தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

 

ஜிஜேதமிழ்ச்செல்வி

 

கண்விழிக்கச் சோம்பல் பட்டேன். “மம்மி எழுந்துரு, மம்மி எழுந்துரு” என்று இரு முறை அழைத்தாள் மகள் அருள்மொழி. இரு முறைதான் அழைத்ததாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த இரு அழைப்புதான் என்னை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். முன்பு வசித்த வீட்டை விட இரு மடங்கு தூரம் இப்போது உள்ள வீட்டிற்கும் அலுவலகத்திற்கும். கைகள் ஓய்விற்காகக் கெஞ்சுவது புரியத்தான் செய்தது. இன்று அலுவலகம் செல்ல வேண்டும். நேற்று “உழைப்பாளர் தினம்” போல் விடுப்புதானே என்று இன்னும் கொஞ்ச நேரம் என்று முடங்கி படுத்துக் கொள்ள முடியாது.

 

“ஏய் மம்மி எழுந்திரு, போய் குளி, தண்ணி ஆறி போகுதில்ல,உனக்கெப்ப தலைய வாரி உன்ன ஆபிஸ்க்கு அனுப்பிட்டு நான் எப்ப ஸ்கூல்க்கு போறது. இராத்திரி முழுக்க கம்யூட்டர் நோண்ட வேண்டியது விடிய விடியத் தூங்க வேண்டியது,”முணுமுணுத்த படி கொஞ்சம் தேங்காய் எண்ணெயை என் உச்சந் தலையில் தேய்த்தாள்.

 

“வெயில் கொஞ்சமாவா காயுது, அடிக்குற சூட்ல பாரு தலை எப்படி வரண்டு போயிருக்கு. இதோட தலை குளிச்சா முடிமுனையெல்லாம் வெடிச்சு போகும்,” என்ற படி எண்ணெய் பாட்டிலோடு உள்ளறைக்குச் சென்றாள்.

 

ஒரு புன்னகை இதழ் சுழிந்து வழிந்தது என்னிடம். இவளுக்கு நான் அம்மாவா, எனக்கு இவள் அம்மாவா? நான் குளிப்பதற்கு முன்னதாகவே நான் உடுத்த வேண்டிய சுடிதாரைக் கொண்டு வந்தாள்.

 

“எனக்கு இது வேணாம், அந்த லைட் சேண்டல் தான் வேணும்,”என்றேன்

 

“இல்ல, இந்த சுடிதார் தான் போடனும், அது லைட் கலர் நீ இங்க இருந்து முழங்கால் போட்டுட்டு போய் சைக்கிள் ஏறதுக்குள்ள அது அழுக்காயிரும்,” என்று நின்று முறைத்தாள்.

 

“அது தான் எனக்கு நல்லா இருக்கும்,” என்றேன் நான்

 

“உனக்கு எது போட்டாலும் அழகு தான் போப்பா போய் சீக்கிரம் குளியேன் தொல்லை பண்ணாம,” என்றதும் வாய்விட்டு சிரித்தேன்.

 

சீப்பைக் கொண்டு வந்து தலையில் வைத்தாள். நானே வாரிக்கிறேன் அந்த கிளிப்பை எடு,” என்றேன்.

 

“ம்க்கூம் ரொம்ப நல்லா வாரி கிழிச்ச நான் வாரி விடுறேன்,”என்று கூந்தலை ஒரு கையால் பற்றி மறு கையால் வார, “அம்மா” என்று முணங்கினேன்.

 

“வலிக்குதா,” என்று முன் தலை நீட்டி முகம் பார்த்தாள்.

 

எனக்கு “ஒர்த் டிரஸ்ட்” நிலைக்கூடம் நினைவு வந்தது.

 

ஒரு எட்டு வயதிருக்கும் அப்போது தான் அங்கு கொண்டு போய் விட்டார்கள். இரண்டு வருடம் தான் அங்கு இருந்தேன். ஒரு பெரிய ஆலமரம். அதைச் சுற்றிலும் ஒரு பெரிய அரை வட்டாமாக சிமெண்ட் இருக்கைகள் போட்டிருப்பார்கள். எங்களைப் பார்க்க விசிட்டர்ஸ் யாரேனும் வந்தால் அங்கு உட்கார்ந்து தான் பேசவேண்டும். அவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை உண்ண வேண்டும்.

 

பெரும்பாலும் என்னைப் பார்க்க யாரும் வருவதில்லை. வகுப்பு நாட்களில் மாலை அங்கு எல்லா வகுப்புப் பிள்ளைகளையும் ஒன்றாகக் குழுமச் செய்து பாட்டுக் கதை உட்கார்ந்த இடத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டு என்று பொழுது போகும்.

 

அப்பொழுது அடிக்கடி ஜானகி டீச்சர் இந்தப் பாட்டைப் பாடுவாள்.

 

“தலைவாரிப் பூச்சூடி உன்னை

பாட சாலைக்குப் போவென்று சொல்வாள் உன் அன்னை”

 

அந்த பாடல் வரி நினைவுக்கு வர அந்த மழலைப் பருவ கனவுகளும் கூடவே வலி கலந்த நினைவுகளும் வரத் துவங்கின.

 

கூம்பிப்போன என் முகத்தைப் பார்த்தவள் “வலிப்பதுபோல் வாரிவிட்டேனா,” என்றாள்.

 

“இல்லை,” என்று இருபுறமும் தலையசைத்து, என் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஒரு யு டேர்ன் அடித்து அலுவலகத்திசை நோக்கி பயணிக்கத் துவங்கினேன்.

 

பசித்தது,

 

நேற்றே அருள் சொல்லியிருந்தாள். “நாளை எனக்கு டெஸ்ட் மம்மி காலையில சமைக்க முடியாதுன்னு,” நான்தான் வீராப்பா நான் காலையில எழுந்து சமைக்குறேன்னு சொன்னேன்.

 

சே இப்படியா தூங்கி வழிவாங்க என்று என்னையே கண்டித்துக்கொண்டிருந்த நேரம் தான் அந்த சிறுநீர் திறந்த கழிப்பகத்தைக் கடக்க வேண்டி வந்தது. சிறு கூவம் போல கால்வாய் ஓட அங்கு இருவர் எந்த கூச்சமும் இன்றி சிறு நீர் கழிப்பதில் மும்முரமாய் இருக்க, அங்கு வரும் மேடான இடத்தை கடக்க நான் செய்த முயற்சியைப் பார்த்த பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் வந்து உதவினார்.

 

“நன்றி,” என்றேன். “உங்க நன்றி எல்லாம் வேண்டாம், உங்க ஆபிஸ்ல தான் ஒட்டர் ஐடிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன் சீக்கிரம் கொடுங்க,” என்றார். ஓ இது நிபந்தனையுடன் கூடிய உதவி. நிச்சயமாக ஓட்டர் ஐடி வந்தவுடன் தந்துவிடுகிறேன் என்று சொல்லியபடிச் சாலையை கடந்தேன்.

 

முன்பிருந்த வீட்டைக் கடந்த போது குமார் அண்ணா எதிர் சாரியில் நடந்து கொண்டிருந்தார். நான் ஒர்த் டிரஸ்டில் 2 வகுப்பு படித்த போது அவர் அங்கு தொழிற் கல்வி பயின்றவர். என் அம்மாச்சி எப்போதாவது அவரிடம் அதிரசம் தந்தனுப்புவாள். அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அவரிடமிருந்து ஒப்புதலாய் வந்த புன்னகை. நின்று பேச கூட நேரமற்றுப் போய் விட்டதே என்ற எண்ணம் இதயத்தை லேசாகத் தடுமாறச் செய்தது. ஒரு எந்திரம் போல அலுவலகம், அதை விட்டால் வீடு ! என்ன வாழ்க்கை இது ?

 

சில மனிதர்கள் கடந்த கால நினைவுகளைப் புதுப்பித்து விடுகிறார்கள்.

 

சற்று தூரம்தான் கடந்திருப்பேன். நந்தக்குமார் “ஹாய்,” என்று கையசைத்தான். நான் ஒர்த் டிரஸ்டில் தொழிற்கல்வி பயின்ற போது அவன் எனக்கு ஜூனியர். “குட்மார்னிங் மேடம்,”என்றவனுக்குப் பதிலுக்கு புன்னகைத்துக் கடந்தேன். அலுவலக வாயிலில் நுழைந்ததும் தெய்வானை அம்மாளின் வணக்கம்.

 

அவளின் அந்த வணக்கம் இரு நாட்களுக்கு முந்தைய நிகழ்விற்கு கொண்டு சென்றது என்னை.

 

தண்ணீரும் பெனாயிலும் கலந்த திரவத்தால் நிரம்பியிருந்த பக்கெட்டில் மாப்பைத் தோய்த்து  தரையை அழுந்த துடைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

வட்டாட்சியர் அலுவலகத்தின் புதிய துப்புரவு தொழிலாளி, மசால்ஜி என்று அந்த பதவிக்கு ஏதோ ஒரு பெயரை சொன்னார்கள்.

நான் உள்ளே நுழைந்ததும், “வணக்கம்மா,” என்றாள். நான் பதிலுக்கு “வணக்கம்மா,” என்றதும் மலர்ந்து  சிரித்தாள்.

“ஏம்மா உனக்கொரு விஷயம் தெரியுமா,”  என்றளிடம்,  “என்ன,” என்று வினவினேன்.

“நேத்து (தலைமையிடத்து துணை வட்டாட்சியர்)1Dt. அம்மா  யாரையாச்சும் ஆள் வச்சு டாய்லட் கழுவச் சொன்னாங்க, இந்த ஜெயசீலி (அலுவலக உதவியாளர்) “நாம யூஸ் பண்றது தானம்மா, எதுக்கு 150 ரூவாகொடுக்கறதுன்னு,” சொல்லிட்டு, டாய்லட் ல வந்து புடவைய முழங்கால் அளவுக்கு தூக்கிப் பிடிச்சுக்கினு,தண்ணிய மட்டும் ஊத்துரா, “நான் இன்னமோ அவளுக்கு அடிமை மாதிரி தொடப்பத்தை போட்டு தேய்க்கனுமாம்.”
அந்த வார்த்தைகள் வருத்தம் தோய்ந்து காடியாய் புளித்தது. ஒரு அருவருப்பான முகச் சுளிப்பு என்னிடத்தில்.

வேறு நபர் செய்ய வேண்டிய வேலையை, இன்னொருவர் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம் ?

“எம் புருஷன் செத்து வருஷம் 20 ஆச்சு, அன்னிலேந்த இன்னிக்கி வரைக்கும் ஓயாத ஒழைப்பு தான்.”

“களை வெட்ட, நெல்லு நட, ன்னு ஆரம்பிச்சு கலவை தூக்கினதுன்னு, இப்ப இங்க வந்து நிக்க சாயல, புள்ளைங்களுக்கு ஒரு நல்லது கெட்டது செஞ்சு போட நாழி இல்ல. எப்பவும் இந்த கொட்டை அரிசி சொசைட்டி சோறுதான். புளித்தண்ணி தான்னு,” சொல்லிக்கொண்டிருந்தவளின் உழைப்பை மதிக்கத் தோன்றியது.  அவளையும் தான்.

தனி ஒரு பெண்ணாய் நின்று மூன்று குழந்தைகளைப் பேணுவது சாதாரண விஷயமா என்ன?

இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடையப் போகிறது. இந்து ஐந்து வருடங்களில் தூய்மை இல்லா கழிப்பறையினால் என் அன்றாட அவஸ்த்தைகளைச் சொல்லி மாள முடியாது.

பொதுக் கழிப்பறையை என்னால் பயன்படுத்த முடியவில்லை. மாற்று ஏற்பாடு செய்ய உதவும் படி என் மேலதியாரியாய் அப்போதிருந்த ஹரிஹரன் சாரிடம் கேட்க, “நீ இப்போது இதைக்கோரிக்கை யாக கொண்டு சென்றால் இந்த வேலை செய்ய உனக்கு தகுதியில்லை என்று நிராகரித்து விட்டால் என்ன செய்வாய்,“ என்று வினா எழுப்பினார்.

 

அதன் பிறகு இதைக் குறித்து யாரிடமும் நான் பேசியதில்லை. கழிப்பறை வசதி இல்லாத சூழலில் காலம் கடந்து அலுவலகத்தில் வேலை செய்வது என்பது ஒரு பெண்ணுக்குநரக வேதனை.

 

ஒரு வழியாய்ச் சமீபத்தில் மாறுதலான திருமதி. ராஜலட்சுமி, புது வட்டாட்சியர் அவர்கள். அவர்களின் கழிப்பறை (வெஸ்டர்ன் டாய்லட்) யை பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி அளித்தார்கள்.

 

அந்த அம்மா ஒரு புண்ணியவதி.

 

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” – என்றான் பாரதி

 

அடிப்படை வசதியின்றித் தடுமாறும் ஒரு மாற்றுத்திறனாளியாகிய எனக்கு இந்த உலகத்தை அழித்திடத்துணிவு ஏற்படுகிறது.

 

உழைப்பாளர் தினம், ஊனமுற்றோர் தினம், மகளிர் தினம்,காதலர் தினம், சுற்றுப்புறச் சூழல் தினம், பெற்றோர் தினம்,ஆசிரியர் தினம், என்று பல தினங்களையும் அதற்கான வாழ்த்தையும் சொல்லிக் கொள்ளும் நமக்கு, தினங்களை நினைவு கூர்தலுக்கான காரணம் மட்டும் நினைவில் தங்குவதும் இல்லை. சம்பந்தப்பட்டோரை மேம்படுத்த எந்த முயற்சியும எடுப்பதும் இல்லை.

 

இதுதான் நமது சுதந்திர நாடு !

 

சட்டங்களும் திட்டங்களும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்க,காகிதச் சுரைக்காயைச் சமைக்க கத்தியோடு காத்திருக்கும்,இளவு காத்த கிளியின் நிலைதான் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும்.

 

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

    கட்டுரை முடிவில் சில வரிகள் “Word Wrap” தவறி மிகவும் நீண்டு படிக்கச் சிரமமாய் வந்து விட்டன.

    அவற்றைச் சீராக்க வேண்டுகிறேன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *