ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

This entry is part 6 of 20 in the series 23 பெப்ருவரி 2014

கடோத்கஜன்

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார்.

இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக் கொல்லும் பீமன் இடும்பியை மணந்து கொள்கிறான். ( என்னிடம் கேட்டால் பீமன் இடும்பி இருவரும் சரியான இணை என்று சொல்வேன் ). அவர்கள் இருவருக்கும் பிறக்கும் மகனுக்கு கடோத்கஜன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவனும் வளர்ந்து ஒரு இளைய அரக்கனாகத் திகழ்கிறான்  குருக்ஷேத்திரப் போரில் பங்கு கொண்டு  அவன் சிற்றப்பன்- —    மார்களுக்கு உதவியாக இருக்கிறான். இவனுடைய போதாத நேரம் கௌரவர் பக்கமும் ஒரு அரக்கன் இருந்து  கொண்டு பாண்டவர்களை எதிர்க்கிறான். போரில் அதீத வேகம் காட்டும் இந்த  அரக்கர்கள் இருவரும் கடுமையாகப் போரிடுகின்றனர்.

ஒரு சமயம் போரானது மிக உக்கிர நிலையை அடைகிறது. சில இடங்களில் நிகழும் மோதல்கள் நேரம் நீண்டு கொண்டே போய் இரவு வேளைகளில் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் தொடர்ந்தது. இரவில் விழிக்கும் உயிரிலிகளுக்கு இரவு செல்ல செல்ல வலிமையும் சக்தியும் ஏறிக் கொண்டே போகும். அரக்கர்களும் இரவில் விழித்திருக்கும் உயிரிலிகள் என்பதால் கடோத்கஜனை சமாளிப்பது கௌரவர்களுக்கு மிகவும் கடினமான செயலாகிறது. ஒரு நிலையில் அவனை எதிர் கொள்ளவே அஞ்சினார்கள். மேலும் அவர்களுக்குத் துணையாகப் போரிட்டுக் கொண்டிருந்த அரக்கனும் போரில் மாண்டு விட்டான். கர்ணன் ஒருவன் மட்டுமே கடோத்கஜனை எதிர்க்கும் திறமை பெற்றவனாக விளங்கினான். ஆனால் சிற்சில நேரங்களில் அவனும் பின்னடைய நேரிட்டது. இதனால் வெறுத்துப் போன கர்ணன் தன்னிடமிருந்த சக்தி ஆயுதத்தைப் பிரயோகிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். ஓர் அந்தணன் உருவத்தில் வந்து கர்ணனிடமிருந்து அவனுடைய உயிர் காக்கும் கவச குண்டலன்களைப் பெற்றுக் கொள்ளும் இந்திரன் அவன் மேல் இரக்கப் பட்டு கர்ணனுக்கு அளித்ததுதான் இந்த சக்தி ஆயுதம். இந்த சக்தி ஆயுதத்தை ஒருவர் மேல் பிரயோகித்தால் அந்த ஆயுதம் அவர்களைக் கண்டிப்பாக கொன்று விடும் தன்மை உடையது. ஒரு முறைதான் அதனைப் பிரயோகிக்க முடியும். அதன் பிறகு அந்த ஆயுதம் தன் சக்தியை இழந்து விடும். அப்படிப்பட்ட சக்தி ஆயுதத்தைப் பிரயோகித்து கர்ணன் கடோத்கஜனைக் கொன்று விடுகிறான். கடோத்கஜன் மடிந்து விழும்பொழுது தன் உடலை விந்தியமலை அளவிற்கு விரிவடையச் செய்து பூமியில் விழுகிறான். அதனால் கௌரவர்களுக்கு ஓர் அக்குரோணி படை அளவிற்கு வீர்கள் மடிந்தனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

இவ்வளவு மிகைக் கூறல்களையும் , அதீத உணர்ச்சி வெளிப்பாடுகளையும் அந்தக் கால இந்துக் கவிஞனிடம் எதிர்பார்ப்பது நியாயமே. அவற்றை நாம் மன்னித்து விடலாம். ஏன் என்றால் இந்த அதீத வர்ணனைகள் கதை கேட்கும் படிப்பறிவில்லாத பெண்களையும் சிறுவர்களையும் குஷிப் படுத்துவதற்காகவே புனைய பட்டவை. ஆனால் அதற்குப் பின்னர் வரும் புனைவு மோசமான பாணியில் புனையப்பட்ட மோசமான கற்பனை.  இத்தகைய புனைவு அதனை எழுதிய கவிஞனைத் தவிர வேறு எவரையும் மகிழ்வித்து இருக்க முடியாது. பாண்டவர்கள் கடோத்கஜனின் மரணத்திற்காகத் துக்கப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஸ்ரீகிருஷ்ணர் தனது தேரில் இருந்து சந்தோஷ மிகுதியில் பரவச நடனம் ஆடுவதாக இந்த மகாபாரதக் கவி கூறுகிறார். இதுவரையில் ஸ்ரீகிருஷ்ணர் என்ற மன்னனின் மேல் நமக்கு ஏற்பட்ட நல்லதொரு பிம்பம் இந்த வர்ணனை மூலம் ஒரு நொடியில் தவிடு பொடியாகிறது. இதுகாறும் ஸ்ரீகிருஷ்ணர் கருணையும் பரிவும் மிக்கவராகவும்,  கண்ணியம் மிக்கவரகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

அர்ஜுனன் கண்ணனிடம் அவருடைய மிகுதியான மகிழ்சிக்குக் காரணம் கேட்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் மறுமொழி கூறுகிறார். “ சக்தி ஆயுதம் கடோத்கஜனின் உயிரை மாய்த்து உன் உயிரைக் காத்தது ” .என்றவர்` மேலும் தொடர்ந்து ,        “ இனிமேல் நீ அச்சமின்றிக் கர்ணனை எதிர்த்துப் போரிடலாம். “ என்கிறார். ஜயத்ரதனின் மறைந்திருத்தலை ஒட்டி அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையில்  நடக்கும் கொடூரமான யுத்தத்தின்பொழுது எவருக்கும் இந்த சக்தி ஆயுதத்தைப் பற்றிய நினைப்பு வரவில்லை. ஏன் இந்தக் காவியத்தை இயற்றிய கவிஞர் கூட அதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த சமயத்தில் கர்ணன் அந்த சக்தி ஆயுதத்தைப் பிரயோகித்திருந்தால் அது   ஜயத்ரதனின் மரணத்தை மாற்றி காவியத்தின் மைய ஓட்டத்தையே தடம் புரளச் செய்திருக்கும். எனவே கடோத்கஜனின் மரணத்தை விவரிக்கும் பகுதியில் கூறப் பட்டிருக்கும் சக்தி ஆயுதம் என்பது அருமையான கட்டுக் கதையன்றி வேறு எதுவுமில்லை.

கடோத்கஜனின் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் , “ பிரிய தனஞ்சய ! உன்னுடைய நலனில் அக்கறை கொண்டு பல போர்த்தந்திரங்களைக் கையாண்டு ஜராசந்தன், சிசுபாலன், நிஷாடன், ஏகலைவன், இடும்பன், கிர்மிரன், பகதத்தன் மற்றும் வேறு சில அரக்கர்களின் உயிரை மாய்த்திருக்கிறேன் “

மேற்சொன்ன கண்ணனின் வாக்கியம் உண்மைக்குப் புறம்பானது. ஏன் என்றால் மேலே அவர் பட்டியலிட்ட அரக்கர்களின் முடிவு அர்ஜுனனுக்கு நேரடியாக நன்மை அளிக்கவில்லை. அரக்கர்களான இடும்பன், கிர்மிரன்,பகதத்தன் போன்றோரின் சாவிற்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை.

என்ன காரணத்திற்காக இந்தக் கவிஞன்  ஸ்ரீகிருஷ்ணரை ஒரு பொய்யனாகச் சித்தரிக்க வேண்டும்? அப்படி அவரைப் பொய் பேசுபவராகச் சித்தரிப்பதன் மூலம் பொய்களும் அவரிடம் இருந்துதான் தோன்றியது என்ற தன்னுடைய வாதத்தை முன்னிறுத்துவதற்காகவா ?

மேற்சொன்ன பத்தியைக் கிருஷ்ண பக்தர்கள் படிக்க நேரிட்டால் அவர்,  தான் நினைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவராகவே கொண்டாடுவார்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் வல்லவராக அவர் இருந்தால் பிறகு எதற்காகப் போர்த் தந்திரங்களைக் கையாண்டதாகக் கூற வேண்டும்?

ஸ்ரீகிருஷ்ணர் ஏன் அவ்வாறு கூறினார் என்பதற்கான காரணங்களை நான் என்னுடைய முந்தைய அத்தியாயத்தில் கூறி விட்டேன். அந்த அத்தியாயத்தில் மகாபாரதத்தின் இரண்டாம் தளக் கவிஞன் ஞானம், அஞ்ஞானம், புத்திக் கூர்மை, பேதமை போன்ற அனைத்துமே இறைவனிடமிருந்து தோன்றியதாகவே சாதிக்கிறார். கர்ணன் அர்ஜுனனை அழிக்க வைத்திருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மேல் பிரயோகிக்கிறார். இது கர்ணனின் முட்டாள்தனம். இந்த இரண்டாம் தளக் கவிஞன் இது ஸ்ரீகிருஷ்ணரின் யுத்த தந்திரம்.  அதாவது கர்ணனின் மனதில் சக்தி ஆயுதத்தைப் பிரயோகிக்க எழுந்த சிந்தனை அவனது பேதமை. அத்தகைய பேதமையை அவன் மனதில் விதைத்தவர் ஸ்ரீகிருஷ்ணர் என்று நிறுவுகிறார். அதே போல சிசு பாலன் மனதிலும் ஒரு பெருஞ்சபையில் ஸ்ரீகிருஷ்ணரைத் தூற்றவேண்டும் என்ற துர் எண்ணத்தை ஸ்ரீகிருஷ்ணரே அவன் மனதில் விதைக்கிறார். பெரும்படையுடன் விளங்கிய ஜராசந்தன் யாதவர்களைக் கூண்டோடு அழிக்கும் அளவிற்கு வல்லமை  படைத்தவன். தனித்துப் போட்டியிடும் துவந்த யுத்தத்தில் பீமன் ஜராசந்தனை விட வல்லமை படைத்தவன். ஜராசந்தனின் அறிவீனத்தால் அவன் பீமனுடைய துவந்த யுத்த கோரிக்கையை ஏற்கிறான். இந்த அறிவீனத்தை அவனுக்கு ஏற்படுத்தியவர் ஸ்ரீகிருஷ்ணரே என்பது இந்த இரண்டாம் தளக் கவிஞனின் உத்தியாகும். ஆரியரல்லாத மலைவாழ் ஏகலைவனிடம் குரு தட்சிணையாக அவனுடைய வலது கைப் பெரு விரலை அரிந்து தரும்படி கேட்டது அந்தண ஆசாரியாரின் குரூர மனம். வேறு எதை பற்றியும் சிந்தியாமல் ஏகலைவன் தனது வலது கைப் பெரு விரலை அரிந்து கொடுக்கிறான். ஏகலைவனின் இந்தத் தவறான எண்ண ஓட்டத்திற்குக் காரணமும் ஸ்ரீகிருஷ்ணரின் செய்கையே ஆகும்.

மகாபாரதத்தில் இடம்பெறும் இந்த கடோத்கஜனின் வதைப் படலத்தை ஆராயும்பொழுது இது இரண்டாம் அடுக்குக் கவிஞனின் கை வண்ணம் என்று விளங்குகிறது.

**************************************************************

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *