( முன்னுரை: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க எனது நாட்குறிப்பிலிருந்து அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் தரப்பட்டுள்ளது. இதை நான் எழுதியபோது எனக்கு வயது பதினைந்துதான்! )
அவள் எழுதியிருந்த அந்த ஆங்கில வாசகங்களைப் பற்றி அன்றிரவு பலவாறு எண்ணலானேன்.
முன்பே அவளுடன் கூடி இருந்த காலத்தைவிட பிரிந்து இருக்கும் இப்போது அவள் மீது இனம் தெரியாத அன்பும் ஆசையும் பிறக்கக் கண்டேன்.
இதுநாள்வரை நாங்கள் சாதாரண கடிதங்களைத்தான் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
இப்போது என் காதலை அவளுக்குத் தெரிவிக்கத் துணிவு கொண்டேன். பலவாறு சிந்தித்த பின்பு அக்கடிதத்தை எழுதினேன்.
நான் எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக அவள் மீது கொண்டுள்ள அன்பு, காதல் போன்று தெரிவதாகச் சொல்லி அவளுக்கும் அது போன்றே தோன்றுகிறதா என்று கேட்டேன். அப்படி அவளுக்கும் தோன்றினால் இனிமேல் நாம் காதலர்களாக மாறுவோம் என்று எழுதினேன்.
கோவிந்தசாமி மூலம் கடிதத்தைக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் அவளின் பக்கத்துக்கு வீட்டில் வசித்த சித்திராதேவி மூலம் தரலாம் என்று முடிவு செய்தேன்.
சித்திராதேவி ஜான் அண்ணனின் காதலி. அவர் லாபீசிலிருந்து சிங்கப்பூர் வந்து தங்கி பயின்று கொண்டிருந்தார். ஆகவே நிச்சயம் எங்களுக்கு உதவுவாள் என்று நம்பினேன்.
” இக் கடிதத்தை லதாவிடம் கொடுத்து தனிமையில் படிக்கச் சொல். ” என்று கூறி அவளிடம் தந்தேன். அவளும் மறுக்காமல் பெற்றுக்கொண்டாள்.
அன்றைய இரவு எனு தூக்கமே வரவில்லை. அக் கடிதம் கண்டு அவள் என்ன நினைத்திருப்பாள்? நான் கெட்டவன் என்று எண்ணி விடுவாளா? அல்லது எனது வேண்டுகோளுக்கு இணங்கியிருப்பாளா?
நாங்கள் இளம் வயதுடையவர்கள் தானே! இதற்குள்ளாகவா காதல்? நான் ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும? பலவாறு சிந்தித்தேன்
உன் மீது அன்பு செலுத்த யார் உள்ளனர்? உன் தாயும் மற்றவர்களும் தமிழகத்தில் அன்றோ உள்ளனர்? இவளாவது உன் மீது அன்பு செலுத்தட்டுமே! இந்த அன்பு உனக்கு வேண்டியதில்லையா? அன்பு என்றால் என்னவென்பதை அறியாதவனன்றோ நீ என உணர்த்திற்று.
அடுத்த நாள் நான் லதாவைக் கண்டேன். ஆனால் என்னைக் காணாத மாதிரி வேகமாகச் சென்று விட்டாள். ஏனோ என் உடல் நடுங்கியது. மனம் பதறியது.
மறுநாள் சற்றுத் துணிவுடன் அவளை அடைந்தேன்.
அவள் சிரித்தாள். என் உள்ளம் அப்போது உயிர் பெற்றது.நான் ஏதும் அறியாதவன் போல் நின்றேன்.
” நீ தந்த கடிதம் கிடைத்தது.பதில் எழுதியுள்ளேன். பெற்றுக் கொள்கிறாயா? ” என்றாள்.
” சரி. ” என்றேன்.
கடிதத்தை புத்தகத்திலிருந்து எடுத்து என் கையிலே தந்தாள். நடுக்கத்துடந்தான் அதை வாங்கினேன்!
வீட்டை அடைந்ததும் கதவைத் தாளிட்டேன். மெல்ல. நான் உறையைக் கிழித்தேன். மெல்லியத் தாட்களில் எழுதியிருந்தாள்.
என்னுடைய அன்பை நாடுவதாகவும், எங்களுடைய இளம் வயது நினைவுகள் இன்பமானவை என்றும் எழுதியிருந்தாள். நீங்கள் என்னை எப்படிக் கருதுகிறீர்களோ, நானும் உங்களை அப்படித்தான் கருதுகிறேன்.” என்றும் பதில் தந்திருந்தாள்.
” நீயும் நானும் எங்கோ தோன்றி எப்படியோ சேர்க்கப்பட்டுள்ளோம். நான் உன்னை எப்படிக் கருதுவது? ” நான் திரும்பவும் அவளிடம் கேட்டேன் கடித மூலமாக.
” நான் பெண் அன்றோ? நான் எப்படி அதைக் கூறுவேன்? நீங்கள்தானே முதலில் அதைக் கூற வேண்டும்? ” என்று பதில் வந்தது.
இறுதியாக நான் எழுதினேன்.
” லதா. நாம் சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் பழகி விட்டோம். நான் உன்னிடம் என் அளவற்ற அன்பையே தர முயல்கிறேன். இந்த அனபை உன்னிடம் எதிர்ப்பார்க்கிறேன். அதனால் இந்த அளவற்ற அன்பை நாம் இருவரும் பகிர்ந்து கொள்ள, நம் இருவரையும் ஒன்றாகப் பிணைக்கும் சொல் ‘ காதல் ‘ என்பதே என் கருத்து! ”
” அத்தான் … இனி நான் உங்கள் ஆருயிர்க் காதலி! ” என்று பதில் தந்தாள்.
அன்று முதல் அவள் என் ஆருயிர்க் காதலியானாள்.
நான் திருக்குறள் மனனப் போட்டிக்கு காமத்துப்பால் படித்தபோது ஒரு குறள் கண்டேன்.
” கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. ” ( குறள் – 1101 )
பெண் ஒருவனின் கண்ணுக்கு மட்டும் விருந்தல்ல, அவனின் ஐந்து புலன்கட்கும் விருந்தாவாள் என்பதே அதன் அர்த்தமாகும்.
திருக்குறள் விழாவில் உரையாற்றிய பேராசிரியர் அமீதா, ” பெண்ணை முத்துக்கு ஏன் ஒப்பிடுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தந்தார். முத்தைத் தொட்டால் குளுமையாக ‘ ஜில் ‘ என இருக்குமாம். அதே போல், பெண்ணைத் தொட்டாலும் ‘ ஜில் ‘ என இருக்கும் என்று கூறினார்.
பாலொடு தேன் கலந்த நீர் பெண்ணின் தூய பற்களில் ஊறுமென்று வள்ளுவரும் ஒரு குறளில் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் நான் படித்து அறிந்த பின் இவை உண்மையா என ஆராயலானேன்.
நான் லதாவை இதுவரை காதலோடு தொட்டதில்லை. அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. முதன் முதலாக தனிமையில் சந்திக்கவும் திட்டம் தீட்டினோம்!
அதன்பிறகு ஒரு வாரத்தில் ” மேக்ரிச்சி ” நீர்த்தேக்கத்தில் சந்திக்க முடிவு செய்தோம். அங்கு செல்ல லீடோ தியேட்டர் முன் ஒன்று சேர்ந்து அங்கிருந்து நீர்த்தேக்கம் செல்லும் பேருந்து ஏறலாம் என்று பேசிக்கொண்டோம்.
அன்று நண்பகலில் நான் அப்பாவிடம் ஓட்டப் பந்தயம் காரணமாக ” மேக்ரிச்சி ” செல்வதாகக் கூறினேன். அவர் பேருந்து கட்டணம் தந்தார்.
புது ஆடைகள் அணிந்து கொண்டேன்.
ஜெயப்பிரகாசம் தேநீர் கடையில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் உணமையைச் சொன்னேன். அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று என் சட்டையில் வாசனைத் திரவியம் தெளித்து வெற்றியுடன் திரும்பி வரும்படி வாழ்த்தினான்.
நான் லீடோ தியேட்டர் வெளியே பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் காத்திருந்தேன்.
லதா பேருந்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். பாவாடையும் ஜாக்கட்டும் அணிந்திருந்தாள்.கூந்தலை புது விதமாகச் சீவி அலங்காரம் செய்திருந்தாள்.
” 8 A ” பேருந்தில் ஏறினோம்.
வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்தேன். அவ்வப்போது எங்களின் உடல்கள் உரசின.அந்த உணர்வு எனக்கு என்னவோ செய்தது. அது ஒருவகையான புல்லரிப்பு!
” மேக்ரிச்சி ” நீர்த்தேக்கம் சிங்கப்பூருக்கு ஓரளவு குடிநீர் தந்தாலும், அது ஒரு சுற்றுலாத் தளமாகவும் திகழ்ந்தது. பசுமையான காட்டுப் பகுதியில் பரந்து விரிந்த நீர்த்தேக்கம் இயற்கைச் சூழல் மிகுந்து விளங்கிற்று.
இங்கு தான் நான் பல முறை காடு மேடுகளில் ஓடும் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி கண்டுள்ளேன். அப்போதுதான் லதாவை இங்கே கூட்டி வர வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நீர்த்தேக்கத்தினுள் நாங்கள் நடந்து சென்றோம் – காதல் ஜோடிகளாக!
அங்கு அநேக மலாய்க்கார இளைஞர்கள் காணப்பட்டனர். அவர்கள சிலர் காதலர்களைப் பின் தொடர்ந்து அவர்களை ஒளிந்து நோக்குவதுதான் வேலையாகும். ஆதலால் நாங்கள் காட்டுக்குள் அதிக தூரம் செல்ல விரும்பவில்லை.
நான் முன்பே பார்த்து வைத்திருந்த தனிமையான இடத்துக்கு அவளை அழைத்துச் சென்றேன்.
அது ஒரு பள்ளமான பகுதி. மரக் கிளைகள் தாழ்ந்திருந்தன. சுற்றிலும் அடர்ந்த புதர்கள்.
முதனமுறையாக அவளின் கையைப் பற்றி அந்த பள்ளமான பகுதிக்குள் இறங்கினேன்.
புல் தரையில் அமர்ந்தோம். அப்பகுதியின் இயற்கை அழகைப் பற்றி பேசினோம். ஜான் – சித்திராதேவி காதல் பற்றியும் பேசினோம். பின்பு சிறிது நேரம் மௌனம்.
அவள் தரையை நோக்கியவண்ணமிருந்தாள்.அந்த மௌனத்தைக் கலைக்க விரும்பினேன்.
” என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய் லதா? ” என்றேன்.
” நீங்கள் என்ன எண்ணுகின்றீரோ அதைத்தான் நானும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ” இது அவளின் பதில்.
” உன்னைக் கட்டியணைத்து முத்தமிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். ” எனச் சொல்ல நினைத்தேன். ஆனால் துணிவில்லை.
அருகில் இருந்த ஒரு மலர்ச் செடியைப் பார்க்க என்னை அழைத்தாள் .
நடந்து செல்கையில், தன்னுடைய பாவாடை நெகிழ்வதாகவும், ” பெல்ட் ” போட மறந்து விட்டதாகவும் கூறினாள்.
அந்த மலர்ச் செடியைப் பார்த்து விட்டு திரும்பியதும் சற்றுத் துணிவுடன் பழகினோம்.
அவளைத் தொட வேண்டும் என்ற அவள் என் மனதில் தோன்றியது.
சிறிது சிந்தனைக்குப் பின்பு கூறினேன் .
” லதா … நேற்று நான் ஒரு கனவு கண்டேன். ”
” என்ன அது? ” ஆளுடன் வினவினாள்.
” நாம் இருவரும் தனிமையில் நடந்து செல்கிறோம். அப்போது என் கை உன் தோளின் மீது இப்படி இருந்தது…” என்று கூறியபடி என் கையை அவள் தோளில் வைத்தேன்.
அவள் முகத்தைப் பார்த்தேன். அதில் நாணம் இழையோடியது. அவளும் அதுபோன்றே செய்தாள். இருவரும் அணைத்துக்கொண்டோம்!
அவளின் முகம் மெல்ல மெல்ல எனதருகில் வந்தது. கன்னங்கள் ஒன்றாகி உதடுகளும் ஒன்றித்தன!
ஆம்!
முதல் முத்தம்!
எத்தனை நாட்கள் இதற்காகக் கற்பனை செய்துள்ளேன்!
படங்களில் தான் முத்தமிடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இன்றோ…?
சுமார் முப்பது நிமிடங்கள் நாங்கள் அணைத்துக் கொண்டிருந்தோம்.
அதன் இறுதியில் அவளுடைய கண்கள் சிவக்க ஆரம்பித்தன. கண் இமைகள் பாதியில் மூடிக் கிடந்தன. மயக்கமுற்ற நிலை போன்றிருந்தது.
எனக்கு பயமாகி விட்டது!
” லதா… ” அவளைத் தட்டி எழுப்பினேன்.
அவள் பதில் தரவில்லை.
மெல்ல அவளின் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன்.
” டக்…டக்…டக்…டக் …” என அடிக்கக் கேட்டு அமைதியுற்றேன்!
( தொடுவானம் தொடரும் )
- அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
- பசிமறந்து போயிருப்போம்
- தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே
- நிவிக்குட்டிக்கான கவிதைகள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது
- திண்ணையின் இலக்கியத் தடம்- 33
- நீங்காத நினைவுகள் – 44
- சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.
- சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- திரை ஓசை வாயை மூடி பேசவும்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -2
- அது அந்த காலம்..
- பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்
- வேள்வி
- தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசை மாறப் போகின்றன ?
- ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
- விபத்து
- திசையறிவிக்கும் மரம்
- அடையாளம்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- மூளிகள்
- உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை
- திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே
- திரைவிமர்சனம் என்னமோநடக்குது
- களிப்பருளும் “களிப்பே”!
- குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:
- வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)