மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

 

                                                      டாக்டர் ஜி. ஜான்சன்

          தொண்டை வலி நம் அனைவருக்குமே எப்போதாவது வந்திருக்கலாம். அப்போது தொண்டையைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் ” டான்சில் ” வீங்கியுள்ளது என்று கூறியிருக்கலாம்.

” டான்ஸில் ” என்பதை தொண்டைச் சதை எனலாம். தொண்டையின் இருபுறமும், உள்வாயில் நாக்கின் அடியில் இவை அமைந்துள்ளன. நிணத்திசுக் கோளங்களான இவை, உடலின் தடுப்புச் சக்தியின் உறுப்புகள். இவை ‘ லிம்ப் ‘ எனும் நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இந்த சதைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதை தொண்டைச் சதை வீக்கம் அல்லது அழற்சி ( Tonsillitis ) அழைக்கப்படுகிறது.

தொண்டைச் சதை வீக்கம் பெரும்பாலும் 3 முதல் 7 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த வயதில்தான் தொண்டைச் சதை அதிகமாக நோய்க் கிருமிகளை எதிர்த்து போரிடும் காலமாகும். குழந்தை வளரும்போது தொண்டைச் சதையின் அளவும் குறையும். அப்போது நோய்த் தொற்றும் குறைந்துவிடும்.

தொண்டைச் சதை வீக்கம் ஆபத்தை விளைவிக்காது. ஆனால் அதில் சீழ் கட்டி உருவானால் அதன் மூலம் கிருமிகள் இரத்தத்தில் கலந்து ரூமேடிக் காய்ச்சல் அல்லது சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்கிவிடலாம்.

சில வேளைகளில் வீக்கம் பெரிதாக இருந்தால் அதனால் மூச்சு விடுவதில் சிரமமும், காது வலியும் கூட உண்டாகலாம்.

பெரும்பாலான தொடை சதை நோய்த் தொற்றும் சீழ் கட்டியும் ஸ்ரெப்டோகாக்கஸ் எனும் கிருமிகளால் உண்டாகின்றன. சில வைரஸ் கிருமிகளும் இதை உண்டாகலாம்.

                  அறிகுறிகள்

* தொண்டையில் புண் உண்டாகி அதிகம் சிவந்து காணப்படும். வெள்ளை நிறத்தில் புள்ளிகள் அல்லது மஞ்சள் நிறத்தில் சீழ் உள்ளதைக் காணலாம்.

* கழுத்துப் பகுதியில் நிணநீர்க் கட்டிகள் அல்லது கரளைக் கட்டிகள் ( Lymph Nodes ) இருக்கலாம்.

* லேசான காய்ச்சல் , தலைவலி தோன்றலாம்.

* தொண்டையில் கடுமையான வலியும், உணவை விழுங்குவதில் சிரமமும் உண்டாகலாம்.

* பேசுவத்தில் கூட சிரமத்தை எதிர் நோக்கலாம்.

* மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம்.

                 சிகிச்சை

பிள்ளைகளின் தொண்டையை நாம் பரிசோதிப்பது சுலபம். ஒரு கரண்டியின் பிடியை நாக்கின் மீது வைத்து, குழந்தையை ஆ என்று சொல்ல வைக்க வேண்டும். அப்போது டார்ச் லைட்டை வாய்க்குள் அடித்து பார்த்தால் தொண்டைச் சதையின் வீக்கத்தையும், அதிகமான சிவந்த நிறத்தையும் காணலாம்.. அப்படி தெரிந்தால் உடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

அவர் தொண்டையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருந்துகள் தருவார். பொதுவாக வலிக்கு மருந்தும், கிருமிகளைக் கொல்லும் என்டிபையாட்டிக் மருந்தும் தருவார். சில மருத்துவமனைகளில் தொண்டைப் பகுதிலிருந்து பஞ்சுத் துடைப்பான் ( Swab ) மூலம் நீர் அல்லது சீழ் எடுத்து பரிசோதனையும் செய்வார்கள். அதில் கிருமியின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வேளை சீழ் கட்டி இருந்தால், அல்லது அடிக்கடி தொண்டைச் சதைத் தொந்தரவு ஏற்பட்டால் மட்டுமே அறுவைச் சிகிச்சைத் தேவைப் படும்.

உண்மையில் தொண்டைப் பகுதியில் தொண்டைச் சதைகள் உள்ளது உடலின் எதிர்ப்புச் சக்திக்குத்தான். இவை கிருமிகள் வாய் வழியாக உடலினுள் புகாமல் தடுத்து நிறுத்தும் உறுப்புகள். அதனால் வேறு வழியே இல்லாதபோதுதான் அறுவை சிகிச்சை மூலமாக தொண்டைச் சதைகள் அகற்றப்படுகின்றன.

காது மூக்கு தொண்டை நிபுணர்களிடம் இதை செய்து கொள்வதில் ஆபத்து இல்லை.  அதன் பின் தொண்டைப் பகுதியில் எதிர்ப்புச் சக்தி ஓரளவு குறைவு பட்டாலும், திரும்ப திரும்ப ஏற்படும் தொண்டைச் சதை வீக்கத்தால் உண்டாகும் ஆபத்தான பின் விளைவுகளிலிருந்து விடுபடலாம்.

( முடிந்தது )

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *