தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

 

ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி மாணவன்.

இவர்கள் மூலமாக முதலில் எங்கள் நான்கு பள்ளிகளுக்கிடையில் சிறப்பான பட்டிமன்றம் நடத்தி சரித்திரம் படைத்தோம்.

அதன் செய்தியை தமிழ் முரசில் வெளியிட்டோம். அதைப் பார்த்த மற்ற ஆங்கிலப் பள்ளி தமிழ் மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர்.

          அவ்வாறு மாணவர்களிடையே தமிழ் உணர்வையும், நல்லுறவையும் வளர்த்தோம்

எனக்கு தமிழில் எழுதுவது சுலபமாக் இருந்தது. ஆனால் போது மேடையில் பேசுவதில் சிறிது சிரமம் இருந்தது. மேடையில் ஏறியதும் ஒருவித பயம் உண்டாகும். உடலில் கூட லேசான நடுக்கம் தென்படும். இதிலிருந்து விடு பட முடிவு செய்தேன். எழுதுவது போல் மேடைப் பேச்சிலும் சிறந்து விளங்க ஆசை.

பகுத்தறிவு நூலகம் அமைத்து ” மாதவி ” இதழ் நடத்தி வரும் கவிஞர் ஐ. உலகநாதன் சிறந்த பேச்சாளர்.

பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியில் ” தமிழ் இளைஞர் மன்றம்” செயல்பட்டது. அதன் தலைவர் மாணிக்கம். செயலாளர் சு. சேகர். அவர்கள் இருவருமே அருமையான பேச்சாளர்கள்.

சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையும் எங்கள் பகுதியில் இயங்கியது. அதன் பொதுச் செயலாளர் சு. சேகர்.

அப்பாவுக்கும் திராவிட இயக்கத்தின் மீது அதிகமான பற்றுதல் இருந்தது. என்னிடம் கூட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கம் தோன்றிய விதம் பற்றியும் அவ்வப்போது கூறுவார் – லதாவை மறந்த நேரங்களில்.

தமிழர்கள் சாதி வேற்றுமையால் பிரிந்து வாழ்வதையும், பல்வேறு மூட நம்பிக்கைகளில் மூழ்கி உள்ளதாகவும், அவற்றை எதிர்த்து பெரியார் போராடுவதாகவும் கூறினார். எனக்கு சாதிகள் பற்றி ஏதும் தெரியாது.

பெரியாரின் தளபதியாக அண்ணா இருந்ததையும் கூறினார். திராவிட முன்னேற்றக் கழகம் உருவான விதத்தையும் கூறினார்.

மலைக்கள்ளன், மந்திரிக்குமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்களுக்கு திரைக் கதை வசனம் எழுதி சமுதாய மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கலைஞர் பற்றியும் கூறுவார்.

திராவிடர் இயக்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன். அதற்கு சிறந்த வழி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து கொள்வதுதான் என்று தோன்றியது.

எங்கள் வட்டார திராவிடமுன்னேற்றக் கழகத்தின் கிளை அலுவலகம் சென்றேன். அங்கு சு. சேகர் இருந்தார்.

என்னுடைய ஆவலை அவரிடம் தெரிவித்தேன்.

சேகருக்கு அப்பாவை நன்றாகத் தெரியும். அவர் மட்டுமென்ன. அந்த வட்டார தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்பா தெரிந்தவர்தான்.  அவர் தமிழ் ஆசிரியர் என்பதால் சேகருக்கு அப்பா மீது அதிக மரியாதை.

நான் சொன்னதைக் கேட்டு அவர் வியந்து போனார். காரணம் நான் உயர்நிலைப் பள்ளி மாணவன். வயது பதினாறு தான்.

அந்த இளம் வயதில் யாருமே அதுவரை உறுப்பினர் ஆனதில்லை என்றார். சட்ட திட்டத்தில் வயது வரம்பு உள்ளது என்றார். மாதச் சந்தா கட்ட வேண்டும் என்றார். அதற்கு மாத வருமானம் வேண்டுமே என்றார்.

எதற்கும் அடுத்த செயலவைக் கூட்டத்தில் என்னைப் பற்றிப் பேசி முடிவெடுப்பதாக உறுதியளித்தார். நான் நம்பிக்கையுடன் இல்லம் திரும்பினேன்.

ஒரு சில வாரங்களில் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளம் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டனர். மாதச் சந்தாவில் அரை பங்கு செலுத்தினால் போதும் என்ற சிறப்புச் சலுகையும் எனக்கு வழங்கப்பட்டது.

அங்கு வாரந்தோறும் சொற்பயிற்சி நடை பெற்றது. அதில் நான் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னுடைய பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டேன். தவறுகளை அவர்கள் சுட்டிக்காட்டித் திருத்தினர். எனக்கு மேடை ஏறியதும் உண்டாகும் கூச்சமும், பயமும் , நடுக்கமும் அகன்று போயின.

அடுத்து வந்த தமிழர் திருநாள், பொங்கல் விழா பேச்சுச் போட்டிகளில் நான் சிறப்பாக பேசினேன். ஆனால் என்னால் முதல் பரிசு பெற முடியவில்லை. அது பன்னீர் செல்வனுக்கு தான் தொடர்ந்து கிடைத்தது. எனக்கு இரண்டாம் பரிசும், கோவிந்தசாமிக்கு மூன்றாம் பரிசும் கிடைக்கும்.

போட்டிக்கு நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் செல்வோம். பரிசுகள் பெற்றுக்கொண்டு ஒன்றாகவே திரும்புவோம். எங்களுக்குள் பொறாமை இருக்காது. ஒருவரையோருவர் பாராட்டிக் கொள்வோம்.

அப்போதெல்லாம் தமிழர் திருநாள் வெகு விமரிசையாக சிங்கப்பூரிலும் அன்றைய மலாயாவிலும் கொண்டாடப்பட்டது.

அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள். அவர்தான் தமிழர்களின் தன்னிகரற்றத் தலைவராகத் திகழ்ந்தார். தமிழ் முரசு ஆசிரியராக இருந்த அவர், தமிழர் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் ஆற்றிய சேவை மகத்தானது.

தமிழவேள் ஒரு பகுத்தறிவாளர். சமுதாயச் சிந்தையும், தமிழ் இன நலத்திலும் மிகுந்த அக்கறைக் கொண்டவர். அவருடைய கொள்கைகளை வெளியிட தமிழ் முரசு பயன்பட்டது.

சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள், பல்வேறு அமைப்புகளின் வழியாக பிரிந்திருந்தனர். அவை அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் இயக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டினார். அப்போதுதான் தமிழரின் பலம் அரசுக்கு வெளிப்படும் என்று நம்பினார்.

அவருடைய அயராத முயற்சியின் பலனாக தமிழர் பிரதிநிதித்துவ சபை உருவானது. சிங்கப்பூரின் எல்லா தமிழ் இயக்கங்களும் அதில் அங்கம் வகித்தன.அதில் சிறப்பு என்னவெனில், அது ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல் சமுதாய நலனுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் மாபெரும் இயக்கமாகச் செயல்பட்டது.

தமிழர்கள் மதத்தால் இந்துக்களாக, இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களாக பிரிந்து வாழ்ந்தாலும், மொழியால் அனைவரும் தமிழர்களே! ஆகவே தமிழர்கள் அனைவருக்கும் ஒற்றுமைத் திருநாளாக தைத் திங்கள் முதல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்ற சீரியக் கொள்கையை தமிழவேள் வெளியிட்டார்.

இதற்கு சிங்கப்பூரிலும் மலயாவிலும் மாபெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது. அதன் பின்பு அநேகமாக எல்லா ஊர்களிலும், வடக்கே கெடாவிலிருந்து தெற்கே சிங்கப்பூர் வரை தமிழர் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

முதல் தமிழர் திருநாள் விழாவில் தமிழவேள் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்று சிறப்பு மிக்கது!

” இந்நாள் தமிழர்களுக்கு மகத்தான நாள் மட்டுமல்ல. மகோன்னதமான நாளுமாகும்.தமிழர்கள் தங்களின் பண்டையச் சிறப்புகளையும் அற்புத சாதனைகள் நிறைந்த பழம் பெருமைகளையும் இன்று நினைவு கூறுகின்றனர். தங்களுடைய நேர்த்தியான கலாச்சாரம், நாகரிகம், தங்களுடைய மொழி, இலக்கியம் ஆகியவற்றின் இனிமை, இந்தியா மட்டுமின்றி இந்தியாவின் ஒரு பகுதியாகவும் ” தூர இந்தியா ” என்று பெயர் பெற்று விளங்கியதுமான இப்பகுதி மக்களின் சுபிட்சத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் தாங்கள் ஆற்றியத் தொண்டு ஆகியவற்றையும் அவர்கள் இன்று நினைவு கூறுவார்கள்…….

இந்திய நாட்டிற்கு யாரும் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே தமிழர்கள் வெளியுலகத்துடன் மொழி, கலாச்சார, வர்த்தக, மற்றும் இதரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தைரியத்தோடு கடல்களைத் தாண்டிச் சென்று அண்டை நாடுகளில் குடியேறி அபிவிருத்தி செய்து வெகு காலத்திற்கு முன்னரே ” தூர இந்தியாவை ” சிருஷ்டித்தவர்கள்……..

..          ஆரிய நாகரிகம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே தமிழ் செல்வாக்கானது இலங்கை, பர்மா, அஸ்ஸாம், மலாயா, சுமத்திரா, ஜாவா, பாலியிலும் மற்றும் அப்போது சென்னை கடற்கரைக்கு அப்பால் தெரிந்த பிரதேசங்களுக்கெல்லாம் பரவியது. …..

பிரசித்தமான சோழ மன்னர் காலத்திலும், இதர காலங்களிலும் இங்கு வந்த தமிழர்கள் ராஜாக்களாகவும், வெற்றி வீரர்களாகவும், கவிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும், இருந்தனர்.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கு வந்த தமிழர்கள் கங்காணி முறையில் திரட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் அவர்கள் ரப்பர் மரம் நட்டு பால் வெட்டுவதற்காகவும், கட்டடங்கள், பாலங்கள் முதலியவற்றைக் கட்டுவதற்காகவும்; பொதுவாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும் வந்தனர். இவ்வளவும் செய்தும் அவர்கள் தங்களுக்குச் சம்பாதித்துக் கொள்வது கைக்கும் வாய்க்குங்கூடப் போதாத வெறும் வயிற்றுச் சோறுதான்……….

ஆகவே, இன்று நாம் இந்நாட்டில் காண்பதென்ன? இந்தக் காலத்தின் சீரும் சிறப்பும் உடையவர்களாயிருந்தும் இந்நாட்டின் கலாச்சாரத்திற்கும், நாகரிகத்திற்கும், அபிவிருத்திக்கும் பிரதான பணி புரிந்தவர்கள் தற்போது தட்டுமுட்டு சாமான்களைப்போல் ஆக்கப்பட்டு விட்டனர்……

ஆகவே இந்த தமிழர் திருநாள் எவருக்கும் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தமிழர்களிடையே அவர்களுடைய புராதன சீரையும், சிறப்பையும் பற்றி புத்துணர்ச்சி ஏற்படச் செய்வதற்காகவும், அவர்கள் தங்களுடைய தற்போதைய கீழான நிலைமையை மாற்றி புராதனப் பெருமைக்கும் சிறப்புக்குமேற்ப வாழ்க்கை நடத்த மன உறுதியும் முயற்சியும் கொள்வதற்காகவுமே இத் திருநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது…….”

தமிழவேள் கோ. சாரங்கபாணியின் இந்த உரையை நான் படிக்க நேர்ந்தபின் என் தமிழ் இன உணர்வு மேலும் வலுப்பெற்றது!

( பின்குறிப்பு : இப் பகுதியில் வந்துள்ள பாவலர் ஐ. உலகநாதன் தற்போது பெங்களூரில் ” தினச் சுடர் ” பத்திரிகை ஆசிரியராக உள்ளார்.

திரு சு. சேகர் தற்போது இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபர்ட் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

நா. கோவிந்தசாமி சிங்கப்பூரின் பிரபல தமிழ் எழுத்தாளனாகி, சிங்கப்பூர் பல்கலைக்கழக விரிவுரையாளராகியதோடு, உலகின் முதல் தமிழ்க் கணினி விசைப்பலகையையும் கண்டுபிடித்து கணினித் தந்தையாகப் போற்றப்படுபவன். தற்போது உயிருடன் இல்லை.

பன்னீர் செல்வன் அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவன். ஆங்கில எழுத்தாளனாகி, சிங்கையில் தடை செய்யப்பட்ட ” The Ultimate Island : The Untold Story of Lee Kuan Yew ” என்ற நூல் எழுதி புகழ் பெற்றவன். தற்போது அடுத்த ஆங்கில நூலை எழுதிக்கொண்டிருக்கிறான். )

தொடுவானம் தொடரும்….

 

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *