நீங்காத நினைவுகள் – 37

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

 

                                                                                                                                                   

          முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விஷயம். தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வார இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பினேன். நான் கவிஞை யல்லேன். எனினும் என்னைக் கவிதை எழுத வைத்த ‘குற்றத்தை’ அவ்விதழ் புரிந்தது!

பெண்களின் அங்க அவயங்களைக் கொச்சையான பாணியில் விவரித்து எழுதிவந்த எழுத்தாளர்களை ஆதரிப்பதில் அவ்விதழ் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் ஆசிரியர் மிகவும் நல்லவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். நிறைய நல்லனவற்றைச் செய்துள்ளவராம்.  ஆனால் அவர் நடத்திய வார இதழின் உள்ளடக்கத்துக்கும் அவருடைய தனிப்பட்ட ஆளுமைக்கும் சிறிதும் தொடர்பு இல்லாதிருந்தது. அது வேறு, இது வேறு என்பதாய் உண்மையான இலட்சியவாதிகளும் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்களும் கருத மாட்டார்கள் என்பது வேறு விஷயம்!

பெண்களைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருந்த அவ்விதழின் படைப்புகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் “மார்பு எழுத்தாளர்களுக்கு ஒரு மடல்” எனும் தலைப்பில் நான் ஒரு கவிதையை எழுதி அவ்விதழுக்கு அனுப்பிவைத்தேன். அதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போயிற்று.

அந்தச் சமயத்தில் சென்னைப் பேருந்துகளில் பெண் பயணிகள் படும் அவஸ்தைகள் பற்றிய ஒரு சிறு கட்டுரையும் அவ்விதழில் நிலுவையில் இருந்தது. ஆண்பயணிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையினர் தேவையற்றுப் பெண்கள் மீது உரசுவது……. இடிப்பது…போன்ற (இன்னும் சில சொல்லக் கூசும்) சில்மிஷங்களைச் செய்து வந்தது பற்றிய கட்டுரை அது. கூட்டத்தின் நெரிசலில் தவிர்க்க இயலாத உரசல்கள் ஏற்படும் போது பெண்களுக்கு அது அருவருப்பை ஏற்படுத்துவதில்லை என்பதையும், ஆனால் வேண்டுமென்றே ஓர் ஆண் இலேசாக உரசினாலும் உள்ளுணர்வு மிக்க பெண்கள் அதை உணர்ந்து அருவருப்புக்கு ஆளாவதையும் அக்கட்டுரையில் கூறி யிருந்தேன். துணிச்சல் மிகுந்த பெண்கள், ‘கொஞ்சம் ஒழுங்கா சாயாம நிக்கிறீங்களா?’ என்றோ, ‘முன்னால இடம் இருக்கே?. நகருங்களேன்’ என்றோ கேட்டுவிட்டால் போயிற்று. ‘அம்புட்டு வெக்கம்னா டாக்சியில போக வேண்டியதுதானே?’, ‘ஆமாண்டி. உம்மேல எனக்கு ஆசை. அதான் இடிக்கிறேன்’ போன்ற நியாயமற்ற எதிரொலிகளைச் செவிமடுத்து மேலும் அருவருப்படையும் நிலை உருவாகிவிடுவது பற்றியும் அதில் குறிப்பிட்ட ஞாபகம். அதை அவ்விதழ் வெளியிட்டது.

எனினும், அப்போது நிலுவையில் இருந்த ‘மார்பு எழுத்தாளர்களுக்கு ஒரு மடல்’ எனும் என் கவிதையைப் படித்த எரிச்சலில் பெண் பயணிகளின் அவஸ்தை பற்றிய கட்டுரைக்கு ஆதரவாகப் பல பெண்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களை வெளியிடாமல், ஆண்களில் சிலர் என்னைத் திட்டி எழுதியிருந்த கடிதங்களை மட்டும் அவ்விதழ் வெளியிட்டதோடு, அக்கடிதங்களுக்கு ஒரு தனிப் பக்கத்தையே ஒதுக்கி, அதற்கு “சும்மா இருங்கள், ஜோதிர்லதா” என்று தலைப்பும் கொடுத்திருந்தார்கள்! (பெண்களைக் கொச்சைப் படுத்துவதற்கு எதிரான எனது கவிதையை அவர்கள் வெளியிடவில்லை என்பது வியப்புக்கு உரியதன்று.)

என்னைச் சும்மா இருக்கச் சொன்ன அக்கட்டுரை வந்த அன்று என்னோடு பல பெண்கள் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் என் கட்டுரையை ஆதரித்து எழுதியது பற்றிச் சொன்னதோடு, எனக்கு எதிரான ஆண் பயணிகளின் கட்டுரைகளை மட்டுமே அவ்விதழ் வெளியிட்டுள்ளது பற்றி ஆதங்கப்பட வும் செய்தார்கள்.

அந்த ஆண் பயணிகளின் கடிதங்களுக்கு மிகச் சுருக்கமாகப் பதிலடி கொடுத்து நான் அனுப்பிய சிறு கட்டுரையை அவர்கள் வெளியிடவில்லை!

எனினும் அக்கடிதங்கள் பற்றியும் என் பதில்கள் பற்றியும்  கீழே விவரம் தருகிறேன்.

“பஸ்ஸில் ஏறும் ஆண்கள் அனைவரையும் கார்த்திகை மாதத்து நாய்கள் என்று ஜோ. கி. எண்ணிவிட்டார். பஸ் ஸ்டாப்பில் கண்டகண்ட உடைகளில் அட்டகாசம் செய்யும் பெண்களைப் பற்றியோ, சில பல சௌகரியங்களுக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் பெண்கள் பற்றியோ இவர் எண்ணிப் பார்க்கவே இல்லை.”

–    தஞ்சாவூர் நேயர்

எடுத்துக்கொண்ட தலைப்பு அதுவன்றே! பெண்கள் அப்படியெல்லாம் இருப்பது சரி என்று சொல்லியுள்ளேனா? ஆபாச உடைக்கு நான் முதல் எதிரி.

     ‘மகளிர் மட்டும் பஸ்களில் ஏறாமல் சென்னையில் பெண்கள் பொது பஸ்களில் ஏறி இட நெருக்கடி ஏபடுத்துவது ஏன்?’

– புதுடெல்லி நேயர்

ஓரிரு பேருந்துகள் தானே குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மகளிர்க்காக ஓடுகின்றன? எனவே இது பொருத்தமான கேள்வியன்று.

‘கண்ணியமாக உடையணியும் பெண்களிடம் ஆண்கள் குறும்பு செய்வதில்லை.’

– கள்ளிக்கோட்டை நேயர்

அய்யோ பாவம்! சிறுமிகள், கிழவிகள் போன்றோரைக்கூடக் கற்பழிக்கும் பல ஆண்கள் பற்றிய செய்திகள் எல்லாம் பொய்யா? கண்ணியமற்ற உடைகளுக்கு நாமும் எதிரியே. கண்ணிய உடை யணியோரை மட்டும் விட்டுவைப்பது போல் இதென்ன பேச்சு?

     ’வடநாட்டுப் பெண்களுடன் ஒப்பிட்டால் தென்னிந்தியப் பெண்கள் அழகில் கம்மிதான். அவர்களைப் போய் இடிக்கிறோமாம்!

–         சென்னை-45 நேயர்

அப்படியா சங்கதி? அழகான பெண்களாய்ப்

பார்த்து ஆண்கள் இடிப்பார்கள் போலும்!

‘ஓர் ஆண் சிறு குழந்தையுடன் ஏறும்போது பஸ்ஸில்ண்ட்கார்ந்து கொண்டிருக்கும் இன்னோர் ஆண்தான் அவருக்கு இடம் கொடுப்பான். தாய்க்குலம் இடம் கொடுக்காது….’

–         சென்னை-35  நேயர்

   ‘அப்படி எழும் பெண் ஆண்களிடையே அவள் சிக்கிக்கொண்டு நிற்க நேருமே! அதைத் தவிர்க்கத்தான், நண்பரே! பெண்ணுக்கே கூட அவள் இடம் தர எழுவதில்லை என்பதும் உண்மை.

இன்னும் சில கடிதங்களுக்கு என் கட்டுரையிலேயே பதில் இருந்ததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை.

மேற்கண்ட என் பதில்களை அவ்விதழ் உதாசீனம் செய்துவிட்டது. காரணம் ஏற்கெனவே சொன்ன அந்தக் கவிதைதான்.

சில நாள் கழித்து என் ஒருபக்கக் கட்டுரைக்குச் சன்மானம் அனுப்பிவைத்தார்கள். நான் ஒரு கடிதத்துடன் அந்தக் காசோலையைப் பதிவுத் தபாலில் அவர்களுக்குத் திருப்பி யனுப்பினேன். ’என் கட்டுரையை ஆதரித்துப் பெண்கள் எழுதிய கடிதங்களில் ஒன்றைக்கூட வெளியிடாமல், என் கவிதையைப் படித்த எரிச்சலில் எனக்கு எதிராக ஆண்கள் எழுதிய கடிதங்களை மட்டுமே வெளியிட்ட உங்கள் சன்மானம் எனக்குத் தேவையில்லை. அதை இத்துடன் திருப்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டேன்.

இரண்டு நாள்கள் கழித்து அவ்விதழின் பிரபல பொதுஜனத் தொடர்பு நிருபர் தொலைப்பேசியில் என்னை அழைத்துப் பேசினார். காசோலையைத் திருப்பியது ஆசிரியரை வருத்தம் கொள்ளச் செய்துள்ளது என்றும் அதை ஏற்குமாறும் கூறினார். ‘முடியாது…பஸ்களில் பெண்கள் படும் அல்லல்கள் பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்.  உங்கள் ஆசிரியர் கார் வைத்திருக்கிறார். அவர் வீட்டுப் பெண்கள் பஸ் பயணம் செய்ய மாட்டார்கள். கார் ரிப்பேரானால் டாக்சியில் போவார்கள். அவர்களைப் பீக் ஹவரில் ஒரு நாள் பஸ்ஸில் பயண செய்யச் சொல்லுமாறு நான் கேட்பதாக் உங்கள் ஆசிரியரிடம் சொல்லுங்கள்….சும்மா இருங்கள் ஜோதிர்லதா என்று ஆண்களின் கடிதங்களுக்குத் தலைப்பு வேறு கொடுத்திருக்கிறீர்கள். என்னைச் சும்மா இருக்கச் சொல்லுவதற்கு நீங்கள் யார் என்று நான் கேட்பதாகவும் அவரிடம் சொல்லுங்கள்’ என்று கூறித் தொடர்பைத் துண்டித்தேன். அவ்விதழோடு எனக்கு இருந்து வந்த தொடர்பையும் துண்டித்தேன்.

ஆனால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு

அதே நிருபர் என்னோடு தொலைபேசினார். அவர்கள் இல்லஸ்ட்ரேட்டெட் வீக்லியின் அப்போதைய ஆசிரியராக இருந்து வந்த குஷ்வந்த் சிங் அவர்களைக் கவுரவிப்பதற்கு ஏதோ விருந்துக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், அது சார்ந்த வரவேற்புக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தங்கள் ஆசிரியர் விரும்புவதாகவும் அந்நிருபர் தெரிவித்தார். நான் சில நொடிகளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தேன்.

Series Navigationதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவுபெரியவன் என்பவன்தினம் என் பயணங்கள் – 8திண்ணையின் இலக்கியத்தடம் – 25தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றிசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )கவிதையில் இருண்மைவழக்குரை காதைமனத்துக்கினியான்ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லைவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3பிச்சை எடுத்ததுண்டா?‘காசிக்குத்தான்போனாலென்ன’வலிமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    jyothirllata girija says:

    மன்னிக்கவும். கட்டுரையின் இறுதிப் பகுதி விடுபட்டுள்ளது. அப்பகுதி கீழே வருகிறது. சிரமத்துக்கு மன்னியுங்கள். ஜோ. கிரிஜா
    எனது மவுனத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட அவர், ‘நீங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும். ’ என்று கூறினார்.
    பிரபல வார இதழின் ஆசிரியரே அந்த அளவுக்கு இறங்கி வந்துள்ள நிலையில் நான் முறுக்கிக்கொள்ளுவது சரியன்று என்று தோன்றவே, நானும் அதற்கு இணங்கினேன். எனினும், சில நாள்களுள் குஷ்வ்ந்த் சிங்கின் வீட்டில் நிகழ்ந்த ஏதோ அசம்பாவிதத்தால் அவ்விருந்து தடைப்பட்டுப் போனது.
    அதன் பின், அவர்களது விருப்பத்துக்கு இணங்க என் குறுநாவல்களை அனுப்பத் தொடங்கினேன். மீண்டும் நட்பு மலர்ந்தது. எனினும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த நட்பு மனக்கசப்பாக மாறியது. பணிப்பெண்களை இழிவுபடுத்தி அவர்கள் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்த அருவருப்பான ஜோக்குகளுக்கு நான் ஆட்சேபம் தெரிவித்து எழுதியபின் அந்த விரிசல் நேர்ந்தது.
    கருத்து மாறுபாடு இருந்தாலும் பிறரின் படைப்புகளை வெளியிட்டுவந்த அமரர் கவியரசு கண்ணதாசன் அவர்களையும், ‘இது நம் கருத்தன்று. படைப்பாளியின் சொந்தக் கருத்து’ என்கிற குறிப்புடன் வேறுபடும் பிறவற்றையும் வெளியிட்டு வந்த அமரர் மணியன் அவர்களையும் நினைவுகூராதிருக்க முடியவில்லை. நிற்க.
    ‘மார்பு எழுத்தாளர்க்கு ஒரு மடல்’ எனும் எனது கவிதையைச் சுட்டி மாத இதழில் திரு சுந்தர் வெளியிட்டார். அதன் மீள்பதிவு திண்ணையிலும் பல நாள்கள் முன் வெளிவந்தது.
    ………
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    ஷாலி says:

    //அந்தச் சமயத்தில் சென்னைப் பேருந்துகளில் பெண் பயணிகள் படும் அவஸ்தைகள் பற்றிய ஒரு சிறு கட்டுரையும் அவ்விதழில் நிலுவையில் இருந்தது. ஆண்பயணிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையினர் தேவையற்றுப் பெண்கள் மீது உரசுவது……. இடிப்பது…போன்ற (இன்னும் சில சொல்லக் கூசும்) சில்மிஷங்களைச் செய்து வந்தது பற்றிய கட்டுரை அது.//
    ———————————-

    கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
    குனிந்து எடுத்த நொடியில்
    என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
    சில பார்வைகள்
    கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
    எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
    தேடிக் கொண்டிருந்தன
    சில பார்வைகள்
    கை வைத்து மறைப்பதைக் கூட
    அவமானப்பட்டுச் செய்கிறேன்

    “முன்னாலே போமா” என்று
    பின்னாலே தடவிவிட்டு போகும்
    நடத்துனர்
    கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
    மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
    கூனிக்குறுகி என்னைப் போலவே
    சில திரௌபதிகள்
    ஒவ்வொரு நிறுத்தத்திலும்
    மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

    ஆண்டவா!
    எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
    ஆனால் அடுத்த பிறவியில்
    ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…

    -முத்தாஸ் கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *