ராதா

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க‌, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பக்கத்துவீட்டு ரகு. ஹாலில் அமர்ந்து ஜோதிட மலர் படித்துக்கொண்டிருந்த ராதாவின் அப்பா நீலகண்டனிடம்,

‘குட் ஈவ்னிங் தாத்தா’ என்றான்.

‘ஆங்..வாப்பா’ என்றார் தாத்தா ஜோதிட மலரில் புதைத்த முகத்தை விடுவிக்காமல்.

ரகு பக்கவாட்டிலிருந்த ராதாவின் அறைக்குள் நுழைந்து சப்பனிக்காலிட்டு அமர்ந்து, கொண்டு வந்திருந்த பத்தாம் வகுப்பு கணித புத்தகத்தை தரையில் விரித்து வைத்து விட்டு, ட்யூஷன் நோட்டை எடுத்துப் பிரித்து மடியில் வைத்துக்கொண்டு, விரலிடுக்கில் எப்போது வேண்டுமானாலும் மையை உமிழ்ந்துவிடக் காத்திருக்கும் ஒரு எழுதுகோலை பொருத்திக்கொண்டான்.

கடந்து போகும் எத்தனையோ மாலைகளுள் ஒன்றென, அந்த மாலையில், வழமை போல, சூழக் காத்திருக்கும் இருளை மட்டுப்படுத்தியவாறு எரிந்து கொண்டிருந்தது மின்விளக்கு. இயந்திரத்தனமாய் நாளின் அனல் வெம்மையை விரட்ட முயன்று சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி, சலிக்காமல் எதையோ அரற்றிக் கொண்டிருந்தது. எவரும் சீந்தாமல் மெளனித்திருந்தது தொலைக்காட்சிப் பெட்டி. நீலகண்டன் அமர்ந்திருந்த மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு காலுடைந்த சோபா, மரக்கால் பொறுத்தியிருந்தது. அருகாமையில் 1970 களின் ஸ்டாண்ட் ஒன்றின் மீது ஒரு டெலிஃபோனுக்கு அருகாமையில் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு காலண்டர்.. சிமென்ட் தரை கூட்டிப் பெருக்கி சுத்தமாய் பளிச்சென்றிருந்தது.

அடுப்பங்கரையில் மதியம் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி முடித்திருந்த ராதா, அடுப்பில் பொங்கிய பாலையும் டிகாக்ஷனையும் நிறுத்திவிட்டு, தேனீரென‌ கலந்து தம்ளரில் ஊற்றி ஹாலுக்கு எடுத்துவந்து அப்பாவின் அருகே சின்ன மேஜையில் வைத்தவாறே,

“என்னடா ரகு, இன்னிக்கு என்ன பாடம் நடத்தனும்” என்றாள் ரகுவிடம்.

“ஆங்.. இன்னிக்கு ஜியாமெட்ரி சொல்லித் தந்தார்கள் அக்கா.. ஒன்றும் புரியவில்லை” என்றான் ரகு, கையிலிருந்த பேனாவினால் தலையை சொறிந்துகொண்டே.

மெல்லியதாய் புன்னகைத்த ராதா,

“சரி.. சற்று பார்த்துக்கொண்டிரு.. நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.. என்ன” என்றுவிட்டு திரும்ப எத்தனிக்க‌,

“அம்மா.. ராதா, நாளைக்கு திதி நாளம்மா.. என்ன என்ன வாங்கி வர வேண்டுமென்று ஒரு பட்டியல் தந்துவிட்டாயானால் சரி” என்றார் ராதாவின் அப்பா நீலகண்டன்.

“ஆங்.. அதுவா.. அது தயிர், காய்கறிகள் என்று சென்ற வருடத்தின்போது தயாரித்த பட்டியல் இருக்கிறதப்பா…” என்ற ராதா, தன் அறைக்கு அருகாமையில் இருந்த சிறிய பூஜையறையில் நுழைந்து கதவோரம் இருந்த சிறிய மஞ்சள் பையொன்றில் கைவிட்டு ஒரு காகிதத்தை எடுத்துவந்து ஹாலில் இருந்த நீலகண்டனிடம் நீட்டினாள்.

“இதாம்மா?!..சரி…. ” என்றவர் பார்த்துக்கொண்டிருந்த ஜோதிடமலரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு, ராதா தந்த காகிதத்தை வாங்கி மடித்து சட்டைப்பையில் திணித்துவிட்டு, அவசரமாக ஒரு மடக்கில் தேனீரை வாயில் கவிழ்த்து, மேல் துண்டால் இதழ்களை ஒற்றிவிட்டு எழுந்தார்.

ர‌கு, வ‌ல‌து கை பேனாவால், காத‌ருகில் சிராய்த்துக்கொண்டே புத்த‌க‌த்தினுள் முக‌ம் புதைத்திருந்தது வேடிக்கையாக இருந்தது ராதாவுக்கு. வளரும் தளிர். தன்னைத் தானே ஒழுங்கு படுத்திக்கொள்ள பிரயத்தனப்பட நிர்பந்திக்கப்பட்ட தளிர். ஏன் இப்படி படிக்கிறோம் என்பது தெரியாது? அதன் நோக்கம் முழுக்க புரியாது? அந்த வயதில் வேறென்ன கருமம் என்பதாய், செக்கு மாட்டையொத்த நடவடிக்கைகளுக்கு தன்னையுமறியாமல் பழக்கப்படுவதன் காரணம் விளங்காது. தன் மேல் ஏதோவொன்று திணிக்கப்படுகிறது என்பது கூடத் தெரியாது. அறியா வயது. பால்ய காலம். ரகுவைப் பார்க்கையிலெல்லாம் ராதாவிற்கு தன் பால்ய வயது கூட இப்படித்தான் கடந்திருக்குமென்று எண்ணத் தோன்றியது.

“ச‌ரிம்மா.. நான் சென்று அந்த‌ ஐயரை பார்த்துவிட்டு வ‌ருகிறேன்” என்றுவிட்டு வாச‌லை அடைந்து பாத‌ணிக‌ள் அணிந்து, கேட்டைக் க‌ட‌ந்து வீதியில் ந‌ட‌க்க‌லானார் நீல‌க‌ண்ட‌ன்.

அப்பா, த‌ள‌ர்வுட‌ன் சாலையில் மெல்ல‌ ந‌ட‌ப்ப‌தையே பார்த்து நின்றாள் ராதா.

முதிர்ந்த வயதில், துணையிருக்க வேண்டுவது திருமணம் என்கிற பந்தத்தின் ஒரு நோக்கம். அந்தத் துணை, ராதா கலைக் கல்லூரி படித்துக்கொண்டிருக்கையிலேயே நீலகண்டனை தவிக்க விட்டு விண்ணுலகம் போயிருந்தது. ராதா திருமணமாகி புகுந்த வீடு சென்ற பின்பு இரண்டு வருடங்கள் தனிமையில்தான் வாழ்ந்திருக்கிறார் நீலகண்டன்.

நீலகண்டனுக்கு துணை தேவை என்பதால்தானோ விதி தன்னையும் தனிமைப்படுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்று கூடத் தோன்றியது ராதாவுக்கு.

அதே வாச‌லில் தான் ம‌றைந்த‌ அவ‌ளின் க‌ண‌வ‌ன் சேக‌ர் ப‌னிய‌னுட‌ன் நின்றவாறு செய்தித்தாள் படித்தது, சாமி ஊர்வ‌ல‌ம் செல்கையில் அவ‌னின் ச‌ட்டையினைப் ப‌ற்றிக்கொண்டு, அவ‌னின் முதுகுப்புற‌ம் நின்று, தோலினூடே எட்டிப் பார்த்து க‌ன்ன‌த்தில் போட்டுக்கொண்டது, காலையில் அவன் அலுவ‌லக‌ம் செல்கையில் வாச‌லோர‌ம் நின்று கைய‌சைத்து வ‌ழிய‌னுப்பி வைத்த‌து, நாள் கிழ‌மை என்றால் அவ‌ன் க‌த‌வு, ஜ‌ன்ன‌ல்க‌ள் துடைக்கையில் காபி க‌ல‌ந்து அவ‌னிட‌ம் நீட்டிக்கொண்டு நின்றது என‌ ப‌ழைய‌ நினைவுக‌ள் அவ‌ள் நெஞ்சில் ந‌னைத்த‌ன‌.

திருமணமான இரண்டே வருடத்தில் கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்போம் என்று அவள் கிஞ்சித்தேனும் நினைத்ததில்லை. வாழ்க்கைதான் எத்தனை எதிர்பாராத தன்மையுடையதாய் இருக்கிறது? பல்லாயிரம் கன‌வுகளுடன் எதிர்கொண்ட திருமணம், எல்லாவற்றையும் முற்றாக முடக்கிப் போட்டுவிட்டது. இருபத்தியாறு வயதில் விதவைக்கோலம். பிள்ளையென்று ஒன்று இருந்திருந்தாலும் வாழ்க்கையைத் தொடர ஓர் ஆதாரம் கிட்டியிருக்கும். அதற்குக் கூட வழியொன்றும் ஏறபட நேராத அவசரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான் சேகர்.

தன் விரல்பற்றி இறுதிவரை காப்பேன் என விளித்த சபதத்தை அனாதரவாய் விட்டுவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டான். அந்த சபதத்தின் மீதான நம்பிக்கை, மனக்கோட்டை, கனவுகள் எல்லாமும் அனாதரவாய் ஆகிவிட்டன. சட்டென உடைந்து போன காற்றுக் குமிழ் போல. காற்றுக் குமிழென இருக்கையில், எத்தனை அழகாய் இருக்கிறது? உருண்ட வடிவம், காற்றின் அழுத்தத்திற்கேற்ப அந்தரத்திலேயே சுருங்கியும் விரிந்தும் நடனமாடும் அழகு. குமிழின் வட்டத்தில் பிரதிபலிக்கும் முகங்கள் என காற்றுக்குமிழ் எத்தனை அழகு. கடலோரத்தில், நீர் வீழ்ச்சிகளில் எத்தனை குமிழ்கள் உருவாகின்றன? அத்தனையையும் காற்று, சற்று நேரம் பிழைக்கவிட்டு, அழகாய் உலவவிட்டு பட்டென உடைத்துவிடுகிறது. உடைந்த குமிழ்களில் குடியிருந்த அழகு ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.

அந்த  காற்றை போலத்தான் விதியும் இருக்கிறது. அழகாய் இணையாய் இருக்கவிட்டு, இணையின் சுகம் காட்டிவிட்டு, அதற்கு இரண்டு வருடங்கள் ஒரு பெண்ணை பழக்கப்படுத்திவிட்டு, பிறகு பட்டென உடைத்தெறிந்து விட்டது. ஏன் உருவாக்க வேண்டும்? ஏன் உடைத்தெறியவேண்டும்? வலியும், வேதனையும் துன்பமும், தனிமையும் அத்தனை இலகுவா? இணையை, இன்பத்தை தான் மட்டுமா கேட்டது? இல்லை தனக்கு மட்டும்தான் அளிக்கப்பட்டிருக்கிறதா? தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

ராதா ஆழ்ந்த நினைவுகளினின்றும் விடுபட்டு, ப‌ழைய‌ நினைவுக‌ளினின்றும் த‌ன்னை விடுவித்துக்கொள்ள நினைத்தவளாய் திரும்பி நடந்து சமையலைறைக்குள் நுழைந்தாள். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள பொடி செய்ய வேண்டி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, பெருங்காயம், பூண்டு இட்டு வாணலியில் மொறுகலாக வாட்டி கலவையை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்தாள். நன்கு  அரைபட்ட மிளகாய் வாசத்தில் பெரிதாக தும்மல் வந்தது. இரண்டு மூன்று முறை அரைத்து பொடியாக்கி, இடையே போதுமான அளவு உப்பிட்டு மீண்டும் ஒரு முறை அரைத்து, கழுவி தயாராக வைத்திருந்த காய்ந்த‌ குடுவையில் அடைத்த போது மீண்டும் தும்மல் வந்து இம்சித்தது. சேகர் இருக்கும் வரையில் பூப்போல இட்லி செய்து தட்டில் இட, பொடியை கவிழ்த்து, நடுவே குழு செய்து, நெய் ஊற்று விலாவிக் கலந்து, பின் ஏதோ பொடிக்கு தொட்டுக்கொள்ளவே இட்லி என்பதுபோன்ற பாவனையிலும், கடைசி அரை இட்லி உண்கையில், மீதமிருக்கும் பொடியோடு அப்படியே பிசைந்து மாவு போல உண்ணுவதும் என‌ சேகர் காலை உணவு உட்கொள்ளும் காட்சி நினைவுக்கு வந்தது.

அரைத்த மிக்ஸியை கழுவப் போட்டுவிட்டு, கொல்லைக்கு நடந்தாள். கொல்லையில் காய்ந்து கிடந்த துணிகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக, கொடியோடு ஒட்ட வைத்திருந்த க்ளிப்புகளை லாவகமாக அகற்றி அதற்கெனவான சின்ன பெட்டியில் சேகரித்து, துணிகளை மடித்து வைக்க உள்ளே எடுத்து வந்தாள். பாத்திரங்கள் கழுவியதும், தேனீரிட்டதும் உடல் கசகசவென்றிருந்தது. புடவை, ரவிக்கை எடுத்துக்கொண்டு குளியலறையை அண்டி நைட்டி, உள்ளாடைகள் கலைந்து, ஜில்லென்ற நீர் உடல் முழுவதும் தீண்ட குளித்தாள். ரவிக்கை அணிந்து புடவை சுற்றிக்கொண்டு, துவட்டிய தலையுடன் கொல்லையை தாழ்போட்டு பூட்டிவிட்டு, பூகையறைக்குள் நுழைந்தாள். நெருப்பு பெட்டி எடுத்து, தீக்குச்சி ஒன்றை பிதுக்கி, உரசி பற்றவைத்து விளக்கேற்றினாள். அறுபது வாட்ஸ் பல்பின் செயற்கையான பிரகாசத்தினூடே இயற்கையான அகல் விளக்கின் பிரகாசம் மெல்ல பரவத் துவங்கியது. இரண்டு பத்திகளை தீபத்தில் காட்டி பற்ற வைத்து பிள்ளையார் படத்தின் சட்டத்தின் இடுக்கில் செருக, பூஜையறையில் மணம் கமழ்ந்தது.

தீபத்தின் ஒளியில் லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் புகைப்படங்கள் ஒளியுடன் மின்னின.

” நீலாஞ்சனாய சமபாஷம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாய மார்த்தாண்டம் சம்புதம்
தம் நவாமி சனைச்சரம்….”

கண்களை மூடி மெல்ல மனனம் செய்த சனி பகவான் சுலோகங்களை முனுமுனுத்தாள் ராதா. சொல்லச் சொல்ல உள்ளுக்குள் பலவித நினைவுகள் தோன்றின.

அறையில் இருந்த அத்தனை சாமி படங்களும் அவளையே பார்த்து மெல்லியதாய் புன்னகைத்திருந்தன. திருமணம் வரையிலும் இப்படியே தான் புன்னகைத்தன. திருமணம் முடிந்த இரண்டு வருடங்களுக்கும் தலை தீபாவளி, பொங்களென அனைத்து பண்டிகைக்களுக்கும் அப்படியே. சேகர் இறந்த பிறகான இக்காலத்திலும் அப்படியே. எவ்வித மாற்றங்களும் இல்லாமல். இந்த இருபத்தியாறு வருடங்களில் பல்வேறு காலகட்டங்களிலும் தன்னுடைய பலவிதமான வேண்டுதல்களுக்கும் இந்தத் தெய்வங்கள் இப்படியே தான் புன்னகைத்திருக்கின்றன. இனியும் கூட இப்படியே தான் புன்னகைக்கும்.

வழிபாடு என்பதே மன திருப்திக்காகத்தானோ என்று எண்ணத் தோன்றியது. வழிபாடுகளுக்கும், வேண்டுதல்களுக்கும், பூஜைகளுக்கும், புணஸ்காரங்களுக்கும் நோக்கம் மனித மனங்கள் தானா? சுலோகங்களும், மந்திரங்களும், எதற்குத்தானோ? எல்லாவற்றிற்கும் தர்க்க ரீதியான காரணங்கள் மட்டுமே தானா? வாழ்க்கைப் பாதையின் மைற்கற்களில், சந்தோஷத்தையும், துக்கத்தையும், பகிர்ந்துகொள்ள, இறக்கிவைக்க மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒன்றுதான் இறை என்பதா?

இத்தனை நாளும் இப்படியெல்லாம் தோன்றிடாதது ஏன்? இப்போது மட்டும் ஏன் இப்படியெல்லாம் தோன்ற வேண்டும்? ஒருவேளை, திருமண வாழ்க்கை முறிந்திருக்காவிடில், பயபக்தியாய் விளக்கேற்றி, நோன்பிருந்திருப்போமோ? ஈடுபாட்டுடன் உண்ணாவிரதம் இருந்திருப்போமோ? வெற்றுக் கால்களில் கோயில் குளங்களுக்காய் நடையாய் நடந்திருப்போமோ? பாதியில் வாழ்க்கை முடிந்ததால் தான் இப்படி அவ நம்பிக்கையாய் சிந்தனை போகிறதோ? தனக்கு மட்டும் தான் இவ்வாறு நிகழ்கிறதா? ஏனையோருக்குமா?.

சஞ்சலமாய் உணர்ந்தாள் ராதா. பூஜையறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள். மெளனமாக ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிக்கு ஆங்காங்கே ஈரமாக இருந்த கூந்தலை விடுவித்து உலர்த்தினாள். காற்று மெல்ல அவள் கூந்தலின் இழைகளில் புகுந்து விளையாடியது.

தோளில் முந்தானை சரிவது போலுணர்ந்து, இடுப்பைச் சுற்றி இழுத்து வயிற்றில் பாவாடையுடன் பிணைத்துக்கொண்டாள். நழுவ வழியின்று முந்தானை ரவிக்கையினூடே மார்பை அழுத்திக்கொண்டு படர்ந்தது. கூந்தலை காற்றில் உலரக் கொடுத்து கண்மூடி சிறிது நேரம் நின்றாள்.

பின் தனது அறையில் தலை சொறிந்தவாறு பாடம் பயிலும் ரகுவின் நினைவு வந்தவளாய்,

“ம்ம்..ரகு.. அக்கா வந்தாச்சு.. என்ன நடத்தினார்கள் இன்றைக்கு ரகு?” என்றாள் ரகுவிடம்.

“அக்கா, இன்னிக்கு ஜியாமெட்ரி அக்கா.. ஒன்றுமே புரியவில்லை” என்றான் ரகு பரிதாபமாக. அவன் தலை, கலைந்திருந்தது பார்க்க சிரிப்பாக இருந்தது. உத‌ட்டுக்கு வ‌ந்துவிட்ட‌ புன்ன‌கையை ம‌றைத்த‌வாறு,

“லாக‌ரித‌மா.. எங்கே கொடு பார்ப்போம்” என்றுவிட்டு அவ‌னின் க‌ணித‌ பாட‌ புத்த‌க‌த்தை இழுத்துக்கொண்டாள்.

“ஜியாமெட்ரி பார்க்க‌, ஏதோ சயின்டிஃபிக் கால்குலேட்டர் பார்க்க‌ வேண்டுமாம் அக்கா.. ஏதோ சொன்னார்களே” என்றுவிட்டு சற்று இழுத்த ரகு, பின் “ப்ச்சு.. நியாப‌க‌ம் இல்லைய‌க்கா” என்றான் ப‌ரிதாப‌மாக‌.

சிரித்துக்கொண்ட‌ ராதா,

“ப‌ர‌வாயில்லை ர‌கு..  கால்குலேட்டரெல்லாம் வேண்டாம், எதுவும் இல்லாம‌லே க‌ண‌க்கிட‌க் க‌ற்றுத்த‌ருகிறேன் வா..இதைப் பார்” என்றுவிட்டு ஜியாமெட்ரி க‌ற்றுத்த‌ர‌த் துவ‌ங்கினாள் ராதா.

ர‌கு, த‌ன‌து குறிப்பேட்டில், ஒவ்வொரு இல‌க்க‌மாக‌ எழுதி, பின் அடித்து திருத்தி, அவ்வ‌ப்போது விர‌ல்க‌ளை நீட்டி, த‌ன‌க்குத்தானே ம‌ண்டையில் குட்டிக்கொண்டு, வாய்வார்த்தையாக‌ ஒன்று , மூன்று என்றெல்லாம் சொல்லி க‌ற்றுக்கொள்ள‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌டுவ‌தைப் பார்க்க‌ பார்க்க‌ ராதாவிற்கு சிரிப்பாக‌ இருந்த‌து. வெளிக்காட்டாம‌ல் ம‌ன‌திற்குள்ளாக‌ ர‌சித்துக்கொண்டிருந்தாள் ராதா. ம‌ன‌தில் ஆழ‌த்தில், ஏதோ ஓர் ஓர‌த்தில், தானும் பால்ய‌ வ‌ய‌தில் இவ்வ‌கையான‌ செய்கைக‌ளை வெளிப்ப‌டுத்திய‌து நினைவுக்கு வ‌ந்த‌து. அந்த‌ பால்ய‌ காலங்கள் அப்ப‌டியே உறைந்திருந்தால் எத்த‌னை சுக‌மாக‌ இருக்குமென்று க‌ற்ப‌னை வ‌ந்த‌து. அக்கம்பக்கத்து தோழிகளுடன் பல்லாங்குழி விளையாடியது, ஆறு மணிக்கு மேல் பரமபதம் திருட்டுத்தனமாய் விளையாடியது, திருவிழாக்களில் கிடைக்கும் சமையல் சொப்பு சாமான்கள் வைத்து ‘குடும்பம்’ பண்ணியது என பால்ய வயதின் நினைவுகள் மீண்டும் வந்தன. அத‌ன் சுக‌த்தில் அவ‌ள் ம‌ன‌ம் ல‌யித்த‌து. ராதா ர‌குவையே பார்த்திருந்தாள். சுமையற்ற பால்ய பருவம் தான் கல்வி என்ற ஒன்றினால் எத்தனை சுமையாகிப் போய்விடுகிறது? சுமைகளே இல்லையென்றுதானோ, பால்யங்களை சுமையாக்க கல்வி முறைகள் தோன்றின?. நிதர்சன வாழ்வில் அசெளகர்யங்கள் பரிச்சயப்படாததான‌, கவலைகள் இல்லாததான, பொறுப்புக்கள் சுமர்த்தப்படாததான, கடமைகளின் மீதான எதிர்பார்ப்புகள் இல்லாததான‌ அழகான அந்த பால்ய பருவ‌ம் மீண்டும் வந்தால் எப்படியிருக்குமென்று யோசனை போனது.

“அக்கா, தண்ணி தாகமாக இருக்கிறது அக்கா?” ராதாவின் நினைவுகளை கலைத்தான் ரகு.

“அடடா, சொம்பில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன் ரகு. சமையலறையில குண்டானில் இருக்கிறது. எடுத்துக்கொள்ளேன்” என்றாள் ராதா கணிதப்புத்தகத்தை பார்த்தபடியே.

“சரிக்கா” என்றுவிட்டு எழுந்த நேராக சமையலறை நோக்கிச் சென்றான். ரகுவின் புத்தகங்களை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா.  அட்டை கிழிந்து, ஓரங்களில் சுருங்கி, ஆங்காங்கே அடிக்கோடிட்டு, சில பக்கங்களில் தென்னைமரங்கள் முளைத்து, சில பக்கங்களில் சம்பந்தமே இல்லாமல் பூமிப்பந்தும், சூரியனும், நிலாவும் வரையப்பட்டு, வேறு சில பக்கங்களில் பெண்களின் பெயர்கள் கிறுக்கப்பட்டு இருந்தது பார்க்க‌ வேடிக்கையாக இருந்தது.

சற்று நேரத்தில்,

“எங்கக்கா இருக்கு?” என்று ரகு கூவும் சத்தம் கேட்டது.

“அங்கேதான் ரகு பாரேன்”

தொடர்ந்து தட்டு முட்டு சாமான்கள் உருளும் சத்தம் கேட்க, ரகு தண்ணீர் குண்டான் பிடிபடாமல் திணறுகிறான் என்று உணர்ந்து, எழுந்தாள் ராதா.

“இரு.. இதோ நானே வரேன்” என்றுவிட்டு ராதா சமையலறையை அண்டினாள். அங்கே ரகு குழப்பமாய் அலமாறியில் எக்கிப் பார்த்து நின்றிருக்க, திடீரென்று மின்சாரம் தடைபட்டு, இருள் சூழ்ந்தது.

காஸ் அடுப்பு என்பதால் சமையலறை மேடையில் இருந்த லைட்டரை புறக்கணித்துவிட்டு, பக்கவாட்டு அலமாறியில் வைத்திருந்த தீப்பெட்டியை துழாவ தலைபட்டாள் ராதா. இருளில் ராதா சற்று திணறிக்கொண்டிருக்கையில், இரண்டு கைகள் திடுமென அவள் இடையை பற்றின. இளஞ்சூட்டு கைகள் அவளை இருக்க கட்டியணைத்தன‌. எதிர்பாராத அந்த நிகழ்வுகளில் அவள் அதிர்ச்சி அடைந்திருந்தாள். மெல்ல அந்தக் கைகள், முந்தானைக்கும் ரவிக்கைக்கும் இடையே இடையில் நின்று நிதானித்து, பின், அவள் மார்புகளின் மீது படர, கழுத்தோரம் சூடான மூச்சுக்காற்று பரவியது அவளைக் கிளர்ச்சியடையச்செய்தது. அந்தக் கிளர்ச்சிக்கு அவளின் உடலும் மனமும் ஏங்கியது. ஏதோ ஒன்று உடலெங்கும் பரவி செயலிழக்கச் செய்திருந்தது. அவளுக்கு அது வேண்டுமாய் இருந்தது, வேண்டாமென்றும் தோன்றியது. முழுக்க ஏற்றுக்கொள்ளவும், முழுமையாக மறுதலிக்கவும் இயலாதவளாய் உணர்வுகளுக்கு ஆட்பட்டு செயலிழந்து நின்றாள். இரண்டு இதழ்கள் மெல்ல கன்னத்தோடு பதிய, அவள் மெல்ல திரும்ப‌ அவளின் இதழ்களில் வந்து நின்றது. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது அவளின் காதுகளில் தூரத்து இடிமுழக்கமென கேட்டது.. முன்னெப்போதோ உடலில் ஓடியிருந்த ரசாயனம் பல காலம் கழித்து மீண்டும் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்த வேளையில், சட்டென மின்சாரம் கம்பிகளில் பரவி, சமையலறை விளக்குகள் உயிர்த்தெழுந்தன‌.

ராதாவும் ரகுவும் சட்டென விலகினார்கள்.

வாசலில் அரவம் கேட்டது.

“ராதா, ராதா… ” என்றபடி நீலகண்டன் வீட்டினுள் நுழைய,

“ஆங்.. என்ன‌ப்பா?” என்றபடி சமையலறையை விட்டு வெளியே வந்தாள் ராதா.

“எங்கேயம்மா போய்விட்டாய்… ?”

“இல்லைப்பா.. ரகு தண்ணீர் கேட்டான்..அதான் ” என்றாள் ராதா.

“சரி, அந்த அந்தணர் இல்லையம்மா.. பிறகு போய் பார்க்கலாமென்று வந்துவிட்டேன்” என்றவாறு நடந்த நீலகண்டன், கொல்லைக்கதவின் தாழ் திறந்து குளியலறைப்பக்கம் சென்றார்.

ரகு தலை குனிந்தவாறு மெதுவாக ஹாலுக்கு வந்தான்.

“சாரி ..” என்றான்.

ரகுவை கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்த்தாள். மார்போடு கைகளை குறுக்கே ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டு பூஜையறையில் எரியும் தீபத்தை வெறித்து நின்றாள்.

“ரகு, நீ வீட்டுக்கு போ. இன்னிக்கு ட்யூஷன் போதும். இனி நீ இங்கே வர வேண்டாம்” என்றாள் ராதா. ரகு அமைதியாக வெளியேறினான்.

ரகு போய்விட்ட பின்பும் ராதா சிலையென அங்கேயே நின்றாள். அவள் பார்வை பூஜையறையின் பிரகாசமான தீபத்திலேயே நிலைகுத்தி நின்றது.

முற்றும்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *