ஒரு டிக்கெட்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

எக்மோர் ப்ளாட்பாரத்தை மின்சார ரயில் முழுமையாக அண்டிவிட நேரம் தராமல், உமா என்கிற உமா சங்கர், ப்ளாட்பாரத்தில் குதித்தபோது மணி மாலை 4.40 ஆகியிருந்தது. ஓட்ட ஓட்டமாக ஹைதராபாத் செல்லும் கச்சேகுடா விரைவு வண்டியின் ப்ளாட்பாரத்தை விசாரித்து இரண்டு இரண்டு படிகளாக ஏறி இறங்கி ரயிலை நெருங்க பத்து நிமிடம் கடந்துவிட்டிருந்தது.

முகம் சுளிக்க வைக்கும் அலங்கோல சிமென்ட் தரை ப்ளாட்பாரத்தில், ரயில் திண்ணமாக நின்றுகொண்டிருந்தது. ‘ச்சாய்..ச்சாயே’ என ராகமாய் பெரிய சைஸ் எவர்சில்வர் தூக்கு ஒரு கையிலும் காகித கோப்பைகள் மறுகையிலுமாய்  டீ விற்கும் பையன்கள், காற்றடைத்த தலையணை விற்கும் ஆட்கள், உருளும் பெட்டியை ஒரு கையால் இழுத்தவாறு ஃபோனில் மொக்கை போடும் இளம்பெண்கள், அந்த  இளம்பெண்களிடம் கண்களை இரவல் கொடுத்துவிட்டு நிற்கும் ஆண்கள் என ரயில் நிலையத்திற்கே உரிய பரபரப்பு கொஞ்சமும் குறையாமல் இருந்தது. சிகப்பு சட்டை , லுங்கி அணிந்த போர்டர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். ஏசி கோச் அருகில் மேல்தட்டு மக்கள் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி நடமாடும் புத்தகக் கடையில் என் தோழி, சினேகிதி போன்ற இதழ்களை தத்தமது மனைவிகளுக்காய் கணவர்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

மஞ்சள் பின்னணியில் 17651 என்ற ரயில் எண்ணை சரிபார்த்துக்கொண்டான். வண்டி புறப்பட பத்து நிமிடங்களே மீதம். பையில் ஒரு டிக்கட். அதன் தகுதி, அப்போதைக்கு மிக மிகத் தேவையான கன்ஃபர்ம்ட். ரயில்கள் சில விஷயங்களுக்கு மிக மிக செளகர்யம். தாலாட்டும் பயணம், கால்களை நீட்டி படுத்துக்கொண்டே பயணிக்கலாம், இயற்கை அழைப்புக்களுக்கு டிரைவரிடம் கெஞ்சி வண்டியை நிறுத்தி ஆளரவமற்ற இருள் சூழ்ந்த இடமாகப் பார்த்து ஒதுங்க வேண்டிய தேவைகள் இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ரயில் சிவனேயென்று நிற்க, சில கம்பார்ட்மென்டின் முனையில் இளைஞர்கள் கூடி நின்று பாசஞ்சர்ஸ் லிஸ்டை மனப்பாடம் செய்துகொண்டிருந்தார்கள்.  இதுவே பகல் நேர ரயிலாக இருப்பின் ஒவ்வொரு கம்பார்ட்மென்டின் முனையிலும் கூட்டம் கூடியிருக்கும் என்பதை எழுத வேண்டியதில்லைதான்.

பொதுவாக இளைஞர்களுக்கு, இளைஞிகளுக்கும் பகல் நேர ரயில் மிகப் பொருத்தம். இரவு நேர ரயில்களில் இளைஞர்கள் படும் பாடு சொல்லி மாளாது. கம்பார்ட்மென்ட் முழுமைக்கும் நரைகளாக இருக்கலாம். அவர்களின் செளகர்யத்திற்கேற்ப பர்த்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கலாம். இரவெல்லாம் இருமலையோ, குறட்டையையோ கேட்க நேரலாம். அல்லது இரவு பதினொரு மணி வரை ஏதாவது ஒரு விளக்கு எரிய அவர்களின் வெட்டிப்பேச்சை தெலுங்கிலோ, தமிழிலோ கேட்க நேரலாம். முன்பதிவு செய்யப்படவில்லையெனில், கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொள்ள வேண்டும். இடத்தை விட்டு நகரக்கூடாது. நகர்ந்தால் இடம் போச்சு.

வண்டி கிளம்பிவிடும்முன் முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 1 கோச்சை நோக்கி நடக்க, சற்று தள்ளி  அவளை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.  நீளமான கால்களை இறுக்கி அட்டையென ஒட்டிக்கொண்ட ஜீன்ஸ். அதன் சற்றே சாயம் போன வெளுத்த, லேசான‌ தோற்றம் அதை லீ என்றது. காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்த அந்த பச்சை டாப்ஸ்,  அதனூடே தோளில் தொங்கிய சிறிய பை… ஒல்லியான உடல்வாகு.. கோதுமை  தேகமெனினும், உடல் முழுவதும் சீரான கோதுமை நிறத்தில் மறைந்த சில்க்கை நினைவூட்டினாள். கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய செயின்.. அதன் முனை டீ சர்டின் உள்ளே அவளின் கழுத்தின் கீழே சரிந்ததில் ஏதோ ஒரு மின்னல் உள்ளுக்குள் வெட்டியது. வலது கையில் ஒரு பாண்டோரா.. இடது கை மணிக்கட்டில் இதய வடிவில் ஒரு கைக்கடிகாரம்.. வலது கையில் ஒரு காகிதம்..முகத்தில் ஏகத்துக்கு குழப்பம்..

சற்று தள்ளி, சிலர் கருப்பில் கோட் அணிந்து வெள்ளையில் பாண்ட் அணிந்திருந்த டீடீயிடம், த்ங்களது முன்பதிவு செய்யப்படாத டிக்கட்டுகளை ஆட்டோகிராஃப் வாங்கும் நோக்கில் நீட்டிக்கொண்டிருக்க, டீடீயோ அதுதான் சமயமென ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டிருந்தார்..

உமா மெல்ல அவளை அண்டினான்.

‘ஹாய்’ என்றான்.

அவள் பதிலுக்கு ‘ஹாய்’ என்றாள். முறைப்பாய் மேலும் கீழும் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ளாததில் அவளை சட்டென பிடித்துப்போனது. கிட்டத்தில் அவளது மார்பின் பருமன் மூளையை ஆக்ரமிக்க முயல, நாகரீகம் கருதி அவளின்  கண்களோடு வலுக்கட்டாயமாக பொருத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

‘உங்களுக்கு டிக்கட் கன்ஃபர்ம் ஆகலை. அதானே?’

‘ஆமா’

‘அந்த டீடீ கிட்ட போய் கேக்கலாமான்னு யோசிக்கிறீங்க? கரெக்டா?’

‘எப்படி கண்டுபிடிச்சீங்க?’

‘ஹ.. இதென்ன பிரமாதம்.. இடம் ரயில் நிலையம்…கையில டிக்கட்.. முகத்துல குழப்பம்…  ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி.. இவ்ளோ தகவல்கள் உங்களை மாதிரி ஒரு பொண்ணுக்கு ரொம்ப ஜாஸ்திங்க‌… இது கூடவா தெரியாது’

‘ஹ்ம்ம்’

‘என்ன பண்ணப்போறீங்க?’

‘தெரியலை.. ஹைதரபாத் போகணும்.. ஆர்.ஏ.சி யாவது வரும்ன்னு பாத்தேன்.. ப்ச்சு.. நான் நாளைக்கு கண்டிப்பா ஆபீஸ்ல இருக்கணும்… என்ன பண்றதுன்னே தெரியலை.. டீடீகிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுப்பாக்கலாம்ன்னு பாக்குறேன்’

‘அழகான பொண்ணுங்க எல்லாரும் ஏன் லேசா நட்டு கழண்டா மாதிரி இருக்கீங்க?’

‘ஏய்.. என்னா?’

‘பின்ன என்னங்க? ஆர்.ஏ.சி ல கன்ஃபர்ம் ஆனவன்லாம் இத்தன் நேரம் காலி சீட்டை கணக்கெடுத்திருப்பான்.. அதை மீறி நீங்க டீடீகிட்ட கேட்டுட்டா அப்புறம் நான் சொல்ற தில்லுமுல்லு ஐடியாவை கூட செய்ய முடியாது?’

‘தில்லு  முல்லா? தலைவர் ரஜினி நடிச்ச படம். ஐ லைக் தலைவர்’..

‘நீங்க நிறைய சினிமா பாக்குறீங்க… அது…’

‘அதுக்கு என்ன?’

‘அதுக்கு ஒண்ணுமில்லைங்க… டிக்கட் வாங்கி தியேட்டர்ல பாருங்கன்னு சொல்ல வந்தேன்.. கம்மிங் டு த பாயின்ட், நீங்க டீடீகிட்ட போய் கேக்காதீங்க… அப்புறம் அவர் உங்களை பாத்து வச்சிக்கிட்டா, வேற ஒண்ணும் பண்ண முடியாது.. நீங்க இதே ட்ரெயின்ல தூங்கிக்கிட்டே ஹைதரபாத் போக நான் கியாரண்டி..ஓகே வா?’

‘ஓ.. ரியலி!!.. உங்க டிக்கட்டை எனக்கு தரப்போறீங்களா?’

‘எப்படிங்க தர முடியும்? பாஸஞ்சர் லிஸ்ட்ல என் பெயரை தெளிவா போட்டு பக்கத்துலயே தெளிவா ஆண் அப்படீன்னு போட்டிருக்குமே.. ‘

‘அப்புறம் எப்படிங்க?’

‘அதைச் சொல்லிட்டா அப்புறம் ஏதுங்க கதை?’

பேசிக் கொண்டிருக்கையிலேயே, ரயில் நகரத்துவங்க, இருவரும் அவசர அவசரமாக ஏறிக்கொண்டார்கள். ஏறுகையில் மீண்டும் அவளின் இடையை இருக்கமாய் கவ்வியிருந்த ஜீன்ஸ் உள்ளுக்குள் தொந்தரவு செய்தது. உமா தனது டிக்கட்டை எடுத்து பார்த்துக்கொண்டான். எஸ் 1 கோச்சில் 8வது பர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. அது பக்கவாட்டில் வரும் மேல் பர்த். தனது சிறிய பையை மேலே வைத்துவிட்டு இருவரும் கீழே அமர்ந்துகொண்டார்கள். ஏறிய அவசரத்தில் அவளுக்கு மூச்சு இறைத்தது. அவளுக்கு பதில் உமா தவித்தான்.

‘இதோ பாரு ஊர்வசி… நான் என்ன சொல்ல வரேன்னா…’

‘ரொம்ப பழைய மெத்தட்… என் பேரு ஊர்மிளா ‘

‘பழைய மெத்தட்னாலும், ரிசல்ட் பக்கா பாருங்க… உங்க உண்மையான பேர்ல பாதி சரியா சொல்லிட்டேன்ல?’

ஊர்மிளாவின் உதடுகள் இறுகி, கண்கள் முகத்தை சிரமப்படுத்தாமல் ரயில் கூரையை நோக்கின ஒரு நொடி நேரத்திற்கு.  அப்போதுதான் அவளின் உதடுகளை கவனித்தான். லேசான பிங்க் நிறத்தில் உதட்டுச்சாயம், அந்த மங்கலான ஒளியிலும் லேசாக வழுக்கியது.

‘ஏய் ஹீரோ, உன்னை நம்பி ஏறிட்டேன்.. சொன்னமாதிரி ஹைதராபாத் வரை நான் தூங்கிக்கிட்டே போகுறா மாதிரி ஏற்பாடு செஞ்சுடு.. இல்லைன்னா நான் செமயா…..’

‘லவ் ஆயிடுவீங்களா என் மேல?’

‘அய்ய!!… ரொம்ப ஆசைதான்..’

‘ஓகே.. ஜோக்ஸ் அபார்ட்.. இந்த ட்ரெயின் ஏழு மணி சுமாருக்கு அரக்கோணம் போகும்… ரேணிகுண்டா போக ஒன்பது மணி ஆகும்… அதுக்குள்ள டீடீ வந்தா உங்க டிக்கட்டை காமிங்க. அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுவேன்னு சொல்லிடுங்க… அவர் போகட்டும் ‘

‘ஓகே..அதுக்கப்புறம்?’

‘அட!! இப்போதைக்கு ஐடியா இவ்ளோ தாங்க கிடைச்சிருக்கு… நேரம் போகட்டும்… சொல்றேன்..’

‘அடப்பாவி!!.. உன்னை நம்பி ஏறினேன் பாரு..’

ரயில் ரேணிகுண்டா வந்தடைந்தபோது, கோச்சில் இருந்த அனேகம் பெரிசுகள் உணவை உண்டு முடித்திருந்தார்கள். ப்ளாட்ஃபாரத்தில் இறங்கி சிலர் நடை பயில, வேறு சிலர் ஜன்னலோரம் அமர்ந்து தங்கள் உறவுகளுக்கு தகவல் பரிமாறிக்கொண்டிருக்க, உமாவும் ஊர்மிளாவும் ப்ளார்ஃபாரத்தில் இறங்கினார்கள்.

‘டீடீ போயாச்சு.. இனிமே என்ன?’ என்றாள் ஊர்மிளா.

‘கொஞ்சம் போறுங்க மேடம்.. அது அதுக்கும் நேரம் காலம்ன்னு ஒண்ணு இருக்குல’ என்று சமாளித்தான் உமா. உள்ளுக்குள் கவலையாக இருந்தது. அழகான பெண். ஹாய் சொன்னதும் முறைக்காமல், இயல்பாக பேசின பெண். உடனே நட்பு பாராட்டிய பெண். இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றி ஜம்பமாக வாக்குறுதி அளித்தாகிவிட்டது. அதையும் நம்பி அந்தப் பெண்ணும் வந்துவிட்டது. இனி என்ன செய்து அவளுக்கு பர்த் தருவது என்று சிந்தனை போனது. மொத்தம் 72 பர்த்கள் ஒரு கோச்சிற்கு. எல்லாம் ஃபுல்.
யோசனையுடன் தனது கம்பார்ட்மென்டையே பார்த்துக்கொண்டிருந்தான் உமா. கம்பார்ட்மென்டில் இருந்த பெரிசுகள் மெல்ல பர்த்களை விரித்து தங்கள் பர்த்களில் செட்டில் ஆக, ஆங்காங்கே விளக்கணைந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் உமாவின் மண்டைக்குள் விளக்கெரிந்தது.

‘சொல்லு உமா… எனக்கு தூக்கம் வருது.. ‘ என்றாள் ஊர்மிளா கொட்டாவி விட்டபடி.

‘சரி இப்போ நம்ம கோச்ல மீதி இருக்குற ஏழு பர்த்தும் செட்டில் ஆயாச்சு.. லைட்டும் ஆஃப் பண்ணியாச்சு… நீ போய் என் பர்த்ல படுத்துக்கோ ஊர்மி’

‘ஓ..அப்போ நீ?’

‘அதை நான் பாத்துக்குறேன்ம்மா.. இந்தியத் திருநாட்டுல நீதி நேர்மையை காப்பாத்துறோமோ இல்லையோ, அழகான பொண்ணுங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பா காப்பாத்தணும். இல்லைன்னா காதல் கடவுளோட அனுக்கிரகம் கிடைக்காம, இந்த நாட்டோட ஜனத்தொகைல கான்ட்ரிபூஷன் கம்மியாகி…’

‘அய்யோ ஆண்டவா!! எதுக்கெடுத்தாலும் ஏன் ரேடியோ மாதிரி நிறுத்தாம பேசிட்டே இருக்க?….அது உன் பர்த் இல்லையா? எனக்கு கில்டியா இருக்குமே?’

‘தேவையில்லை ஊர்மி… உன்னை மாதிரி அழகான பொண்ணு பர்த்க்காக அல்லாடிட்டு இருக்கிறப்போ என்னை மாதிரி பையனுக்கு தூக்கம் வருமா? தவிரவும் நான் மத்தியானமே தூங்கிட்டேன்… அதனால ராத்திரி தூக்கம் வராது … என் பையில ஒரு பெரிய போர்வை இருக்கு.. அதை எடுத்து போத்திக்கோ.. குளிர் தெரியாது.. போய் தூங்கு..குட் நைட்’   சொல்லிவிட்டு அவளை ஏற இறங்க பார்த்தான் உமா. இரண்டு கைகளையும் முன்பக்கமாய் இடையருகே பிணைத்து நின்றிருந்தவளின் கைகளுக்கு மத்தியில் அந்த பருமனை அவதானித்துவிட்டு,

‘பேசாம பர்த்தா பொறந்திருக்கலாம்’ என்றான் நீண்ட பெருமூச்சுடன்.

‘என்ன சொன்னீங்க?’

‘இது… பேசாம என் பாட்டுக்கு போயிருக்கலாம்ன்னு சொன்னேன்’

‘அப்படீன்னா?’

‘ஒண்ணுமில்லைங்க…குளிர்ல உதடு தந்தி அடிக்குது.. நீங்க தூங்குங்க..குட் நைட்’ என்றான் உமா சமாளிப்பாய்.

‘அப்போ ராத்திரி முழுக்க என்ன பண்ணுவ உமா?’

‘என்கிட்ட ரெண்டு நாவல் இருக்கு ஊர்மி.. அதை முடிப்பேன்… ஒகே வா..’

‘வாவ்.. உமா சோ ச்வீட்.. யூ இம்ப்ரஸ்ட் மீ.. தனியா போறோமேன்னு பயமா இருந்தது.. இப்போ உன்னை பாத்ததும், ரொம்ப பாதுகாப்பா இருக்குடா.. தாங்க்ஸ்…குட் நைட்’ என்றுவிட்டு ரயிலை நோக்கி நட(மித)ந்தாள் ஊர்மிளா. கம்பார்ட்மென்ட் உள்ளே மங்கலான ஒளியில் ஊர்மிளா தன் பர்த்தில் ஏறி , பையிலிருந்த பெரிய போர்வையை முகத்தில் துவங்கி, நுனிக்கால் மறைய‌ மூடி படுப்பதை பார்த்தபடி நின்றிருந்தான் உமா.

கடப்பா ரயில் நிலையத்தில், லேசுக்கும் சற்று அதிகப்படியான அதிர்ச்சியுடன் ரயில் நின்றபோது ஊர்மிக்கு தூக்கம் கலைந்தது. போர்வைக்குள் இருளில் முதுகின் பின்னால் ஏதோ தட்டுப்பட, ஊர்மி கைகளை விட்டுத்துழாவ அகப்பட்டது சாக்கு போன்ற ஒன்று.

‘என்ன தேடுற ஊர்மி?’ சன்னமான குரலில் கேட்டது உமாவின் குரல்.

‘இல்லை.. என்னமோ சாக்கு மாதிரி…’

‘சாக்கு இல்லை… அது என்னோட ஜீன்ஸு.. உள்ள என் கால் கூட இருக்கே.. ‘

‘வாட்!!’

‘எழுந்துடாத ஊர்மி.. காலை வரை இப்படியே போய்டுவோம்.. ‘

‘மத்தியானம் தூங்கிட்டேன்னு சொன்ன?’

‘உன்னை சமாளிக்க வேற வழி தெரியாம ஒரு சின்ன பொய்…பிரச்சனை இல்லை… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. கால் தானே …. பூ..’

‘ஷட் அப்’

‘இல்லை… பூ மாலை பக்கத்துல கிடக்குன்னு நினைச்சுக்கோன்னு சொல்ல வந்தேன்… ஊர்மி… இதோ பாரு.. நான் வெளிப்புரமா ஒருக்களிச்சு படுத்திருக்கேன்.. நீ அந்தப்பக்கமா ஒருக்களிச்சு படுத்துக்கோ.. ரெண்டு பேரும் தூங்கிட்டே போய் சேர்ந்துடலாம்… ஓகே வா.. கற்புங்கறது மனசு சார்ந்தது.. ஆம்பளைக்கும் கற்பு இருக்குன்னு நான் பரிபூரணமா நம்பறேன்… புராணத்துல ராமபிரானுக்கு கூட ஒரு தடவை காட்டுல இப்படி…’

‘அய்யோ!! மறுபடி ரேடியோவா!!..’

–  ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *