உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா

உறைந்த சித்திரங்கள்       –        கேரள சர்வதேசத் திரைப்பட விழா
This entry is part 2 of 23 in the series 23 மார்ச் 2014

 

                                                    

” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் ”   18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில்   ( அன்ன அரபியா – இஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய் )  ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது.  திருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும்  திரைப்பட சம்பந்தமான பல புத்தக அரங்குகள் கேரள திரைப்பட விழாவை  ரம்மியமாக்கியிருந்தது. (  அன்ன அராபியா: 85 நிமிடப் படமான இது ஒரே ” சீக்குவன்ஸ் ஷாட்டில் ”  எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இடையில் எந்த வெட்டும் கிடையாது.  இஸ்ரேலில் யூதர்கள்,  அரேபியர்கள் இணைந்து வாழும் ஒரு சிறு பகுதியை மையமாகக் கொண்டு  யால் என்ற பத்திரிக்கையாளப் பெண் அங்கு சென்று சிலரை பேட்டி காண்பது இதன் மையமாகும்  இடிந்த நிலையிலான வீடுகள், சேர்ந்த எலுமிச்சை தோட்டம் அங்கு வசிக்கும் சிலரின் மனப்போக்குகளும், விசித்திரங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பெண்ணின் பேட்டி மூலம் வெளிக்கொணரப்படுகிறது.).

 

 

திரைப்பட விழாவின் அலுவலகம்  அமைந்த பகுதியில் முன்பெல்லாம் சுற்றுச்சூழல் பற்றிய சுவரொட்டிகள், வாசகங்கள் கவனத்தை ஈர்க்கிற  விதமாய்  காணப்படும். கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து கண்ணில்

பட்டவை  என்டோ சல்பான் அபாயம் பற்றியவை ( இவ்வாண்டு வெளிவந்திருக்கும் “ என்மகஜே “  என்ற சிற்பியின் மொழிபெயர்ப்பிலான மலையாள நாவல்   என்டோசல்பான் பாதிப்பால் சீரழிந்த மக்களின் துயர வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ) இவ்வாண்டு  “ மேற்குத் தொடர்ச்சி மலையைப் காப்பாற்றுவோம் “  என்ற வாசகங்களுடன்  அவ்வகையில் பல பதாகைகள் தென்பட்டன. கஸ்தூரி ரங்கன் அறிக்கை சம்பந்தமாக பல போராட்டங்கள் கேரளமெங்கும் நடைபெற்று வருகின்றன.

 

பெண்கள் மீதான் வன்முரை பெருகி வரும் சம்யத்தில் பெண்கள் திரைப்பட விழா படங்கள் நடைபெறும் திரையரங்குக்களுக்குச் சென்று வர  இலவச ஆட்டோக்களும், டாக்சிகளும்  விழா அமைப்பாளர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது பெண்களுக்கு கொஞ்சம் பாதுகாப்புணர்வை தந்தது ( அவற்றின் பெயர்கள் :She Taxi,   women friendly autos ) .மிதிவண்டி மன்றங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் பதாகைகள், பூட்டப்பட்ட சைக்கிளுடன் காந்தி பூங்கா தெருவில் காணப்பட்டது  :     ” மிதி வண்டியைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் நலதற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக  ” என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன )

சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலான படம் என்ற வகையில் சென்ற ஆண்டின் தேசிய விருது பெற்ற         ” பிளாக் பாரஸ்ட் ”  இவ்வாண்டு போட்டிப்பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஒருவகையில் மிட்டுவும், மிலியும் தங்கள் பெற்றோர்களால் கை விடப்பட்டவர்கள்.  விடுமுறையைக் கழிக்க  வீட்டிற்குச் செல்ல இயலாத சூழலில்  காட்டில் வசிக்கும் லூக் மாமாவிடம் செல்கிறார்கள். ஆதிவாசிகளின் வாழ்வியலும் காடும், விலங்குகளும்  அவர்களுக்குத் தரும்  அனுபவங்களும் அவர்களை வேறு உலகில் இருக்க வைக்கிறது. இந்த மலையாளப்படத்தில்  தலைநகரில்  தலைமை செயலகத்திற்கு அருகிலான சாக்குப்படுதாவீட்டில் பஞ்சான் பிறக்கிறான். மரங்கள் வெட்டப்படுவது, காடழிப்பு சம்பந்த்மாக அவன் அப்பா சிறைக்குப் போய் விட்டு விடுதலை ஆனபோது அவன் அப்பாவை வரவேற்க தலைநகருக்குச் செல்கிறான். அவன் அப்பா மலையில் காற்றாடிகள் போட்ட முதலாளிகளின் மிரட்டலால் காட்டிற்குள் தலைமறைவாகிறான்.அவனைத் தேடி பஞ்சான் இரு நகரக் குழந்தைகளோடு செல்கிறான். அவன் அப்பா சொன்ன தொன்மக் கதையொன்று  அவனை வழிநடத்துகிறது.

 

விழாவின் சிறந்த படத்திற்கான   பரிசைப் பெற்ற படம்    ” பர்விஷ்” என்ற ஈரான் திரைப்படம் .தன் தந்தை மறுமணம் செய்து கொள்கிற போது  அவரின் சமையல் வேலை , வீட்டைப் பாதுக்காக்கிற வேலையில்  ஈடுபட்டிருந்த  அவரின் அய்மபது வயது மகன்  பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான. வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். அப்பா தனி வீட்டு வாடகை கொடுத்தாலும்  அவரின் ஆதிக்கம் அவனை இம்சிக்கிறது.தேடிக்கொள்கிற காவலாளி வேலையில் தன்னைப் பொருத்திக்கொள்வதில்லை. நாய்கள் செய்யும் தொல்லைகள் பார்ர்த்து விஷம் வைத்துக் கொல்கிறான்.குழந்தையொன்றை தள்ளிக் கொண்டு போய் குழந்தை வண்டியை நிராவதாரமாக்கிப் போகிறான்.  சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் உலர் சலவையகத்து இடத்து முதியவனைக் கொல்கிறான். மனம் விசித்திரமாய் செயல்படுவது அவனுக்கே தெரிகிறது. அவனின் விசித்திரம் பார்வையாளர்க்குப் பதட்டத்தை  ஏற்படுத்துகிறது.

 

 

பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த படமாக ஆஸ்திரேலியாவின் ” ராக்கெட் ” இருந்தது.மலைப்பிரதேசத்தில் பெரும் சாபத்துடன் வாழ்கிறான் அச்சிறுவன். அவன் அம்மாவின் இரட்டைப்பிரசவத்தில் தப்பித்தவன் அவன். அவன் உயிரோடு இருப்பதே சாபம் என்கிற பாட்டி.  இன்னொரு  அணை கட்டப்படுவதற்காக  அவர்களின் மலைப்குதி  கட்டாயமாக kali செய்யப்படுகிறது.அம்மாவும் இடையில் இறந்து போகிறாள்.  கன்னிவெடிகள், ஆயுதங்கள் விரவிக்கிடக்கும் பகுதி. ஜீவாதாரத்திற்கே சிரமம். அவன் அப்பா மலைப்பகுதியை விட்டு  தொழிற்சாலை உள்ள நகரப் பகுதிக்குச் செல்லும் யோசனையில் இருக்கிறான். புது இடத்தில் நடக்கும் ராக்கெட் திருவிழா சிறுவனுக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மழை கொட்டுகிறது. ராக்கெட் விடும் போட்டியில் சிறுவன் வெற்றி பெறுகிறான்.

பார்வையாளர்கள் துருக்கியின் ” கதை சொல்லி”யில் அமிழ்ந்து போனார்கள். அஷிஸ் புகழ் பெற்ற நாடக நடிகராக இருந்தவர்.  புகழின் உச்சியில் இருந்தபோது பல பெண்களால் கவரப்பட்டு புற்று நோய் உபாதையில் இருந்த மனைவியை நிராகரித்து விவாகரத்து வாங்கியவர். பின்னர் நாடக வாய்ப்புகள் குறைந்து போய் வயதான காலத்தில் பொது இடங்களில், மால்களில், உணவு விடுதிகளில் கதை சொல்பவராக வாழ்க்கையை நடத்துகிறார். குழந்தைகளுக்கு அவர் சொல்லும் கதைகளை விட அவருக்கு பின்னால் வந்து சிரிப்பூட்டும் கோமாளிகள் தேவைப்படுகிறார்கள். தன் மகளைத் தேடி பழைய வாழ்க்கைக்கு மன்னிப்பு கோருகிறார். ஆனால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு இரவில் இறந்து போகிறார்.

 

மிகுந்த ஏமாற்றம்  தந்த  திரு இயக்குனர்கள் கிம்கி டெக் ( கொரியா )  , நோர்பு  ( பூட்டான்.)                     கிம்கி டெக்  ( மோயிபஸ் )  படத்தில் கணவனின் பாலியல் நடவடிக்கைகளை கவனித்து வெறுப்புற்ற மனைவி அவனின் ஆணுறுப்பை வெட்ட முயல்கையில் அவன் தப்பிக்க மாட்டிக்கொள்கிற மகனின் ஆணுறுப்பு வெட்ட்டப்படுகிறது.அவன் பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவமானப்டுத்தப்படுகிறான். அறுவைச் சிகிச்சை மூலம் வேறொன்று பொருத்தப்படுகிறது. பாலியல் தொந்தரவு செய்யும் இன்னொரு பையனின் ஆணுறுப்பு வெட்டப்படுகிறது. இப்படியே தொடர்கிறது. பாலியல் சார்ந்த அருவருப்பான்  படத்தை பார்த்த அனுபவமே ஏற்பட்டது. வசனமே இல்லாமல் கதறல், முணகலுடன்  புதிதாய் வடிவமைத்திருந்தார். கேரள திரைப்பட விழாவில் இளம் வயதினர் பெரிதும் பங்கு கொள்வதுண்டு. இப்படத்தைப் பார்த்து மயங்கிய இளம் பெண்களும், அதிர்சியில் உறைந்து போன பெண்களும் கிம்கிடெக்கை சபித்தபடி வெளியேறினர். கிம்கிடெக் பார்வையாளர்களுடான சந்திப்பில் அவரின் சமீபத்திய படங்களின் வணிக ரீதியாய் கட்டமைக்கப்பட்ட வன்முறை குறித்து   சொன்ன சமாதானங்கள் ஒரு நல்ல கலைஞருக்குரிய அடையாளங்களாக இல்லை. தென் கொரியா உட்பட பல நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. கடைசியில் புத்தரிடம் போய் சரணடையச் செய்கிற  குறியீடுகள் அருவருப்பே தந்தன. னித்துவமான அழகும், தனித்துவமான வன்முறையும் என்னளவில் ஒன்றுதான்.  குடும்ப அமைப்பை உடலின் அமைப்பின் வழியாகச் சொல்கிறேன். பிறப்புறுப்பின் வழியாகச் சித்தரிக்க விரும்புகிறேன்.குடும்ப அமைப்பில் உருவாகும் வன்முறைகளைச் சொல்கிறேன். வன்முறைகள் உருவாகும் காரணங்களை என் படங்கள் சொல்கின்றன.  வாழ்க்கை வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது வன்முறையும் புத்தமதமும் வெவ்வெறாகத் தெரிந்தாலும் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்றார்.

Memories in March Poster

( கிம் கி டெக்கின் படம் திரையிடலுக்கு முந்திய படமாக அஞ்சலி திரையரங்கில் மறைந்த வங்க இயக்குனர் ரிதுபர்னோகோஷ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த  ” மெமரிஸ் இன் மார்ச் ” என்ற படம்  இருந்தது.  ஓரின பாலுணர்வு பற்றி நாசுக்காவும், விவாதமாகவும் உயர்ந்த தளத்தில் பேசிய படம். நமக்குத் தேவை ரிதுபர்னோகோஷ்கள்தான். கிம்கி டெக்குகள் அல்ல என்ற விவாதம் மேலெழும்பியது. ) பூட்டாவின் நோர்பு   இயக்கிய படம் சுனில் கங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதென்றாலும் தேவதாசிக்குடும்பம், வாரிசு, நிலப்பிரபு, எழ்ழைக்காதலன் என்று யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகளுடனே இருந்தது. மண்  சிறபங்கள் செய்ய்யும் தலித் பையன் தேவதாசிப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அவளை கர்ப்பமாக்கி விடுகிறான். பண்ணையார் மகனுக்கு அவள் மேல் கண் என்பதால் அவள் அவனுடனும் கூடி அது  பண்ணையார் மகனின் சிசு என்கிறாள். தலித் சிசுவை பண்ணையார் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.  இடையில் முஸ்லீம்கள் சிலைகளை நொறுக்குவது போன்றவை வலிந்து சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கைப்படமும் தமிழ்ப் போராளிகளை கொச்சைப்படுத்தும் பல விசயங்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது.  யாழ்ப்பாணம் புலிகள் காய்ச்சலில் மிதப்பதாக குழதைகளை அடிக்கும் ஒருவனை வைத்து ஒரு வசனம் புகுத்தப்படுகிறது. பிரபாகரன் இறந்ததைக் கொண்டாட பட்டாசு வாங்கப போகிற 3 இளைஞர்களின் விசித்திரப்போகுகள்  இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.பிரபாகரன் இருக்கிறாரா என்று அதில் ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான் அதற்கு தமிழனின் தோட்டத்தில் கள்ளு குடிக்கும் ஒரு சிங்கள் போலிஸ்காரன் இப்படிச் சொல்கிறான். : அதெல்லாம் நமக்கெதுக்கு . குடித்து குடியை அனுபவி ” தமிழனான விவசாயி நிலத்திலிருந்து காய்கறிப் பொருட்களும் தானியமும் சுரண்டி எடுத்துப் போகிற போலீஸ்காரன், குழந்தைகள் பொம்மைத்துப்பாக்கிகள் போலவே துப்பாக்கிகளை பாவித்து கொலை செய்து கொள்கிறார்கள்.   ஆய்தங்களை உபயோகித்துப் பழக்கப்பட்ட இளைஞர்கள் சிங்கள் புலிகள், பாதித்தமிழர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். வெலிக்கடை சிறையில் பத்தாண்டுகள் வாசமிருந்து வெளிவந்து காலில் தென்படும் கத்தியை நிராகரித்து புது வாழ்வுக்குத் தயாராகிறார்கள்.

 

 

போர்ஹேவின் புத்தகமொன்றை மையமாகக் கொண்டு பிழைகள் புத்தகத் தயாரிப்பில் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையிலும் கொண்டு வரும் குழப்பங்களை ” எரட்ட ”  என்ற படம்  சொன்னது. இப்பட இயக்குனர் இவான் வெஸ்கொவொ  25 வயது இளைஞர். இதில் அவர் கட்டமைத்திருக்கும் உலிஸ்சஸ் கதாபாத்திரம் காதல் வயப்பட்ட  ஆண்களின் பிம்பமாக இருக்கிறான் . யதார்த்தத்திலும் புனைவிலும் கலந்ததாக ஞாபகங்களுடன் திரிகிறான்  அவனின் ஞாபகங்கள்  அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன இந்தக்குழப்பங்களை கனவுகளாகவும், மனப்பிறழ்வாகவும் இந்த அர்ஜென்டைனா இயக்குனர் காட்டுகிறார். இந்தப்பட அனுபவம் ஒவ்வொரு முறை பார்க்கவும்   பாவ்லோ கொயா, போர்ஹே நூல்களின் வாசிப்பு போல புது அனுபவங்களைத் தரக்கூடியது  என்று   இவான் வெஸ்கொவொ நம்புகிறார்.காப்ரியல் மார்க்கூஸின் ” கலோனியலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை ”  நாவலை மையமாகக் கொண்டிருந்த படம் யதார்த்தவாதப்பிரதியாக நாவலை மடித்துப் போட்டு விட்டது. முதிய கலோனல் ஒருவன் தம்து ஓய்வூதியம் பற்றிய கடிதம் வருமென்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவிக்கு ஆஸ்துமா வியாதி சிரமப்படுத்துகிறது. அவர்களின் ஆதாரமாக இருந்த மகன் வளர்த்த சண்டைக் கோழியின் சண்டைப் போட்டியில் சாகிறான்.ரசம் போனக் கண்ணாடிதான் கிழவிக்கு முகம் பார்க்கக் கிடைதத்து.  பாட்டிலில் நெஞ்சுத்தைலம் நோண்டி எடுத்து  நெஞ்சில் துடைக்க வேண்டியிருக்கிறது. இரண்டு இழுப்பு இழுத்து விட்டு மீதி சிகரெட்டை சிக்கனமாக வைக்க வேண்டியிருக்கிறது.கிறிஸ்துவ பாதிரியார் காட்டுக் படத்திற்கு இலவசமாய் போய் சங்கடத்துடன் உட்கார வேண்டியிருக்கிறது.  பாதிரியிடம் மோதிரத்தை அடமானம் வைக்க வேண்டியிருக்கிறது. கோழிக்கான மக்கா சோளத்தை அவள் திஙக வேண்டியிருக்கிறது.செத்துப் போன மகனின் காதலி தரும் உணவுப் பொருட்களை மறுத்தாலும் வெட்கத்தை விட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.கோழிச் சண்டையில் அது ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற பிரயாசை எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறது.  இன்னும் 45 நாட்கள் இருக்கின்றன. கோழிச் சண்டைக்கு.அது ஜெயித்தால்தான் வாழ்க்கை மிச்சமிருப்பது போல் தென்படுகிறது.  இப்போதே சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது . எதைச் சாப்பிட கிழவி கேட்கிறான். அவன் சொல்கிறான் :                ” ஷிட் ”   இந்த நாவலை மார்க்குவஸ் 1956-57ல் பாரிஷில்  வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது பாக்னரின் பாதிப்பில் எழுதியிருக்கிறார். பதினோரு முறை திருத்தி எழுதப்பட்ட நாவல்.அவர் உபயோகித்து வந்த டைப்ரைட்டர் இதனாலேயே தேய்ந்து விட்டதாம். கிடப்பில் அவர் போட்டிருந்த நாவலை சில நண்பர்கள் மெக்சிகோவில் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்

No_One_Writes_to_the_Colonel_FilmPoster

 

போட்டிப் பிரிவில் பல மலையாளப்படங்கள் தென்பட்டன. தமிழ்திரையிடல் பகுப்பில்  ” சூது கவ்வும் ” இருந்தது. படத்தை முன்பே பார்த்து கிண்டலை பின்னணியில் தந்து கொண்டிருந்த தமிழ்ச சமூகம் பலருக்கு அருவருப்பையேத் தந்தார்கள். இலங்கை பிரசனை பற்றிய  சந்தோஷ் சிவனின் தமிழ்ப்படம் ” சிலோன் ” பட்டியலில் இருந்தாலும் திரையிடப்படவில்லை.              ( கோவா திரைப்பட விழாவில் ராமின் ” தங்க மீன்கள் ” மூன்று முறை திரையிடபட்டது. அதை அங்கு திரும்பத் திருமபக் கோரியவர்கள்  மலையாள பார்வையாளர்கள். கேரளாவில் தங்க மீன்கள் முன்பு வெளியிடப்படவில்லை .அதனால் ஆவலுடன் பார்த்தார்கள் ஆனால் திருப்திப்படவிலை )

 

” தெரு படத்தயாரிப்புகள் “street film making என்ற தலைப்பிலான் 10 லத்தீன் அமெரிக்கப்படங்களின்  திரையிடல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வணிக நோக்கங்களைத் தகர்த்து கலகக் குரலும் கலாச்சார அம்சங்களும் இணைந்த தன்மையை இப்படங்கள் கோடிட்டன. மெக்சிகோ, அர்ஜன்டைனா, கொலம்பிய, கியூபா படங்கள் இப்பிரிவில் இடம்பெற்றிருந்தன. லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில்  க்யூபா படங்கள் அதன் தொண்ணுறைம்பது கால நீட்சியில் புரட்சிகர அம்சங்களையும், கலாச்சார மோதல்களையும் சரியாகவே உள்ளடக்கி இருந்தன.

லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியலைக் கொண்டிருந்தவர்கள் அமெரிக்க அரசு  சர்வாதிகாரத்தால்  பல ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டார்கள்.விடுதலை இறையியலை விரும்பும் மக்கள் சோசலிச அரசாங்கஙகள் உருவாக முயற்சிப்பவர்களாக இருப்பார்கள் என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது.  இதை சொல்லுமம்சங்களை இப்படங்களில் காண முடிந்தது.  இப்பிரிவில் இடம்பெற்றிருந்த படம் ‘ சிவப்பு இள்வரசி ” . இதில் வரும் கிளாடியா என்ற பெண்குழந்தைக்கு  புரட்சிக்காரியாக தன்னை விளையாட்டில் காட்டிக் கொள்வதில் விருப்பம் இருக்கும். புரட்சிகரகாலமொன்றில்  அவளின் குடும்பம் நிகாரகுவாலிருந்து அரசியல் காரணங்களுக்கு வெவ்வேறு ஊர்களுக்குப் போய் தங்க நேரிடுகிறது.சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவ்வப்போது தங்கி காவல்துறையின் கண்காணிப்பு தொடர்கிற போது  தப்பிக்க வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் கிளாடியாவின் பயமும் அலைக்கழிப்பும் சிரமமாக இருக்கிறது. பள்ளியில் கோரஸ் பாட்டுப்பயிற்சியும் அரங்கேற்றமும் தடைபட்டுப் போவது அவளை இம்சிக்கிறது. கடைசியில் தந்தை சுடப்பட்டு கிடக்க பலநாட்கள் தலைமறைவாகி வந்த அம்மா வெளிநாட்டிற்குத் தப்பியோட விமான நிலையம் வந்தபின்னும் கிளாடியா கோரஸ்பாட்டுப் பயிற்சியிலேயே  மனம் திண்டாட சிரமப்படுகிறாள்.பெற்றோரின்  புரட்சிகர நடவடிக்கைகளால் குழந்தைகளின் மனம்  சஞ்சலமும் சிதைவும் கொள்வதை இப்படம் சித்தரித்தது. இதில் வருகிற சில குழந்தைகளின் பிரார்த்தனைகளை கவனியுங்கள் :  1. ” எங்க வீட்டுக்கு வாசிங் மிசின் வாங்கித் தா. வாசிங் மிசின் பிரச்சினையால்  அப்பா, அம்மா, சண்டை ஏற்படுகிறது. 2. நான் கண்ணாடி போடுவதை விட வேண்டும்  3. நான் நல்லா  உயாமா வளரணும் ”

 

குழந்தைகளுக்குள் இந்த வகைக் குழப்பங்களும் உள்ளன    .” அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்கிறாரா. அப்பா, அம்மா நாட்டுக்குத் துரோகம் செய்கிறாரார்களா ”  ” தொலை தூரம் ” என்ற இன்னுமொரு இப்பிரிவு படம் க்யூபா நாட்டு பொருளாதாரச் சிரமங்களை கொண்ட பின்னணி பற்றிப் பேசியது.   சோவியது யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னால  க்யூபா மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலத்தை இப்படம் கொண்டிருந்தது.  பொருளாதாரச் சிக்கலகள் காரணமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.  முப்பத்தைந்து வயது அனா தனது பிறந்த நாளில் நண்பர்களெல்லாம் தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டது பற்றி கவலை கொள்வதை இப்படம் சித்தரிததது.

 

100 வருட இந்திய சினிமாவை ஒட்டி பல கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதையொட்டிய படங்களின் திரையிடல் பட்டியலில் தமிழின் கர்ணன், பாசமலர் இடம் பெற்றிருந்தன.  நூற்றாண்டு  திரைப்பட சுவரொட்டிகள் கண்காட்சியில் அரங்கேற்றம் 1973, தண்ணீர் தண்ணீர் 1981, கர்ணன் 1963  பட சுவரொட்டிகள் இடம் பெற்றிருந்தன.மலையாள திரைப்படத்திற்கு 75 வயதா, 85 வயதா  என்பது பற்றிய சர்ச்சை துவக்க விழாவிலேயே ஆரமபித்து விட்டது. இந்த சர்ச்சையில் இயக்குனர் கமல் அவரின் ” செல்லுலாய்ட் ‘ படத்தை திரைப்பட விழாவில் இருந்து விலக்கிக்கொள்ளப் போவதாகச் சொன்னார்.  அவரின் “ செல்லுலாய்டு”  படம் “ விகிதகுமாரன்”  என்ற 80 ஆண்டுகளுக்கு முந்தைய  படத்தைத்  தயாரித்த ஜே.சி டேனியலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது.

Meghe_Dhaka_Tara_2013_poster

கமலேஸ்வர் முகர்ஜியின் இயக்கத்திலான ” மேகெ தாகா தாரா ” படம் மறைந்த வங்காள இயக்குனர் ரித்விகடக் பற்றியப் படமாக அமைந்திருந்தது. அவரின் முக்கிய படங்களின் ஒன்றினையே தலைப்பாக்கியிருந்தார்.ரிவிக்கின் படம் இந்திய பிரிவினைக்குப் பின் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்துhttp://puthu.thinnai.com/wp-admin/post-new.php கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்த அகதி குடும்பம் ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.கலாச்சார அரசியல் சூழலகளும் அம்சங்களும் பின்னிப்பிணைந்த படம் அது.  கமலேஸ்வர் முகர்ஜி 1969ல் ரித்விக் கடக் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்  நிகழும் பின்னணியைக் கொண்டிருந்தது.  மேற்கு வங்காளத்தின் பலவேறு அரசியல் சூழல்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக நகசலைட் இயக்கங்களின்  தாக்கம் பற்றிய விவாதமாகவும் இருந்தது. ரித்விக் கடக்கின் நாடக, திரைப்பட அனுபவங்கள்,, கட்சி அவர் மீது வைத்த விமர்சனங்கள், ரித்விக்கின் எதிர்வினை என்று இருந்தது.பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர் ரித்விக் மருத்துவமனையில் சக நோயாளிகளை வைத்து ஒரு நாடகம் போட அனுமதிக்கிறார். அப்போது பின்னோக்கி நடந்த பல விசயங்கள்  நாடகப் பாணியிலேயே அமைந்திருக்கின்றன. ரித்விக்கின் குடும்ப வாழ்க்கைச் சிதைவும், மன நோயால் மின்சார அதிர்வு சிகிச்சையால் சிதையும் அவரின் உடல் சிதைவும்  மனதினை  அதிர  வைக்கிறது. ரித்விக்கின் படத்தில் கதாநாயகி அலறும்       ” தாதா .. நான் உயிர் வாழ வேண்டும் ” என்று கதறுவதைப்போல்   ரித்விக் உயிர் வாழ வேண்டும் என்று பார்வையாளர்களும் கதற வேண்டியிருக்கிறது.

 

 

பல  உலகத் திரைப்பட விழாக்களில் அதிக பட்ச விருதுகளைப் பெற்ற ” ஸ்டில் லைப்”  என்ற  இத்தாலியப்படம் எழுப்பிய கேள்விகள் பல தளங்களில் வைத்துப் பார்க்கிறதாய் அமைந்திருந்தது. இயக்குனர் : உம்பர்டோ பசோலினி.. அனாதையாக செத்துக்கிடப்பவர்கள், உறவினர் என்று அறியப்படாமல் போகிறவர்களைப் புதைக்கும் ஜான் மே  குடியினால் செத்துப்போகிற ஒருவனின் உறவினர்களைத் தேடும்போது பல சுவாரஸ்யமான கதைகள் கிடைக்கின்றன   ஆனால் அவரின் சாவு விபத்தால் நிகழ்கிறது.  யாருமற்ற பிணமாகத்தான் புதைக்கப்படுகிறார். இந்தத் தலைப்பு பெரும்பாலும் ஓவியங்களூக்குத்தான் இடப்படுவதுண்டு. கேரளத்திரைப்பட விழாக்கள் எப்போதும் மனதில் உறையும் சித்திரங்களாவதை இது போன்ற படங்கள் இந்தாண்டும் மனதில் உறைய வைத்தன.

 

 

 

Series Navigationசூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3பயணத்தின் அடுத்த கட்டம்தினம் என் பயணங்கள் -9தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்நீங்காத நினைவுகள் 39கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்”பங்கயக் கண்ணான்”புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50திண்ணையின் இலக்கியத் தடம் – 27வெளிநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லைகால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘என் நிலைமொட்டைத் தெங்குவாழ்க நீ எம்மான்.(1 )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *