தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

மாற்றுத்திறனாளி என்றால் வானத்தில் வெட்ட வெளியில், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குதித்து வந்த ஜந்துவா?… அப்படி ஒன்றும் இல்லை, சராசரி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் தான் இருந்தன எனக்கு.

காலம்தான் கனவுகளை செதுக்குகிறது போலும். பால்யப் பருவக் கனவுகளில் முதலாவதாக இருந்தது என்னவோ இந்த அம்மா எப்பவும் பழைய கஞ்சிதான் ஊத்துறா, ஒரு நாளாச்சாம் சுடு சோறு சாப்பிடனுங்கறது தான். அதன் பிறகு ஒர்த் டிரஸ்ட் பயில வந்த பிறகு தான் வாழ்க்கையின் லட்சியக் கனவுகளின் அத்தியாயம் துவங்கியது.

போலியோவினால் நான் பாதிக்கப்பட்டதால் என்னை நடக்க வைப்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்தார்கள். விடுதியில் இருக்கும் போது உடன் இருந்த சிநேகிதி மேல் விழுந்து விட போட்ட தையல் பிரிந்து விட்டது. அதிக இரத்தம் வெளியேறியதால் நான் மயங்கிப் போக, லதா டீச்சர் தான் என்னைத் தூக்கிக்கொண்டு சிஎம்சி மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.

அவர்கள் சேலை முழுவதும் இரத்தமாக இருக்க, இந்த குழந்தைக்கு நீங்க யார்ன்னு அவங்க கேட்க, நான் இந்த குழந்தையோட அம்மான்னு சொல்லிட்டாங்க… இறந்து போய்டுவேன்னு எல்லாரும் எதிர்பார்க்கப்பட்டது தான், ஸ்குரில் நர்ஸ் வந்து பைபிளும் கையுமா பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அப்ப அந்த ஒர்த் டிரஸ்ட் குழந்தைகளின் கூட்டுப் பிரார்த்தனையினாலோ என்னமோ நான் உயிர் பிழைத்தேன்.

அந்த ஒரு மாதத்தில்தான் அன்பைப் பற்றியும் அதன் உருவான இயேசுக் கிறிஸ்துவைப் பற்றியும் எடுத்துக் கூறத் துவங்கினாள் ஸ்குரில் சிஸ்டர்.

எப்போதாவது என்னை பார்க்க விடுதிக்கும் வந்து விடுவாள். விளையாட்டுப் பிரியமில்லாத எனக்கு அவள் கதைகள் அதிகமான நேரக் கடத்தியாய் இருந்தது. அவள் சொன்னதை அப்படியே அசைப்போடுவதும், அல்லவென்றால் அதை மாற்றி விஸ்தரிப்பதுமாக கடந்தன நாட்கள். கதை சொல்வதில் கில்லாடி என்று பெயர் எடுத்த நான் கொஞ்சம் பாடவும் செய்தேன். நடனம் பிரியம் என்றாலும், இரண்டாவது முறை செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையினால் என் இரு கால்களிலும் பெலன் குறைந்து போனதால் ஆடும் கனவு அழிக்கப் பட்டது முதலில்.

ஒர்த் டிரஸ்ட் மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கூடம் ஆதலால் அநேக மாற்றுத் திறனாளிகளோடு பழகும் வாய்ப்பும், அவர்கள் கனவுகள் மன்றும் உணர்வுகளை உடன் இருந்து காணும் வாய்ப்பும் அதிகமாக இருந்தது.
சமூகம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளியே பழகி யிருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக, முயற்சி யோடு வெளிவரும் சதவீதத்தில் குறைந்தவர்களைத் தவிர மற்றவர்களின் வாழ்க்கை நிலை என்பது தரம் குறைந்ததாகவும், வாழ்வின் சராசரி நிலையையும் பாதிப்பதாகவே இருந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகள், இட ஒதுக்கீடு, போதிய ஊதியம், மற்றும் அரசாங்கப் பங்களிப்பு 100 சதவீத மாற்றுத் திறனாளிகளைச் சென்று சேர்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

ஒரு புறம் மாற்றுத் திறனாளிகள் ஐநா சபை வரை அரியணை ஏறியிருக்க மற்றொரு புறம் தங்களின் இயலாமையையும் சங்கடங்களையும் எண்ணி மனம் புழுங்குகிறவர்களே அநேகராக இருக்கிறார்கள்.

இந்த இடத்தில்தான் என் கனவு விதைக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தவும், என்னால் இயன்றவரை, உதவி செய்யவும் துவங்கினேன். அந்த செயலை உலகம் முழுவதும் விரிவடைய செய்யும் முதல் முயற்சியாக “ஹார்ட் பீட்” என்னும் இதயத் துடிப்பு அறக்கட்டளையை மைக்கேல் ராஜ், நிர்மலா, நான், ஜாய் செல்வ குமாரி, நால்வரும் சேர்ந்து பதிவு செய்தோம். பதிவு செய்ய வந்தவர்களுக்கு இதைத் தொடர்ந்து செய்ய நாட்ட மில்லாமல் போனது.

கல்வி அறிவிலும், அனுப அறிவிலும், வெளி உலக நிகழ்வுகளில் பங்கில்லாத எனக்கு மாற்றுத் திறனாளி களுக்காக இயங்கும் பல நல்ல நிறுவனங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.

என் கண் பார்வையில் பட்டுப் பரிதவித்தவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பது என் வாழ்க்கை இலட்சியமாக ஆனது.

இதற்கு நானும் அதை அனுபவித்தேன், அந்த வலிகளைக் கடந்து வந்திருக்கிறேன் என்பதே அஸ்திவாரம்.

தற்போது இயங்கி வரும் சில தொண்டு நிறுவனங் களைப் போல உண்ண உணவும் இருப்பிடமும் தந்து அவர்களை காட்சிப் பொருளாக்குவது அல்ல, அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊழியமும், ஊதியமும், ஊக்கமும் அளித்து அவர்களை தன் சுயத்தில் நிற்கச் செய்வது என் கனவுகளில் ஒன்று.

என்னிடத்தில் வந்தவர்களுக்கு இதுவரை நான் 57 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறுகச் சிறுக உதவி செய்தேன். ஐந்தாவது வரை படித்து இடையிலே நின்ற மாற்றுத் திறனாளிகள் மூவரைப் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வைத்தேன். பிறகு ஒருத்தியை கணிணி வகுப்பில் சேர்த்தேன்.

என் அலுவலகத்தில் இருந்து உபரி வேலைகளைக் கொண்டு வந்து இருவருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தினேன். சிறிய அளவில் இயங்கும் இந்த நிறுவனத்தைப் பெரிய தொழில் நிறுவனமாக மாற்றி, ஆநேக மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளோடு வேலை வாய்ப்பையும், ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தலையாய கனவுகளில் ஒன்றாக இருக்கிறது.

[கனவுகள் தொடரும்.]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *