இந்திய “ மோடி “ மஸ்தான்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

சிறகு இரவிச்சந்திரன்

அந்த காலத்தில் எல்லாம், மக்கள் நெரிசல் இல்லாத தியாகராயநகர் உஸ்மான் சாலையில், இப்போதிருக்கும் பேருந்து நிலையம் அருகில், மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பர். சிறுவனான எனக்கு, ‘அங்கே என்ன வேடிக்கை?’ என்று பார்க்க ஆவலாக இருக்கும். அதிக உயரம் இல்லாததால், எக்கியோ அல்லது நின்றிருப்பவர்களின் கால்களுக்கு இடையில் புகுந்தோ, நான் கண்ட காட்சி இன்னமும் என் நினைவில்.

அழுக்கு லுங்கியும், கட்டம் போட்ட சட்டையும், கண்களில் மையுமாக ஒருவர் கரு கரு மீசையுடன் அங்கே கத்திக் கொண்டிருப்பார். ஓரத்தில் ஒரு சிறிய புள்ளை அடித்து, கீரிப் பிள்ளை ஒன்றினை கட்டி வைத்திருப்பார். கீரி இங்கேயும் அங்கேயும் ஓடி, கயிறால் இழுபட்டு, ஓய்ந்து போய், ஓரமாய் அமர்ந்து கொண்டு குறுகுறு கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும். அழுக்கடைந்த மூங்கில் பிரம்பு பெட்டிகளில் ஏதோ இருக்கும். பார்வையாளர்கள் கண்கள் அதையே பார்த்துக் கொண்டிருக்கும்.

“ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப்போறேன். இதோ இதோ இங்க பாருங்க “ என்றபடி சட்டென்று ஒரு பெட்டியின் மூடியைத் திறப்பார். உள்ளிருந்து ‘புஸ்’ என்று ஒரு நாகம் தலையை நீட்டி, சட்டென்று எழும்பி, படமெடுத்து ஆடும். கைவிரல்களை மடக்கி, அதன் முன் ஆட்டி, அது கொத்த வரும்போது சட்டென்று கையை இழுத்துக் கொள்வார் வித்தைக்காரர். கூட்டம் சில நிமிடங்கள் மூச்சடக்கி, பிறகு ஏக சமயத்தில் மூச்சை விடும். பல சர்பங்களின் ஓசையாக அது எதிரொலித்து, இன்னும் பீதியூட்டும். “ பல் புடுங்கின பாம்பு சார்.. வாயையும் தச்சிருப்பான். இல்லன்னா எப்பவோ இவன் க்ளோஸ் ‘ என்று அறிவு ஜீவி ஒருவர் கருத்து சொல்லிக் கொண்டிருப்பார். ஆனாலும் அதைப் பரிட்சித்துப் பார்க்க, கூட்டத்தில் எவரும் தயாரில்லை. “ கட்டு விரியன், கண்ணாடி விரியன், பாப்பார விரியன்.. அது என்னா பாப்பார விரியன்னு கேக்கறீங்களா? நெத்தியிலே பாரு.. நாமம் இருக்குது “ அதைக் கேட்டு, ரெண்டொரு பஞ்சகச்சம் பரவசமாகி, கன்னத்தில் போட்டுக் கொள்ளும்.

இந்தியாவிலும் ஒரு மோடி மஸ்தான் வித்தை நடந்தேறப் போகிறது. மோடி பிரதமராகப் போகிறார். “ என்னைப் பேச விடாமல் வாயைக் கட்டி விட்டார்கள்.. ஆனாலும் நான் ஒரு மந்திரக்காரன்.. பேசாமலே எப்படி ஜெயித்தேன் பார்த்தீர்களா!” என்று வாரனாசி நன்றி நவிலும் கூட்டத்தில் பேசியிருக்கிறார் மோடி.. கண்ணைக் கட்டி மோட்டார்  சைக்கிள் ஓட்டும் மேஜிக்கார்ர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இவர் வாயைக் கட்டியும் பேசி ஜெயித்திருக்கிறார். ஆனால் உண்மையான மேஜிக்காரரான பி.சி.சர்க்கார் ஜீனியரின் சித்து வேலைகள் எல்லாம், வாக்குகள் விசயத்தில் எடுபடாமல், தோற்றுப் போனதற்கு குட்டி சாத்தான்களின் மந்திரங்கள் காரணமோ என்னவோ?

‘இந்திய திருநாட்டின் வளர்ச்சியே எனது குறிக்கோள்’ என்கிற வாதத்தை முன்வைத்து களம் இறங்கிய மோடி, ஜெயித்தவுடன் பேச்சை மாற்றிக் கொள்ளாமல், அதையே சொல்லிக் கொண்டிருப்பது கொஞ்சம்  நிம்மதியைத் தருகிறது. ஆனாலும் ஊழலில் திளைத்துக் கொழுத்த அதிகாரிகள் நிரம்பியிருக்கும் பாரதத்தில், இதுவெல்லாம் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

மோடிக்கு முன்னால் இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், பின்னால் உள்ள பிரச்சினைகளை ஆராய்வோம். கட்டுக் கோப்பான கட்சி என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும், மத தீவிரவாதம் அடிநாதமாகக் கொண்ட ஆர் எஸ் எஸ்  அபிமானிகள்தான் இன்னமும் கட்சியின் மேல்தட்டில் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் அத்வானி. என்னதான் பண்பட்ட அரசியல் தலைவர் என்று பெயரெடுத்தாலும், ரத யாத்திரை போய் இந்துக்களை, சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிவிட்ட வரலாறை இந்திய மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பில் அவருக்கு பெரும் பங்குண்டு என்பதையும் வரலாறு அறியும். இன்னொரு பக்கம் நிதின் கட்காரி. ஊழல் புகாரில் பதவியை இழந்த அவர், தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டர். ஜஸ்வந்த்சிங் வெளியேற்றப்பட்டு, சுயேச்சையாக நின்று தோற்றுப் போன தலைவர். அவர் தன் பங்குக்கு குடைச்சலை கொடுத்துக் கொண்டே இருப்பார். அவருக்கு கட்சியின் உள்கட்டு ரகசியங்கள் தெரியும் என்பது கூடுதல் ஆபத்து. வெற்றி போதையில் இருக்கும் அமித்ஷா, எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்றே தெரியாது. அவரும் மோடிக்கு தலைவலிதான். பிரதமர் நாற்காலியின் நான்கு கால்களை, இந்த நால்வரும் பிடித்து ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஆட்டலுக்கு பலியாகி தடுமாறி விழாமல் இருக்கவே மோடிக்கு நேரம் போதாது. இதில் எதிர்கட்சி இல்லாத நாடாளுமன்றம், ஒரு விதத்தில் நரேந்திராவுக்கு சவுகரியம்தான்.

என்னதான் தன் ஆளுமையைப் பயன்படுத்தி, மோடி, தான் ஒரு பின் தங்கிய வகுப்பினன் என்று அத்தாட்சி வைத்திருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு மதவாதிதான். அந்தண மனப்பான்மை கொண்டவர்தான். அதனால் எந்த அளவிற்கு, அவர் மதவாதத்தை ஒதுக்கி வைப்பார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி அவர் செய்ய முடியாது என்பது காங்கிரசாரின் நப்பாசை. இரண்டு மாதம் கூட தாங்க மாட்டார் என்று இப்போதே ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போடவாவது மோடி கொஞ்ச காலம் நிலைக்க வேண்டும்.

மோடியின் வெற்றி விழா பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது. மக்களுடைய ஆசிகள் வேண்டும் நல்லாட்சி புரிய என்றிருக்கிறார். தோழமை கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும் என்கிறார். எல்லோரும் உதவ வேண்டும் என்று அம்மாவுக்கும் மம்மாவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். கட்சியிடமிருந்து ஒரு உதவியும் தேறாது என்கிற கட்டத்தில், வெளியிலிருந்து ஆதரவு தேடுவது தானே புத்திசாலித்தனம்.

மே 20ந்தேதி பா.ஜ.வின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது. அதில் மோடியை அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். ஆட்சி கிடைத்த உடன் போய் உட்கார்ந்து கொள்ளும், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில், துண்டு போட்டு இடம் பிடிக்கும் பயணியின் அவசரம் கிஞ்சித்தும், இல்லாமல் இருக்கிறார் மோடி. இதுவே காங்கிரசாக இருந்தால், ராஜினாமா செய்வதற்கு முன்னே, மன்மோகனின் மடியில் துண்டு போட்டு, அதில் ராகுலை உட்கார வைத்து, சிங்கிற்கு சங்கு ஊதியிருப்பார்கள். 16ந்தேதி முடிவுகள் தெரிந்து, மோடிதான் பிரதமர் என்றான பிறகு, பதினேழே போய் உட்கார வேண்டியது தானே? ஆனால் 17 கூட்டினால் எட்டு வருகிறது. அது இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் ராசியான எண்ணாக இருக்கலாம். ஆனால் இந்துக்களுக்கு அது ஒவ்வாது. அஷ்டமத்துல சனி என்பார்களே! அது மாதிரி ஏதாவது ஆகிவிட்டால்? என்று எந்த சோசியனாவது சொல்லியிருப்பான் போல.. அதனால் அதையும் தவிர்த்து விட்டது பா.ஜ. அடுத்து வரும் நாட்கள் அஷ்டமி, நவமி.. அதுவும் கூடாது. அதனால்தான் ஆட்சிமன்றக் குழுவையே இருபதாம் தேதி கூட்டியிருக்கிறார்கள். அன்றைக்கு திருவோண நட்சத்திரம். வைணவர்களுக்கு உகந்த நாள். அன்றைக்கு முடிவாகி, அநேகமாக 23ந்தேதி ஆட்சிப் பொறுப்பை மோடி ஏற்கலாம். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. அதுவும் சுபயோக சுப தினம் தான். இப்படித்தான் போகும் பா.ஜ.வின் கணக்கு.

இன்னொன்றும் இருக்கிறது. சூரியன் நேர்க்கோட்டில் ( இங்கிருக்கும் சூரியனைச் சொல்லவில்லை.. அதற்குத்தான் கட்டம் கட்டி கிரகணமாக்கி விட்டார்களே தமிழ் குடிமகன்கள் ) பூமியை நோக்கும் கத்தரி வெயில் காலத்தில் பதவியேற்றால், உள்சூடு வெளியிலும் தெரிய ஆரம்பித்து விடும் என்கிற அச்சம் கூட ஒரு காரணமாயிருக்கலாம். வெள்ளி பதவி  ஏற்று,  சனி, ஞாயிறு விடுமுறை விட்டு விட்டால்,  சவுகரியமாக வெப்பம் அடங்கி, வேலையைத் தொடங்கலாம் என்கிற அணுகுமுறைக்கும் சாத்தியம் இருக்கிறது.

வதோதராவில் மோடி வாகனத்தில் தொங்கிக் கொண்டே கையை ( அதுவும் இரண்டு விரல்களை ‘வி’ போல வைத்து அம்மா பாணியில் ) ஆட்டி நன்றி தெரிவித்து இருக்கிறார். “ இங்கே ஐம்பது நிமிடங்கள் தான் பேசினேன்., எனக்கு ஐந்து லட்சம் வாக்குகள் போட்டு இருக்கிறீர்கள் நன்றி “ என்று சொல்லியிருக்கிறார். இங்கே அம்மா, இரட்டை விரலைக் காட்டி “ மத்திய அரசுக்கும் மோடிக்கும் வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் உண்டு “ என்று அறிக்கை விடுகிறார். போயசுக்கும் லோட்டசுக்கும் விரைவில் இணைப்பு பாலம் ஏற்படப் போவதை இது காட்டுகிறது. இதை சொல்ல எனக்கு ஒன்றும் பயமில்லை. நான் ஒன்றும் மலைச்சாமி இல்லையே.. கட்சியில் இருந்து தூக்கி விட!

இன்னமும் மம்தா ஆதரவு அறிக்கை ஏதும் வெளியிட்டதாக தகவல் இல்லை. பேரம் ஒழுங்காக பேசி முடிந்தபின் தான் பானர்ஜி தன் எனர்ஜியை காட்டுவார் போல. சும்மா தா என்றால் தருவதற்கு மம்தா என்ன மக்கா?

விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிப் பதுமைகளாக நிற்கும் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள், மோடி மஸ்தானின் பல் பிடுங்கிய பாம்புகளா ? புள்ளில் கட்டப்பட்ட கீரிகளாக இருக்கும் முரளி மனோகர் ஜோஷியும், வெங்கய்யா நாயுடுவும் கட்டை அவிழ்த்துக் கொண்டு பாய்வார்களா? தோளில் போட்ட துண்டாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, வளைந்து கழுத்தை நெறிக்கப் போகும் மலைப்பாம்பா? என்பதை காலம் பதில் சொல்லும். அதை அச்சு ஊடகங்களூம் எட்டு காலத்தில் சொல்லும்.

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *