நாகரத்தினம் கிருஷ்ணா
மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “nநூme(stங்” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘nநூme(stங்’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.
‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.
பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்
ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.
சார்லஸ் பாலம்:
பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).
(தொடரும்)
- தொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்!
- பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4
- நீங்காத நினைவுகள் 47
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 5
- இந்து மோடியும், புதிய இந்தியாவும்
- வருகைப்பதிவு
- நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”
- முதிர்ந்து விட்டால்..!
- அன்றொருநாள்…இதே நிலவில்…..
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்
- இலங்கை
- மாயன் மணிவண்ணன்
- டிஷ்யூ பேப்பர்
- மக்களாட்சி
- திண்ணையின் இலக்கியத் தடம் – 36
- இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)
- கீதாஞ்சலி இரண்டாம் பதிப்பு
- பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது
- மோடியின் சதுரங்க ஆட்டம்
- இந்திய “ மோடி “ மஸ்தான்
- திரைவிமர்சனம் கோச்சடையான்
- நுரைத்துப் பெருகும் அருவி
- காஃப்காவின் பிராஹா -2
- தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு
- இதோ ஒரு கொடி
- எண்களால் ஆன உலகு