேன்….” என்று சொல்லிவிட்டு, ஒரு அட்டையில் அவசரமாய் ஏதோ எழுதி அந்த ஓவியத்தின் மீது மாட்டினார் அவர்.

 

அருண் எட்டிப் படித்தார் அதை..

 

அதில், ‘ ஓவியம் விற்பனைக்கு அல்ல’ என்று எழுதி இருந்தது.

————————————————————————————————————————

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” இந்த கலைஞர்களை புரிந்துகொள்ள முடியாது. ” மிகவும் எளிமையாக அற்புதமாக கதை எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள் தாரமங்கலம் வளவன் அவர்களே….டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      தாரமங்கலம் வளவன் says:

      தங்கள் பாராட்டு ஊக்கம் தருகிறது. நன்றி டாக்டர் ஜான்சன் அவர்களே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *