நீங்காத நினைவுகள் 45

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா

1983 ஆம் ஆண்டு என்று ஞாபகம். குடும்பக் கட்டுப்பாட்டு இலாகாவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு தொடர்புள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்பது பற்றி என்னைக் காணவந்திருந்ததைத் தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘நீங்கள் தப்பான ஆளிடம் வந்திருக்கிறீர்கள்!’ என்று நான் சொன்னதும் அவர் புன்னகை பூத்தார்.
‘இல்லை, மேடம். அது பற்றிய கருத்தைப் பொறுப்பு உணர்வுள்ள மக்களில் எவர் வேண்டுமானாலும் சொல்லலாம். வேறு எந்தத் தகுதியும் அதற்குத் தேவையில்லை!’ என்றார் அவர்.
’சரி. சொல்லுங்கள். என்ன நிகழ்ச்சி? அதில் என் பங்கு என்ன?’
‘கவிஞர் புலமைப்பித்தன், டாக்டர் ஹண்டே, இன்னோர் எழுத்தாளர் ஆகியோருடன் நீங்களும் பங்கேற்று உங்கள் கருத்துகளைச் சொல்லும் நிகழ்ச்சி அது.’
‘நான் வெறும் எழுத்தாளர் மட்டும்தான். எனக்குச் சொற்பொழிவெல்லாம் ஆற்றவே வராதே! அதனால் என்னை விட்டுவிடுங்கள்.’
‘பெரிய சொற்பொழிவெல்லாம் ஆற்ற வேண்டிவராது, அம்மா. உங்கள் கருத்தை நீங்கள் எழுதிப் படித்தாலும் போதும்.’
‘அப்படியானால் சரி. பேச வேண்டிய விஷயம் என்ன?’
‘இரண்டு தலைப்புகள் உள்ளன. ‘குடும்பக்கட்டுப்பாட்டை மனக்கட்டுப்பாட்டால்தான் அமல் படுத்த முடியும்; சட்டத்தால் முடியாது’ என்பது ஒரு தலைப்பு. ‘சட்டம் இயற்றினால்தான் அது சாத்தியப்படும்’ என்பது இன்னொரு தலைப்பு. நீங்கள் இந்த இரண்டு தலைப்புகளில் எதை எடுத்துக்கொள்ள விரும்புவீர்கள்?’
‘சட்டத்தால் மட்டுமே குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். மனக்கட்டுப்பாடு என்பதெல்லாம் சும்மா!’
’சரி. அப்படியானால் ஓர் ஐந்து நிமிஷங்களுக்குரிய பேச்சாக உங்கள் கருத்தை எழுதி எடுத்துவந்து படியுங்கள். இன்னோர் எழுத்தாளர் மனக்கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே அது இயலும் என்கிற தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார். இடையே கலந்துரையாடல் மாதிரி யாரேனும் கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டி யிருக்கும்.’
‘அது பற்றிப் பரவாயில்லை. சொல்லலாம்.’
அவர்கள் இன்ன தேதி நேரம் என்பதை யெல்லாம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
குறிப்பிட்ட நாளில் அந்த நேரத்துக்கும் முன்னதாகப் போய்ச் சேர்ந்தேன். ஒரு பெரிய கூடத்தில் பொதுமக்களுக்கு முன்னால் நிகழ்ச்சி நடப்பதற்கு இருந்தது. சில நிமிடங்களில் அப்போது (அமைச்சராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருந்த) டாக்டர் ஹண்டே (பின்னாளில் அதிமுக கட்சியில் இருந்தவர்கள் கையில் இரட்டைஇலை அடையாளத்தைப் பச்சை குத்திக்க்கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட விதியை ஏற்காமல் அக்கட்சியிலிருந்தே விலகியவர்) என்னைத் தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்தார். அதற்கு ஒரு காரணம் உண்டு. ஷெனாய்நகரில் நாங்கள் அறுபதுகளில் வசித்துவந்த போது அந்தப் பகுதியில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தவர் அவர். அப்போது அவர் அரசியலில் இல்லை. எங்கள் அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது இரண்டு தடவைகள் அவரை இவரிடம் அழைத்துப் போனதுண்டு. அதை நன்றாக நினைவு வைத்துக்கொண்டு அவர் விசாரித்தது வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. ஏனெனில், அங்கிருந்து காலி செய்துகொண்டு நாங்கள் அண்ணா நகரில் குடியேறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.
அனைவரும் அவரவர் இடங்களில் அமர்வதற்கு முன்னால், எங்கள் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்து இக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போன அலுவலர் என்னிடம் வந்து, ‘ஒரு சின்ன மாற்றம். உங்கள் தலைப்பை அந்த மற்றோர் எழுத்தாளர் கேட்கிறார். கொஞ்சம் விட்டுக்கொடுப்பீர்களா?’ என்று கேட்டார்.
’அப்படியானால் நான் என்ன தலைப்பில் பேசவேண்டும்?’ என்றேன்.
’அவர் முதலில் எடுத்துக்கொண்ட தலைப்பில் – அதாவது மனக்கட்டுப்பாட்டால்தான் குடும்பக் கட்டுப்பாட்டைச் சாதிக்க முடியும், சட்டத்தால் முடியாது’ என்கிற தலைப்பில்….’
‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அந்தத் தலைப்பு எனக்கு உடன்பாடானதன்று. எனவே நான் முதலில் தேர்ந்தெடுத்த தலைப்பில்தான் பேச முடியும்.’ என்றேன்.
அவர் மீண்டும் விட்டுக்கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். ‘அப்படியானால் நான் இதில் கலந்து கொள்ள முடியாது. என் கருத்து வேறாக இருக்கும் போது, மாற்றுக் கருத்தை ஆதரித்து எப்படிப் பேசுவது? அது எனக்குச் சம்மதமில்லாத விஷயம்… நான் ஒன்று வேண்டுமானால் செய்கிறேன். நான் இந்தக் கருத்தரங்கிலிருந்து விலகிக்கொள்ளுகிறேன். நான் உங்களைத் தப்பாக நினைக்கவில்லை. இதில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், அது பற்றிப் பரவாயில்லை. எனக்கு அதில் ஏமாற்றமோ வருத்தமோ இல்லை. அந்த எழுத்தாளருக்கே நான் தேர்ந்தெடுத்த தலைப்பைக் கொடுங்கள்…. நான் பார்வையாளராக இருந்துவிட்டுக் கிளம்புகிறேன்…’என்று கோபப்படாமல் அமைதியாகவே பதிலிறுத்தேன்.
அதன் பிறகு அவர் நான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைச் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த அந்த எழுத்தாளரிடம் தெரிவித்தார். வேறு வழியற்றதால் அவர் வழிக்கு வந்தார்.
சட்டத்தால் மட்டும்தான் குடும்பக்கட்டுப்பாட்டைச் செயல் படுத்த முடியும் என்பது கலந்துரையாடலின் முடிவாக அறிவிக்கப்பட்டது. எனினும் நான் விட்டுக் கொடுக்க மறுத்ததை அந்த எழுத்தாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னிடம் அவர் அது பற்றிப் பேசவும் இல்லை. அதன் பின் நாங்கள் நல்ல நண்பர்களானோம் என்பது வேறு விஷயம். இன்றும் அந்த நட்புத் தொடர்கிறது.
இதன் பின் சில நாள்கள் கழித்து ஓர் இலக்கியத் திங்கள் இதழில் ஒரு குறுநாவல் போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. அதற்கு நான் எடுத்துக்கொண்ட விஷயம் மணவிலக்குப் பற்றியது. குழந்தைகள் உள்ள கணவன்-மனைவியர் முடிந்த அளவுக்கு ஒருவரை யொருவர் சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்பது அதில் செய்தியாக வெளிப்பட்டிருந்தது. தன் தகப்பன் தன் தாயைக் கொடுமைப்படுத்துகிறான் என்பதை யறியாத – அல்லது புரிந்து கொள்ளாத – ஆனால், தாய் தந்தை இருவர் மீதும் அன்புடைய – ஒரு குழந்தை தந்தையைப் பிரிய நேர்ந்தால் பிரிவாற்றாமையில் தவிக்க நேர்கிறது. விவரம் தெரிகிற வரையில் அது பெரும் துன்பத்துக்கு உள்ளாகிறது. அதன் உடல், உள்ளம் இரண்டுமே இதனால் பாதிப்பு அடைகின்றன. எனவே, கணவனின் கொடுமைகள் துளியும் சகிக்க முடியாதவையாகவோ, அந்தக் குழந்தைக்கே கூட அது தீமை விளைவிப்பதாகவோ, அல்லது அவளது உயிருக்கே ஆபத்து விளைவிப்பதாகவோ இருந்தாலல்லாது, ஒரு மனைவி தன் குழந்தைக்காகக் கணவனைப் பொறுத்துக்கொண்டுவிட வேண்டும் என்பது அதில் செய்தியாக வெளிப்பட்டது.
இந்தக் குறுநாவலுக்கு எனக்குப் பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்துள்ள சேதியைத் தெரிவித்த அவ்விதழின் தலைமை உதவி ஆசிரியர், ‘என்னம்மா! பரிசு கிடைக்கணும்கிறதுக்காக உங்க கொள்கையை மாத்திண்டீங்களா?” என்று கூசாமல் கேட்டார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
என்னுள் பொங்கிய சினத்தை அடக்கிக்கொண்டு,
“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?” என்று அமைதியாகவே வினவினேன்.
‘இல்லை, நீங்கள் பெண்ணுரிமைவாதி யாயிற்றே? பெண் கணவனைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களே என்பதனால் கேட்டேன்,’ என்றார் அவர்.
‘இதற்கு முன்னால் மணவிலக்குப் பற்றி நான் எழுதியதே கிடையாதே! அந்தத் தலைப்பில் நான் எழுதிய முதல் கதை இது. உரிமையின் பெயரால் பெண்கள் அற்பக் காரணங்களுக்காகச் சண்டை போட்டுக் குடும்ப அமைப்பைச் சிதைக்கிற அளவுக்குப் போகலாம் என்று எந்தக் கதையிலும் நான் இதற்கு முன்னால் பெண்களுக்கு யோசனை சொல்லவில்லையே! எதை வைத்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்? பெண்கள் அடிமைகளாக இருக்கக்கூடாது என்று மட்டும்தானே கூறி வந்துள்ளேன்? பரிசுக்கு ஆசைப்பட்டுக் கொள்கையை விட்டுக்கொடுக்கும் ஆளில்லை நான்!’ என்று என் எரிச்சலை அடக்கியவாறே பதில் சொன்னேன்.
’சரி, சரி!’ என்று சொல்லிவிட்டு அவர் இணைப்பைத் துண்டித்தார். எனக்கு ஆத்திரம் வந்தாலும், ‘அவரவர் புத்தி அவரவர்க்கு’ என்று தோன்றியது. சில் நாள்கள் கழித்துப் பரிசுத் தொகைக்கான காசோலை அந்த இதழிலிருந்து அஞ்சலில் வந்து சேர்ந்தது. நான் அடக்கிவைத்திருந்த ஆத்திரம் இந்த இடைவெளியில் சிறிது சிறிதாக அதிகரித்துவிட்டிருந்தது. அந்தக் காசோலையை அவர்களுக்கே திருப்பியனுப்பினால் என்ன என்று தோன்றியது. எனினும் அதுவும் சரியாகப்படவில்லை. அந்த உதவி ஆசிரியர் அப்படிப் பேசியதால் மனம் புண்பட்டு அதைத் திருப்புவதாய் நான் என் கடிதத்தில் காரணம் சொல்லவேண்டி வரும். அது அந்த உதவி ஆசிரியரை ஏதேனும் சிக்கலுக்கோ அல்லது தொல்லைக்கோ ஆளாக்கிவிட்டால் என்ன செய்வது என்கிற உறுத்தலும் விளைந்தது. எனவே பேசாமல் இருக்கத் தீர்மானித்தேன்.
சில நாள்கள் கழித்து அவ்வுதவி ஆசிரியர் ஒரு விபத்தின் காரணமாகத் தம் கையை இழக்கவோ அல்லது கைமுறிவுக்கு ஆளாகவோ நேர்ந்தது. இச்செய்தியை வெளியிட்டு வேறோர் இதழின் ஆசிரியர் அவருக்காக நன்கொடை கேட்டு அறிவிப்புச் செய்தார். எனக்குக் கிடைத்த அந்தப் பரிசுத்தொகைக்கு ஒரு காசோலையை அனுப்பி வைத்தேன். ‘பரிசுக்கு ஆசைப்பட்டுக் கொள்கையை மாற்றிக்கொண்டாயா என்று கேட்டீர்களே! அப்படி இல்லை. பணம் எனக்கு ஒரு பொருட்டு அன்று. இதோ, அதே தொகைக்கு ஒரு காசோலையை உங்கள் மருத்துவச் செலவுக்கு அனுப்புகிறேன்!’ என்று மறைமுகமாய் அவருக்கு உணர்த்திவிட்டதாய் என்னுள் ஒரு நினைப்பு! எனினும் எனது செயலின் உட்கிடையை அவர் புரிந்து கொண்டிருந்திருப்பாரா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், நான் செய்தது சரியா தப்பா என்றும் தெரியவில்லை! அந்தத் தொகையின் அடிப்படையில் நான் ஒரு பணக்காரி என்று சிலர நினைத்திருக்கக் கூடும். ’கூடும்’ என்ன! நினைத்துவிட்டார்கள்தான். அதன் பின் என்னிடம் பண உதவி கேட்டுப் பலர் கடிதம் எழுதலானார்கள். சிலர்க்கு மட்டும் உதவ `முடிந்தாலும் பலருக்கு எனது இயலாமையைத் தெரிவித்துக் கடிதங்கள் எழுத வேண்டியதாயிற்று.
………..

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *