அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

thikasi

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில செய்திகளைப் பேசிவிட்டு உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

வீட்டுக்கு வந்து செய்தித்தாளில் வெளியாகியிருந்த செய்தியை விரிவாகப் படித்துமுடித்தபோது என்னைமீறி பெருமூச்சோடு சுவரில் சரிந்துவிட்டேன்.  எண்பத்தொன்பது வயது. அதில் ஏறத்தாழ எழுபதாண்டுகள் இலக்கியத்தைப்பற்றிய உரையாடலிலேயே கழிந்த வாழ்க்கை. உண்மையிலேயே அது ஒரு மிகப்பெரிய பேறு. அதே சமயத்தில், இந்தப் பேற்றை அடைய அல்லது தக்கவைத்துக்கொள்ள, எதைஎதையெல்லாம் அவர் இழந்திருப்பார் அல்லது பொருட்படுத்தாமல் துறந்திருப்பார் என்றும் தோன்றியது. ஒரே ஊரில் வாழ்ந்தாலும்கூட, நண்பர்களே இல்லாமல் வாழ்பவர்கள்தாம் மிகுதி. புத்தகங்களைப்பற்றிமட்டுமே பேசத் தெரிந்த அவரைச் சுற்றி ஏராளமான நண்பர்களை –இளைஞர்கள்முதல் பெரியவர்கள்வரை- அவரால் சம்பாதிக்கமுடிந்திருக்கிறது. இந்த நட்புக்கு இலக்கியம்மட்டுமே காரணமல்ல. எல்லோரையும் அவர் நிபந்தனையற்ற அன்புடன் அரவணத்து உரையாடிக்கொண்டே இருந்தார் என்பதுதான் காரணம். ஒவ்வொரு நாளும் புத்தம்புதிதான செய்திகளோடு அவர் உரையாடலுக்குக் காத்திருந்தார். அதற்காகவே இடைவிடாமல் படித்துக்கொண்டே இருந்தார். வாசிப்பு அவரை என்றென்றும் இளமையாகவும் உற்சாகம் குன்றாதவராகவும் வைத்திருந்தது.

புற உலகம் என் பிரக்ஞையில் பதியாதபடி உறைந்துபோய் உட்கார்ந்திருந்த அக்கணங்களில் என் மனைவி அமுதா அழைத்த குரல் என் காதில் விழவில்லை.  கூடத்துக்கு வந்து தோளைத் தொட்டு அசைத்த பிறகுதான் சுய உணர்வுடன்  திரும்பிப் பார்த்தேன். “காலையிலேயே என்ன கனவு?” என்று கிண்டல் செய்தவளின் பக்கம் செய்தித்தாளைத் திருப்பினேன். மரணச்செய்தி என்று அறிந்துகொண்டதும் அவள் கிண்டல் பார்வை மறைந்தது. அவளுக்கு தி.க.சி. என்கிற பெயர் தெரியாது. “நம்ம வண்ணதாசன் சாருடைய அப்பா. நேத்து ராத்திரி காலமாயிட்டாரு” என்று சொன்னேன். ஐயையோ என்றபடி அந்தச் செய்தியை முழுமையாகப் படித்தாள் அவள்.

தீபம், கணையாழி, தாமரை ஆகிய சிறுபத்திரிகைகளில் என்னுடைய சிறுகதைகள் வெளிவரத் தொடங்கிய காலம் அது. 1983 அல்லது 1984. என்னுடைய வேலைமுகாம் முகவரிக்கு அவர் எழுதிய அஞ்சலட்டை கிடைத்தது. தாமரையில் வெளிவந்த ஒரு சிறுகதையைப் பாராட்டி எழுதியிருந்தார். முத்துமுத்தான தெளிவான எழுத்துகள். அரைமணி நேரத்தில் ஐம்பது முறைக்கும் மேல் படித்துவிட்டேன். அன்று இரவே அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து, எங்களிடையே கடிதப் போக்குவரத்து  பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு கடிதத்தையும் ‘தொடர்ந்து ஊக்கமுடன் எழுதுங்கள்’ என்ற வரியுடன் முடிப்பதை அவர் மரபாகவே கொண்டிருந்தார்.  என் திருமண அழைப்பிதழ் கிடைத்ததுமே எங்களை வாழ்த்தி மடலெழுதிய மிகச்சில நண்பர்களில் அவரும் ஒருவர். நீண்ட காலமாக நினைத்ததும் எடுத்துப் படிக்கிற விதத்திலேயே அம்மடலை ஒரு கோப்புக்குள் வைத்திருந்தேன். இடநெருக்கடி காரணமாக, ஏதோ ஒரு தருணத்தில் எல்லாக் கோப்புகளையும் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்துக் கட்டி பரணில் வைத்துவிட்டேன். அவர் எழுதிய பாராட்டுக்கடிதங்களைவிட, அந்த வாழ்த்துக்கடிதத்தைத்தான் நான் ஒரு பெரும்புதையலாக நினைத்திருந்தேன். அவருடைய மரணச்செய்தியைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்ததும் அந்த வாழ்த்துக்கடிதம்தான். அதை உடனே எடுத்துவிட முடியாதா என்று ஏக்கத்தோடு பரணில் அடுக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளைப் பார்த்தேன். அவற்றிலிருந்து ஒன்றைக்கூட என்னால் கீழே இறக்கமுடியாது என்று தோன்றியபோது உருவான துக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியா டுடே, புதிய பார்வை, சுபமங்களா ஆகிய  இதழ்களில் என் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவந்த சமயங்களில், ஒவ்வொரு சிறுகதையைப்பற்றியும் அவர் எனக்கு எழுதிக்கொண்டே இருந்தார். பயணம், ஜெயம்மா, நெல்லித்தோப்பு போன்ற சிறுகதைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. தன் மனத்தில் ஒட்டாத கதையைப் படிக்கிற சமயத்தில் இக்கதைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு இந்த வரிசையில் அமைகிறமாதிரியான கதையை எதிர்பார்க்கிறேன் என்று முத்தாய்ப்புவரியாகக் குறிப்பிட்டு அவருடைய கடிதம் வரும். அவர் எனக்கு எழுதியதைப்போலவே நானும் அவருக்கு இடைவிடாமல் எழுதியிருக்கிறேன். புதுமைப்பித்தனைப்பற்றி அவர் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அவருக்கு ஏன் வீரவணக்கம் செலுத்தக்கூடாது என்று எழுதினேன். பாரதியாரைப் புகழாமல் எப்படி இருக்கமுடியாதோ, அதுபோலவே புதுமைப்பித்தனைப் புகழாமலும் இருக்கமுடியாது என்று எழுதியிருந்தேன். இன்னும் பத்து தலைமுறை கடந்தாலும், அந்தப் பாராட்டுகள் தொடர்வதைத் தவிர்க்கமுடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். ”வணங்கிவணங்கி, வளரத் தெரியாமல் நாம் அதே இடத்தில் தேங்கி நின்றுவிடுவோமோ என்கிற கவலை அவ்விதமாக எழுதத் தூண்டியது” என்று பதில் போட்டிருந்தார். வேறொரு தருணத்தில் தமிழில் வெளிவந்த நாவல்கள்பற்றி சுபமங்களா இதழில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஒரு நாவலைப்பற்றிய தகவல் பிழையைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் போட்டிருந்தேன். ”உண்மைதான். எப்படியோ ஒரு பிழை நேர்ந்துவிட்டது. புத்தகத்திலே படிப்பதும் தொலைக்காட்சியில் பார்ப்பதும் சேர்ந்து ஏதோ ஒரு குழப்பம் உண்டாகிவிட்டது” என்று உடனடியாக பதில் எழுதியிருந்தார்.  என் நாவலுக்கு இலக்கியச்சிந்தனை விருது கிடைத்த சமயத்திலும் என் மொழிபெயர்ப்பு நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்த சமயத்திலும் அவருடைய வாழ்த்துக்கடிதங்கள் வந்ததை மறக்கமுடியாது.

பல ஆண்டுகளுக்கும் மேலாக கடிதத்தொடர்பு இருந்தாலும்கூட, முப்பதாண்டுகளில் நான் அவரை மூன்று முறைமட்டுமே நேரில் சந்தித்திருக்கிறேன். சோவியத் நாடு இதழில் அவர் வேலை செய்துகொண்டிருந்த நாட்களில் அவருடைய அலுவலகத்துக்குச் சென்று முதல்முறையாகச் சந்தித்தேன். “ரொம்ப சின்ன பையனா இருக்கறிங்களே” என்று தோளைத் தொட்டு அழுத்திப் புன்னகைத்தது இன்னும் நினைவிருக்கிறது. அலுவலகத்துக்கு அருகில் ஒரு கடைக்குச் சென்று தேநீர் அருந்தினோம். என் ஊர், என் பெற்றோர், படிப்பு, வேலை, கர்நாடகம்பற்றிய சில செய்திகள் என பல விஷயங்களை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார். புறப்படுவதற்கு முன்னால், தன் பையிலிருந்த சில நூல்களையும் இதழ்களையும் கொடுத்து “எடுத்தும்போயி படிங்க” என்று சொன்னார். அப்புறம், “நிறைய எழுதுங்க. தமிழுக்கு புதுசுபுதுசா நிறைய விஷயங்கள் வரணும்” என்று சொல்லி, மீண்டும் தோளில் தொட்டு அழுத்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்னால் அரைமணிநேரம் மட்டுமே நீடித்த அந்த முதல் சந்திப்பின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.  ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். “நாக மண்டலம், ஊரும் சேரியும் புத்தகமெல்லாம் படிச்சேன். நல்ல மொழிபெயர்ப்பு. தமிழுக்குத் தேவையான ஒரு வேலையை செய்யறிங்க. தொடர்ந்து செய்யுங்க. நல்லா இருக்கு” என்று சொல்லி என் கைகளைப்பற்றி அழுத்தினார். இதற்குப் பிறகு பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. மடலெழுதிக்கொள்ளும் தருணங்களும் எப்படியோ குறைந்துவிட்டன. வல்லிக்கண்ணன் மறைவையொட்டியும் அவருடைய மனைவியார் மறைவையொட்டியும் எழுதியதுமட்டுமே நினைவில் உள்ளது.

2012 ஆம் ஆண்டில் நான் சென்னையில் இருந்தேன். அப்போது அவருடைய மூத்த மகன் கணபதி மறைந்துவிட்ட செய்தி கிடைத்தது. நண்பர் நடராஜனும் நானும் துக்கம் விசாரிக்கச் சென்றோம். வண்ணதாசனுடன் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அருகில் சுவரோடு சாய்ந்திருந்தார் தி.க.சி. பேச்சு எப்படியோ அவரைப்பற்றித் திரும்பியது. ”உடம்புக்கு முடியாம இருக்காருன்னு சொல்லித்தான் அழச்சிட்டு வந்தோம். வண்டியில வரும்போதுகூட அதையேதான் திருப்பித்திருப்பிச் சொல்லிட்டு வந்தோம். இங்க வந்ததும் பார்த்துட்டு, அப்படியே இடிஞ்சிபோய் உட்கார்ந்திட்டாரு” என்று சொன்னார். வீட்டுக்குள் அவருடைய பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என பலரும் தூணோடு சாய்ந்தபடியும் உட்கார்ந்தபடியும் இருந்தார்கள். துயரம் கவிந்த அச்சூழலில் ஓர் இளம்பெண் கண்ணாடிப்பேழையின்மீது தலைசாய்த்து தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தது.  மறைந்த சகோதரரை வணங்கிவிட்டு, நாங்கள் மீண்டும் அறைக்குள் வந்து உட்கார்ந்தோம். ஏதோ நாற்காலி இழுபட்ட சத்தம் கேட்டு, தி.க.சி. எழுந்துவிட்டார். எங்களையே சில கணங்கள் பார்த்தார். பிறகு சட்டென்று “பாவண்ணன்?” என்று ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அமைதியானார். அருகில் நெருங்கி உட்கார்ந்து நான் அவர் கைகளைத் தொட்டெடுத்து சில கணங்கள் என் கைக்குள் வைத்துக்கொண்டேன். அவர் எதையும் பேசவில்லை. என்னாலும் பேச இயலவில்லை.

விடைபெற்று, வீட்டுக்குத் திரும்பும் வழியில் தி.க.சி.யின் முகம் மீண்டும்மீண்டும் மனத்தில் மிதந்தபடியே இருந்தது. என் பெயரைச் சொல்லி அழைத்த அக்குரலை மறக்கவே முடியவில்லை. என் உறவுக்காரர்கள்கூட என் முகத்தை நினைவு வைத்திருப்பதில்லை. “என்னப்பா, ஆள் அடையாளம் தெரியாம போயிட்டியே” என்றுதான் உரையாடலைத் தொடங்குவது வழக்கம். பொது அரங்குகளில், பல நண்பர்கள் இப்போதெல்லாம் பார்த்தும் பாராததுபோல ஒதுங்கிச் செல்வதைக் கவனிக்கிறேன். இந்தச் சூழலில் பத்தாண்டுகளுக்கும் மேல் பார்க்காத ஒருவனை, ஒரு கணம்கூட தயங்காமல் அடையாளம் கண்டுகொண்ட அவருடைய நினைவாற்றலை நினைத்து என்னால் வியப்படையாமல் இருக்கமுடியவில்லை. அவர் மகத்தான மனிதர் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக “தி.க.சி. மூலமா உங்க நெம்பர் கிடைச்சது. உங்களோடு பேசலாமா?” என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். ஒருநாள் காலையில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். எழுபது வயதைக் கடந்த பெரியவர் அவர். அவரை நம் வீடுவரைக்கும் தேடி வரும்படி செய்துவிட்டோமே என்று முதல் கணமே குற்ற உணர்வாக இருந்தது. தொலைபேசி உரையாடலை வைத்து, அவருடைய வயதை என்னால் ஊகிக்கமுடியாமல் போய்விட்டது. “தி.க.சி. உங்களை அவசியம் சந்திக்கணும்ன்னு சொன்னார். நானும் அவரும் சோவியத் நாடு பத்திரிகையில் ஒன்னா வேலை செஞ்சவங்க. அவர் தமிழ்ப்பிரிவு. நான் கன்னடப் பிரிவு” என்றார். அவருடன் வேலை செய்த நாட்களின் பழைய அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துகொண்டார். அவரைத் தேடிவந்து பார்த்த தமிழ் எழுத்தாளர்களையெல்லாம் தமக்கும் அறிமுகப்படுத்தி நட்புகொள்ள வைத்தார் என்று பெருமையுடன் சொன்னார். “மாசத்துல ஒருமுறையாவது சார்கிட்ட பேசிடுவேன். அது இல்லாம அப்பப்ப கடிதம் போடறதுமுண்டு” என்றார். அவர் நீலகிரியில் பிறந்த கன்னடியர். கன்னடத்தில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதும் படைப்பாளி. அதே சமயத்தில் தமிழில் படிக்கவும் பேசவும் நன்றாக வருகிறது. அவர் பெயர் ஸ்வாமி. புனைபெயர் பரஞ்சோதி. ஒருமணி நேரம் நீண்ட அந்த முதல் சந்திப்பில் அவர் தி.க.சி.பற்றித்தான் அதிக அளவில் பேசிக்கொண்டே இருந்தார். அவருடைய எழுத்துகள்பற்றியும் அவருடைய ஆர்வத்தைப்பற்றியும் நானாகவே கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் நானாகவே “தேடிட்டு வந்த விஷயத்தைப்பற்றி ஒன்னுமே சொல்லலையே” என்று கேட்டேன். “ஒரு விஷயமும் இல்லை சார். பார்க்கணும்ன்னுதான் பார்க்க வந்தேன். தி.க.சி. உங்களைப்பற்றி ரொம்ப உயர்வா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. ரொம்ப நல்ல மனுஷன்யா அவரு, போய் பாருன்னு சொல்லாத நாளே இல்லை.  சார் சொல்லி எதயும் நான் செய்யாம இருந்ததே இல்லை.  நேரமில்லாத காரணத்தால அப்புறம் பார்க்கலாம் அப்புறம் பார்க்கலாம்ன்னு தள்ளித்தள்ளி வச்சிட்டேன். அவரைப் போயி பார்த்துட்டு வந்தேன்னு போன்ல சொன்னாதான் நான் உன்கூட அடுத்த தரம் பேசுவேன்னு போன வாரம் கண்டிப்பா சொல்லிட்டாரு. இனிமேலயும் தள்ளிப் போடக்கூடாதுன்னு கெளம்பி வந்துட்டேன் சார்” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். நெகிழ்ச்சியில் சில கணங்கள் பேசமுடியாமல் உறைந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

தி.க.சி.யைப்பற்றிய நினைவுகள் அலையெனப் பொங்கி அடங்கிய கணத்தில் ஸ்வாமியின் முகம்தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு உடனடியாக செய்தியைச் சொல்லவேண்டும் என்று நினைத்து, தொலைபேசியில் தொடர்புகொண்டேன். மரணச்செய்தியைக் கேட்டு அவரும் அதிர்ச்சியடைந்தார். “என்ன சார் இப்படி ஆயிடுச்சி” என்று மீண்டும்மீண்டும் பெருமூச்சோடு சொல்லிக்கொண்டிருந்தார். “வர முப்பதாம் தேதி அவருக்கு பிறந்தநாள் வரும் சார். அன்னைக்கு மொதல் ஆளா அவர்கிட்ட போன்ல பேசணும் நெனச்சிட்டிருந்தேன் சார். அதனாலயே ரெண்டுமூணு வாரமா பேசாமயே இருந்துட்டேனே. அவர் குரலை கேட்கமுடியாம போயிடுச்சே சார்” என்று பெருமூச்சுவிட்டார். மறுநாள் மாலை என் அலுவலகத்துக்கே அவர் தேடிக்கொண்டு வந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அவர் தி.க.சி.யை நினைவுகூர்ந்தபடியே இருந்தார். சோவியத் நாடு இதழில் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் அவர் திருமணமாகாத இளைஞர். தன்னுடைய மூத்த பெண்ணுக்குத் திருமணம் நடக்கும்வரைக்கும் அவர் சென்னையில் இருந்திருக்கிறார். தி.க.சி. என்ற பெயரைச் சொல்லும்போதே அற்புதமான மனிதர் என்ற முன்னொட்டைப் பயன்படுத்தாமல் அவரால் உரையாடவே முடியவில்லை என்பதைக் கண்டேன்.

இதோ, நான் இருக்கிறேன். என் அருகில் ஸ்வாமி இருக்கிறார். இதுபோல நூற்றுக்கணக்கான அன்பர்கள் தமிழகமெங்கும் இருக்கக்கூடும். அவர் சொல்லும் திசையில் செல்பவர்களாக. அவரால் உத்வேகம் பெற்றவர்களாக. எல்லோருமே கருத்தளவில் வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், எவ்வித நிபந்தனையும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோரையுமே அவரால் நேசிக்கமுடிந்தது என்பதே பெரிய விஷயமாகத் தோன்றியது.  அதுவே அவர் வாழ்வின் செய்தி. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்னும் பொன்மொழியை வாழ்ந்து காட்டிய மகத்தான மனிதர் அவர். மண்ணுலகைவிட்டு மறைந்துபோனாலும் நம் எண்ணங்களில் அவர் என்றென்றும் நிறைந்திருப்பார்.

—————————–

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  மறைந்த தி.க. சி. அவர்களுக்கு பாவண்ணன் எழுதியுள்ள இந்த அஞ்சலை மனத்தை நெகிழச் செய்கிறது. ஒரு தன்னலமற்ற மனிதரை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். அருமையான எழுத்து! பாராட்டுகள் பாவண்ணன். மறைத்த மாமனிதர் தி. க. சி. அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்……அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  ஒரு அற்புதமான மனிதரின் நிறைவான வாழ்க்கையை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொண்டதைப் படித்ததும், அவருடன் தங்களின் ஆத்ம நிதானாஞ்சனம்
  புரிகிறது.
  மிக்க நன்றி.
  ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *