தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்

This entry is part 3 of 19 in the series 13 ஏப்ரல் 2014
          ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்  அக் காலத்தில் மலாயாவில் மிகப் பெரிய செம்பனைத் தோட்டமாகும்.
          காலனித்துவ ஆட்சியின் போது அத் தோட்டம் ”  சாக்பின்  ” எனும் பிரான்சு நிர்வாகத்தில் இயங்கியது.
          ச்சா ஆ  முதல் லாபீஸ் வரை பெரும் பரப்பளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செம்பனை மரங்கள் பசுமையுடன் காட்சி தந்தன.
          முக்கிய பதவிகளில் பிரஞ்சுக்காரர்கள் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் மலையாளிகளும், சிங்களத் தமிழர்களும் இருந்தனர். இவர்களை கிரானிகள்  என்று அழைப்பர்.
          தமிழர்களும்  தெலுங்கர்களும் கடை நிலைத் தொழிலாளர்கள்தான்! மிகவும் ஏழ்மையான நிலையில், பல்வேறு இன்னல்கள் மத்தியில் அவர்கள் பிழைப்பு நடத்தினர்.
          கிராணிகளின் வாழ்க்கையோ ராஜபோகமனது.அவர்கள் பங்களாக்களில் வாழ்ந்தனர். ஆங்கிலம் சரளமாகப் பேசினர் . அவர்களின் பிள்ளைகள் நகர்ப்புற ஆங்கிலப் பள்ளியில் பயின்றனர். அதன்பின்பு கல்லூரி,பல்கலைக்கழகம் என்று உயர் கல்வியைத் தொடர்ந்தனர். அவர்கள்தான் ஆசிரியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவாயினர்.
அவர்கள் வாகனங்கள் வைத்திருந்தனர்.குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிள் இருக்கும் .
          இந்த கிராணிகள்   பணியின் போது  வெள்ளை சட்டையும், வெள்ளை அரைக்கால் சட்டையும், முழங்கால் வரை வெள்ளை காலுரைகளும் அணிந்து ஏறக்குறைய வெள்ளைக்காரர் பாணியில் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கும், களப் பணிக்கும் செல்வார்கள். போகும் வழியில் அவர்களைப் பார்க்கும் தமிழ், தெலுங்கு பாட்டாளிகள் குனிந்து தலை வணங்குவர்.
          மாலையில் கிராணிகள் பொழுதுபோக்குக்கு என்று ” கிளப் ” இருந்தன. அங்கு டென்னிஸ், பூப்பந்து விளையாடும் ” கோர்ட் ” இருந்தன.அங்கு சீட்டு ஆடுவதற்கும்,  ” கேரம் ” ஆடுவதற்கும் வசதிகள் இருந்தன. அதோடு மதுபானம் அருந்த ” பார் ” இருக்கும். அங்கும் பந்து பொறுக்கிப் போடுவது,
 துப்புரவு செய்வது, பூச்செடிகள் பராமரிப்பது,ன் சமைப்பது, பரிமாறுவது போன்றவற்றை தமிழர்கள்தான் செய்தனர்.
          மொத்தத்தில் கிராணிகளான மலையாளிகளும், சிங்களத் தமிழர்களும் உயர்ந்த சாதியாகவே செயல்பட்டனர். தமிழர்களையும் தெலுங்கர்களையும் கூலிகளாகவே மிகவும் கேவலமான முறையில்தான் நடத்தினர.
          தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழ் மக்களை கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற விடாமல் தடுப்பதில் இந்த கிராணிகள் கண்ணுங்கருத்துமாய் இருந்தனர். பிரஞ்சு மேலதிகாரர்களிடம் கிராணிகள்  நெருக்கமாக இருந்ததால், அவர்களைக் காணும் தொழிலாளர்கள் அஞ்சினர். கூலிக்கு ஆள் தேவை என்பதால் பிரஞ்சுக்காரர்களும் கிராணிகளின் பேச்சைத்தான் கேட்டனர்.
          தோட்டப் பாட்டாளிகளின் வாழ்க்கை  நிரந்தரமான அடிமை வாழ்வில் உழல வேண்டிய பரிதாப நிலைக்குள்ளானது. இவ்வாறு ஆயிரக்கணக்கான படிக்காத பாமர தமிழ், தெலுங்கு மக்களை கூலிகளாக வைத்துக்கொண்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மலையாளி,சிங்களத்தமிழ் கிராணிகள் அதிகாரம் செய்து வேலை வாங்கிக்கொண்டிருந்த அவலமான சமுதாய அமைப்புதான் அன்றைய தொட்டப்புறங்கள்.
          என்னுடைய பெரியப்பா தலைமை ஆசிரியர் என்பதால்,அவரும் ஒரு கிராணியாகவே கருதப்பட்டார். ஆனால் அவர் ஒரு தமிழர் என்பதால் மற்ற கிராணிகளின் கண்களை அது உறுத்தியதும் கண்கூடு!
          ஜோகூர் லாபீஸ் தோட்டம் ” டிவிஷன் 1,2,3,4,5,என்று ஐந்து பிரிவுகளாகவும்,கிளேயர் 1,2 என்று இரண்டு பிரிவுகளாகவும் செயல்பட்டது.இவை அனைத்துக்கும் பொதுவான ஒரு தொழிற்சாலை பிரிவும் இருந்தது. அங்குதான் செம்பனை தயாரிக்கும் ஆலை இயங்கியது. நிர்வாகப் பிரிவின் தலைமையகமும் அங்குதான் செயல்பட்டது.
          ஒவ்வொரு பிரிவிலுமிருந்து செம்பனைப் பழங்கள் ஆலைக்கு கோச்சு வண்டி இரயிலில் கொண்டு வரப்படும்.
          ” டிவிஷன் ” அல்லது பிரிவு அனைத்தும் ஒரே மாதிரியாகக் காணப்பட்டன.
          டிவிசன் மூன்று ஒரு கிராமம் போன்றிருந்தது.
          சுற்றிலும் அடர்ந்த செம்பனைக் காடு.அந்த ஊருக்குள் நுழைந்ததும்  வலது பக்கத்தில் வரிசை வரிசையாக ” லயன் வீடுகள். ” சிமெண்ட் தரையும், மரப் பலகைச் சுவர்களும், தகரக் கூரையும் கொண்ட வீடுகள் அவை. மரச் சுவர்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தன.வீடுகளின் பின்புறம் சமையல் கூடங்கள்  தண்ணீர் வசதியுடன் இருந்தன. குளியல் அறையும் கழிவறையும் ஒவ்வொரு லயனுக்கும் தனியாகக் கட்டப்பட்டிருந்தன.
          லயன்  வீடுகளில் ஒரு பொது கூடமும்  ஒரு படுக்கை அறையுமே  இருந்தன. வேறு வசதிகள்  கிடையாது. மின்சாரம் இருந்தது.
          பெரியப்பாவின் வீடு வேறு விதத்தில் காணப்பட்டது.அது தனியாக வீதி ஓரத்திலேயே இருந்தது.  மரக் கால்களில் வீடு உயரத்தில் நின்றது.பெரிய  கூடமும், மூன்று பெரிய படுக்கை அறைகளும், ஒரு படிக்கும் அறையும்  இருந்தன.சமையல் அறை   கீழே பின்புறம் இருந்தது.  குளியல் அறையும்  கழிவறையும் கீழேதான் இருந்தன. சற்று தொலைவில் அவருக்கு தரப்பட்டிருந்த கொல்லையில் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு  செடிகள், முருங்கை மரம்,  ,கொய்யா மரம், தக்காளி,  கத்தரி, வெண்டி , மிளகாய் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து பசுமையுடன் காணப்பட்டன.
          வீட்டின் எதிரே செம்மண் சாலை அடுத்த டிவிசன் நோக்கிச்  சென்றது. பஸ் .போக்குவரத்து இல்லை. சைக்கிள்களைத்தான் பெருவாரியாகப் பயன்படுத்தினர்.
          வீதியின் எதிர்புறம் ஒரு கொட்டகையில் மாலையில் கள்ளுக்கடை இயங்கியது.  வேலை  முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் அங்குதான் கூடுவார்கள்.அந்த கள் வாடை கம கமவென்று பெரியப்பா வீடுவரை மணக்கும். கள்ளுக்கடையில் ஊர்க்கதைகள், கிராணிகள், குடும்பம் பற்றி உரக்க .பேசிக்கொண்டிருப்பார்கள். வாக்குவாதங்களும், சண்டைகளும், கெட்ட வார்த்தைகளும் அங்கு சகஜமானது.தள்ளாடும் வரை போதையை ஏற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி வீடு செல்பவர்களையும் காணலாம்.அதோடு அவர்களின் ஆட்டம் ஓயாது.வீட்டிலும் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தபின்புதான் அடங்கி ஓயும்.
         சில வீடுகளில் இரவு வெகு நேரம் வரை கூச்சல், குழப்பம், அடிதடி, கூக்குரல் கேட்கும். அனால் என்னதான் நடந்தாலும், விடியற்காலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் வேலைக்குச்  செல்வது சிறப்பு அம்சமாகும்!
          ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு கோவில் உள்ளது.திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. கோவில் அருகில் தமிழ்ப் பள்ளியும், காற்பந்து திடலும் உள்ளது.  இளைஞர்கள் காற்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடைகள் அணிந்து பக்கத்துக்கு டிவிசன் குழுவுடன் எதிர்த்து ஆடுவதைக் காண மாலையில் மக்கள் கூடி ஆரவாரம் செய்வர்.
          தமிழ்ப் பள்ளியில் பெரியம்மா பணி புரிந்தார். அங்கு தொழிலார்களின் பிள்ளைகள் ஆறாம் வகுப்பு வரை பயின்றனர். அதன்பின்பு தோட்டத்திலேயே வேலைக்குச் சென்றுவிடுவர். அப்போதுதான் வீடுகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். நிர்வாகமும் கிராணிகளும் அதை ஊக்குவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தொழிலாளர்கள் வேண்டும் அல்லவா! இதற்கு விதிவிலக்காகத்தான் ஒரு சில பிள்ளைகள் கல்வியைத் தொடர முடிந்தது. அப்படித் தொடர பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிகாமாட் செல்லவேண்டு. பேருந்தில் செல்ல, சாப்பிட, புத்தகம் வாங்க பணம் வேண்டும்.  பெற்றோரின் சொற்ப வருமானம் அதற்கு இடந்தரவில்லை!
         அக் காலத்தில் குடியிருப்புகளின் பாதுகாப்பு சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டது. குடியிருப்புகளைச் சுற்றிலும் முட்கம்பி வேலிகள்  போடப்பட்டு இரவில் ஊரடங்கு அமுலில் இருந்தது. இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவண்ணம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
          சுற்று வட்டாரக் காடுகளில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது.  இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்குள் ஊடுறுவதைத் தடுக்கவே அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை.
          கம்யூனிஸ்ட்  பயங்கரவாதிகள் பெரும்பாலும் சீனர்களே. ஜப்பானியர் ஆட்சியின்போது ஆங்கில இராணுவத்தினர் அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும்  ஆயதங்களும் தந்து ஜப்பானியரை எதிர்த்துப் போராட பயன்படுத்தினர்.
          ஆனால் ஜப்பானியர் சரண் அடைந்த பின்பு கம்யூனிஸ்ட்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்ததோடு, கம்யூனிஸ தத்துவங்களைப் பரப்பவும் அரசியலில் ஈடுபடவும் முயன்றனர். அதற்கு அரசாங்கம் தடை விதித்தது. அதனால் சின் பெங் தலைமையில் மலாயா கம்யூனிஸ்டுகள் காடுகளில் தலைமறைவாகி  ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டனர்.
           அவர்களுக்குத் தேவையான ரொட்டி,  அரிசி, உணவுப் பொருட்களை தோ ட்டத்து மக்களிடம் எதிர்ப்பார்த்தனர்.
அவர்களுக்கு சில சீனர்கள் உதவினர். அவர்கள் நகர்ப் புறங்களில் இருந்ததால் அவர்கள் மூலம் உதவிகள் பெற முயன்றனர். மிரட்டியும் பயமுறுத்தியும் தங்களுக்குத் தேவையானதை பெற முயன்றனர். அவர்கள் பல அப்பாவி மக்களையும் பாதுகாப்புப் படையினரையும் கொன்றனர்.
          ஒவ்வொரு தோட்டத்திலும் எங்காவது ஒரு மூலையில் பலசரக்கு கடையை சீனர்கள் வைத்திருப்பார்கள். தோட்டத்துத் தொழிலாளர்களுக்கு கடனுக்கு மளிகைச் சாமான்கள் தந்துவிட்டு சம்பள நாளன்று  பணத்தை மொத்தமாக வசூலித்து விடுவார்கள்!  அந்த  சீன  கடைக்காரகளின்  உதவியையும் பயங்கரவாதிகள் நாடினர். இதைத் தடுக்கவே ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது
          பயங்கரவாதிகளை வேட்டையாடி ஒழிக்கும் பணியில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். டிவிஷன் மூன்று அருகில் ஒரு இராணுவ முகாம் இருந்தது. அங்கு ஆப்பிரிக்க கருப்பு இனத்து  இராணுவ வீரர்கள் பலர் இருந்தனர். அவர்கள் வாட்டச்சாட்டமாக முரடர்களாகக் காணப்பட்டனர். துப்பாகிகளுடன் அவர்களைப் பார்த்தால்  பயமாக இருக்கும்.
         மொத்தத்தில் டிவிஷன் மூன்று தமிழ் மக்களால் நிறைந்திருந்ததால், அது கொஞ்சம் நவீனமான தமிழகத்து கிராமத்தையே ஒத்திருந்தது!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationதினமும் என் பயணங்கள் – 12இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *