அப்பாவுக்கு நேர்மாறானவர் பெரியப்பா. அவருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லைதான். அவரிடம் பேச பயப்படுவேன். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது ஒருமுறை குடும்பத்துடன் வந்திருந்தபோது பார்த்ததுதான். அதன்பின் நான் சிங்கப்பூர் வந்தபின்புதான் பார்த்துள்ளேன்.
அவருக்கு என் மேல் பிரியம் அதிகம். நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தது முக்கிய காரணம். லாபீஸ் வரும்போதெல்லாம் நான் நன்றாகப் படிக்கிறேன் என்று சொல்லிக் காட்டி எனக்கு நூறு வெள்ளி தருவார்! அப்போது அதன் மதிப்பு அதிகம்.
நான் உயர்நிலைப் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்ல என்று அப்பா அவரிடம் கூறுவார். அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை. அது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். அப்பாவுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை.
வேலையில் பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டேன். அதோடு அதிகமாக சம்பளம் வாங்கும் தலைமை ஆசிரியரும் அவர்தான்.ஆசிரியர்கள் அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் தாங்கள் வாங்கிய பிரம்படிகளை நினைவு கூறுவர்!
பெரியப்பா பெயர் எசேக்கியேல். பெரியம்மாவின் பெயர் தனமணி. அவரும் ஓர் ஆசிரியை. அவர்களுக்கு ஜான், லில்லி, டேவிட், நெல்சன் என்று நான்கு பிள்ளைகள்.
ஜான் எனக்கு மூத்தவர். சிகாமட் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். மாலையில் பூட்ஸ் அணிந்துகொண்டு காற்பந்து விளையாடச் சென்ற்விடுவார்.
லில்லி எனக்கு அக்காள். அவரும் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
டேவிட் , நெல்சன் இருவரும் தம்பிகள். நாங்கள் மூவரும் தூண்டில் தயார் செய்துகொண்டு, கொல்லையில் மண் புழுக்கள் சேகரித்துக்கொண்டு ஆற்றுக்குச் .செல்வோம். அங்கேயே நீந்தி விளையாடி குளித்துவிட்டு திரும்புவோம். எனக்கு தூண்டில் போடுவது மிகவும் பிடிக்கும். சிறு வயதிலேயே கிராமத்தில் தூண்டில் போட்டு அனுபவம் உள்ளது. நாங்கள் மூவரும் சேர்ந்து மீன் குழம்புக்குத் தேவையான மீன்கள் கொண்டுவந்துவிடுவோம்.
பெரியப்பா அப்போது ஒரு ” ரேலி ” மிதிவண்டி வைத்திருந்தார். அதன் விலை அதிகம். அதில்தான் மூவரும் தூண்டில் போட செல்வோம். எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியாது. கற்றுக்கொள்ள அதிக ஆசைதான். கற்றுத்தர டேவிட் முன்வந்தான். தோட்டத்து செம்மண் சாலையில்தான் கற்றுக்கொண்டேன்.
ஆனால் முதல் நாளிலேயே விழுந்து உடலெங்கும் காயம் உண்டானது. காயங்கள் ஆறியதும் மீண்டும் விடாப்பிடியாக பயிற்சி பெற்று தனியாக மிதிவண்டி ஓட்டலானேன்!
நான் அங்கு தங்கியிருந்தபோது தோட்டத்தில் இலவச திரைப்படம் காட்டப்பட்டது.அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லை.திரைப்படம் பார்க்க லாபீஸ் திரையரங்கம்தான் செல்லவேண்டும்.
தோட்ட மக்களுக்கு இலவச திரைப்படம் காட்ட தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாங்கள் மூவரும் மாலையிலே நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு பந்து விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விடுவோம். இருட்டியபின்புதான் படம் தொடங்கும். தோட்டத்து மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அங்கு தரையில் அமர்ந்திருப்பார்கள்.
படம் மூன்று மணி நேரம் ஓடும். அப்போதெல்லாம் எம். ஜி. ஆர்., சிவாஜி இரசிகர்கள்தான் அதிகம். அவர்கள் இருவரும் தமிழ்த் திரைப்பட உலகில் சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தனர்.
இரசிகர்கள் என்றால் சாதாரண இரசிகர்கள் என்று கூற முடியாது.அவர்களின் மேல் உயிரையே வைத்திருந்தனர். இரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள் வைத்தும் செயல்பட்டனர். புதுப் படம் வெளியாகும்போது திரையரங்குகளில் நள்ளிரவுக் காட்சிகள் நடைபெறும். அப்போது இளம் இரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.
எம். ஜி. ஆர். இரசிகர்களுக்கும் சிவாஜி இரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அடிக்கடி சண்டைகள்கூட நடக்கும். அவர்கள் திரைப்படங்களில் அணியும் சட்டைகள் போன்று தைத்து எம்.ஜி. ஆர். சட்டை, சிவாஜி சட்டை என்று இரசிகர்கள் அணிந்துகொள்வதுண்டு!
எம்.ஜி.ஆர். படங்களில் நிறைய சண்டைகள் இருக்கும். குத்துச் சண்டை, சிலம்பம், வாள் சண்டை போன்றவற்றில் அவர் சிறந்து விளங்கினார். தனி ஒருவராக இருபது முப்பது பேர்களை அடித்து வீழ்த்துவதைக் காணலாம்.ராஜா ராணி கதைகளில் அவர் மிக அழகாகவும் இயல்பாகவும் காணப்படுவார்.
நீதிக்காகப் போராடுவது, ஏழைகள் மீது இரக்கம் , தாய் மீது பாசம், திராவிட புரட்சிக் கருத்துகளைப் பரப்புவது, தத்துவ எழுச்சிமிக்க பாடல்கள் பாடுவது போன்றவை அவரது படங்களில் அதிகம் காணலாம்.
நான் பார்த்த முதல் திரைப்படம் ” ஜெனோவா “. கலைஞரின் திரைக்கதை வசனம். எம். ஜி. ஆர். தான் கதாநாயகன். .பி.எஸ். வீரப்பா வில்லன். இருவரும் நிறைய வாள்போர் புரிவார்கள். மிகவும் தத்ரூபமாக இருக்கும்.சிறு வயதில் அந்தப் படத்தை சிங்கப்பூரில் பார்த்தபோது அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தனர். அதில் ஏ. எம் , ராஜா, பி.லீலா பாடியுள்ள பாடல் ஒன்று இன்று ஒலித்தாலும் மனதை மயக்கும் தன்மை கொண்டது.
” ஆசையே அலை மோதுதே,
கசப்பானதே வாழ்வே.
தேடியே மனம் ஓடுதே ,
அன்பே என் ஆருயிரே. “
எனும் அழகான வரிகள் கொண்ட பாடல் அது!
அதன்பின் மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன், மகாதேவி, ராணி சம்யுக்தா,காஞ்சித் தலைவன், தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, என் கடமை போன்ற படங்களின் மூலம் எம்.ஜி. ஆர். பெரும் புகழ் பெற்று விளங்கினார். புரட்சி நடிகர் என்ற பாராட்டப்பட்டார்.
எம். ஜி. ஆர்.உண்மையிலேயே சிறந்த வீரர் என்றுதான் நம்பினோம்.அது வெறும் நடிப்புதான் என்பது அப்போது தெரியவில்லை. அவருடைய இரசிகர்கள் அவரை ஒரு தெய்வமாகவே வழிபட்டனர்! மது, புகைப்பது போன்ற தீய பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமை கொண்டோம். அதுபோன்றே திரைப்படங்களிலும் எப்போதும் நல்லவராகத்தான் நடிப்பார்.கடமை,கண்ணியம் , கட்டுப்பாடு எனும் திராவிடப் பாரம்பரியம் கொண்டவர் எம். ஜி. ஆர்.
சிவாஜி கணேசனும் எம்.ஜி. ஆரை விட எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. அவரும் திராவிடர் பாசறையில் .வளர்ந்தவர்தான். கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்தான் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ” பராசக்தியில் ” திரையுலக்குக்கு அறிமுகமாக முடிந்தது. அதில் நீதிமன்றக் காட்சியில் சிவாஜி பேசி நடித்த வசனம் இன்றும் பலரால் பேசப்படுகின்றது. அவ்வளவு அற்புதமானது! அதைத் தொடர்ந்து கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை ” மனோகரா ” வில் கம்பீரத்துடன் முழக்கமிட்டவரன்றொ சிவாஜி!
தூக்குத் தூக்கி, தங்கமலை இரகசியம், ராஜா ராணி, பாசமலர் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.
சிவாஜி துவக்கத்தில் திராவிடர பாசறையில் வளர்ந்து பின்பு வெளியேறியவர். அதனால் எம். ஜி. ஆர்.இரசிகர்களுக்கு அவரைப் .பிடிக்காது.அவருக்கு எம். ஜி. ஆர். போல் சண்டை போடத் தெரியாது என்று கிண்டல் செய்தனர். எம். ஜி. ஆர். போல் ஏழைகளுக்கு சிவாஜி உதவுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் என்னதான் ஆயிரம் குறைகள் கூறினாலும் சிவாஜி படம் வந்ததும் அங்கும் முந்திக்கொண்டுதான் நிற்பார்கள்!
பின்னாட்களில் இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் அம்பிகாபதி, சாக்ரடீஸ், அசோகன், கர்ணன், பாரதி,சிவபெருமான் போன்ற கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்த பெருமையும் சிவாஜியைச் சேரும். நடிப்பின் சிகரமாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி.
” சிம்மக் குரலோன் ” என்று சிறப்பு பெற்ற சிவாஜி ” நடிகர் திலகம் ” என்றும் போற்றப்பட்டார்.
மராட்டிய மாவீரன் சிவாஜியின் பாத்திரமேற்று மெய்சிலிர்க்க வசனம் பேசி நாடகத்தில் நடித்ததைக் கண்ட தந்தை பெரியார் ” சிவாஜி ” என்ற பட்டம் சூட்டியபின் சிவாஜி கணேசன் ஆனார்!
இரவில் சிலு சிலுவென்று வீசும குளிர் காற்றில் பனியில் நனைத்தவாறு படம் பார்ப்பது நல்ல அனுபவமே. நள்ளிரவை நெருங்கும் நேரத்தில்தான் படம் முடியும்.
பெரியப்பா வீட்டில் இருந்தபோது கிளேயர் தோட்டம் சென்று வருவோம். அங்கு அப்பாவின் மாமன் குடும்பம் இருந்தது. அவர் பெயர் சாமுவேல். அவரும் பகுத்தறிவு சிந்தை மிக்கவர்.அவருடைய மனைவி கிரேஸ் கமலா எனக்கு அக்காள் முறை.அவர் அங்கு தமிழ் ஆசிரியை.
எங்களைக் கண்டதும் கோழி வெட்டி கமகமவென்று குழம்பு வைப்பார் அக்காள்.தடபுடலாக விருந்து நடக்கும். அங்கு சில நாட்கள் தங்குவோம்
நான் முதன்முதலாக கிளேயர் தோட்டம் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.அதன் பெயர் ஜெயராணி.
சில வருடங்கள் கழித்து அவர்கள் லாபீஸ் மெல்வேல் தோட்டத்திற்கு மாறியிருந்தனர்.அக்காள் லாபீஸ் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார் அவர்களுக்கு எசுதுரை, ஜீவானந்தம், ஜெயராணி, அன்புநாதன், எட்வர்ட் என ஐந்து பிள்ளைகள்.
ஜெயராணிக்கு ஐந்து வயது ஆகிவிட்டது. வட்ட வடிவில் முகமும், பெரிய விழிகளும், மாநிறத்தில் அந்த சிறுமி அவர்களின் வீட்டில் செல்லமாகப் பவனி வந்தாள். நீண்ட பாவாடையும் சட்டையும் அணிவது அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதிகம் பேசமாட்டாள்.என்னை ” மாமா..மாமா ” என்று அழைப்பாள்.
அவளின் கையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்து சீனன் கடைக்குச் சென்று அவளுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவேன். எப்போதுமே என்னுடனேயே இருக்க விரும்புவாள்.
இரவில் கொசுத் தொல்லை அதிகம். நான் படுக்கும் கட்டிலைச் சுற்றிலும் கொசுவலை போடப்பட்டிருக்கும்.
அப்போதே, ” நான் மாமாவுடன்தான் படுத்துத் தூங்குவேன்.” என்று அடம் பிடிப்பாள்.
அந்த ஜெயராணி சிறுமிதான் பிற்காலத்தில் எனது வாழ்க்கைத் துணைவியாவாள் என்பது அப்போது எனக்குத் தெரியாது!
( தொடுவானம் தொடரும் )
- வீடு திரும்புதல்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- நட்பு
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- தினமும் என் பயணங்கள் – 13
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை