வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

‘மரைக்காயருக்கு குழாய் வழிதான் எல்லாமுமாம்.  கடைசியாக தம்பி  பார்த்தபோது நான் எப்போ வருவேன் என்று கேட்டாராம். இரண்டு நாட்கள்தான் தாக்குப்பிடிக்குமாம். உறவினர்களுக்குச் சொல்லிவிடுங்கள் என்று டாக்டர் சொல்லிவிட்டாராம்.’ என்று சொல்லி தம்பி தொலைபேசியை வைத்துவிட்டான். மதியம் உண்ட சோறும் காளாமீன் கறியும் நெஞ்சுக்குழியை விட்டு இறங்காமல் மேலே வரவா என்று கேட்கிறது. மரைக்காயரை இந்த நிலையில்  போய்ப் பார்க்காவிட்டால் அது  மரணதண்டனைக் குற்றம் என்றது மனசாட்சி. மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். அடுத்த முனையில் தம்பி. ‘நாளைக் காலை 12.30க்கு திருச்சி விமான நிலையத்துக்கு காரனுப்பு. நான் வருகிறேன்.’ என்றேன் ‘நிஜமாவா’ என்று அவன் கேட்டதில் நான் கண்டிப்பாக வரமாட்டேன் என்ற தொனி தெரிந்தது. என் பயணமுகவருக்கு என் தகவல்களை குறுஞ்செய்தியில்  தட்டிவிட்டேன். எல்லாம் தயாராக இருக்கட்டும். அரைமணி நேரத்தில் வருவேன்’ என்றேன். சொன்னபடி போய் நின்றேன். என் பயணச்சீட்டு காசுக்காக கணினியில் காத்திருந்தது. வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். தன்னிச்சையான முடிவுதான் தாம்பத்தியப் பிசிறுகள். முப்பது ஆண்டு தாம்பத்திய வாழ்க்கையில் இப்படி எத்தனையோ பிசிறுகள். அப்படியே விட்டுவிட்டால் உதிர்ந்துவிடும் என்றது அனுபவம்.  இந்த உண்மையை அறிய முப்பது ஆண்டுகள்

அடுத்த நாள் காலை 6.30. மூன்று நாட்களுக்கான உடுப்புகளை ஒரு பையில் திணித்துக்கொண்டு விமானநிலையம் புறப்பட்டேன். இருக்கை எண் வாங்கினேன். நடந்தேன் கடந்தேன். விமானத்தில் அமர்ந்தேன். மணி 8.30. விமானம்  உருண்டது. பின் உருமியது. பின் மிதந்தது. முகில்கள் கீழ்நோக்கி பயணித்தன. கொஞ்ச நேரத்தில் மேலும் கீழுமாய் வானம். நான்  மிதக்கிறேன். எதையும் எவரிடமும் ஒப்படைக்கத் தயங்கும் மனிதக்கூட்டம் எல்லாவற்றையும் ஒரு விமானியிடம் ஒப்படைத்துவிட்டு பொம்மைகளாய் அமர்ந்திருந்தனர். லேசாகச் சிரிப்பு வந்தது.  சாய்ந்தேன். 50 ஆண்டுகள் பின்னோக்கி ஓடின நினைவுகள். மரைக்காயரைப் பற்றியே என் நினைவுகள் சுழன்றன.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மரைக்காயர்தான் பஞ்சாயத்து போர்டு தலைவர்.  அங்கு வேலைபார்க்கும் அத்துனை பேரின் அத்துனை தேவைகளையும் மரைக்காயர்தான் நடத்திவைப்பார். அப்பா அம்மா புகைப்படங்கள் இருக்கிறதோ இல்லையோ எல்லார் வீட்டிலும் மரைக்காயர் படம் நிச்சயமாக இருக்கும். மரைக்காயரின் வலம்புரி சோப் கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை மரைக்காயர் பெயரைச் சொன்னது. எங்களின் தெருவே மரைக்காயர்  தெரு என்று பெயரை மாற்றிக்கொண்டது. மரைக்காயர் தெருவையும் சௌராஷ்டிரா தெருவையும் இணைத்திருந்தது அவருடைய வீடும் வீட்டுக்குப் பின்புற தோட்டமும். 3000 சதுரஅடிதான் வீடு. பின்பக்கம் சில ஏக்கரில் தோட்டம். ஒரே தென்னைமரத்தில் நூறு தேங்காய் பார்த்திருக்கிறீர்களா? ஒரே தாரில் 30 சீப்பு ரஸ்தாளி பார்த்திருக்கிறீர்களா? எல்லாமும்  மரைக்காயர் தோட்டத்தில் சர்வ சாதாரணம். எங்கிருந்துதான் கொண்டுவந்தாரோ அந்த ஜாதி மா. வெங்காயத் தோலைவிட மெல்லிய தோல். கத்தி வேண்டாம் . அப்படியே கடித்துத் திண்ணுங்கள். மில்லிமீட்டர் நார் பல்லில் சிக்காது. அந்தக் கொய்யாவைக் கடித்தால் ஒரு சொட்டுத் தேன்  தலையை நீட்டி ‘என்ன சேதி’ என்று கேட்கும். சிட்டுக்குருவிகளும் கிளிகளும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும். இரண்டு மூன்று பேர் எதையாவது கொத்திக்கொண்டும் அள்ளிக்கொண்டும் இருப்பார்கள்.

மரைக்காயரின் சோப்புத்  தொழிற்சாலை கடைவீதியிலிருந்து காரைக்குடி செல்லும் ரயில்வே தண்டவாளம் வரை வியாபித்திருக்கும். உள்ளே நுழைந்தால் அது இன்னொரு உலகம். பெரிய பெரிய கொப்பரைகளில் சோப்பு கொதிக்கும். ராட்சஸ தாம்பாளங்களில் வார்க்கப்படும். பிறகு வார்ப்புகளில் ஊற்றப்படும். மெல்லிய கம்பி சோப்பை அல்வா துண்டுகளாக நறுக்கும். நூற்றுக்கணக்கான எந்திர மனிதர்கள் உங்களை யாரென்று பார்க்கக்கூட முகத்தைத் திருப்பமாட்டார்கள். அடேங்கப்பா! சோப்புகளை அச்சுக்காகிதத்தில் சுற்றி மடக்கி ஒட்டி வில்லைகளை இணைப்பது கைகளா அல்லது வேறெதுவுமா? அத்தனை வேகம். தாண்டிப்போனால் ஏகப்பட்ட அட்டைப்பெட்டிகள். அத்தனையும் சரக்குகள். வெளியூர்களுக்கு அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டுங்கள். வந்துவிட்டது மரைக்காயரின் அலுவலக அறை. பர்மாதேக்கில் நகாசு வேலைகள் செய்யப்பட்ட வாசற்கதவு நிலை சாளரங்கள். மெல்லிய வெள்ளைத்திரை காற்றில் லேசாக படபடக்கிறது. வெளிப்பக்கம் சுற்றிலும் கருப்பிலிருந்து வெள்ளைவரை அத்துனை நிறங்களிலும் ரோஜாக்கள். ஊட்டியில் கூட நீங்கள் பார்க்கமுடியாது. உள்ளே பெரிய பெரிய திண்டுகள் வைத்த சோபாக்கள். முப்பதுபேர் வரை அமரலாம். நடுவேதான் மரைக்காயர் பீடம். ஒரு ஆள் உள்ளே எதையாவது துடைத்துக்கொண்டே இருப்பார். வாசலில் ஒரு ஆள் எப்போதும் நின்றுகொண்டே இருப்பார்.

காலை 9 மணிக்கு எங்களுக்கு பள்ளிக்கூடம். 8.30க்கு எங்களை மரைக்காயரின் குதிரை லாயத்தில் பார்க்கலாம். அந்தக் குதிரை ஓட்டி அவர் பெயர் என்ன? ம்..ம் ஞாபகம் வந்துவிட்டது. பைரிபிள்ளை. இரண்டுமூன்று கிலோ கொள்ளுப்பயரை வேகவைத்து ஒரு பெரிய அலுமினியச் சகனில் கொண்டுவருவார்.  எங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு கை கொடுப்பார். ஒரு சாக்குப் பையில் மொத்தத்தையும் கொட்டி குதிரை வாயில் கட்டி தொங்கவிடுவார். நாங்கள் கையிலிருப்பதை திண்பதற்குள் அது மூன்று கிலோவையும் தின்றுவிடும்.  மாலை 4 மணிக்கு பைரிபிள்ளை குதிரையை நடக்கவிட்டு புதுக்குளக் கரைக்கு ஓட்டிச்செல்வார். நாங்கள் பள்ளியிலிருந்து நேராக அங்குதான் போவோம். அந்த வெண்மணற் பரப்பில் குதிரையை விட்டு லேசாக சீட்டியடிப்பார். அந்தக் குதிரை மண்ணைக் காலால் பிராண்டி விழுந்து இடமும் வலமுமாய்ப் புரளும். கால்களை நேராக மேலே நீட்டி மடக்கி நீட்டி பிறகு ஸ்ப்ரிங் மாதிரி எழுந்து நிற்கும். அப்படி  எழுந்தால்தான் அது இளமையான வாலிப்பான குதிரை. இல்லாவிட்டால் கிழட்டுத்தனம் தலைகாட்டுகிறது என்று அர்த்தம். அப்படி  முதுமை  தட்டிவிட்டால் யாருக்காவது அதைக் கொடுத்துவிட்டு ஒரு புதுக்குதிரையை இறக்கிவிடுவார் மரைக்காயர். எங்கள் ஊரில் சவாரி ஓடும் எல்லாக் குதிரைகளுமே மரைக்காயர் கொடுத்ததுதான். பொங்கலில் வைரிவயல் பந்தயம் மிகப்பிரபலம். கரிச்சான் ஜோடி பெரிய ஜோடி மாடுகளோடு குதிரை வண்டிப் பந்தயமும் உண்டு. ஆவணம் பேராவூரணி பட்டுக்கோட்டையிலிருந்தெல்லாம் ஜாதிக்குதிரைகள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் எல்லாம் மரைக்காயர் குதிரைக்குப் பின்னால்தான் ஓடிவரும்.

விமானப்பணிப்பெண் அழைக்கிறார். சாப்பாட்டுத்தட்டை நீட்டுகிறார். அட நான் விமானத்திலா இருக்கிறேன். சாப்பாட்டை வாங்கி அப்படியே வைத்துவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

மரைக்காயருக்கு எத்தனை பிள்ளைகள் என்று அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.  எங்க ஊரில் சினிமா நடிகர் மாதிரி ஒரு புதுமுகம் உங்களைக் கடந்து சென்றால்  புரிந்துகொள்ளுங்கள் அவர் மரைக்காயரின் ஏதாவதொரு மருமகனாகத்தான் இருப்பார். எல்லாப்பிள்ளைகளும் ஏதாவதொன்றில் தொத்திக்கொண்டுதான் இருப்பார்கள். முகப்பவுடர் ஸ்நோ, கலர் சுண்ணாம்பு, ஜவ்வாது பத்தி என்று ஏகப்பட்ட தயாரிப்புகள். ஒரு மகன் டாக்டர் என்று தெரியும். இன்னொரு மகன் வக்கீல். பாக்கி எல்லாருமே தயாரிப்புத்துறைதான்.

மரைக்காயர் குதிரை வண்டியில்தான் எங்கும் செல்வார். நூறடிக்குப் பின்னால் வரும்போதே வண்டியின் சலங்கைச் சத்தம் அவர் வருவதை அறிவித்துவிடும். அப்போதெல்லாம் தெருக்குழாயடியில் தண்ணீர் பிடிக்க வாய்ச்சண்டை கிழியும். பக்கத்தில் நாங்கள் பம்பரம் விளையாடுவோம். சலங்கை ஒலி கேட்ட மாத்திரத்தில் அந்த இடமே ஊமையாகிவிடும். நாங்கள் பம்பரத்தை கையில் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிடுவோம். மரைக்காயர் கடந்த பின்புதான் அந்த இடம் மீண்டும் அசையும்.

வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா  ரொம்பப் பிரபலம். 15 நாட்கள் தொடர்ந்து நடக்கும். 12ம் நாள்தான் தேர்த்திருவிழா. நேர்த்தியாக தேர் ஜோடிக்கப்படும். திருவிழாக்கமிட்டியும் இன்னும் சில முக்கியஸ்தர்களும் நாதஸ்வரம் மேளம் முழங்க மரைக்காயர் வீட்டுக்குச் செல்வார்கள். அவர்களோடு மரைக்காயரை அழைத்துவருவார்கள். அவர் வந்து வடம் பிடித்தபின்தான் தேர் இழுக்கப்படும். மத நல்லிணக்கம் இன்றுவரை எங்கள் ஊரில் வாழ்கிறதென்றால் அதற்கு மரைக்காயர்தான் காரணம். சமீபத்திய இந்து முன்னணியினர் ‘துலுக்கன் வடம்பிடிக்க நாம இழுப்பதா’ என்று கேட்டுவிட்டு பின் வரலாறு தெரிந்து வாயை மூடிக்கொண்டார்கள். ஒரு தடவை கடைவீதி நடுவே தேர் அச்சு முறிந்து  அப்படியே உட்கார்ந்துவிட்டது. கடியாப்பட்டியிலிருந்து உயர்ந்த பர்மா தேக்குமரங்கள் வரவழைக்கப்பட்டன. தேர்ந்த ஆசாரிகள் சக்கரம் செய்யும் வேலையில் இறங்கினார்கள். பெரிய பெரிய இரும்பு கர்டர்களைக் கொண்டுவந்து பழுக்கக்காய்ச்சி அடித்து 10 அங்குல விட்டத்தில் 14 அடி நீளத்தில் அச்சு செய்தனர். கின்னஸில் பதியவேண்டிய சாதனை. அப்போதெல்லாம் யாருக்கு அது தெரியும். அதைச் செய்ய அடுப்பூதும் ராட்சஸ காற்றூதி எங்கிருந்தோ வரவழைக்கப்பட்டது. 20 நாட்களில் எல்லாம் தயார். எல்லா ஏற்பாடுகளும் செய்து அத்தனை செலவையும் மரைக்காயரே ஏற்றுக்கொண்டார்.

மரைக்காயர் வெளியூர் சென்றால் ஒரு கூட்டமே கூடிவிடும். தியாகராஜபாகவதர் வந்திருக்கிறார் என்று பேசிக்கொள்வார்கள். சூரியனை விடுவித்த முகிலின் விளிம்பாய் ஜிப்பா வேட்டி. ஜிப்பாவின் இடப்பக்க நெஞ்சில் ஒரே ஒரு தங்கப்பேனா உறங்குவதுபோல் சிறு பாக்கெட். ஜிப்பாவில் மின்னும் தங்கப்பித்தானையும் அந்தப் பேனாவையும் ஒரு மெல்லிய தங்கச்சங்கிலி இணைக்கும். முகத்தை லேசாகத் தேய்ப்பார். ஆங்காங்கே ரத்தம் எட்டிப்பார்க்கும் சிவப்பாகிவிடும். பிடரிவரை நீண்ட பாகவதர் முடி அவ்வப்போது காதுக்கு மேலே வந்து புரளும். அதை லாவகமாய் காதுக்குப் பின்னால் அவர் அமரவைப்பதே ஒரு தனி அழகு ஆறடி அல்லது அதற்குமேல் உயரம். அருகில் நெருங்கினால் சந்தனம் ஜவ்வாது அத்தர் என்று என்னென்னமோ மணக்கும். அந்த மணத்திற்கு நான் மரைக்காயர் மணம் என்று பெயர் வைத்தேன்.

ஒரு மே மாதம் பள்ளிகள் விடுமுறை. மாமா, மாமி, அக்கா என்று ஏகப்பட்ட விருந்தாளிகள். ஆளுக்கு ஏழெட்டு பிள்ளைகள். எல்லாரும் எங்கள் வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தோம். அத்தா வந்தார். எல்லாரும் அவரைச்சுற்றி நின்று காசு கேட்டோம். கொடுத்தால்தான் விடுவோம் என்று சட்டையைப் பிடித்துத் தொங்கினோம். அத்தா சொன்னார். ‘எல்லாரும் பின்னால யாரா ஆக ஆசைப்படுறீங்கன்னு சொன்னாத்தான்  காசு’ என்றார். சில குரல்கள் ‘டாக்டர்’ என்றன. சில குரல்கள் ‘எஞ்ஜினியர்’ என்றன. என் அண்ணன் ‘எம்ஜியார்’ என்றான். இன்னொரு அண்ணன் ‘அண்ணா’ என்றான். என் தம்பி ‘சிவாஜி’ என்றான். எல்லாருக்கும் பத்துப்பத்துக் காசு கிடைத்தது. என் முறை வந்தது ‘நான் மரைக்காயராவேன்’ என்றேன். அத்தா  குனிந்து என் நெற்றியில்  முத்தமிட்டு தலையை வருடி இன்னொரு பத்துக்காசு கொடுத்தார். அதை மரைக்காயரிடம்  அத்தா சொன்னபோது ரொம்ப பூரித்துப்போனாராம். நான் மரைக்காயர் வீட்டுக்குப் போனால் சலவையாக ஒரு ரூபாய் நோட்டு தருவார். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் பாதாம்பருப்பு பிஸ்தாப்பருப்பு இருக்கும். உள்ளே கையை விட்டு வேண்டியதை அள்ளிக்கொள்ளச் சொல்வார். கை நிறைய அள்ளினால் கையை வெளியே எடுக்கமுடியாது. நாலைந்து பருப்போடுதான் கையை வெளியே எடுக்கமுடியும். மரைக்காயர் சிரித்துக்கொள்வார். நான் பாதாம்பருப்பை  முதன்முதலில் பார்த்ததே மரைக்காயர் வீட்டில்தான். அவர் சாம்ராஜ்யத்தில் நான் எங்கு போனாலும் என்னை யாரும் தடுத்தது கிடையாது. சில சமயம் என்னை அணைத்துக்கொண்டு அங்கே நிற்பவர்களிடம் சொல்வார். ‘என்போல் ஆகவேண்டுமென்று இந்தப் பிள்ளை சொல்கிறான். அந்த அளவுக்கு இந்தப் பிள்ளையை நான் பாதித்திருக்கிறேன் என்றால் என் வாழ்க்கை அர்த்தமுடையதுதான் என்று எனக்கு நானே திருப்திப்பட்டுக்கொள்கிறேன்’ சரிதானா என்று எல்லாரிடமும் அபிப்ராயம் கேட்டு புருவங்களை உயர்த்துவார்.

ஆறாம் திருவிழாதான் கடைத்தெருவாளர்கள் மண்டகப்படி. அதற்குத் தலைமை  மரைக்காயர்தான். அந்த ஆண்டு இசைச்சித்தர் சி.எஸ். ஜெயராமனை அழைப்பது என்று முடிவானது. அப்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ வெளியாகி ‘சங்கீத சௌபாக்கியமே’ என்ற பாடல் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இசைத்தட்டு அன்றைய நாளில் மிகப்பெரிய சாதனையைப் படைத்திருந்தது. அன்று மரைக்காயர் அலுவலகத்துக்கு நான் சென்றேன். இசைச்சித்தர் சி. எஸ். ஜெயராமன் தன் குழுவினரோடு உள்ளே அமர்ந்திருந்தார். மரைக்காயர் என்னை அருகிலே அமர்த்திக்கொண்டார். ‘இந்தப் பிள்ளைக்கு என்போல் ஆகவேண்டும் என்று ஆசையாம். என் மகன்களே கூட அப்படி ஆசைப்பட்டதில்லை’ என்று என்னை அவர்களுக்கு  அறிமுகம் செய்துவைத்தார். வெற்றிலையை லாவகமாக அதக்கிக்கொண்டு இசைச்சித்தர் என்னை அருகில் அழைத்தார். ஒரு கன்னத்தை தடவி ஒரு கன்னத்தில் முத்தமிட்டார். அவர் முகம் பக்கத்தில் வந்தபோது ஜவ்வாது மணத்தது. பின் சொன்னார். ‘நிச்சயமா நீ வருவே. நீதான் அடுத்த மரைக்காயர்’ அவர் பேசுகிறாரா? பாடுகிறாரா? பேச்சிலே கூட இத்தனை இசையா? அவரிடம் மெதுவாகக் கேட்டேன். அந்த சங்கீத சௌபாக்கியமா கேட்கணும்.  என்று இழுத்தேன். மரைக்காயர் ஆமோதித்தார். நாங்கள் யோசித்தோம். பிள்ளை தைரியமாகக் கேட்டுவிட்டான்’ என்றார் மரைக்காயர். இசைச்சித்தர் என்னை அருகிலேயே அமர்த்திக்கொண்டார். குழுவினரைப் பார்த்து தயாரா என்றார். எல்லாரும் தலையாட்டினார்கள். ஒரு துணைப்பாடகியும் இருந்தார். ‘வீணைக்கொடியுடைய வேந்தனே’ என்று ஒருவர் தொடங்கினார். அந்த இடம் வந்தது. ‘சங்கீத சௌபாக்கியமே’ என்று ஏழரைக்கட்டையில் இசைச்சித்தர். இவருக்குள்ளா இந்தக் குரல். யாரடா அது? ஆளுயர வெண்கல மணியின் நாக்கை அசைத்துவிட்டது? தொடையில் தட்டிக்கொண்டு காலையில் பாடும் ராகம், உச்சிவேளை ராகம், மாலையில் பாடும் ராகம் அகவற்பா சங்கராபரணம் என்று அடுத்தடுத்து தொடுத்ததை ரோஜாப்பூக்கள் கைதட்டி ஆரவாரித்தன. இறுதியாக அந்தத் துணைப்பாடகி ‘கைலைநாதனை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் என்ற போது இசைச்சித்தர் என்னை மெதுவாக இறுக்கிக்கொண்டு காம்போதியைத் தொடுத்தார். மேனி சிலிர்த்தது.

விமானப்பணிப்பெண் சாப்பிடுகிறீர்களா எடுத்துக்கொண்டு போகவா என்று என்னை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தார். எடுத்துக்கொண்டுபோங்கள் என்றேன். வெளியே எட்டிப்பார்த்தேன். முகில்கள் ஆங்காங்கே எதற்காகவோ தேங்கித்தேங்கி நின்றன. தேங்கிவிட்ட என் நினைவுகள் மீண்டும் பழைய இடத்திற்குச் சென்றது.

எந்த மனிதனுக்கும் மறுபக்கம் என்று ஒன்று உண்டு. வலம்புரி சோப் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த காலத்தில் வானவில் என்ற சோப்பு அகில இந்திய அளவில் பெயர் சொல்லிக்கொண்டிருந்தது. அந்தச் சோப்பு வளர்வது மரைக்காயருக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுக்க நினைத்தார். அந்தச் சோப்பைப் போலவே வடிவமைத்து அதே மாதிரியான தாளில் அதே வண்ணத்தில் ‘வானவலம்புரி’ என்ற பெயரில் ஒரு சோப்பினை அறிமுகப்படுத்தினார். அந்தச் சோப்பும் பிய்த்துக்கொண்டு பறந்தது. படித்துப் பார்த்தால்தான் தெரியும். எது ‘வானவில்’ எது ‘வானவலம்புரி’ என்று. டெல்லியிலிருந்து வானவில் சோப்பின் சில முக்கியப் பிரமுகர்கள் வந்து மரைக்காயரைப் பார்த்தனர். ‘வானவலம்புரியை நிறுத்திவிடுங்கள். அந்த வடிவம் வண்ணம் எல்லாவற்றையும் நாங்கள் பதிவு  செய்திருக்கிறோம். நீங்கள் நிறுத்திக்கொண்டால்  பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டிவரும்’ என்றார்கள். அந்த நியாயமான அணுகுமுறை மரைக்காயருக்குப் புரியவில்லை. மரைக்காயரின் இன்னொரு முகம் எட்டிப்பார்த்தது. ‘தனக்கு மேல் யாரும் வந்துவிடக்கூடாது. தனக்கு அறிவுரை சொல்ல எவனும் முளைக்கக்கூடாது’  இன்னும்   தீவிரமாக அந்த சோப்பை விற்க முனைந்தார். வானவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தீர்ப்பு வரும்வரை தயாரிக்கக்கூடாது என்ற உத்தரவை மரைக்காயர் மீறமுடியவில்லை. அந்த வழக்கு ஏழெட்டு ஆண்டுகளாக நடந்தது

எங்கள் ஊரில் ‘பக்கீர்மார்கள்’ என்று ஒரு இனம் இருந்தது. மவுத்து, மவ்லூது, குர்பானி, கல்யாணம் போன்ற மதச்சடங்குகளை நடத்த அவர்கள் பெரிதும் உதவுவார்கள். அவர்களுக்கு சம்பளம் என்று ஒன்றுமில்லை.  திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வீட்டுக்குவீடு வந்து அரிசி வாங்கிச் செல்வார்கள். சிலர் சோறு கறியும் தருவார்கள். அந்தக் கூட்டத்தை மரைக்காயருக்கு பிடிக்காது. ஒரு  சமயம் பள்ளிவாசலிலேயே சொன்னார். பிச்சையெடுப்பதே தொழிலாக ஒரு கூட்டமா? அதற்கு எல்லாரும் ஆதரவா? என்றார். எல்லார் வீட்டிலும் பக்கீர்மார்களுக்கு  அரிசி கிடைத்தது. ஆனால் மரைக்காயர் வீட்டில் ஒரு கூடையில் நெல்லும் ஒரு கொட்டாங்கச்சியும் இருக்கும். அவர்கள் வந்து ஒரு  கொட்டாங்கச்சி அளவு நெல் எடுத்துக்கொள்ளலாம். பிச்சை எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கேவலமான ஏற்பாடு.

ஒருநாள் ஒரு பெரிய பாவா எங்கிருந்தோ எங்கள் ஊருக்கு வந்தார். 70 வயதிருக்கும். முழங்கால்வரை பச்சைநிற ஜிப்பா. ஒரு சின்ன தொப்பி. அதைச்சுற்றி நீளமான மெல்லிய துண்டில் தலப்பா. நல்ல உயரம். கறைபடியாத பற்கள்.  எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் உதடுகள். கையில் தஸ்பீஃமணி. அவர் எங்கிருந்து வந்திருக்கிறார். எதற்கு வந்திருக்கிறார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. என்னை ஒரு தடவை ஒரு தெருநாய் துரத்தியது. இவர் எங்கிருந்தோ வந்தார். அந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு திரும்பப் போய்விட்டது. ஒரு கொட்டானில் நாவற்பழம் வைத்திருந்தேன். அதை அவருக்குக் கொடுத்தேன். ஒன்று எடுத்தார். கொட்டானோடு எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன். என் தலையில் கைவைத்து ஏதோ ஓதி ஊதினார். நான் நோன்பு. எடுத்துப்போகிறேன். 7  மணிக்குமேல்  சாப்பிடுகிறேன் . என்றார். பள்ளிவாசலில் இரவு 2 மணிக்கு தொழுதுகொண்டிருப்பதை சிலர் பார்த்திருக்கிறார்கள். எப்போதும் அவர் நோன்புதான் என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் மரைக்காயர் வீட்டுமுன் அவர் நின்றுகொண்டிருந்தார். உள்ளே சென்றார். கதவைத் தட்டினார். மரைக்காயர்தான் கதவைத் திறந்தார்.

‘அரிசி வேணும்’

இங்க நெல்லுதான் ஒரு கொட்டாங்கச்சி எடுத்துக்கங்க’

‘அது தெரியும். எனக்கு அரிசிதான் வேணும்’

‘நீங்க யாரு? எங்கிருந்து வர்றீங்க? என்ன  செய்றீங்க?’

மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டார். பின் மௌனமானார்.

‘எனக்கு அரிசி வேணும்’

‘எங்க கம்பெனிக்கு வாங்க. ஏதாவது வேல  செய்யுங்க. பிச்சை எடுக்கிறது எனக்குப் பிடிக்காது’

‘எல்லாப் பயல்களுமே இங்க பிச்சையெடுக்க வந்வங்கதான்யா’

அந்தப் ‘பயல்’ என்ற வார்த்தையும் ஒருமையும் மரைக்காயருக்கு மதம்  ஏற்றியது. தன்னிடமிருந்து எந்த உணர்வையும் அடுத்தவன் தெரிந்துகொள்ளாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர் மரைக்காயர். அவர் கோபத்தை இப்போதுதான் வெளிப்படையாகப் பார்க்கமுடிந்தது. அவரை அடிப்பதற்கு கையை ஓங்கினார். அந்தக் கையை அப்படியே பிடித்து மெதுவாகத் தாழ்த்திவிட்டார் அந்தப் பெரியவர். பிறகு அந்த நெல் கூடைப்பக்கம் திரும்பினார். கொஞ்சம் நெல்லை அள்ளி தெருவில் வீசினார். எங்கிருந்தோ வந்த கோழிகள் அந்த நெல்லைப் பொறுக்கின. இங்கே கோழிகள் பொறுக்குகின்றன. உன்னைக் கழுகுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலம் வரும் புரியும். என்று சொன்னவர் இடுப்பிலிருந்து ஆணிபோன்ற ஒரு பொருளை எடுத்தார். அப்படியே  உயர்த்தி தன் தலையில் குத்திக்கொண்டார். ரத்தம் தலப்பாவை நனைத்து நெற்றியில் இறங்கி புருவத்தில் நெளிந்து கன்னத்தில் காய்ந்து நின்றது. ஹஹ்ஹஹ்ஹா நாம எல்லாருமே  பிச்சைக்காரர்கள். எவனுக்கு எவன் வேலை  கொடுப்பது. எனக்கு வேலை தருகிறாயா? உனக்கு வேலை  தந்தவன் எவன்? ஹஹ்ஹஹ்ஹா. அப்படியே சென்றுவிட்டார்.

அடுத்தநாள் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியில் மரைக்காயர். உச்சநீதிமன்றத்தீர்ப்பு வானவில்  நிறுவனத்துக்கு மரைக்காயர் ஏழரை லட்சம் இழப்பீடு தரவேண்டுமென்றது.வலம்பரி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்தது. வலம்புரி சோப்புப் போட்டால் துணியில் ஓட்டை விழுகிறது என்று கிளப்பிவிட்டார்கள். வலம்புரி செத்துக்கொண்டே வந்தது.

விமானி அறிவித்தார். இன்னும் அரைமணி நேரத்தில் திருச்சி இறங்கப் போகிறோம். நிகழ்காலத்துக்கு வந்தேன் நான் உயர்ந்ததற்குக் காரணம் மரைக்காயர். அவர் வாழ்க்கை சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த மரைக்காயரின் சாம்ராஜ்யம் இன்று எப்படி? பார்ப்போமா?

சோப்புத் தொழிற்சாலை தரைமட்டமாகிவிட்டது. ஒருகட்டடத்தில் சோப்புக் காய்ச்சும் கொப்பரைகள் வைக்கப்பட்டு பூட்டிக்கிடக்கிறது. மற்ற பகுதிகளில் பஞ்சாயத்து போர்டு குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறது. மரைக்காயரின் அத்தா அடிக்கடி சொல்வாராம் ‘வாழ்ந்தவன் கெட்டால் வரையோட்டுக்கும் ஆகமாட்டான்’  என்று. அதனால்தானோ  என்னவோ எப்பொழுதாவது  உதவும் என்று மோட்டு  வலைக்குக் கீழே பனங்கைகளோடு சில சந்தன மரங்களை வைத்துக் கட்டியிருந்தார் அவர். எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அந்த சந்தனமரங்கள் கைகொடுக்குமல்லவா?. மரைக்காயரின் பிள்ளைகள் அதை எப்படியோ கண்டுபிடித்து ஆளுக்கு ஒன்றாக உருவிக்கொண்டு சென்றுவிட்டனர். உருவிய இடத்தில் ஒரு பனங்கையை  வைக்கவில்லை. மேற்கூரை அப்படியே அலைஅலையாய் வளைந்து கிடக்கிறது. தன் உயிரை விட்டுவிட அடுத்த மழையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. தோட்டத்தில் தென்னைமரங்களெல்லாம் தலையை இழந்து முண்டமாய் நிற்கிறது. மா கொய்யா மரங்களின் அடியில் ஆளுயர கறையான் புற்றுக்கள். சுற்றுச்சுவர்கள் உள்ளேயும் வெளியேயுமாய் இடிந்து கிடக்கின்றன. எல்லா   இடங்களிலும் பெருச்சாளிப் பொந்துகள். எதையுமே விற்கமுடியவில்லை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அரிவாள் கத்தி என்று மூர்க்கமாய் இருக்கிறார்கள். மரைக்காயருக்குப்பின் சொத்துக்களை அவர்களால் ரத்தம் சிந்தாமல் பிரித்துக்கொள்ள முடியுமா?

வீட்டின் முன்பகுதியில் ஒரேஒரு அறையை மட்டும் கொஞ்சம் மராமத்து செய்துகொண்டு அதில்தான் மரைக்காயர்   படுத்திருக்கிறார். அவரின் பழைய பித்தளைக்கட்டில் எப்படியோ தப்பி அவரோது இருக்கிறது. நாலைந்து பிளாஸ்டிக் நாற்காலிகளில் வெளியே சிலர் அமர்ந்திருக்கிறார்கள். உள்ளே டாக்டர் இருக்கிறாராம். வெளியே வந்தார். ‘வாங்கண்ணே எப்ப வந்தீங்க ஒங்களப்பத்திதான் அடிக்கடி பேசுவார்’ என்றார் டாக்டர். அவர்  என்னோடு படித்த வேணுவின் தம்பிதான். என்னை எப்போதும் அண்ணே என்றுதான் அழைப்பார். ஒரு யானை எலும்பும் தோலுமாகப் படுத்திருப்பதுபோல்  மரைக்காயர் படுத்திருக்கிறார். என்னைப்பார்த்து புன்னகைத்தார். எதையோ நினைத்து கலங்குகிறார். அவர் கண்களில் எதிரேயுள்ளே டியூப்லைட் மின்னுகிறது. ‘நல்லாயிருக்கியா’ என்றார். விரல்களை  விரித்துக்காட்டி ‘எல்லாம் முடிஞ்சுபோச்சு’ என்றார். தன் நெஞ்சில் கைவைத்து ‘என்னைப்போல் ஆகிவிடாதே’ என்றார். அதுவரை அடக்கிக்கொண்டிருந்தேன். அந்த வார்த்தையில் வெடித்தேன். அப்படிச் சொல்லாதீர்கள் இப்பவும் நீங்கள்தான் எனக்கு  வழிகாட்டி என்றேன். உதட்டைப் பிதுக்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார். நான் வீட்டுக்குப் போய்விட்டு ஒரு மணிநேரத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி வெளியேறினேன். தம்பி கேட்டான்  ‘இந்த நிலைக்கு அவர் வந்ததற்குக் காரணமே அவரின் பிடிவாதம்தானே. அவர் எப்படி உங்களுக்கு வழிகாட்டமுடியும்’ என்றான். நிச்சயமாக மரைக்காயர் எனக்கு வாழ்ந்து காட்டிய வழிகாட்டிதான். எப்படி வாழவேண்டும் என்பதை மட்டுமல்ல. எப்படி வாழக்கூடாது என்பதையும்தான்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *