சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக் கிளம்பிய போது. இப்போது மணி ஒன்பதரை. கார் எந்த நேரமும் திரும்பி வரலாம்.
செண்பகவல்லி தனது இரண்டாவது தவணைச் சமையலில் பரபரப்பாக இருந்தாள். முதல் தவணையில் பாப்பா சுமதிக்குக் காலையில் பருப்பு சாதமும் உருளைக்கிழங்குப் பொறியலும் தான். ஆனால் அவள் எழுந்ததே தாமதமாக. சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடு. அதனால் இரண்டாவது தவணையில் நேரம் குறைவு வேலை அதிகம். எண்ணையில்லாமல் உப்புக் குறைவாய் அவருக்கு சமைக்க வேண்டும். அவர் கிளம்புவதற்கு முன்பு தான் சாப்பிட வருவார். கிளம்பும் நேரம் அவர் கையில் இல்லை. புதுக் கட்சிக்காரர் வந்தாலோ அல்லது பழைய வழக்கே முடியும் தருவாயில் இருந்தாலோ அவருக்கும் கட்சிக்காரருக்கும் காபி கேட்டு குமாஸ்தா ‘அம்மா ‘ என்று ஹாலில் இருந்தே குரல் கொடுப்பார்.
ராயப்பேட்டையின் குறுகலான ஒரு வீதி அது. அட்வகேட் ராமசாமி வீட்டின் அகலமும் குறுகலானதே. நீளம் மட்டுமே அதிகமான அந்தக் காலத்துக் கட்டிடம். வீட்டின் முன்புறம் மையமான சிமெண்ட் நடை. அதன் ஒரு புறம் “கார் ஷெட்’ டாக இருந்தது இப்போது அலுவலகமாகி இருக்கிறது. மறுபுறம் சிமெண்ட் துளசி மாடம். மூலையில் ‘மோட்டார் ரூம்” அதன் பிறகு வீட்டின் நுழைவில் ஒரு சிமென்ட் திண்ணை. பக்கத்தில் உள்ள இடத்தில் ஊஞ்சல். அதை அடுத்து ஹால்.
ஹாலில் நின்றபடியே குமாஸ்தா ஆழ்வார் “அம்மா ..மோட்டார ஆஃப் பண்ணுங்க. தண்ணி நிரம்பி வழியிது” என்று அது செண்பகவல்லிக்குக் கேட்டதா இல்லையா என்று பொருட்படுத்தாமல் திரும்பி,அலுவலக அறையில் மீண்டும் நுழைந்தார். அவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். என்னதான் எஜமானியாக இருந்தாலும் தன்னைவிட வயதில் இளைய பெண் தான் ஒரு விஷயம் சொல்லும் போது அதை கவனிக்காமல் இருப்பது அவருக்குப் பிடிக்காது. சிறிது நேரம் கழித்து ராமசாமியே எழுந்து “ஏய் செண்பகம். மோட்டார் போட்டா ஆஃப் பண்ண மாட்டே?” என்ற படித் தானே சமையல் அறையில் நுழைந்து மோட்டாரை நிறுத்துவார்.
சுமதியை பள்ளிக் கூடத்தில் விடுவதற்காகச் சென்ற கார் இன்னும் திரும்பி வரவில்லை. ராமசாமி தன் கட்சிக் காரருக்கு “சிவில் கேஸ் – கிரிமினல் கேஸ்” நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.
ஆழ்வாரின் போன் வந்த போது டிரைவர் மூர்த்தி கோபாலபுரத்தில் ஒரு தள்ளு வண்டியில் விற்கும் பொங்கல்-வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சுமதியைப் பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு வரும் வழியில் இந்த த் தள்ளு வண்டிக்காரரிடம் பொங்கல் வடை சாப்பிடுவது வழக்கமாகவே ஆகி இருந்தது. பொங்கல் தீர்ந்து விடும் அளவு விற்றால், மூர்த்திக்கு என்றே கடைக்காரர் பொங்கல் வடையை எடுத்து வைத்து விடுவார். அவரது பொங்கல் சாம்பார் சட்டினி வடை எல்லாமே ருசியாக இருந்தன. பெரிய அளவு உஷ்ணம் காக்கும் வட்டவடிவப் பெட்டி ஒன்றில் அவர் பொங்கலை சூடாகவும் தருவார்.
மூர்த்தி போனை எடுக்காமல் விட்டான். அதற்குள் இரண்டு மூன்று பேர் தனது கைபேசி தான் மணி ஒலிக்கிறதோ என்று சரிபார்த்துக் கொண்டார்கள். மூர்த்தி மற்றுமொரு மெது வடை வாங்கி சாப்பிட்டான். காலியான தட்டின் மீது இருந்த பிளாஸ்டிக் தாளை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டான். தட்டை அவரது தள்ளு வண்டிக்குக் கீழே வைத்தான். பிளாஸ்டிக் குடத்தின் மீது ஒரு எவர்சில்வர் மூடி அதன் மீது ஒரு டம்ளர் வைக்கப் பட்டிருந்தது. இடது கையால் அந்தத் தட்டை எடுத்து தள்ளு வண்டியின் காலி இடத்தில் வைத்து விட்டு டம்ளரால் தண்ணீர் எடுத்துப் பாதித் தண்ணீரில் கை கழுவினான். மீதித் தண்ணீரைக் குடித்து விட்டு சிறியதாக ஒரு ஏப்பம் விட்டான்.
மறுபடி போன் அடித்தது. ஆழ்வார் தான். “என்னப்பா போனை எடுக்கலே?”
“சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்”
“சீக்கிரம் வா. சார் கிளம்ப நேரமாச்சு”
“ஓகே”
மூர்த்தி தன் இருக்கையைப் பின்னுக்குத் தள்ளும் போத்தானை அழுத்தி சாய்ந்து கொண்டான். ஆழ்வாரின் தொலை பேசி அழைப்பு வரா விட்டால் அவன் கண்டிப்பாக இன்னேரம் வண்டியை எடுத்திருப்பான். பள்ளியில் சுமதியை இறக்கி விடுவது எளிதானதல்ல. பல கார்கள், நிறைய இரு சக்கர வாகனங்கள் ஒரே சமயத்தில் குழந்தைகளை இறக்கி விடுகின்றன. எனவே வண்டியை நகர்த்தித் தெரு முனைக்குக் கொண்டு வருவதற்குப் பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஆகிறது. பசி வயிற்றைக் கிள்ளி விடுகிறது. பத்து மணிக்கு முன்னால் ராமசாமி கிளம்புவதில்லை. அவர் கிளம்புவதற்கு மிகவும் முன்னால் வீட்டுக்குள் போனால் அவர் மனைவி செண்பகம் எதையாவது வாங்கி வரச் சொல்லி ஏவிக் கொண்டே இருப்பாள்.
சேகரின் மொபைல் எண்ணை முயன்றான். இணைப்பாகவில்லை. காத்திருந்தான். மறுபடி முயன்றான். லைன் பிஸி. வண்டியை இயக்கி நகர்த்தினான். மொபைல் ஒலித்தது. சேகர் தான்.
“அலோ. சேகரு. என்ன நீ நேத்திக்கி வர்றேனிட்டு ஆளையே காணோம்?”
“காலையிலேயே கிளம்பி ஊருக்குப் போயிட்டேன்”
‘என்னா சொல்றே? படையலு முடிஞ்சப்புறம் என்னைப் பாக்க வர்றேன்ன? என்னாச்சி?”
“படையலுக்கே நான் இருக்கலப்பா”
“ஊருலேருந்து எதாச்சும் கூப்புட்டாங்களா? அம்மா எப்புடி இருக்குறாங்க?”
‘அம்மா நல்லாத்தான் இருக்குறாங்க. ரயில்ல படையலுக்காக அண்ணன் ஊட்டுக்கு வந்தவங்க இன்னும் அங்கே தான் இருக்குறாங்க”
“அப்பறம் ஏன் படையலுக்கே இல்லாமல் ஊருக்குப் போனே?”
‘எங்க அண்ணன் இன்டிகா வாங்கி ஓட்டத் தேவையில்ல. ஊருல இப்பம் ஓட்டுற மாதிரி டெம்போவை மாச சம்பளத்துக்கு ஓட்டுறது தான் நல்லதுன்னிட்டாரு”
“அதனால?”
“அவருக்கு எனக்கும் வார்த்தை தடிச்சி நான் குளிக்கக் கூட இல்லே அப்படியே கிளம்பிட்டேன்”
அவரு மாச சம்பளக்காரரு. அவருக்கு எப்படி நாம வண்டி வாங்கி ஓட்டி கடனை அடக்கப் போறோமுங்கிறது புரியும். நீ எதுக்கு அவருகிட்டே சொன்னே?”
“அம்மா தான் சொல்லிட்டாங்க’
“உனக்கும் அவருக்கும் வாக்குவாதமின்னா அம்மா அதைத் தடுக்கலியா?”
“பொதுவா சண்டை போடாதீங்கன்னு சொன்னாங்க”
“சரி. நேரா நீ என் ரூமுக்கு வந்திருக்க வேண்டியது தானே’
“அடிக்கடி அவரு என் விஷயத்துல தலையிடறாரு மூர்த்தி. படையல்ல நடந்த அவமானமே மனசை அழுத்திக்கிட்டு இருக்கு. எங்கேயும் போகப் பிடிக்கலே”
“என்னா சேகரு நீ பொம்பளப்புள்ளையாட்டம்… இன்டிக்கா 2008 மாடல் ஒன்றை லட்சத்துக்குக் கிடைக்கிறது அதிசயம். நான் 50000 எப்படியும் புரட்டிடுவேன். நீயும் நானும் மாசம் 4000 அடைச்சாப் போதும் நாலே வருஷத்துல வண்டி நம்பளுது. அதுக்குள்ளே இன்னொரு வண்டியும் ரெடியாயிடும்…”
“இந்த வாரம் வேண்டாம் மூர்த்தி. வாரக் கடைசியிலே அம்மா வந்திருவாங்க. அவுங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு அடுத்த வாரம் ஃபைனல் பண்ணிடலாம்”
“அது மொட்டும் வண்டி இருக்கணுமே”
“வேற வழியில்ல மூர்த்தி. மைன்ட் அப்செட்டா இருக்கு”
இதற்குள்ளேயே பல முறை உள் வரும் அழைப்பின் ஒலி. சரி என்று இணைப்பைத் துண்டித்தான். ஆழ்வாரே தான். பத்து முறை அழைத்திருந்தார்.
வண்டியை வெளியே நிறுத்தி ஆழ்வாருக்கு “மிஸ்ட் கால்” அடித்து விட்டு காரை ஒட்டியே நின்றான். அரை மணி நேரம் கழித்துத்தான் ராமசாமி அட்வகேட்டுக்கு உண்டான சீருடையுடன் வெளியே வந்தார். ராமசாமி மூர்தியிடம் அதிகம் பேசவே மாட்டார். அனேகமாக மொபைல் போனில் ஜூனியர்களிடமோ அல்லது கட்சிக்காரரிடமோ பேசிய படியே வருவார்.
ஹைகோர்ட் வளாகத்தில் காத்திருந்த போது மூர்த்திக்கு இன்டிகா வண்டி கையை விட்டுப் போய் விடும் என்ற கவலை அதிகரித்தது. அதை உறுதி செய்வது போல புரோக்கர் இவன் அழைப்புகளை எடுக்கவே இல்லை. மதியம் ராமசாமி மொபைலில் அழைத்து சுமதியின் பள்ளி அரை நாள் விடுமுறை. உடன் சென்று வீட்டில் விட்டு விடச் சொன்னார்.
பள்ளியில் சுமதி வாயிலிலேயே நின்றிருந்தாள். வீட்டை அடைந்ததும் சுமதியை வழக்கமாக இறக்கி அவள் பையையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விடுபவன் தான் மூர்த்தி. “பையை நீயே எடுத்துக்கோ பாப்பா.. காரை அர்ஜென்ட்டா மெக்கானிக்குக்கிட்டே காட்டணும்” என்று அவளைப் பையுடன் இறக்கி விட்டு புரோக்கர் இருக்கும் திசையில் வண்டியைச் செலுத்தினான்.
அம்மா அம்மா என்று கத்தி சுமதி ஆர்ப்பாட்டம் செய்ய செண்பகம் வந்து பையைத் தூக்கினாள். மூச்சு வாங்கியது அவளுக்கு அதனுடன் நடப்பது. மிகவும் கனம்.
——————————————————————————-
- வீடு திரும்புதல்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- நட்பு
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- தினமும் என் பயணங்கள் – 13
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை