சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான அறிமுகமன்று. கடிதம் வாயிலாகத்தான். அவரது கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியதற்கு அவர் மிகுந்த அன்புடன் பதில் எழுதியிருந்தார். மிகப் பிரபலமான பெரியவர் பதில் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
நன்றி தெரிவித்த பதில் கடிதமாக மட்டுமின்றி, அவரும் சில பாராட்டு மொழிகளைக் கூறியிருந்தார்..
அதுமட்டுமல்லாது, அவர் எனக்கு ஒரு பணியையும் கொடுத்தார். அதாவது, நாட்டியக் கலை பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த சிறு நூல் ஒன்றைத் தம் பதிலுடன் அனுப்பி அதனை நான் தமிழில் பெயர்க்கவேண்டும் எனும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
‘தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. தாங்கள் பதில் எழுதுவீர்கள் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பதில் எழுதியதோடு நில்லாமல், எனக்கு ஒரு பணியையும் கொடுத்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் சில கதைகளை நான் எழுதியுள்ளது உண்மைதான். ஆனால் இது போன்ற நூல்களை மொழிபயர்க்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவு மட்டுமின்றி நாட்டியக் கலை பற்றியும் அறிந்துள்ள ஒருவரே தங்கள் நூலை மொழிபயர்க்கத் தகுதியானவர். இது பத்மா சுப்ரமணியம், அல்லது எழுத்தாளர் சிவசங்கரி போன்றோர் செய்ய வேண்டிய வேலையாகும். எனவே, தங்கள் வேண்டுகோளை ஏற்க முடியாத நிலையில் உள்ளேன். தயவு செய்து மன்னிக்கவும். புத்தகத்தில் என் பெயரை எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அதை நான் வைத்துக் கொள்ளுகிறேன். நாட்டியக் கலை பற்றி ஏதும் அறிந்திராவிடினும் தங்கள் அன்பளிப்பு என்னிடம் இருக்கட்டும். என்னை நீங்கள் என்று பன்மையில் அழைக்க வேண்டாம். தங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும் எனது நன்றி’ என்னும் ரீதியில் ஒரு பதிலை எழுதினேன்.
சுப்புடு எனது கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். ’யாருக்கு அந்த வேலையை அளிப்பது என்பதை நீ எனக்குச் சொல்ல வேண்டாம். உன்னால் முடியும். தயவு செய்து அதை ஏற்றுக்கொள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்,
‘உங்கள் நம்பிக்கைக்கு மீண்டும் எனது நன்றி. ஆனால், அது சரியாக இருக்காது. இந்த மொழிபெயர்ப்பு ஆங்கிலம்-தமிழ் அகராதியின் உதவியுடன் செய்யக் கூடியதன்று. அவ்வாறு நான் செய்தால் அதில் உயிரே – அதாவது ஜீவனே – இருக்க வாய்ப்பில்லை. எனவே தயவு செய்து புரிந்துகொண்டு என்னை மன்னியுங்கள். உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மறுபடியும் நன்றி’ என்று எழுதினேன்.
‘அப்புறம் உன் இஷ்டம்’ என்றார் சுப்புடு.
சுப்புடு அவர்கள் பிறந்தது மார்ச் மாதத்தில். பர்மாவிலிருந்து 40 களில் இந்தியாவுக்கு வந்த அகதிகளின் குடும்பங்களில் சுப்புடுவின் குடும்பமும் ஒன்று. இந்தியாவுக்கு வந்த பின் நிதி அமைச்சகத்தில் உயர்ந்த பணியில் அமரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இசை, நாட்டியம், நாடகம் மூன்றிலும் சிறு வயதிலிருந்தே திறன் வாய்ந்தவராக இருந்த அவர் இசை, நாட்டியம் ஆகிய கலைகளின் நுணுக்கங்களையெல்லாம் தேர்ந்த் விற்பன்னர்களிடம் கற்றார். அதனால்தானோ என்னவோ, அவர் எழுதிய விமரிசனங்களில் அவரையும் மீறித் தெறித்த அவரது மேதாவிலாசத்தைப் பாதிக்கப்பட்டவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தோன்றுகிறது.
அமரர் எம்.எல். வசத்குமாரி அவர்கள் பதம் பாட, அவர் மகள் (திரைப்பட நடிகை) ஸ்ரீ வித்யா அற்புதமாக ஆடிய நாட்டிய நிகழ்ச்சி பற்றிப் புகழ்ந்து விமர்சித்த பின், “ஒரு வெண்பாவுடன் இதை முடிக்கிறேன்” என்றும் கூறிவிட்டுக் கீழ்க்காணும் வெண்பாவையும் சுப்புடு எழுதியிருந்தார்:
“சுற்றி வரலாம் உலகை
சுற்றளவைக் குறைத்துக்கொண்டால்”
ஸ்ரீ வித்யா பருமனாக இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் தமாஷாக இவ்வாறு குறிப்பிட்டதை அவர் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் தமது அடுத்த விமரிசனத்தில் சுப்புடு குறிப்பிட்டிருந்தார். ‘நான் எழுதியபடியே இப்போது ஸ்ரீ வித்யா எனது குறிப்பைப் புரிந்துகொண்டு தம் உடம்பைக் குறைத்துக்கொண்டிருந்தார்’ என்றும் விமர்சித்திருந்தார். எம்.எல்.வியின் இசையைப் பன்முறை பாராட்டியுள்ள சுப்புடு இந்த விமரிசனத்தில் அவர் பதம் பாடிய தினுசில் இருந்த குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
தமது நூல் ஒன்றின் முன்னுரையில் சுப்புடு இவ்வாறு கூறியிருந்தார்:
‘என் எழுத்தால் நடந்தது என்ன? யோசித்தேன். சர்ச்சைகள் கிளம்பின. வக்கீல் நோட்டிசுகள் பறந்தன. திருவையாற்றில் உதை வாங்கினேன். “சுப்புடுவும் நாய்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அறிவிப்புகள் வந்தன. ஆகவே, என் விமரரிசனங்களுக்குப் பாதிப்பு இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.”
வைஜயந்திமாலா அவர்களின் நடனத் திறமையைச் சுப்புடு மிகவும் போற்றி விமரிசனங்கள் எழுதியிருக்கிறார். அவர் திரைப்படத் துறையை விட்டு நடனத்தின் பால் தம் கவனத்தைச் செலுத்த முற்பட்டதை அவர் பெரிதும் பாராட்டியுள்ளார்.
என்ன ஒன்று? அவர் போற்றினாலும் தாங்க முடியாது. தூற்றினாலும் தாங்க முடியாது. அவரது விமரிசனப் பாணி அவ்வளவு திண்மையானது. ’நீங்காத நினைவுகள்’ கட்டுரையொன்றில், தென்னாட்டுப் பாடகர்கள் வட நாட்டினர் போல் தம் குரல்களைப் பேணாமல், புகையிலை, வெற்றிலை போட்டுப் பாழ்படுத்திக்கொள்ளுவது பற்றி அங்கலாய்த்துவிட்டு, ‘இப்படி நான் சொல்லுவது கேட்டு அவர்களுக் கெல்லாம் என் மீது ஆத்திரம் வரும். ஆனால் எனக்கு எதிராய்க் குரல் எழுப்ப மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத்தான் தொண்டையே கிடையாதே!’ என்று அவர் தம் கட்டடுரைக்கு முத்தாய்ப்பு வைத்திருந்ததைக் குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது!
அவரது நகைச்சுவை குபீர் என்று சிரிக்க வைப்பது. ஆனால் அதன் கடுமையைத் தாங்கிக்கொள்ள ஒரு பெருந்தன்மை வேண்டும். ‘பாதிக்கப்பட்டவ்ருக்குச் சிரிப்பு எப்படி வரும்? பாதிக்கப் படாதவர்கள் வேண்டுமானல் குபீர் என்று சிரிப்பார்கள்’ என்று ஒரு பாகவதர் சொன்னதாய்க் கேள்வி.
ஒரு முறை முன்ன்றிவிப்பு இல்லாமல் அவர் திடீரென்று எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் வீட்டுக்குப் போனார். எம்.எல்.வி அவர்களே கதவைத் திறந்துள்ளார். ‘அயாம் சாரி. நான் மேக்சியில் இருக்கேன்….மன்னிக்கணும்…’ என்றாராம்.
சுப்புடு தமக்கே உரிய குசும்புடன், ‘அதனால என்ன? மேக்சியில தான் மேக்சிமம் கவரேஜ்’ என்றாராம்! எம்.எல்.விக்குச் சிரிப்புத் தாங்கவில்லையாம்.
ஒரு முறை சுப்புடு அவையில் இருந்த போது கச்சேரி செய்துகொண்டிருந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், ‘இந்த சுப்புடு என் பாட்டு எத்தனைக்கு எத்தனை நன்னால்லேன்னு எழுதறாரோ, அத்தனைக்கு அத்தனை எனக்கு மேல மேல சான்ஸ்தான் வருது…’ என்று அவையினரைப் பார்த்துச் சொல்ல, அவர்களிடமிருந்து பயங்கரமான கைதட்டல் கிளம்பிற்றாம்.
உடனே சுப்புடு எழுந்து, ‘செம்மங்குடியோட பாட்டுக்கு எப்பவாவது இப்படி ஒரு கைதட்டல் கிடைச்சதுண்டா! இல்லையே! அதான் சொல்றேன். அவர் சிறந்த பேச்சாளர். பாடகர் இல்லே!’ – இவ்வாறு அவர் பதிலடி கொடுத்ததும் முன்னதை விடவும் அதிகமான ஓசையுடன் கைதட்டல் ஒலித்ததாம்!
‘தனிமையில் இனிமை கண்டேன்’ எனும் எனது புதினம் ஒன்றைச் சுப்புடு அவர்களுக்கு நான் சமர்ப்பித்தேன். அது ஒரு பாடகியைப் பற்றிய கதை. அதனால் அவ்வாறு செய்துவிட்டு அவருக்கும் அதன் ஒரு படியை அனுப்பிவைத்தேன்.
‘என்ன இது! போயும் போயும் எனக்குக் காணிக்கை யாக்கி யிருக்கிறாயே! உன் புத்தகம் விற்க வேண்டாமா?’ என்று கேட்டார் சுப்புடு.
………
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.
- குப்பையாகிவிடவேண்டாம் நாம்!
- தொடுவானம் 7. தமிழ் மீது காதல்
- தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3
- கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி
- சாட்சி யார் ?
- நீங்காத நினைவுகள் – 38
- புகழ் பெற்ற ஏழைகள் – 49
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014
- திண்ணையின் இலக்கியத் தடம் -26
- அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.
- ஓவிய காட்சி
- நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’
- குப்பை சேகரிப்பவன்
- மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா
- இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்
- இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]
- 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]
- எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’
- பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
- சீதாயணம் நாடகப் படக்கதை – 24
- அம்மனாய்! அருங்கலமே!