முனைவர் ந. பாஸ்கரன்,
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத் துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-1.
மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இயற்றித்தரும் வல்லமை கொண்டவர்களாக விளங்கியவர் தொழிலாளர். சங்ககாலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்றதும், அந்நிலத்தோடு மிகப்பெரிதும் ஒத்துப்போகக் கூடியதுமான தொழிலை முதன்மைத் தொழிலாகச் செய்துள்ளனர். அம்முதன்மைத் தொழிலோடு தொடர்புடையதும் அதற்கு இனமானதுமான தொழிலையும் செய்து வந்துள்ளனர். சங்ககாலத்து நெய்தல்திணை மக்கள் கடல்நிலத்து வாழ்ந்தவர் ஆதலின், கடல் மற்றும் கடல்சார் நிலத்தோடு தொடர்புடைய தொழிலை செய்துள்ளனர். மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்றவற்றுடன் உப்புதயாரித்தல், உலர்மீன்தயாரித்தல் போன்றவற்றையும் செய்துள்ளனர். இவற்றுடன் மீன் மற்றும் உலர்மீன் விற்பனை செய்துள்ளனர். மீனவர்கள் தங்களின் இத்தொழிலுக்கு தோணி, வலை, எறிஉளி, கயிறு, விளக்கு, ஓலைக்கூடைகள், வண்டி போன்றவற்றை தொழில்புரி துணைச் சாதனங்களாகப் பயன்படுத்தி உள்ளனர்.
மனித ஆற்றலை விஞ்சிநிற்கும் இயற்கையின் பேராற்றல் மிக்க சக்திகளுள் ஒன்றாக விளங்கக்கூடிய பெருங்கடலில் வாழ்வாதாரத்தைத் தேடிச்செல்லும் மீனவசமுதாயத்தினர் தங்களின் வாழ்வைப் பணயம்வைத்தே செல்கின்றனர். இதுபோன்றத் தருணங்களில் மீனவஉழைப்பாளி தன் உழைப்பையும், உள்ளத்தையும் எளிதாக்கிக்கொள்ளப் பாடல்களைப் பாடுவது இயல்பாகிறது. இந்நிலையில் நெய்தல்நில மீனவத்தொழிலை நாட்டுப்புற மீனவத் தொழில்பாடல்களுடன் இணைத்துணர்த்துவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மீன்பிடித்தொழிலும் அம்பாப்பாடலும் :
நெய்தல் நிலத்தில் மீன்பிடித்தொழிலை மையமாகக்கொண்டு வாழ்கின்றவர்கள் கதவர், பரதவர், திமிலோன், துறைவன், வலைவர் என்று பலப் பெயர்களால் சங்கஇலக்கியங்களில் சுட்டப்படுகின்றனர். இவர்கள் நெய்தல் நிலத்தைத் தாய்மண்ணாகக் கொண்டவர்கள் என்பதால் , கடலை அன்னையாகப் பாவித்து வணங்கும் உணர்வுள்ளவர்களாக வாழ்ந்துள்ளனர். இதனை, ”பரதவர் கருவினை சிறார்”1
என்ற நற்றிணைப் பாடல் அடியில் உள்ள ’கருவினை’ என்ற சொல்லின்வழி உணர முடிகிறது. இச்சொல் பரதவர்கள் கடுமையாகத் தொழில்புரியும் இயல்பை உடையவர்கள் என்பதையும், இவர்கள் பிறந்தது முதல் கடலையும், கடல்தொழிலையும் மட்டுமே அறிந்தவர்கள் என்றும் பிறவற்றை அறியாதவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் புலப்படுத்துவதாக உள்ளது. மிகப்பெரும்பாலும் கடலிலேயே வாழ்கின்றவர்களாக, கடலாலேயே வாழ்கின்றவர்களாக உள்ளனர். பரதவர் என்ற சொல்லுக்குக் ‘கடலோடிகள்’2 என்று பொருள் உள்ளதாக சு.சக்திவேல் குறிப்பிடுவது நினைக்கத்தக்கதாக உள்ளது. பரதவர் தொழிலுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் நெய்தலைவிட்டுப் பிற நகரங்களுக்குப் போக வேண்டிய அவசியமும் நெருக்கடியும் ஏற்படாதவர்களாகக் கடல்வளம் அவர்களைக் காத்துள்ளது. இதனைக்,
”கொழுமீன் ஆக்கை செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர்…” 3
என்ற பாடல் அடிகளால் உணரமுடிகிறது. இவர்களது வாழ்வுக்கான அனைத்தையும் தரவல்லதாக இவர்களின் மீன்பிடித்தொழில் இருந்துள்ளது. இத்தொழிலை இவர்கள் இரவிலும் பகலிலும் மேற்கொண்டுள்ளனர். பகலில் செல்லும் பரதவரைக் குறிப்பிடும்போது,
“ எல்லுத்தொழிலின் மடுத்த வல்வினைப் பரதவர் ” 4
என்று அகநானூறு சுட்டுகிறது. இவர்கள் அலைகள் அதிகமாகவும் ஆழமாகவும் உள்ள பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பகல்நேரத்து மீன்பிடித்தலைவிட இரவுநேரத்து மீன்பிடி தொழிலுக்குச் செல்பவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர். இச்செய்தியை அகநானூற்றுப்பாடல் உயர்ந்த அலைகளையுடைய கடல்பரப்பில் மிகுதிறனைப் பயன்படுத்தி வலிமையான படகில் சென்று மிகப்பெரியமீன்களைப் பிடித்து வருவார்கள் என்ற செய்தியை ,
“ ஓங்கு திரைப் பரப்பில் வாங்குவிசை கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் ” 5
என்று அகநானூறு சுட்டுகிறது. இரவுநேரத்தில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் தொழிலனுபவம் மிக்கவர்களாக இருந்துள்ளனர். இரவுநேர தொழில்பயணத்திற்காக வலிய திமிலில் ஒளிமிக்க விளக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்விளக்குகளுக்கான எண்ணெயாக மீன்கொழுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நேரத்தில், சுறாப்போன்ற வலியவகை மீன்களைப் பிடிக்கச் செல்லுவதை ‘மீன்வேட்டைக்குச்’ செல்லுவதாக இலக்கியங்கள் சுட்டுகின்றன. இக்கருத்தை,
“ மீன் நிணம் தொடுத்த ஊண்நெய் ஒண்சுடர்..” 6
“ திண்திமில் பரதவர் ஒண்சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி …” 7
என்ற நற்றிணைப் பாடல்களின் அடிகள் வழி அறியமுடிகிறது. மேலும், வலையில் அகப்படாத அளவிற்குள்ள ‘வயச்சுறா’ என்னும் வலியவகை மீன்களைப் பிடிக்க ‘எறியுளி’ என்னும் வலிமைமிக்க சிறுகோடரியைப் பயன்படுத்தியுள்ளனர். இச்செய்திகளை,
“……..நோன்புரி
கயிறுகடையாத்த கடுநடை எறியுளி
திண்திமில் பரதவர் ” 8
“கொல்வினை பொலிந்த கூர்வாய் எறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்சுரத்து எறிந்து வங்கு விசை
கொடுந்திமில் பரதவர் கோட்டுமீன் எறிய..” 9
என்ற பாடற்பகுதிகள் வெளிப்படுத்துகின்றன . இதன்வழி , உறுதிமிக்க தோணியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்., மீன்படும் பகுதிக்குச் சற்று தொலைவிலிருந்துகொண்டு வன்மையான கயிற்றினால் துண்டுமூங்கிலுடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் எறியுளியை மீனின் முகப்பகுதியை நோக்கி வீசுவார்கள்., அவ்வெறியுளியின் கூர்மைப் பகுதியானது குத்தி அதனால், தாக்குண்டமீன் குருதி கொட்டக்கொட்டக் கடலைக்கலக்கும், அதேவேளையில் வலியவலையை அதன்மீது வீசி பிடித்துவிடுவர். இவ்வாறு எறியுளியைப் பயன்படுத்தி மீன்கவரும் மீனவரும், அவர் செல்லும் தோணியும் உரம்மிக்கதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இச்செய்தி கடல்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்த்துவதாக உள்ளது. கடல்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் மீனுடன் போராடிப்பிடிக்கும் இந்நேரங்களில் மீன்களின் பெருந்தாக்குதலுக்கும் உள்ளாகுவர். இதனை,
“ வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன்…” 10
என்ற சங்கச்சான்று உணர்த்துகிறது.
இவ்வாறு, மீன்பிடி தொழிலுக்குச் செல்கின்ற மீனவர்கள் பலத்துன்பங்களை எதிர்கொண்டே ஆகவேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்துவருகின்றனர். கடலுக்குச் சென்றதுமுதல் கரைக்குத்திரும்பும் வரை மீனவர் தமது குடும்பத்தினரையும், உறவினரையும், ஊரினரையும் எண்ணி மனம் கலங்குவதுடன் இயற்கைச் சீற்றங்களாலும், வலியநீர் விலங்குகளாலும் எவ்வித துன்பங்களும் நேரக்கூடாது என்று கடவுளரை வணங்குவதற்காகவும், மனச்சோர்வுகளைப் போக்கிக்கொள்வதற்காகவும் தங்கள் மனவுணர்வுகளைப் கடலில் தோணிகளை செலுத்தும்போது பாடல்களாகப் பாடிச்செல்வர் இதனை, ‘மீனவப்பாடல் என்றும் அம்பா பாடல், கப்பற்பாடல், தோணிப்பாடல், ஓடப்பாடல்’11 என்ற பெயர்களிலெல்லாம் வழங்கிவருகின்றனர். ‘அம்பா’ என்பதில் ‘அம்’ என்பதற்கு ‘நீர்’ என்று பொருள். ஆதலால், அம்பாபாடல் என்பதற்கு ‘நீர் மேல் பாடும் பாட்டு’ என்றும் கூறுவர்10. மேலும், அம்பி என்பதற்கு ஓடம், தெப்பம், மரக்கலம் என்ற பொருள்கள் உள்ளதையும் அகராதி சுட்டுவது ஈண்டு எண்ணத்தக்கதாக உள்ளது.12 மீனவர்களின் வாழ்க்கைப்பாடுகள், சங்கப்பாடல்கள் காலத்திலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றங்களுக்கும் உள்ளாகாது இருப்பதால் சங்கஇலக்கிய நெய்தல்பாடல்களையும் மீனவ பாடல்களையும் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது. சு.சக்திவேல் தொகுத்துள்ள.,
“ விடிவெள்ளி நம் வெளக்கு … ஐலசா
விரி கடலே பள்ளிக்கொடம் … ஐலசா
அடிக்கும் அல நம்ம தோளன் … ஐலசா
கருமை மேகம் நமது குடை … ஐலசா
பாயும் புயல் நம்ம ஊஞ்சா … ஐலசா
பனிமூட்டம் உடல் போர்வை … ஐலசா
காயும் கதிர்சுடர் கூரை … ஐலசா
கட்டுமரம் வாளும் வீடு … ஐலசா
பின்னல் வல அரிச்சுவடி … ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம்ம பொருள் … ஐலசா
மின்னல் இடி காணுங் கூத்து … ஐலசா
வெண்மணலே பஞ்சு மெத்த … ஐலசா
முளுநிலாதான் நம் கண்ணாடி … ஐலசா
மூச்சடக்கி நீச்சல் போடும் … ஐலசா
தொளுந் தலைவன் பெருவானம் … ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்க … ஐலசா
ராவுபகல் பார்ப்பதில்ல … ஐலசா
இந்தத் தொளில் எங்க தெய்வம் … ஐலசா
ஒத்துமைக் கொண்டாடணும் ஐலசா
எப்போதும் பாடுபடும் … ஐலசா
இன்பத் தொளிலாளர் நாங்க … ஐலசா ” 13
(இப்பாடலில் இறுதி நான்கு அடிகள் சு. சக்திவேல் நூலில் சற்று மாற்றம் பெற்றுள்ளது. “ ஒத்துமையைக் கொண்டாடணும் ஐலசா,
உரிமையை உயர்த்திடணும் ஐலசா என்று உள்ளது.)
என்ற மீனவ நாட்டுப்புறப்பாடல் கடலில் மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் பரதவர்களின் தொழில்சிக்கலை மிக அழகியல் நுட்பத்துடன் வெளிப்படுத்துவதை உணரமுடிகிறது. மீனவப்பாடல்,
“தொழிலில் ஏற்படும் களைப்பைப் போக்கிக் கொள்ள கருதும் மனவுணர்வாகவும் ,தொழில் விரைவையும் ஒருங்கிணைவையும் உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது.” 14
என்னும் கு.மோகனராசு விளக்கத்திற்கு இம்மீனவப்பாடல் சான்றாக அமைந்துள்ளது. மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவர் தோணி, திமில், அம்பி எனப்படும் மரக்கலங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவை, படகைக் குறிப்பிட்டாலும் சங்கநெய்தல் பாடல்களில் படகு என்ற சொல் வழக்கில் இருந்ததற்கானக் குறிப்புகள் காணவில்லை. மீனவ நாட்டுப்புறப்பாடல்களில் தோணி, படகு என்ற இருசொற்களும் புழக்கத்தில் இருதுள்ளன. இதனைப்,
“ பாயிமுந்தா ஓடும் தோணி
பழவேற்காட்டான் தோணி அது.,
கொடியிட்டா ஓடும் தோணி
கடலூரான் தோணி அது..” 15
“ தம்பியே தங்கப்பா என் படகு ஐலசா
தாங்குமாம் தண்ணீரில் என் படகு ஐலசா
என் படகு ஐலசா…ஐல, ஐல ஐலசா
பாக்கு மரத்தாலே என் படகு ஐலசா
பாயுமாம் தண்ணீரில் என் படகு ஐலசா
என் படகு ஐலசா…ஐல, ஐல ஐலசா
தேக்கு மரத்தாலே என் படகு ஐலசா
தேங்குமாம் தண்ணீரில் என் படகு ஐலசா
என் படகு ஐலசா…ஐல, ஐல ஐலசா
பாங்காக செய்த்தினால் என் படகு ஐலசா
பாய்விரித்துச் சென்றிடுமாம் என் படகு ஐலசா
படகெல்லாம் மீனாச்சே என் படகு ஐலசா
என் படகு ஐலசா…ஐல, ஐல ஐலசா ” 16
என்ற மீனவ நாட்டுப்புறப்பாடல்களில் காணமுடிகிறது.
இரவுநேரத்தொழில் பயணத்திலும், வலிமையானச் சுறாமீன்களைப் பிடிப்பதற்கு எதிர்கொள்ளும் நேரத்திலும், எதிர்பார்த்த காலத்திற்குள் மீன்கள் அகப்படாமல் காலம் நீட்டிக்கும் நேரங்களிலும் பரதவர்கள் கடவுளை வேண்டிக்கொள்ளத் தொடங்கிவிடுவர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களாக உள்ள பரதவர்களுக்காக இறைவனை வணங்கிப் பாடல்கள் பாடுவதையும் மீனவ நாட்டுப்புறப் பாடல்களில் காணமுடிகிறது. இதனை,
“ கன்னி கழிய வேணும் –என்
ஆண்டவனே ஐயாவே – அரச மன்னா
காப்புநூல் கட்ட வேணும் – என்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
இரவு பகல் பார்க்காமே –என்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
எப்போதும் பாடுபடும் –என்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
வெகுதொலைக்கு வந்துவிட்டோம் –என்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
கரைகொண்டு சேர்க்க வேண்டும் –என்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
இந்த தொழில் எங்க தெய்வம்
ஆண்டவனே ஐயாவே –அரச மன்னா
ஐலேசா ஐலேசா ஐல ஐல ஐலேசா ”17
என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.இத்தகைய, மீனவ நாட்டுப்புறப்பாடல்கள் இரவுநேர மீன்பிடித்தலில் பாடியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், பகல்நேரத்து மீன்பிடித்தலைவிட இரவுநேர மீன்பிடித்தலில் கடல்பயணத்திலும், வலியமீன்களைப் பிடிக்கும் தொழில்நுட்பத்திலும் முழுக்கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவருக்கொருவர் முகபாவனைகளைப் பார்த்துக்கொண்டு எதிர்ப்பாடையும் எசப்பாட்டையும் பாடிகொண்டே செல்வதற்கான வாய்ப்புகள் பகல் நேரங்களிலேயே வாய்க்கும்.
வலையும் வலைப்பாட்டும் :
பரதவர்களின் மீன்பிடிதொழிலுக்கு மிகமுக்கியமான துணைக் கருவியாகப் பயன்படுவது மீன்பிடிவலை ஆகும். மீன்பிடிக்கப் பயன்படும் மீன்வலை மிக உறுதியானக் கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வலைகளைப் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்கஇலக்கிய நெய்தல்திணைப் பாடல்வழி பெரியவலைகள், சிறியவலைகள், நெடுவலைகள், நுண்கண்வலைகள், பெருங்கண்வலைகள் என்று மீனுக்கு ஏற்றாற்போல வலைகளைப் பயன் படுத்தியமை புலப்படுகிறது. மீனவர்களை ‘ வலைவர்’ 18 என்றே சுட்டும் வழக்கம் இருந்துள்ளது. வலைகளைப் பராமரிக்கும் பணியே பரதவர்களின் மிகப்பெரும் பணியாக இருந்துள்ளது. அகண்ட பெரியவலைகளையும், நீண்ட நெடிய வலைகளையும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உலர்த்தியும், சுருட்டியும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது. அப்பொழுதெல்லாம் கூட்டிசைவை ஏற்படுத்திக்கொள்ள மீனவநாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
குறிப்பிட்ட வலைகளில் குறிப்பிட்ட மீனவர்களே பழக்கமும், பயிற்சியும் உடையவர்களாக இருந்துள்ளனர். இதனை, பரதவர்கள் ’வலைவர்’ என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும்; சிலர் ‘நுண் வலைப் பரதவர்’19 என்றும், ‘வரி வலைப் பரதவர்’20 என்றும் சிறப்பு நிலைகளில் அழைக்கப்பட்டுள்ளனர். சிறிய கண்களையுடைய நுண்வலைகளில் இறால் மற்றும் சிறிய வகை மீன்களைப் பிடித்துள்ளனர். வலிய கொம்புகளையுடைய சுறா மீன்களைப்பிடிக்க வலிமையானக் கயிறுகளாலும், வலையின் முனைப் பகுதிகளை சங்குகளோடு இணைத்து வலிமையான முடிச்சுகளால் பின்னப்பட்ட ‘ கொடுமுடி நெடுவலை ’21 என்பதைப் பயன்படுத்தியுள்ளனர். வன்மைத்தன்மைப் பொருந்திய இவ்வலையையே சுறாமீன் தன் கொம்புகளால் கிழித்துவிடும் என்பதும், அவ்வாறு மீன்பிடித்தொழிலுக்குப் பயன்படுத்த முடியாத கிழிபட்ட வலைகள் பரதவர்கள் வாழும் தெருக்களில் உள்ள தாழை மரங்களின்மீது கிடக்கும் என்பதும் மேற்படிப் பாடலால் அறியமுடிகிறது. கரைக்குத்திரும்பிய மீனவர்களின் தோணிகளில் இருக்கும் பெருவலையை சிக்கலடையாமல் இருப்பதற்காக இருபாலரும் இணைந்து வரிசையாக சுமந்து ஓடுவர். அப்பொழுது கரை வலை இழுக்கும் பாடலாக இராமேஸ்வரம் மீனவர்கள் பாடும் இப்பாடல் உள்ளது ,
“ ஏலாடி ஏலாடி ஓராங்கண் ஏலாடி
ஆதி பைரவ ஆண்டவன உன்னேயுங்
பாடி பரவிட்டோ பத்திரமா காத்திட்ட
ஆழிகட லுள்ளேயும் ஆண்டவனே வாரூமே
ஆழி இடும்பவான் ஆழங் கடல் நீந்தியவா
அன்ன வெளயாடு அந்தி வான ம்புல்லாடு …”22
இஃது இணையதளத்தில் படக்காட்சியோடு உள்ளது. அரியாங்குப்பம் பகுதியில் தொகுக்கப்பட்ட ஒரு வலைப்பாடல்,
“வாள வல முடிச்சி .. ஐலசா
வங்கடைக்கு மால் முடிச்சி .. ஐலசா
கோல வல முடிச்சி .. ஐலசா
குறுக் கட்டாமல் அதமுடிச்சி .. ஐலசா
காஞ்சி வனமடியே .. ஐலசா..” 23 என இப்பாடல் நீள்கிறது. இதில்,
மீன்பிடிக்குச் செல்லும்போதே பரதவர் தாம் எடுத்துச் செல்லும் வலையை வீட்டில் கும்பிடப்படும் சாமிக்கு முன்பு வைத்து பூசை செய்து அதன்பின் கடலுக்குள் எடுத்துச் செல்லும் நம்பிக்கை பரதவ சமுதாயத்தில் இன்றும் நிலவுவதை சுட்டுகிறது. மேலும்,
“நூலால டந்த வல
நூத்தொரு பேர் ஆண்ட வல
நாறா லடந்த வல
நானூறு பேர் ஆண்ட வல,
பொன்னிழுக்குக் கொண்ட வல
பொழுதேரி சென்ற வல
காசிக்குக் கொண்ட வல
கம்மாளன் தம்பி வல”24
இவ்வலைப் பாட்டு வலையின் தொழில்நுட்பத்தையும், உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இன்றைய மீனவர்கள் வலைகளை இரண்டு வகைகளில் பிரித்து வைத்துள்ளனர். அவையாவன, (அ) மிதமான மீன்பிடிப்புவலை. (ஆ) தீவிர மீன்பிடிப்புவலை என்பவனவாகும். இவற்றுள், மிதமான மீன்பிடிப்புவலையை 1.செவுள் அல்லது பொருத்தப்பட்டவலை, 2.மா பாச்சுவலை 3.சிக்க வைக்கும்வலை என்பனவாகவும், தீவிர மீன்பிடிப்புவலையை 1.கோல் இழுவலை, 2.அடிமட்ட பலகைஇழுவலை 3.மிதவை இழுவலை,4.சூழ் வலை, 5.சுருக்கு வலை, 6.ஓடு கயிறுவலை 7.குத்தீட்டி என்பனவாகவும் வலைகளைப் பயன்பாட்டு அடிப்படையில் பலவகைகளில் சுட்டுகின்றனர்.
நெய்தலின் பிறதொழில்களும், மீனவ நாட்டுப்புறப்பாடல்களும் :
பரதவர்களின் முதன்மைத் தொழிலான மீன்பிடித்தலுக்கு அடுத்த நிலையில் உப்பு விளைவித்தல், உலர்மீன்(கருவாடு) தயாரித்தல், மீன் விற்றல், முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களைச் செய்துவந்துள்ளனர் என்பதை நெய்தல் இலக்கியங்களின்வழி அறியமுடிகிறது. பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளரிடமிருந்து தொகுக்கப்பட்ட ஒரு மீனவர் பாடல்,
“தோட்டி தொண்டமானவர்க்கும் கருங்கடலே – ஐலசா
தொட்டுப் பாதம் கழுவுகின்றாய் கருங்கடலே – ஐலசா
மீனினங்கள் வாழ்ந்துவரும் கருங்கடலே – ஐலசா
உயிரினங்கள் வாழ்ந்துவரும் கருங்கடலே – ஐலசா
உயிர்வாழ வழிவகுப்பாய் கருங்கடலே – ஐலசா
உண்ண உணவளிப்பாய் கருங் கடலே-அந்த – ஐலசா
உணவில் சேர்க்க உப்பு அளிப்பாய் கருங்கடலே- ஐலசா
உன்னாலே வாழுகின்றோம் கருங்கடலே – ஐலசா
உனையே வழிபடுவோம் கருங்கடலே – ஐலசா
உப்பளங்கள் பல அமைத்தே கருங்கடலே – ஐலசா
உப்பெடுத்து வாழுகின்றோம் கருங்கடலே – ஐலசா
உப்பு தந்தே உணவளிப்பாய் கருங்கடலே-நாங்க – ஐலசா
உன்னை என்றும் மறக்க மாட்டோம் கருங்கடலே – ஐலசா ” 25 என்பதாகும். உப்பளத்தை ‘வயல்’ என்றும், உப்பு விளைவிக்கும் பரதவரை ‘உழவர்’ என்றும் நெய்தல் இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல்நில உமணர்கள் அவ்வுப்பை வாங்கி அதனை வண்டிபூட்டி ஏற்றிக்கொண்டு மருதம், குறிஞ்சி போன்ற பகுதிகளுக்குக் கொண்டுசென்று வியாபாரம் செய்து ஒரு நாடோடிவாழ்வை வாழ்ந்துள்ளனர்.
கடலில் பிடித்த மீன்களை உணவுக்கும், விற்பனைக்கும் பயன்படுத்தியது போக எஞ்சிய நல்லமீன்களைக் கடல்மணல்வெளியில் காயவைத்து கருவாடுகளாகப் பதப்படுத்துவர். இதனால், கடலின் மணல்வெளி எங்கும் கருவாட்டின் மணம் கமழும் என்பர்.26 மீனைக்கருவாடாகப் பதப்படுத்துதல், மீன் விற்றல், உப்பை விளைவித்தல் போன்ற பல நெய்தல் தொழில்களைப் பெண்களே மேற்கொண்டு செய்துள்ளனர்.27 பரதவர்களில் சிலர் முத்துக்குளித்தல்,சங்குகுளித்தல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடலுக்குள் செல்லும்போது நெய்தல் மக்கள் பெரிய அளவிலா மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.28 இவற்றின்வழி, மீனவர்களின் வாழ்க்கை கடலால் நடைபெறுகிறது என்பதைவிட மீனவர்களின் வாழ்க்கையே கடல்தான் என்பது புலனாகிறது.
முடிவுகள் :
நெய்தல்நில மக்கள் தங்களின் முழுவாழ்க்கைக்குமான ஆதாரங்களைக் கடலில் இருந்தே பெற்றுள்ளனர். கடலைப் பின்னணியாகக்கொண்ட அனைத்து உழைப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தொழிலை மையமிட்டே அவர்களுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. இயல்பான தொழில்புரி புலத்திலிருந்து மீனவர்களின் தொழில்புரிபுலம் கடலில் அமைவதே அவர்களுக்கான சவாலாக உள்ளது. இந்நிலையை மீன்பிடித்தல், சங்குகுளித்தல், முத்துக்குளித்தல் போன்றவற்றில் உணரமுடிகிறது. இவற்றை நெய்தல் பாடல்கள் மிகத்துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டுகின்றன. சவாலான தொழிலையும் மீனவர்கள் தங்களின் நாட்டுப்புறப்பாடல்களின்வழி இறைவனைப்பரவி இலகுவாக்கி உற்சாகத்தையும், ஒற்றுமையையும் பெற்றுள்ளனர். மீனவத்தொழிலுக்கு அடிப்படையான தோணி, படகு, வலை போன்றவற்றையும் பாடற்கருவாகப் பயன்படுத்தி உள்ளனர்.
அடிக்குறிப்புகள் :
1. நற்றிணை – பாடல் எண் , 111.
2. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் – பக்கம்-234.
3. நற்றிணை – பாடல் எண் , 127.
4. அகநானூறு – பாடல் எண் , 340.
5. அகநானூறு – பாடல் எண் , 32
6. நற்றிணை – பாடல் எண் , 215.
7. நற்றிணை – பாடல் எண் , 388.
8. நற்றிணை – பாடல் எண் , 388.
9. குறுந்தொகை – பாடல் எண் , 304.
10. குறுந்தொகை – பாடல் எண் , 269.
11. கு. மோகனராசு , அம்பாப்பாட்டு – ப, 3.
12. நா.கதிரைவேற்பிள்ளை ,தமிழ்மொழி அகராதி – ப-106.
13. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் – பக்கம்- 25., பக்கம்-53.
14. கு. மோகனராசு , அம்பாப்பாட்டு – ப, 4.
15. கு. மோகனராசு , அம்பாப்பாட்டு – ப, 34.
16. வீ. இந்திராணி , மீனவர் நாட்டுப்புறப்பாடல் – பக்கம்-102.
17. வீ. இந்திராணி , மீனவர் நாட்டுப்புறப்பாடல் – பக்கம்-160.
18. ஐங்குறு நூறு –பாடல் எண் : 180.
19. குறுந்தொகை – பாடல் எண் , 184.
20. நற்றிணை – பாடல் எண் , 111.
21. அகநானூறு – பாடல் எண் , 340.
22. இணையத்தளம், தமிழ்த்தொகுப்புகள், மீனவப்பாடல்
23. வீ. இந்திராணி , மீனவர் நாட்டுப்புறப்பாடல் – பக்கம்-16.
24. கு. மோகனராசு , அம்பாப்பாட்டு – ப, 35.
25. வீ. இந்திராணி , மீனவர் நாட்டுப்புறப்பாடல் – பக்கம்-158.
26. நற்றிணை – பாடல் எண் , 331., குறுந்தொகை – பாடல் எண் , 320.
27. குறுந்தொகை – பாடல் எண் , 269.
28. அகநானூறு – பாடல் எண் , 350.
நெய்தல்மற்றும்நாட்டுப்புற பாடல்களில் மீனவர்களின் தொழில்சார் வாழ்வியல்
- ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்
- புலம் பெயர் வாழ்க்கை
- நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்
- தொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தினம் என் பயணங்கள் – 5
- மயிரிழையில்…
- பேயுடன் பேச்சுவார்த்தை
- மருமகளின் மர்மம் – 16
- மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )
- சீதாயணம் நாடகப் படக்கதை – 20
- பெரிதே உலகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.
- நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!
- பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு
- கீழ்வானம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 46
- திண்ணையின் இலக்கியத் தடம்-22
- பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி
- இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு