(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு. அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும். அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள்.
குறிப்பு : கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன். )
1. மெங்கின் பயணம்
வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், மெங் சியாங் யு நி;ன்றிருந்தாள். அவர்கள் பேரரசரின் ஆட்கள் என்பது அவள் அறிந்ததே. பல மாதங்களாக சீனப் பெருஞ்சுவர் கட்டத் தேவையான ஆட்களைப் பல இடங்களிலிருந்தும் அழைத்துச் செல்லவே அவர்கள் அப்படி அலைந்து கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு வீட்டுக் கதவையும் அவர்கள் தட்டாமல் செல்லவில்லை. டொங்! டொங்! கதவு இடிபடும் சத்தம் கேட்கும் போதெல்லாம், மெங் பெரிதும் கவலைப்படுவாள்.
எந்தக் குடும்பத்தினர் அவர்களிடம் அகப்பட்டார்களோ என்று எண்ணிக் கலங்குவாள். ஏனென்றால், சீனப் பெருஞ்சுவர் கட்டக் கிளம்பியவர்கள் திரும்பியதாக அவள் கேள்விப்பட்டதே கிடையாது. உயிர் உள்ள வரை சென்றவர்கள் உழைத்தேயாக வேண்டும். இதுவே பேரரசரின் கட்டளையாக இருந்தது.
மெங்கின் கணவரை அந்த வேலைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புக் கிடையாது என்று மெங் பெரிதும் நம்பினாள். மேங்கின் கணவர் வான் ஒரு கற்றறிந்த மேதை. அறிஞர்களும் மேதைகளும் இந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மெங் தங்களைப் பற்றிய கவலையில்லாது, பிறர் வீட்டுக் கஷ்டங்களை எண்ணி வருந்தியபடி நின்று கொண்டிருந்தாள்.
‘டொங்! டொங்!’ மெங் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ஒரு படைவீரன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த வேலைக்காரச் சிறுவனைப் பிடித்துக் கொண்டான். “உன்னை சீனப் பெருஞ்சுவர் கட்ட அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளை! உன் எஜமானரை அழைத்து வா!” என்று கட்டளை இட்டான் வீரன்.
‘நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லிய வண்ணம், வான் படைவீரனை நோக்கி வந்தார்.
“நீயும் வர வேண்டும்!” என்றான் படைவீரன்.
“நான் கல்வி கற்றவன். நான் ஏன் வர வேண்டும்?” என்று அமைதியாகக் கேட்டார் வான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தத் தெருவில் இருக்கும் ஆண்கள் யாராக இருந்தாலும், வேலை செய்ய அழைத்துச் செல்ல வேண்டும் என்பது உத்தரவு. ஊம்.. நடங்கள்!” என்று வேகமாக உத்தரவு பிறப்பித்தான் படை வீரன்.
அதற்கு மேல் அங்கு எதுவுமே பேச நேரம் இருக்கவில்லை. வேலைக்காரச் சிறுவனோடு, வான் உடனே புறப்பட வேண்டியதாயிற்று. பயணத்திற்கு வேண்டிய பொருட்களை எடுக்கவும் நேரம் கொடுக்காமல் அந்தப் படைவீரன் இருவரையும் அழைத்துச் செல்ல முற்பட்டான்.
வான், மெங்கை நோக்கி, கண்களாலேயே விடைபெற்றுச் சென்றார். மெங் அமைதியாக, தன் கணவனின் பிரிவை எண்ணி அழுதாள். கணவன் திரும்பிவரும் நாளை எண்ணிக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
முதுவேனில் காலம் முழுவதும் சென்றது. வான் பற்றிய சேதி ஏதும் வரவேயில்லை. குளிர் காலம் வந்துச் சென்றது. அப்போதும் வான் ஊர் திரும்பவில்லை. அடுத்து இளவேனில் காலம் ஆரம்பமானது. மரங்கள் துளிர்த்து நல்ல பழங்களைத் தந்தன. பறவைகள் ஒன்றாகப் பறந்து சென்று மரங்களில் கூடுகள் கட்ட ஆரம்பித்தன. இதைப் பார்த்த வண்ணம் மெங், வான் திரும்பும் காலத்திற்காக ஏக்கத்துடன் காத்திருந்தாள். ஆனால் இளவேனில் காலம் முடிந்து வெயில் காலமும் ஆரம்பமானது. வான் எங்கே, எப்படி இருக்கிறார் என்பது தெரியவே இல்லை.
மெங்கின் கவலை நாளாக நாளாக அதிகமானது. பேரரசரின் பேரில் கோபமும் அதிகரித்தது. சீனப் பெருஞ்சுவர் கட்டக் கிளம்பியதால் தானே இந்த நிலை.. ஏன் இப்படிப் பேரரசர் மக்களை வாட்ட வேண்டும் என்று எண்ணினாள்.
அடுத்து வந்த முதுவேனில் காலத்தில், வான் அணியும் வண்ணம் பல வண்ண வண்ண ஆடைகளை மெங் தயாரித்தாள். அவை அவரை குளிரிலிருந்து காப்பாற்றும் என்று நம்பினாள். ஆடை தயாரானதும் அதை வானிடம் சேர்ப்பிக்க தகுந்த நபரைத் தேடினாள். ஆனால் யாருமே அந்த நெடிய பயணத்திற்குத் தயாராய் இல்லை.
ஒரு நாள் இரவு, மெங் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அப்போது, அவளுக்கு ஒரு மெல்லிய குரலின் ஒலி கேட்டது. “மெங், என் அன்பார்ந்த மனைவியே!” என்று குரல் அழைத்தது. வான் இளைத்துப் போய், கிழிந்த ஆடைகள் அணிந்திருப்பதை மெங்கால் காண முடிந்தது.
“என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை” என்று அந்தக் குரல் மேலும் கூறிவிட்டு மறைந்தது. மெங் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள். அப்போது தான் அது கனவு என்பதை உணர்ந்தாள். இருந்தாலும், “நான் இப்போதே அவரைப் பார்க்க வேண்டும்” என்று கதறி அழத் தொடங்கினாள்.
அன்று காலையே, வானுக்காக செய்த உடைகளை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, வானின் பெற்றோரிடம் சென்றாள்.
“வானைப் பிரிந்து இனியும் என்னால் இங்கே இருக்க முடியாது. நான் அவரைத் தேடிச் செல்லப் போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்!” என்று வானின் பெற்றோரிடம் கூறிவிட்டு தன் நெடிய பயணத்தை ஆரம்பிக்கத் துணிந்தாள்.
வானின் பெற்றோருக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. “நல்லது மருமகளே, நீ இன்று வரை ஒரு நாள் இரவு கூட வெளியே தங்கியது கிடையாது. பெண் தனியாக பயணம் செல்வது நல்லதல்ல. உன்னால் ஒரு மைல் கூட நடக்க இயலாது. உன்னால் எப்படி நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து செல்ல முடியும். சொல்!” என்று வானின் தந்தை கூறினார்.
மெங் அதை அமைதியாகக் கேட்டாள்.
“மேலும் முதுவேனில் காற்றை எதிர்த்துப் பயணம் செய்வதும் கடினம். விரைவில் பனி பெய்து மலைகளை மூடிவிடும். அதற்குப் பிறகு பயணம் செய்வது அதை விடவும் கடினம்” என்றும் கூறினார்.
“தங்கள் வார்த்தை அனைத்தும் உண்மையே. இந்தக் கடினமான பாதை பற்றிய விவரம் எனக்குத் தெரியும். உங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி. நான் போயே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறேன்” என்றாள் மெங்.
வானின் தாயார், மெங்கின் வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணீரோடு, “குழந்தாய்.. நீ திரும்பி வானுடன் வரும் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம்” என்று பிரியா விடை கொடுத்தார்.
மெங் அவர்கள் இருவரையும் வணங்கிவிட்டு, தன் நெடிய பயணத்தை ஆரம்பித்தாள். கிராமத்தின் எல்லையை அடைந்தாள். அதுவரை உள்ள இடங்கள் அவள் அறிந்தவை. இனி செல்ல வேண்டிய இடம் அவளுக்குப் புதியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காய்ந்த புற்கள் நிறைந்த பரந்த நிலப்பரப்பாக இருந்தது. காலைக் கதிரவனின் கதிர்கள் நெடியதாக இருந்தன.
மெங் ஒரு பெரிய பெருமூச்சை விட்டு, நடக்க ஆரம்பித்தாள். கொஞ்ச தூரம் நடந்ததுமே, அவளது கால்கள் வலிக்க ஆரம்பித்தன. மூட்டையின் கனம் காரணமாக கைகள் எரிய ஆரம்பித்தன. ஆனால் அவள் பயணத்தை நிறுத்தவில்லை.
பல நாட்களாக, பல காடுகளையும் நிலப்பரப்புகளையும் மலைகளையும் நதிகளையும் கடந்து நடந்தாள். அழகான மலர்களையும் உடைகளையும் தைக்க மட்டுமே பழகிய அவளது கைகள், இப்போது உணவுக்காக புல்வெளியில் இருக்கும் நத்தைகளை எடுப்பதற்கும், கடினமான நிலத்தில் ஆழமாக வளர்ந்த புற்களைப் பிடுங்குவதற்கும் பயன்பட்டன.
மெங்கின் கணவரது குரலைத் தவிர வேறெதையும் கவனித்தறியாத அவளது காதுகள், இப்போது மழைக்கு முன் வரும் இடியோசைகளையும், வேகமாக வீசும் புயலின் ஓசையையும் பலமாக வீசும் காற்றின் சீற்றத்தையும் கேட்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு மைலைக் கடக்கும் போதும் சரி, ஒவ்வொரு நாளாகக் கடந்து செல்லும் போதும் சரி, ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் போதும் சரி, அவளது உள்ளமும் மனமும் மேலும் மேலும் பண்பட்டன. கூர்மையாயின. அவளது தசைகள் கெட்டியாயின. பேரரசர் கின் ஷி ஹீங்தீ மேல் இருந்த எண்ணம் மேலும் மேலும் இறுகி, வன்மமாக மாறியது.
ஒரு நாள் மாலை ஒரு மடுவில் மெங் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தாள். அவள் எழுந்து பார்த்த போது, அவள் உடல் முழுவதும் பனியால் மூடப்பட்டு இருந்தது. பாதையே தெரியவில்லை. ஒரு காகம் வேகமாகப் பறந்து மெங்கை நோக்கி வந்தது.
கா..கா.. அது கரைந்தது. அது மெங் எதிரே அமர்ந்து, மறுபடியும் கரைந்தது. பிறகு சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டு விண்ணை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
மெங் தன் கைகளை மேலே உயர்த்தி, விரித்து, பறக்க எத்தனித்தாள். ஆச்சரியப்படும் வகையில், அவளும் காக்கையைப் போன்று பறக்க ஆரம்பித்தாள். மேலே.. மேலே.. செல்ல ஆரம்பித்தாள்.
மெங் வடக்கு நோக்கிப் பறக்க ஆரம்பித்தாள். கீழே சீனப் பெருஞ்சுவர் பல பாலைவனங்களையும் நிலப்பரப்புகளையும் புல்வெளிகளையும் பாம்பென ஊறும் நதிகளையும் பரந்த மரங்களையும் கடந்து நின்றது.
“இத்தனைப் பெரிய சுவரா?” என்ற ஆச்சரியத்துடனும் பேரரசரின் பேரில் கோபத்துடனும் பறந்த வண்ணம் இருந்தாள். மெங் கடல் அருகே ஆட்கள் வேலை செய்யும் பெரிய நிலப்பரப்பை அடைந்ததும், சீனப் பெருஞ்சுவரின் முன்னால் சென்று நின்றாள். அவளது பயணம் முடிவுக்கு வந்தது.
மெங் பெருஞ்சுவரை ஒட்டி நடந்தாள். அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்களிடம் வானைப் பற்றிய விவரம் கூறி விசாரித்த வண்ணம் சென்றாள்.
அப்போது ஒருவன் மெங்கை நோக்கி வந்தான்.
“அண்ணன் வான் எங்களுடன் தான் வேலை செய்தார். அவர் இளமையாகவும் மென்மையான உடல்வாகும் கொண்டவராக இருந்ததால், இந்தக் கடினமான வேலையை அவரால் செய்ய முடியவில்லை. சீக்கிரத்திலேயே இங்கு வேலை செய்யும் போது இந்தப் பெருஞ்சுவருக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தார்” என்றான்.
இதைக் கேட்டதும் மெங் கண்கள் அதிர்ச்சியாலும் வாட்டத்தாலும் விரிந்து, எந்தவொரு நோக்கமும் இன்றி சுவரையே நோக்கின.
“அவரது உடல் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று உடைந்த குரலில் கேட்டாள் மெங்.
“இதோ.. கடலுக்கு அருகே உள்ள சுவருக்குக் கீழே நூறு ஆட்களோடு அவரையும் புதைத்தோம்” என்று ஒரு திசையைக் காட்டிய வண்ணம் அந்த ஆள் பதிலளித்தான்.
ஆனால் மெங், “எங்கே? எங்கே? என் அன்பான கணவரின் கடல் எங்கே?” என்றாள்.
கடலுக்கு அருகே வளைந்து நெளிந்து செல்லும் சுவருக்கு அருகே வானின் உடலைத் தேடி அலைந்தாள் மெங். கண்களில் கோபம் கொப்பளித்தது. கணவனின் பிரிவை எண்ணிக் கண்ணீரும் வடித்தது.
கனமான மழை பெய்து, காற்றடித்து, செங்கற்களை ஆட்டம் காண வைத்தது. பல மைல்களுக்கு அந்தப் பெருஞ்சுவர் உடைந்து சிதறியது. அங்கு புதைந்திருந்த உடல்கள் வெளியே தெரித்து விழுந்தன. காற்று, பல்வேறு திசைகளிலும் எலும்புகளை சிதற வைத்தது.
மெங் தன் விரலை ஊசியால் குத்தி இரத்தம் வரச் செய்தாள். “என் இரத்தம் என் அன்பான கணவரின் எலும்புகளுக்குள் சென்று சேரட்டும்” என்று கத்திக் கொண்டே எலும்புக் கூடுகளையும் சுவரின் இடிபாடுகளையும் தேடிய வண்ணம் ஓடினாள்.
இறுதியில், அவளது இரத்தம் ஒரு எலும்புச் சிதை அருகே ஊறியது. அந்த எலும்புகளை, கொண்டு வந்த வானின் ஆடையில் இட்டு, காட்டினாள். “நான் இனி வீடு திரும்பி, வானின் சடங்கைச் செய்யப் போகிறேன்” என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.
மெங் மூட்டையைக் கட்டி முடிக்கும் முன்னரே, அங்கு இருந்த சிப்பாய்கள் அவளை கட்டி இழுத்துச் சென்று பேரரசரின் முன் நிறுத்தினார்கள்.
“யார் நீ? ஏன் சுவரை இப்படி அழித்தாய்?” என்று கோபத்துடன் பேரரசர் கேட்டார்.
மெங் கண்களைத் தாழ்த்திக் கொண்டே, வானுக்காக குளிரை எதிர்ப்பதற்காகக் கொண்டு வந்த ஆடை பற்றியும், தன் நெடிய பயணம் பற்றியும் கூறினாள்.
பேரரசருக்கு அவள் சொன்ன விஷயங்கள் எதுவும் காதில் விழவில்லை. அவருக்கு அவளது அழகு மட்டுமே கண்களில் தெரிந்தது.
“என்னுடைய பெருந்தன்மை காரணமாக உன் மேல் இரக்கம் காட்டுகிறேன். உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்! நீயே முடிவைச் சொல்! இன்று நீ என்னிடம் சரணடைய வேண்டும்! இல்லையென்றால் நீ தூக்கில் இடப்படுவாய்!” என்றார் பேரரசர்.
மெங் சில கணங்கள் யோசித்தாள்.
“மகா கணம் பொருந்தியவரே.. எனக்கு மூன்று ஆசைகள் உண்டு. அவற்றை நிறைவேற்றினால் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறேன். இல்லாவிட்டால் நான் இப்போதே உயிரை விடத் தயார்” என்று பணிவுடன் மெங் கூறினாள்.
“என்ன அந்த மூன்று ஆசைகள்?” எனப் பேரரசர் கர்ஜித்தார்.
“முதலாவதாக என் கணவரது உடலை ஒரு இளவரசருக்கு ஈடாக பொன்னும் மணியும் பூட்டி புதைக்க வேண்டும். இரண்டாவதாக இந்தப் பேரரசு முழுவதும் அவரது இறப்பிற்காக நாற்பத்து ஒன்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அவருக்கு எல்லார் முன்னிலையிலும் ஈமச்சடங்கு நடக்க வேண்டும்” என்றாள் மெங்.
பேரரசர் மெங்கின் அழகில் மயங்கிய காரணத்தால், அவளது மூன்று ஆசைகளையும் நிறைவேற்றும்படி ஆணையிட்டார்.
பேரரசை துக்கம் அனுஷ்டிக்க ஆணையிட்டார். வானைப் புதைக்க தங்கமும் மணியும் கொண்ட சவப்பெட்டியைச் செய்ய வைத்தார். கடலுக்குப் பக்கத்தில் நாற்பத்து ஒன்பது அடி உயரத்திற்கு சமாதியையும் கட்ட வைத்தார்.
துக்கம் அனுஷ்டித்த நாற்பத்து ஒன்பதாம் நாள், பேரரசரும் அவரது அனைத்து அவை உறுப்புனர்களும், படைவீரர்களும் ஈமச்சடங்கு செய்ய தயாராகக் காத்திருந்தனர். மெங் வான் புதைத்த மண்டபத்திற்கு மேல் நின்று கொண்டு, பேரரசரை வணங்கி அவருக்கும் அவரது மந்திரிமார்களுக்கும் தனது இறந்த கணவர் வானை பெருமைப்படுத்தியதற்கு நன்றி கூறினாள்.
பிறகு தன்னுடைய பெற்றோருக்கும், அவளது புகுந்த வீட்டினருக்கும் அவர்களது அன்பிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
அவையினரை நோக்கித் திரும்பினாள்.
“நான் பேரரசருக்கு என்னைத் தருவதாகக் கூறினேன். என்னுடைய சபதத்தை நான் இப்போது நிறைவேற்ற வேண்டும். பேரரசர் கின் ஷி ஹீங்தீ பல இலட்சக்கணக்கான குடும்பங்களை அழித்தவர். அவர் நம்முடைய தந்தை, சகோதரர்கள், கணவர், மகன்கள் என அனைவரையும் எடுத்துக் கொண்டு இறக்கும் வரை வேலை செய்ய வைத்தவர்.
நான் இப்போது இந்தக் கொடுங்கோலன் என்னைத் தொட முடியாத இடத்திற்குப் போகப் போகிறேன்” என்று கூறிக் கொண்டே, பேரரசரும் அவரது ஆட்களும் நகரும் முன்பே, தன் முகத்தை அழகிய வெள்ளை உடையால் மறைத்துக் கொண்டு கடலுக்குள் குதித்தாள்.
பேரரசருக்கு வந்ததே கோபம்.
“அவளைக் கடலிலிருந்து இழுத்துக் கொண்டு வாருங்கள்! அவளது உடலை கண்ட துண்டமாக வெட்டி, எலும்புகளைத் தூசியாக அரைத்துக் பறக்க விடுங்கள்!” என்று கத்தினார்.
படைவீரர்கள் அவர் சொன்னது போலவே செய்தனர். அவர்கள் அரைத்த துகளைக் கடலில் பறக்க விடும் போது அவை ஆயிரக்கணக்கான வெள்ளி நிற மீன்களாக மாறிக் கடலிலே கலந்தன.
இன்றும் கிழக்குக் கடலுக்கு அருகே இருக்கும் சீனப் பெருஞ்சுவரிலிருந்து, மக்கள் இந்த வெள்ளி நிற மீன்களைக் காணும் போது மெங்கை நினைவு கூர்கின்றனர். அவளது தைரியத்தை வியந்து போற்றுகின்றனர்.
————-
- வாழ்க நீ எம்மான் (2)
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
- தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
- சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
- பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
- மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
- மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
- ராதா
- தினமும் என் பயணங்கள் – 10
- திண்ணையின் இலக்கியத் தடம் – 28
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37
- அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
- நீங்காத நினைவுகள் 40
- புகழ் பெற்ற ஏழைகள் 51
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு
- சென்றன அங்கே !
- ’ரிஷி’ கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 6
- நெய்யாற்றிங்கரை
- கவிதைகள்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)