16. இயற்கையின் பேராற்றல் காதல்.
1962 ஆம் வருடம் ஏப் ரல் எட்டாம் நாளன்று ” சென்னை ராஜ்யம் ” கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார்.
அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு அவர்கள் மலையில்தான்
லதாவின் வீடு அருகில் இருந்தனர். ஆனால் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வரிசை வீட்டுக்குச் சென்று விட்டனர். அந்தப் பகுதி
சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதனால் நான் லதாவைத் தினமும் பேருந்து நிற்கும் இடத்தில் பார்க்க முடியாது.அது ஒரு பெரிய குறையாக இருந்தாலும், அப்பா வரும் வரை நாங்கள் அதிகமாக சந்தித்துக் கொள்ளலாம் என்பதில் ஆறுதல் கொண்டோம்!
மோசஸ் வில்லியம் சித்தப்பா அப்போது பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் பணி புரிந்தார்.அதற்கு முன் ஜப்பானியர் சிங்கப்பூரைப் பிடித்து ஆண்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் இருந்துள்ளார். அப்போது இந்திய விடுதலைக்காக அந்த இராணுவம் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் தயார் ஆனது.
சித்தப்பாவுக்கு பதின்மூன்று பிள்ளைகள். மூத்தவன் ஜெயபாலன் எங்கள் துவக்கப் பள்ளியில் பயின்றபின் லதா பயின்ற அவுட்ராம் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
சித்தப்பா பகுத்தறிவு சிந்தை மிக்கவர். அவருடைய பிள்ளைகளுக்கு அவர் இட்டுள்ள பெயர்களே அதைக் கூறும். நேசம், மதுரம், அண்ணாதுரை, ஜெயபாக்கியவதி, அன்பழகன்,வெண்ணிலா ,ராஜா, கென் னடி, ஜேக்குலின்,ராணி, மலர், எக்னஸ் என்று பெயர்கள் சூட்டியிருந்தார்.பிள்ளைகள் மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர்.
கிறிஸ்துவராக இருந்தாலும் தினமும் மாலையில் வீட்டு ஜெபத்தில் கலைஞரின் ” பராசக்தி ” திரைப்படப் பாடலைதான் பாடி ஜெபம் செய்வார்கள்! தன்னை கலைஞரின் தம்பி என்றும் கூறிக்கொள்வார்.
” எல்லோரும் வாழ வேண்டும் – உயிர்கள்
இன்புற்றிருக்க வேண்டும். ” என்ற பாடல்தான் பாடி ஜெபிப்பார்கள்.( இப்போது நினைத்துப் பார்த்தாலும் இது பெரும் ஆச்சரியத்தையே உண்டுபண்ணுகிறது! )
அப்பாவைப் போலவே அவருக்கும் முன்கோபம் அதிகம்தான். அப்பாவின் சின்னமா மகன் அவர்.
சின்னம்மாள் கிரேஸ் மலையாளப் பெண்.மலாயாவில் சிரம்பானில் பிறந்து வளர்ந்தவர்.மிகவும் அன்பானவர். பல வருடங்களாக கடையிலும், அப்பாவின் சமையலிலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு சின்னம்மாவின் ருசியான சமையல் பிடித்திருந்தது. அப்பா ஊரிலிருந்து திரும்பும் வரை அவர்களில் ஒருவனாகவே வாழ்ந் தேன்.
அம் மாதம் பதினேழாம் நாள் லதாவும் நானும் இரண்டாவது முறையாக எங்களுக்குப் பிடித்தமான நீர்த்தேக்கம் சென் றோம். அப்போது ஓர் இளம் டாக்டர் பற்றிய சிறுகதை எழுதியிருந்தேன். அதை அவள் அருகில் அமர்ந்து படி த்துக் காட்டினேன்.
அன்று அவள் ரொட்டித் துண்டுகளு ம் சார்டின் மீன்களும் கொண்டு வந்திருந்தாள். சுவைத்து உண்டு மகிழ்ந்தோம்.
அந்த ரம்மியமான சூழலில் மனதுக்குப் பிடித்தவளுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தது மனோகரமாக இருந்தது.
உணர்ச்சிப் பெருக்கில் ஏதேதோ செய்தோம்! எல்லாமே இருவருக்கும் புதுமையான அனுபவம்!
அன்று அவளின் மடியில் படுத்துக்கொண்டு கோவலன் – கண்ணகி கதையைக் கூறி முடித்தேன்.அப்போதே நான் சிலப்பதிகாரத்தை விரும்பிப் படித்துள்ளேன்.
அதில் கலைஞனான கோவலன், நாட்டியத் தாரகை மாதவி ஆகிய இருவரின் பாத்திரப் படைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது.. கலையால் காதலில் கருத்தொருமித்தவர்களாகத் திகழ்ந்த அவர்கள் ஒரு பாடல் காரணமாக எழுந்த சந்தேகத்தால் நிரந்தரமாகப பிரிய நேர்ந்தது நெஞ்சை நெகிழ வைப்பதாகும்!
அந்த இளம் பருவத்தில் தனிமைச் சூழலில் நாங்கள் இருந்தபோதுங்கூ ட அங்கு இலக்கியம் பற்றி அவளிடம் கூறிக்கொண்டிருந்தது வினோதம்தான்!
இளம் பிராயத்தில் தோன்றும் இலக்கிய ஆர்வம் எவ்வளவு சக்தி மிக்கது என்பது அப்போது தெரிந்தது! காதலோடு இலக்கியம் இரண்டறக் கலந்தது என்பதை அன்றே நான் தெரிந்து கொண்டேன்.
மே மாதம் 8ஆம் நாள் எங்களுடைய மூன்றாவது சந்திப்பு அதே இடத்தில் நடந்தேறியது. அப்போது நாங்கள் ஆண் – பெண் வித்தியாசங்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். அதன்பின்பு மீண்டும் பழைய கதைதான்…….
அப்பா தமிழகத்தில் இருந்தபோது லதா எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி அருமைநாதன் மூலம் தந்து அனுப்பினாள்.
அவற்றில் சிலவற்றை நான் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். அந்த இரகசிய நாட்குறிப்பை கோவிந்தசாமி வீட்டில்தான் பத்திரப்படுத்தியிருந்தேன். அது அப்பாவிடம் மாட்டிக்கொண்டால் வேறொரு சாட்சியமும் தேவையா அவருக்கு?
11. 5. 1962 இல் வந்த கடிதம் .
அன்புள்ள ……
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்க ள் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு நான் உடல் நலக் குறைவுடன் உள்ளேன். அதற்குப் பிறகு நான் புதன்கிழமை பள்ளி செல்லவில்லை. காரணம் எனக்கு கடுமையான தலைவலி.
செவ்வாய்க்கிழமை நான் இரவு 7.10 க்குதான் வீடு திரும்பினேன்.
” ஏன் இவ்வளவு தாமதம்? ” என்று அம்மா கேட்டார்.
” பஸ் கிடைக்கவில்லை. ” என்றேன்.
” உன்னுடன் இருந்ஹது யார்? ” என்று கேட்டார்.
” சீனத் தோழி கயாக் கிம். ” என்றேன்.
நல்ல வேளையாக அப்பா எனக்கு சாதகமாகப் பேசினார். ” ஆமாம்… அவுட்ராம் ரோட்டில் பஸ் கிடைப்பது சிரமம்தான்.” என்று கூறி என்னைக் காப்பாற்றினார். எனக்கு ஒரே சந்தோஷம்தான்
நன் இக் கடிதத்தை என்னுடைய வகுப்பில் எழுதுகிறேன். மலாய் வகுப்பு முடியப்போகிறது.ஆதலால் நான் இதை முடிக்கிறேன்.இப்போது மணி 4.30. மணியும் அடித்துவிட்டது.
என்னை பற்றி அதிகம் எண்ண வேண்டாம்.உங்கள் பாடங்களைக் கவனமாகப் படியுங்கள்.நீங்கள் தேர்வு நல்லா எழுதாவிட்டால் எல்லாரும் பழியை என்மேல் சுமத்துவார்கள்.ஆதலால் நன்றாகப் படிக்கவும்…. யாரோ ஒருத்தி “
நான் நாட்குறிப்பு அன்றாடம் எழுதிவந்தாலும், சில நாட்கள் எழுத முடியாமல் போவதுண்டு. அப்போது மு. வ . சொன்ன கருத்தையே நினைத்துக் கொள்வேன்.
” நாள்தோறும் தன முகத்தையும் தலையையும் ஒழுங்கு படுத்திக் கொள்வதுபோல், தன் உள்ளத்தையும் ஒழுங்கு படுத்திக் கொள்ளவேண்டும். அதுபோல் ஒழுங்கு படுத்த நாட்குறிப்பு எழுதும் பழக்கம் வேண்டும். “
மீண்டும் தொடர்ந்து எழுதலானேன். பின்பு ஒரு காலத்தில் அவை அனைத்தையும் சேகரித்து, தொகுத்து புத்தக வடிவில் எழுத வேண்டும் என்று உறுதி பூண்டேன். வாழ்க்கை ஒரு தொடர் கதை என்பார்கள். நாட்குறிப்பில் அன்றாடம் பதிவு செய்வதே நீண்ட தொடர்கதையாகிவிடும் என்று நம்பினேன்.
மு. வ. வின் ” அல்லி ” நாவலை அறிமுகம் செய்யும் ம. ரா. போ. குருசாமி சில அருமையான கருத்துக்கள் கூறியுள்ளார். அவை காதலைப் பற்றியதாகும்.
‘ உலகக் கலைஞர்கள் எந்த உணர்ச்சியை மிகுதியாகக் கையாண்டிருக்கின்றார்கள்? கலைத் துறையில் மிகுதியாகக் கொலை செய்யப்பட்டிருக்கிற உணர்ச்சி எது? – இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான் – காதல்!
யாவரும் எளிதிலே எடுத்தாண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மிகச் சிலரே காதலைக் கையாள்வதில் வெற்றி பெறுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை?
காதல், எல்லாம் வல்ல, எங்குமாய்ப் பரவி நிற்கின்ற ஒரு பேராற்றல் ஆகும். நீக்கமற நிறைந்திருக்கின்ற இந்தக் காதல்தான் இயற்கையின் கருவிகள் எல்லாவற்றிலும் ஆற்றல் மிக்கது. காதலில் இயற்கை இவ்வளவுதான் என்றால், கலைத்துறையில் அது கொலை செய்யப்படுவதற்கு வழி இல்லை. எவர் வேண்டுமானாலும் எடுத்தாளலாம். ஆனால், வன்மை மிக்க அவ்வுணர்ச்சி மென்மையின் உயிராகவும் இருக்கிறது. நுட்ப நாகரிகமே கா தலின் உயிர்ப்பு. இயல்பால் மென்மையும்,ஆற்றலால் வன்மையும் பெற்றிருப்பதால், கா தலைக் கையாள்வதில்
அகநானூறு, குறுந்தொகைகளின் உலகம் உயர்ந்தது … ‘ அல்லி ‘ அந்த உலகத்தைச் சேர்ந்தது. “
வேறு சில அபூர்வக் கருத்துக்களையும் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். அவற்றில் ஒன்று திருமணம் பற்றியது.
” பெற்றோருக்காக திருமணம் செய்துகொள்வது – பேதைமை .
முன்பழக்கம் இல்லாத குடும்பத்தில் யாரோ சொல்லும் சொல்லைக் கேட்டு பெண் கொடுப்பது – அஞ்சத்தக்கச் செயல்.
பெண்ணும் பிள்ளையும் ஒருவர்க்கொருவர் நிழற்படத்தை அனுப்பிப் பார்த்தல் – பயன் அற்றது.
திருமணத்திற்கென பெரிய விருந்து, கச்சேரி முதலியவை வைத்து செலவு செய்வது – அறியாமை.
திருமணம் நடந்தபிறகு தனி வீட்டில் புதிய இல்லறம் தொடங்குமாறு செய்வதே – ஆறம்.”
அதுபோன்று பல நூல்களில் படித்து நான் பல நல்ல கருத்துகளை உணர்ந்து கொண்டேன். அவற்றையே ன்னுடைய வாழ்க்கையின் இலட்சியமாக்கினேன்.
இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். வெளியுலகத்தில் ஒரு போராட்டம் இருக்க வேண்டும். இல்லையானால் இளமை எண்ணங்கள் சும்மா இருக்க விடாது. நாடி நரம்புகளின் ஆசைகள் உடலைக் கெடுத்துவிடும். அந்த ஆசைக்கு இடம் இல்லாமல் இருபது வயது இளைஞன் இருக்க வேண்டுமெனில் ஒரு குறிக்கோள், ஒரு வெறியுடன் வெளியுலகைக் காண வேண்டும்.
எனது வாழ்கையின் குறிக்கோள் ஓர் தூயத் தமிழனாக வாழ வேண்டும் என்பதே.
தூயத் தமிழன் என்பவன் யார் என எண்ணினேன். அவன் வள்ளுவர் காட்டும் வழியில் செல்பவன். தமிழே உயிரென வாழ்பவன்.
தமிழருக்கென்று ஓர் இயக்கம் உள்ளதெனில் அது திராவிட முன்னேற்றக் கழகம் என்று நம்பினேன். தமிழருக்கென ஒரு தலைவன் உண்டென்றால் அவர் அறிஞர் அண்ணாவென முடிவெடுத்தேன்.
தினம் திருக்குறள் படிக்க வேண்டும். தமிழில் நிறைய எழுத வேண்டும். நல்லவனாக வாழ்ந்து காட்டவேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி, கொண்ட குறிக்கோளில் வெற்றி பெற்று தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை பெற்றுத்தர வேண்டும் என்ற ஆசைகளும் அப்போது நெஞ்சிலே அலைமோதின!
( தொடுவானம் தொடரும் )
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு