நீங்காத நினைவுகள் 41

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

      கொஞ்ச நாள்களுக்கு முன்னால் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியர் – சிறந்த சிந்தனையாளரும் ஆன்மிகவாதியும், என்னுடைய நண்பரும் ஆன ஓர் எழுத்தாளர் –இன்று எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் பற்றிய தமது ஆற்றாமையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைத் திரைப்படப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  ஏன்? கொஞ்சமும் தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நண்பர்கள் மூலமும், பத்திரிகைகளில் வரும் விமரிசனக் கட்டுரைகளிலிருந்தும் அவ்வப்போது சிலவற்றைத் தெரிந்து கொள்ளூவதுண்டு. அவ்வாறு கேள்விப்பட்ட ஒரு பாடல் –

  “கல்யானந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்ல, ஓடிப் போயி கல்யாணதான் கட்டிக்கலாமா?” – இதை எழுதியவர் யாரென்பது தெரியாது.

         இது பாடலின் தொடக்கம்.  மேற்கொண்டு வரும் சொற்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அவை ஒருபுறமிருக்க, அவற்றை விடவும் இத்தொடக்கம் மிகுந்த ஆட்சேபணைக்கு உரியது என்பது அவரது கருத்தாகும். நமது பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் உகந்ததாக இது இல்லை என்று அவர் கூறினார்.. நமது பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை பற்றிய தெளிவான  விளக்கம் சொல்லுவாரில்லை. அப்படி ஏதேனும் இருந்தாலும் அது நடைமுறையில் நம் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகத் தெரியவும் இல்லை. எவ்வெவற்றை நம் பண்டைய கலாச்சாரம் என்று சிலர் இப்போது விளக்குகிறார்களோ அவை எல்லாம் அப்படி அப்படியே காலம் காலமாய்ப் பின்பற்றுப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவில்லை.

உதாரணத்துக்கு ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே நமது கலாச்சாரம்’ என்று எல்லாருமே பெருமையுடன் அறிவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.  ஆனால் அப்படித்தான் இருந்து வருகிறதா! ஆன்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள நெறிமுறைகள் வேறு. கலாச்சாரம் வேறு அல்லவா! கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலைகள், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் சார்ந்த வாழ்க்கை முறைதானே? அல்லது இந்த முடிவே தவறா?  இவையன்றி வேறு எவையேனும் கலாச்சாரம் என்பதில் உள்ளனவா? (சகோதரர் ஷாலி அன்பு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன்.)

கலாச்சாரம் பற்றிய தெளிவான விளக்கம் ஒரு புறமிருக்க, இந்தப் பாடலின் தொடக்க வரிக்கு என்னுடைய நண்பர் ஆட்சேபித்தது சரியா தவறா என்று பார்ப்போம். எடுத்த எடுப்பில் நன்பரின் கருத்தோடு ஒத்துப்போகத்தான் தோன்றியது. எனினும், ஆழ்ந்து சிந்தித்த போது, அவ்வினாக்களில் தவறு ஏதும் இருப்பதாய்ப் படவில்லை.

திருமணம் என்பது மனித சமுதாயத்தின் உன்னத அமைப்பாகும். திருமணம் என்பது வெறும் உடல்கள் சார்ந்த விஷயமாக மட்டுமன்றி, இருமனங்கள் சார்ந்த (அல்லது சேர்ந்த) விஷயமும் கூட என்பதன் அடிப்படையிலேயே அந்த உயர்ந்த ஏற்பாட்டை மனிதன் உருவாக்கினான் என்பது நமக்குத் தெரியும். எனவே காதல் உணர்வால் ஒன்று சேரும் இருவர் அவ்வாறு தாங்கள் சேர்ந்து தம்பதியராகி விட்டதைச் சக மனிதர்களுக்கு அறிவிப்பதில் நிறைய நன்மைகள் உண்டு. (நன்மைகள்தான் உண்டு என்றே சொல்லிவிடலாம்.)

ஆனால், காதலர்கள் ஓடிப் போகத் தீர்மானிப்பது எதனால் என்பதை நாம் யோகிக்கத் தவறுகிறோம். இருதரப்புப் பெற்றோரின் சம்மதமும் காதலர்கள் திருமணம் செய்துகொள்ளக் கிடைக்காததால்தானே! சாதி , அந்தஸ்து ஆகிய இரண்டும்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் காதலுக்குக் குறுக்கே நிற்பதற்குக் காரணங்கள் ஆகின்றன. தன் மகனோ, அல்லது மகளோ தேர்ந்தெடுக்கும் நபர் சரியான நபராக இல்லாமற் போனால் மட்டுமே பெற்றோர் ஆட்சேபிக்கலாம். அப்படி ஆட்சேபித்தால், அது இயல்பே. நியாயமான கவலையின் விளைவும் கூட. ஆனால், அப்படி மட்டும்தான் நடக்கிறதா? இல்லை.

சாதியும் அந்தஸ்துமே காரணங்கள் ஆகின்றன.  இதனால் அவசரம் அவசரமாய் அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்தம் பெற்றோர் வேறிடத்தில் திருமணத்தை முடிக்க ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.  இதிலிருந்து தப்புவதற்குத்தான் காதலர்கள் ஓடிப்போகிறார்கள். (காதல் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளவர்கள் மட்டுமே இங்கே காதலர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.)

என்னுடைய நண்பர் குறிப்பிட்ட கலாச்சாரச் சிதைவு இதில் இல்லை. ஏனெனில் திருமணம் என்னும் அமைப்பின் உன்னதத்தை இக்காதலர்கள் புரிந்துகொண்டுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். திருமணம் என்கிற ஏற்பாட்டை அவர்கள் தவிர்க்க வில்லையே! ஆட்சேபிப்பவர் களுக்குத் தெரியாமல் கல்யாணத்தை நடத்திகொள்ளும் வசதியும் அவகாசமும் வாய்ப்பும் உள்ளவர்கள் முதலில் அதை முடித்துக்கொண்டு, அதன் பின்னர் ஓடிப் போகலாம் என்று நினைப்பதில் தவறில்லை!

திருமணத்தை உடனுக்குடனாய்த் திருட்டுத் தனமாகச் சிலர் முன்னிலையிலோ அல்லது பதிவு செய்தோ நடத்திக்கொள்ள அவகாசம் இல்லாதவர்கள் முதலில் ஓடிப்போய்ப் பின்னர் மணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். இவர்களும் திருமணம் என்கிற அமைப்பை இழிவுபடுத்தவில்லை!

எனவே என்னுடைய நண்பர் குறிப்பிடும் கலாச்சாரச் சீரழிவு இதில் இருப்பதாய்த் தெரியவில்லை!

………

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

 1. Avatar
  ஷாலி says:

  ஒரு திரைப்பட பாடலை வைத்துத்தான் இந்த கலாச்சார சிந்தனை பேசப்படுகிறது.”கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…ஓடிப்போய் கல்யானம்தாம் கட்டிக்கிலாமா?”
  நம் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் உகந்ததாக இல்லை என்று அந்த எழுத்தாளர் கூறுவதே சரி என்றே நான் கருதுகிறேன்.

  ஆணும் பெண்ணும் காதல் செய்வதை கலாச்சார சீர்கேடு என்று எந்த இலக்கியமும் கூறவில்லை.அந்த இரு மனங்கள் இணையும் திருமணம் ஓடுகாலி திருமணமாக இருந்தால் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.இன்றைய திரைப்பாடலோ.அன்றைய சங்கப்பாடலோ,அக்கால சமூதாய நிகழ்வுகளையே அப்பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

  கூடியபின் ஓடுதல்,ஓடியபின் கூடுதல் அன்று,இலைமறைவு காயாக இருந்தது. இன்றைய காலத்தில் ஓடு காதலர்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் .இன்றைய சமூதாயத்தை பிரதிபலிப்பதே ஓடிப்போகும் பாடல்.

  சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ் சமூதாயம் எப்படி இருந்தது என்பதனை அன்று எழுதப்பட்டஒரு திரைப்பாடல் அழகாக வர்ணிக்கிறது.அன்றும் காதல் இருந்தது.ஆனால் அந்தக்காதல் பெற்று வளர்த்த தாய் தந்தையை தூக்கி எறிந்து விட்டு ஓடச் சொல்லவில்லை.

  பெற்றவர்களின் பரி பூரண ஆசியுடன் இருமனங்கள் திருமணத்தில் இணைகின்றன.மலர் மாலை சூட்டி பலபேரும் வாழ்த்த இல்லறம் தொடர்கிறது.ஓடுகாலி திருமணமானது தாய் தந்தையின் சாபத்தில் ஆரம்பித்து இடையிலேயே மடிகிறது.இந்தப் பாடலைக் கேட்டு விட்டு எது கலாச்சார சீர்கேடு என்று முடிவு செய்யுங்கள்.
  ————————————————–

  காதலி: என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?
  நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா….தெரியுமா…

  கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே
  எண்ணத்திலே நிறைந்து அதில் இடம்பிடித்த பின்னே
  எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
  எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
  அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
  ஓ….ஓ….ஓ …

  காதலன்: உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா…இனி முடியுமா..
  என் உள்ளம காணும் கனவு என்ன தெரியுமா…தெரியுமா..

  அன்னம் போல நடை நடந்து வந்து
  என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
  அன்னம் போல நடை நடந்து வந்து
  என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
  கன்னம் சிவக்க நீ இருக்க
  மஞ்சக்கயிறு எடுத்துனது
  கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது
  ஆ..ஆ..ஆ..
  (என்னை விட்டு ஓடி..)

  காதலி: மலர் மாலை சூட்டி பலபேரும் வாழ்த்த
  வளையாடும் என் கை விரலில்
  கணையாழி சூட்டி புதுப்பாதை காட்டி
  உறவாடும் திரு நாளின் இரவில்

  காதலன்: இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
  விளையாடும் அழகான அறையில்
  சுவையூரும் பாலும் கனிச்சாறும் கொண்டு
  தனியே நீ வருகின்ற நிலையில்
  ஆ…ஆ…ஆ..ம்..ம்…ம்…
  ஓ…ஓ…ஓ…
  (உன்னை விட்டு ஓடிப்போக ….)

  படம்:குமுதம் (1961)
  பாடல் வரி:கவிஞர் மருதகாசி
  இசை: கே.வி.மகாதேவன்.
  பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன்,பி.சுசீலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *