தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

 

இந்த வாழ்க்கையின் எந்திரத்தனத்தை எங்கே தொலைப்பது?

 

அது வந்து ஒட்டிக் கொள்கிற வேலம் பிசினை போல, வந்திருந்தவனைப் பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாகப் பெற்றவன்.

 

“என் வேலைய முடிச்சுடு உனக்குச் சீதாபழம் கொண்டார்ரேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்ன போதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா எழுப்பிக்கொண்டேன் நான்.

 

பாமரத்தானின் அன்பு மனைவியை நினைத்த மாத்திரத்தில் தோன்றிய நெகிழ்வு.

 

“இந்த வேலக்காரி யில்லினா நா எங்க காலையில கஞ்சி வைக்கிறதுல இருந்து இராக்கால வைக்கும் வேலதான் போ“ என்றான்.

 

“எத்தனை பசங்க உங்களுக்கு“ ?

 

“ரெண்டு.  ரெண்டும் பையனே“

 

“என்ன பண்றாங்க“?

 

“திருணாமல காலேசுக்கு போறான் ஒருத்தன்,  இன்னொருத்தன் எங்கூட காட்டுக்கு வர்றான் ஒத்தாசைக்கி, இத யம்மா என்த செத்த எழுது, மேலுக்கு போற பஸ் போச்சுன்னா ராவாயிடும் அவ மட்டும் தவிச்சுகினு இருப்பா..“

 

அந்த முகப் பாவனை அவன் மனைவியை பற்றி பேசும் போதெல்லாம் அழகூட்டிச் சிரித்தது..

 

“பலாப் பழம் எத்துகினு வந்து தர்றேன். இந்த வாட்டி ஓட்டு போடனும் நாங்க, இத ஒருக்கா லிஸ்ட் வருது மறுக்கா வரல“

 

நான் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். அவனுடைய விண்ணப்பதை நிரப்பிய பேனாவின் ஓட்டத்தைப் பார்த்தவன்.

 

“நா இன்னா சொல்றன், நீ இன்னா எழுதுற ? சீத்தாபழம் வேணான்னா பலாப் பழம் கொண்டார்ரேன்“ என்றான்.

 

எனக்கு சிரிப்பு கலந்த கவலை வந்தது. அவனுக்குரிய விண்ணப்பம் தான் என்று தெரியா அளவிற்கு அவன் பக்குவப் படாத பாமரத்தான்.

 

“எதுவும் வேண்டாம். இந்த பாரம் உங்களுடையது தான்.“

 

ம்ம்ம்ம் என்று வியப்பில் இழுத்தான்.

 

“வேற இன்னா வேணும் சொல்லு, சாம, புனகு நெய், விளாம்பழம் எதுனா வேணுமா?“

 

“எதுவும் வேண்டாம்“

 

“இங்க ஒரு கையெழுத்து போடுங்க“

 

தலையைச் சொறிந்து யோசித்தான்.

 

“எம் பேரு சேம எழுதிக்குடு பாத்துப் போடறேன் “

 

கீழ் இருந்த காகிதம் ஒன்றிலிருந்து தேர்ந்து சேமன் என்று எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்து காப்பி அடித்தான் அவன். பிறகு அந்த காகிதத்தை மடித்தபடி நான் வச்சுக்கட்டுமா என்றான். ம் என்று தலையசைத்தேன் நான்.

 

“நான் போவட்டுமா“?

 

ம் என்று தலையசைத்தேன்

 

போனபடி திரும்பினான்

 

“என்ன“

 

தலையைச் சொறிந்த படி கசங்கிய இருபது ரூபாய் தாள் ஒன்றை நீட்டினான். “டீயாவது குடிப்ப இல்ல“

 

“வேண்டாம் போய்ட்டு“ வாங்க,” என்றேன் வேலையில் மூழ்கினேன்.

 

எப்போதும் கணணி பார்ப்பது என்பது தலைவலி, இந்த எந்திரத்தனத்தில் இருந்து எப்படி விடுபடுவது?  இப்போது டீ அருந்த தோன்றியது.. செல்போன் எடுத்தேன் ஒரு டீ தருவிக்கலாம் என்று;  திடீரென்று என்முன் வந்து நின்றான் சேமன், கண்ணாடி டம்ளரில் நிரப்பப்பட்ட தேனீரோடு அவன் கனிவும் நிரம்பி வழிந்தது. அந்த நெகிழ்வில் வாழ்வின் எந்திரத்தனம் விடுபடுவதாக பாசாங்கு செய்தது.

 

எந்திர வாழ்விலும் ஓர் மாய மந்திரம் உள்ளது !

 

++++++++++++++++

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *