வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2

This entry is part 33 of 33 in the series 12 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா
2.
“ராஜாவை இன்னும் காணோமேடி? அஞ்சரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் முடிஞ்சு உடனே கிளம்பினா ஆறரைக்குள்ளே வீட்டில இருக்க வேண்டாமோ? மணி ஏழாகப் போறதே!” என்று புலம்பியபடி பருவதம் அந்தச் சின்ன வீட்டுப் பகுதியில் உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.
“நீ இப்படிப் புலம்பிண்டே நடையா நடந்தா மட்டும் அவன் சீக்கிரம் வந்துடுவானா என்ன! ஏற்கெனவே முட்டிவலின்னு சொல்லிண்டு எதுக்கு இப்படி அலையறே? பேசாம உக்காரேன் ஒரு இடத்துலே. அவன் டைபிஸ்ட் ஆச்சே? தவிர இன்னைக்குத்தான் முதல் முதலா புது வேலையில சேர்ந்திருக்கான். முதல் நாளே மணி அஞ்சரை ஆயிடுத்து, நான் வீட்டுக்குப் போறேன்னு கிளம்பி வந்துட முடியுமா?” என்று மாலா கத்தினாள்.
“அதெல்லாம் யாருடி இல்லேன்னா? காலங்கார்த்தால கிளம்பிப் போன பிள்ளை. காப்பி மட்டும் குடிச்சுட்டுப் போயிருக்கான்.”
“அதான் சொன்னானேம்மா – வேலை செய்யற கம்பெனியிலேயே மத்தியானச் சாப்பாடும் போடுவான்னு. ரெண்டு வேளை காப்பியோ டீயோ வேற குடுப்பாளாமே! மறந்துட்டியா அவன் சொன்னதை?” என்று கோமதி ஞாபகப்படுத்தினாள்.
“ஆமாண்டி. மறந்துதான் போயிட்டேன். இப்பல்லாம் முக்கியமான விஷயங்கள்லாம் கூட சட்னு ஞாபகம் வரமாட்டேங்கிறது. ஆச்சே. அம்பத்தஞ்சு வயசாச்சு. மனசுல ஒரு சந்தோஷம் இருந்தா அல்ப விஷயங்கள் கூட ஞாபகம் இருக்கும். அதான் இல்லியே!” என்ற பருவதம் அடுக்களையை ஒட்டி இருந்த தாழ்வாரப் பகுதியில் கால்நீட்டி உட்கார்ந்தாள்.
“ஆஃபீஸ் பேரு என்னன்னு சொன்னான்?”
“அது ஆபீஸ் இல்லேம்மா. கம்பெனி!” என்று அருகே பம்பரம் விட்டுக்கொண்டிருந்த ஜெயமணி இடைமறித்தான்.
“சரிதாண்டா. ஏதோ ஒண்ணு. ஆஃபீஸ்னா என்ன, கம்பெனின்னா என்ன? ரெண்டும் ஒண்ணுதான். ரெண்டுமே வேலை செய்யற இடம்தான். ரொமபத் தெரிஞ்சவன் மாதிரிதான் பேச்சு!” என்று அம்மாவுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டு, “ஸ்க்ரூ, ஆணி, இரும்புத் தாழ்ப்பாள். கெணத்து ராட்டை இது மாதிரியான சாமான்கள் செய்யற தொழிற்சாலைம்மா அது. ராம்சன் அண்ட் ராம்சன்னு பேரு அந்தக் கம்பெனிக்கு,” என்று புன்னகை செய்தாள் கோமதி.
அந்தச் சமயத்தில் அவர்கள் பகுதியின் நுழைவாயிலில் நிழல் தட்டியது. எல்லாருமே திரும்பிப் பார்த்தார்கள். பருவதம் நீட்டிக்கொண்டிருந்த தன் கால்களை மடக்கிக்கொண்டாள்.
“அம்மா! ராஜாவோட ஃப்ரண்டும்மா!” என்ற மாலா சட்டென்று உள்ளே ஒதுங்கிக்கொண்டதும், கணம் போல் அவள் முகத்தில் தோன்றிய வெட்கமும் பருவதத்தின் புருவங்களை உயர்த்தின.
“வாப்பா!”
அகலமும் உயரமுமாய் வந்து நின்ற ரமணியைப் பார்த்து அவளுக்கே வெட்கம் வரும் போலிருந்தது. ‘எப்படி மாறிட்டான் இந்த ரமணி!’
அடர்த்தியான கிருதாக்களும் மீசையும் மட்டுமே அவன் முகத்தில் தெரிந்த மாற்றங்கள். ஆனால் அந்த அகலமும் உயரமும்தான் அவனை ஒன்றரை மடங்காகத் தெரியச் செய்துகொண்டிருந்தன.
“சவுக்கியமாம்மா?”
“ஏதோ இருந்திண்டிருக்கோம். நீ எப்படிப்பா இருக்கே? உன்னைப் பார்த்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுத்துன்னு நினைக்கிறேன். இல்லியா?”
“ஆமா.”
பம்பரம் ஆடிக்கொண்டிருந்த ஜெயமணி ஓடி வந்து ஒரு பாயை எடுத்து விரிக்க, ரமணி அதில் அமர்ந்துகொண்டான். அவன் பார்வை சுழன்றது. நண்பனின் வீடு முன்பு இருந்ததைக் காட்டிலும் மேலும் அதிக ஏழைமையில் உழன்றது புரிய, அவனது தொண்டைக் குமிழ் ஏறி இறங்கியது.
“வேலை பார்க்கிறியா?”
“ஆமாம்மா. ஒரு ப்ரைவேட் கம்பெனியில சீனியர் ஸ்டெனோவா யிருக்கேன்.”
“ரெண்டு வருஷமா இந்த்ப் பக்கம் எட்டியே பார்க்கல்லியே நீ?”
“நான் இங்க வரல்லையே ஒழிய, ராஜாவை அப்பப்ப பார்த்துண்டுதான் இருந்தேன்.”
“அப்படியா? அவன் சொல்லவே இல்லே. அவனுக்கு ஆயிரங்கவலை. இன்னிக்கு ஏதோ வேலை கிடைச்சிருக்குன்னு போயிருக்கான்.”
“வெளியூர்லயா?”
“இல்லேல்லே. இங்க மெடாஸ்லதான். குருவி தலையில பனங்காயை வெக்கிற மாதிரி அவன் தலையில இந்த வீட்டுக் கவலை எல்லாத்தையும் சுமத்தியாச்சு. அவன் சிரிச்சுப் பார்த்தே எத்தனை நாளாச்சு! ஆச்சு. மூத்தவ மாலாவுக்கு இருபத்துமூணு வயசு ஆறது. அடுத்தவ கோமதிக்கு இருபது ஆயிடுத்து. பெரியவளை விடவும் சின்னவ மதமதன்னு வளர்ந்து அவதான் அக்காக்காரின்னு சொல்ற அளவுக்கு இருக்கா. ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் பண்ணியாகணும். வேலைக்கு அனுப்பலாம்னா, ரெண்டும் ஒம்பதாங் கிளாசோட படிப்பை நிறுத்திடுத்துங்க…”
ரமணியின் முகம் சிறிது வாடியது.
கதவிடுக்கின் வழியே அதைக் கவனித்த மாலா அம்மாவின் மீது கசப்புக் கொண்டாள். தன்னையும் அறியாது அவள் சூள்கொட்டினாள். அந்த ஓசை வெளியேயும் கேட்டுவிட்டதால், ரமணி தலை உயர்த்திப் பார்த்தான். கதவிடுக்கில் தெரிந்த ஒற்றைக் கண்ணில் அவன் பார்வை பதிந்தது. அது மாலாவின் கண் என்பதும் புரிந்தது. கோமதியின் விழிகளைக் காட்டிலும் மாலவின் விழிகள் பெரியவை என்பதை அவன் கவனித்து வைத்திருந்தான். அவளது பச்சைப் புடைவையின் ஒரு சிறு பகுதியும் கதவிடுக்கின் வழியே தெரிந்து அவனது ஊகத்தை உறுதி செய்தது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தன்னைப் பார்த்ததில் அவளுள் ஒரு கூச்சம் விளைந்திருந்ததை அவன் புரிந்து கொண்டான். மாலா தன் கண்ணைக் கதவிடுக்கிலிருந்து நகர்த்திக் கொண்டதும் அவனும் தன் பார்வையை நீக்கிக்கொண்டான். ‘பாவம் இந்த இரண்டு பெண்களும்!’ எனும் எண்ணம் அவன் மனத்தில் எழுந்தது.
“மாலா! ரமணிக்குக் காப்பி கலந்து எடுத்துண்டு வாடி!”
“பால் காய்ஞ்சுண்டு இருக்கும்மா. இதோ! ரெண்டே நிமிஷத்துல ரெடியாயிடும்!”
“இந்த நேரத்துல காப்பி எதுக்கு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இன்னொரு நாள் மத்தியான நேரத்துல் வந்து குடிக்கிறேன்.. அது சரி, ராஜா எந்தக் கம்பெனியிலெ வேலைக்குப் போயிருக்கான்?”
“என்னமோ ராம்சன் அண்ட் ராம்சன்னு பேரு சொன்னாம்ப்பா.”
“அப்படியா? நான் கேள்விப்பட்டதில்லே. ரொம்ப நாளுக்கு முந்தி அந்தப் பேர்ல கார் பார்ட்ஸ் பண்ற கம்பெனி ஒண்ணு இருந்தது. ஆனா மூடிட்டாங்க. ஒருக்கா, மறுபடியும் திறந்துட்டாங்களோ என்ன்வோ. எனக்குத் தெரியாது.”
“கார்க் கம்பெனி இல்லேப்பா அது. என்னமோ இரும்பு சாமான்கள் பண்ற கம்பெனின்னான் –ஸ்க்ரூ, ஆணி, கதவுத் தாழ்ப்பாள் இந்த மாதிரி. ஆயிரம் ரூபா சம்பளம் தர்றேன்னிருக்காங்களாம். இந்த 1995 இலே ஆயிரமெல்லாம் எந்த மூலைக்கு? அது சரி, உனக்கு என்ன சம்பளம்?”
“மூணாயிரம்மா. அது தவிர வருஷா வருஷம் எட்டு பெர்செண்ட் போனஸ் தருவாங்க.”
பருவதத்தின் கண்கள் அகன்றதும் உதடுகள் பிளந்துகொண்டதும் ரமணியின் பார்வைக்குத் தப்பவில்லை. ஆனால் உடனேயே அவள் தன் முகக்குறிப்பைச் சாமர்த்தியமாய் மாற்றிக் கொண்டதையும் அவன் கவனித்தான்.
“எங்க ராஜாவுக்கும் உன்னோட கம்பெனியில ஒரு வேலை வாங்கிக் குடேம்ப்பா! முடியுமா?”
“ட்ரை பண்ணிப் பார்க்கறேம்மா. ஆனா, எதுவும் இப்ப நிச்சயமாச் சொல்ல முடியாது.”
“எப்படியாவது வாங்கிக் குடுப்பா. புண்ணியமாப் போகும். நீ என்னென்னைக்கும் சவுக்கியமா யிருப்பே. ரெண்டு ஏழைப் பொண்ணுகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்ச புண்ணியம் கிடைக்கும் உனக்கு!”
“ஆகட்டும்மா… மணி ஏழாச்சே! ராஜா ஏன் இன்னும் வரல்லே?… அப்ப நான் கெளம்பறேன். ராஜா வந்ததும் சொல்லுங்க. அப்புறம் சாவகாசமா ஒரு ஞாயித்துக் கெழமையன்னிக்கு வர்றேன்….” – ரமணி எழ முயன்றான்.
“உக்காருப்பா. காப்பியைக் குடிச்சுட்டுப் போ!” என்ற பருவதம் எழுந்து போய்க் காப்பியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் குடித்துவிட்டுத் தலையசைத்து விடை பெற்றான்.
அவனை வழியனுப்ப வாசல் வரை பின் தொடர்ந்து சென்ற பருவதம், “நான் சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோப்பா… ராஜா வேலை விஷயம்…” என்றாள் கெஞ்சுதலாக.
“நீங்க சொல்லவே வேணாம்மா. நான் கண்டிப்பா ஞாபகம் வெச்சுப்பேன்,” என்று கூறிப் புன்னகை செய்த ரமணி படியிறங்கிப் போனான்.
கதவைச் சாத்திக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் உள்ளே வந்த பருவதம் தன் பழைய இடத்தில் முன்பு போலவே கால் நீட்டியவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
ஜாடையாக மாலாவைக் கவனித்த போது அவள் தன் மடியில் ஒரு பத்திரிகையை வைத்துக்கொண்டிருந்த போதிலும், அவள் கவனம் அதைப் படிப்பதில் இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது. வரிக்கு வரி தாவாமல் ஒரே இடத்தில் நிலைகுத்தி நின்ற அவள் விழிகளுக்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும் என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். அலையாமல் நின்ற அவள் விழிகளிலிருந்து அவள் மனம் அலைந்துகொண்டிருந்தது என்பதை அவள் தெற்றெனத் தெரிந்துகொண்டு தன்னுள் கசப்பாய்ச் சிரித்துக்கொண்டாள். ரமணியின் திடீர் வருகை தன் மகளின் சிந்தனையைக் கிளர்த்திவிட்ட நிலை புரிந்ததில் அவளுக்கு உள்ளூற வருத்தம் ஏற்பட்டது.
‘அவர்கள் எங்கே? நாம எங்கே? அடி, அசட்டுப் பொண்ணே! கனவுகள்லே மிதக்காதே!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட பருவதம், “சாதக் குக்கரை இறக்கிட்டேதானே?” என்று வினவி அவளது கனவுலகில் குரூரமாய்க் குறுக்கிட்டாள்.
ஒரு திடுக்கீட்டுடன் கண்களை உயர்த்திப் பார்த்த மாலா, “அப்பவே இறக்கிட்டேனேம்மா! விசில் சத்தம் உனக்குக் கேக்கல்லையா?” என்றாள்.
அப்போது அவள் குரலில் தெறித்த எரிச்சலையும் கவனிக்கப் பருவதம் தவறவில்லை. மறுபடியும் பருவதத்திடமிருந்து ஒரு பெருமூச்சு சீறிப் பாய்ந்தது.
“என்னமா வளர்ந்துட்டான் அந்த ரமணிதான்! ராஜாவை விட உயரம். அவ்னைவிடவும் பருமன். நல்ல செகப்பு வேற. நீ மட்டுமென்ன? அவனை மிஞ்சுற அழகுதான். ஆனா அவனோடது செயலுள்ள குடும்பம். நம்ம மாதிரி ஏழைப்பட்ட குடும்பமா இருந்தா உன்னை அவனுக்குக் குடுக்கிறது பத்திப் பேசிப் பார்க்கலாம்!” என்ற பருவதம் மகளை உற்று நோக்கினாள்.
உடனே மாலா தன் முகத்துக்கு ஏறிய சிவப்பை மறைக்கும் நோக்கத்துடன் கையில் இருந்த வார இதழை முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்துக்கொண்டாள். இதையும் கவனிக்கத் தவறாத பருவதம் மீண்டும் ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.
“ஏம்மா? செயலுள்ள குடும்பமா யிருந்தா என்னவாம்? நம்ம ராஜாவுக்கு சிநேகிதன்தானே? நம்ம மாலாவைச் சும்மா, செலவில்லாம பண்ணிக்கக் கூடாதா என்ன! மனசிருந்தா மார்க்கமுண்டு!” என்று கோமதி குறுக்கே பாய்ந்த போது பருவதத்துக்குச் சிரிப்புத்தான் வந்தது.
வாய் விட்டே சிரித்த பின், “நீ சொல்ற மாதிரி யெல்லாம் சினிமாவிலதான் நடக்கும்! முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமோ?” என்ற் பருவதத்துக்குத் தான் பேசியதை மாலா ரசித்திருந்திருக்க மாட்டாள் என்பது புரியவே செய்தது. தொடர்ந்து, ‘இதுமாதிரி அசட்டுத்தனாமான எண்ணங்களை யெல்லாம் ஆரம்பத்துலேயே கிள்ளி எறிஞ்சுடணும். பெரிசா வளர்த்துண்டா பிற்பாடு அவஸ்தை, மனக்கஷ்டம் எல்லாம் வரும்!’ என்றும் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
“ஏம்மா சினிமாவையும் டிராமாவையும் இழுக்கறே? அசல் வாழ்க்கையிலேயும் எத்தனையோ நல்லவங்க இல்லையா என்ன! மனசு மட்டும் இருந்தா யார் வேணும்னாலும், வேற யாருக்கு வேணும்னாலும் எந்த உதவியும் பண்ணலாம். ராஜா வந்ததும், எதுக்கும், ரமணியைப் பத்தி இந்த விஷயமாயும் அவன் காதுல ஒரு வார்த்தை போட்டு வெச்சுடும்மா!” என்று நூற்றுக்கிழவியைப்போல் தொடர்ந்து பேசிய கோமதியைப் பருவதம் வியப்பாகப் பார்த்தாள். ‘காலந்தான் எப்படி மாறிப் போயிடுத்து! அக்காவோட கல்யாண விஷயத்துல தங்கைக்காரி மூக்கை நுழைச்சு அபிப்பிராயம் சொல்றாளே! நாளைக்குத் தன்னோட கல்யாண விஷயத்துல கூட இதே மாதிரி துணிச்சலாப் பேசுவாளோ?’
இருப்பினும், “சொன்னாப் போச்சு!” என்றவாறு அவள் ஜாடையாக மாலாவின் புறம் பார்த்த போது, அப்போதும் அவள் தன் முகத்துக்கு எதிரே பிடித்துக்கொண்டிருந்த வார இதழை நீக்கிக்கொள்ளவில்லை என்பதைக் கண்டு பருவதம் மேலும் ஒரு முறை நெட்டுயிர்த்தாள் – ரமணியின் வருகை தங்கள் குடும்பத்தில் ஒரு சூறாவளியை விளைவிக்கப் போவது பற்றி ஏதும் அறியாமலேயே.
– தொடரும் –

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *