ஜோதிர்லதா கிரிஜா
அமரர்களாகிவிட்ட அற்புதமான பெண் எழுத்தாளர்களில் “லக்ஷ்மி” (டாக்டர் திரிபுரசுந்தரி) சூடாமணி, அநுத்தமா, குமுதினி, வை.மு. கோதைநாயகி போன்றோர் அடக்கம். இவர்களில் வைமுகோ, குமுதினி ஆகியோர் ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோருக்கும் மூத்தவர். இவ்விருவரையும் பற்றி அதிகம் அறிந்திலேன். இங்கே நினைவுகூரப் போவது நான் அறிந்துள்ள ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோரைப் பற்றி மட்டுமே. அவ்விருவரும் எனது சிறுகதை யொன்றுக்கு வெவ்வேறு விதமாக எதிரொலித்தது இன்னும் மறக்கவில்லை.
1980 இல் அமரர் மணியன் அவர்கள் இந்திரா காந்தி அவர்கள் சென்னைக்கு வந்திருந்த போது அவரை ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கவுரவித்தார். சென்னையில் இருந்த எழுத்தாளர்கள் அனைவரும் அக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களுள் நானும் ஒருத்தி. கூட்டம் ராஜ்பவனில் நடந்ததென்று ஞாபகம். பெரிய கூடத்துள் அமரர் குயிலி ராஜேஸ்வரியுடன் நுழைந்த நான் நாற்காலிதேடிச் சென்ற போது ஒரு வரிசையின் கடைசியில் உட்கார்ந்துகொண்டிருந்த ராஜம் கிருஷ்ணன், “கிரிஜா! இங்க வாங்க. வாழ்த்துகள்!’ என்று கூறி என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.
பின்னர், “சமீபத்துல உங்க “கொலையும் செய்வாள்” ங்கிற கதையைக் குமுதத்துல படிச்சேன். அப்படித்தான் தைரியமா எழுதணும். எப்ப பாரு, பெண்களைச் செயலத்த கோழைகளாகவே காட்டித்தான் எல்லாருமே எழுதறாங்க. உங்க வித்தியாசமான கதைக்கு என்னோட பாராட்டு.” என்றார். நான் “தேங்க்ஸ், மேடம்!” என்று சொல்லிவிட்டு மேலும் நகர்ந்த போது, அதே வரிசையில் சில நாற்காலிகளுக்கு அப்பால் அமர்ந்திருந்த எழுத்தாளர் லக்ஷ்மி, “கிரிஜா! இங்க வா, இப்படி!” என்று சற்றே அதட்டலாக அழைத்தார். நான் நின்று வணங்கினேன்.
“அதென்ன குமுதத்துல அப்படி ஒரு கதையை எழுதியிருக்கே? பெண் எப்பவும் மென்மையானவ. அவளை ஒரு கொடுமைக்காரியாக் காமிச்சிருக்கியே? உனக்கே நன்னாருக்கா? கொலை செய்யற அளவுக்குப் போறா ஒரு பொண்ணுன்னு எழுதியிருக்கியே? இனிமே இப்படி யெல்லாம் எழுதாதேஸ” என்றார் உரிமை நிறைந்த அதட்டலுடன். அவருக்கும், “தேங்கஸ், மேடம்!” என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தொலைவில் காலியாக இருந்த நாற்காலிகளில் குயிலி ராஜேஸ்வரியும் நானும் அமர்ந்தோம். குயிலிக்கு ஒரே சிரிப்பு.
ஒரே கதைக்கு இரு பெரும் எழுத்தாளர்கள் வெவ்வேறு வகையில் எதிரொலித்தது விந்தையாக இருந்தது. ஒருவர் பெண்கள் அடங்கிப்போய்விட வேண்டும், தனக்குக் கொடுமையே இழைத்துத் தன்னைக் கொல்லத் திட்டமிடும் கணவனேயானாலும், அவனால் கொல்லப்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நினைக்கிற அளவுக்குப் புராண காலத்துப் பதிவிரதைகளின் பட்டியலில் இருந்தார்! மற்றவரோ, இது போன்ற கொடுமைகளை எதிர்த்துச் செயல்படும் வீராங்கனையாக இருந்தால்தான் பெண்களுக்கு விடுதலை என்கிற புரட்சிக்கருத்தைக் கொண்டிருந்தார்! என்னே வேறுபாடு!
தன்னைக் கொல்லத் திட்டம் தீட்டி, அது வெற்றி பெற்ற பின் மறுமணம் செய்துகொண்டு மீண்டும் வரதட்சிணை வாங்க நினைக்கும் கணவனும் அவன் தாயும் பேசிக்கொண்டதைத் தற்செயலாய்ச் செவிமடுத்துவிடும் ஒரு பெண் எரிவாயு உருளையைத் திறந்துவைத்து மாமியாரையும், என்ன நடந்ததென்று அறியாமல் சமையலறைக்குள் நுழையும் கணவனையும் கொன்றுவிடுகிறாள். இதற்குத்தான் இருவரின் மாறுபட்ட எதிரொலிகள்.
என்னுடைய பத்திரிகையாள நண்பர் ஒருவர் (ஆண்), ‘பெண்ணுரிமை பத்தி எழுதணும்தான். அதுக்காக இப்படியா? ஒரு பெண்ணை இப்படிக் கொலைகாரியாக் காட்டியிருக்கீங்களே? ஒரு கதைன்னா அதில் கலை நயம் இருக்கணும்ஸ” என்றார்.
“அப்ப? அந்தக் கணவன் மூணு கேன் கிரசின் ஆய்ல் வாங்கி வெச்சு அவளை எரிக்க வர்றப்பவோ இல்லாட்டி கத்தியால கொல்லவந்தாலோ, அவ என்னைக் கொன்னுட்டு நீங்க மறு கல்யாணம் கட்டுங்க அப்படின்னு சொல்லிப் பதிவிரதைத்தனமா – புருஷனைக் கூடையில வெச்சு தாசிவீட்டுக்குத் தூக்கிட்டுப் போன நளாயினி மாதிரி – நடக்கணுமா? கலைநயம் பத்திப் பேசறீங்களே! நீங்க சொல்றது மாதிரி எழுதினா அது கொலைநயமாவில்ல இருக்கும்?” – இந்த எனது கேள்விக்கு அவர் சொன்ன பதில், “நீங்க என்னதான் சப்பைக்கட்டுக் கட்டினாலும், உங்க கதை மோசமான முன்னுதாரணம்தான்! அதில் சந்தேகமே இல்லே!” என்பதுதான்.
“அப்ப, கொலைகாரக் கணவன்மார்கள் நல்ல முன்னுதாரணமா?”
“நீங்க ஆர்க்யூ பண்ற முறை விதண்டாவாதமா இருக்கு!”
“அப்படியே இருக்கட்டும்ஸஅது சரி. உங்க ஒய்ஃப் என்ன சொன்னாங்க கதையைப்பத்தி? அவங்க என்னோட ரசிகையாச்சே!”
“நான் இன்னும் அவளைக் கேக்கல்லே.”
“சரி. கேட்டுட்டுச் சொல்லுங்கஸ”
“சொல்றேன். ஸ”
இதன் பின் அவர் தொடர்ந்து சில நாள்கள் வரையில் என்னோடு பேசவே இல்லை. அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாததால் நானும் பேசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கூட்டத்தில் சந்திதததன் பிறகு எங்கள் நட்புப் புதுப்பிக்கப்பட்டது – அந்தக் கதை பற்றிய பேச்சு இல்லாமல்!
பெண்விடுதலையில் நாட்டமுள்ளவராய்த் தம்மைக் காட்டிக்கொண்டுவந்துள்ள அந்த எழுத்தாள நண்பர் சொன்னது தந்தை பெரியாரின் சொற்களைத்தான் நினைவுக்குக் கொண்டுவந்தது:
பெண் ஏன் அடிமையானாள் எனும் தமது சிறு நூலில் பெரியார் இவ்வாறு கூறுகிறார்: “பெண்விடுதலைக்கான முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போல் காட்டிக்கொண்டு, மிகப் பாசாங்கு செய்து வருகிறார்கள். பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்களின் விடுதலைக்காகப் பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்ளுவ தெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்கிற சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால், ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? ஸ”
பெண்விடுதலையை ஆதரித்துக் காரசாரமாய் என்னுடன் ஒத்துப்போய்ப் பேசி வந்துள்ள அந்தப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நண்பரே இப்படி யென்றால் பிறரைப் பற்றி என்ன சொல்ல!
தற்செயலாக, மகா பெரியவர் என்று கொண்டாடப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் தமது கட்டுரையொன்றில் எழுத்தாளர்களின் கடமை பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். (தெய்வத்தின் குரல்)
“ ஸ. அச்சு இயந்திரம் வந்த பிறகு பௌராணிகர்களின் இடத்தைப் பத்திரிகைகள் பிடித்துக்கொண்டன. எனவே பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இன்றைய பௌராணிகர்கள். பௌராணிகர்கள் எப்படி தர்மங்களை ரசமான கதைகள் மூலம் ஜனங்களிடையே பிரசாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் ஆகியோரின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டும் சொல்லுவது என்று வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுதவேண்டும். இதைச் சுவாரசியமாகச் செய்யவேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்பித்துப் பல விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிகையாளர்களும் வாழ்நாள் முழுக்க மாணாக்கர்களாகவே இருந்தால்தான், தாங்களும் புதுப் புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்யமுடியும். சத்தியத்தைச் சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாக்கிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முன்வந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக்கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பெறவேண்டும் . இவ்விதம் மனிதர்களின் ஆன்ம நலன், உலக நன்மை, அமைதி, நல்வாழ்வு எல்லாவற்றுக்குமான மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.”
( என் பத்திரிகையாள நண்பர் போன்றே மகா பெரியவரும் என் கதைக்கருத்தை ஆதரிக்க மாட்டார் என்பது வேறு விஷயம். )
- திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4
- முக்கோணக் கிளிகள் படக்கதை 1
- ஆகவே
- அந்தி மயங்கும் நேரம்
- நாடெனும்போது…
- மோடியா? லேடியா? டாடியா?
- திரை ஓசை டமால் டுமீல்
- சிறுநீர் கிருமித் தொற்று
- 1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.
- கனவு மிருகம்!
- திண்ணையின் இலக்கியத் தடம் -32
- கொள்ளெனக் கொடுத்தல்
- பாரின் சரக்கு பாலிசி
- தினம் என் பயணங்கள் -14
- அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்
- அங்கதம்
- நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு
- பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .
- தொடுவானம் 13. பிரியமான என் தோழியே.
- வாசிக்கும் கவிதை
- பிறன்மனைபோகும் பேதை
- புள்ளின்வாய்கீண்டான்
- வளையம்
- நீங்காத நினைவுகள் – 43