நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

-வே.சபாநாயகம்.

தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940 களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர் போன்றோரின வங்காள மொழி நாவல்கள், 50களில்
வி.ஸ.சாண்டேகரின் மராட்டி மொழி நாவல்கள், தொடரும் மலையாள மொழி ஆக்கங்களின் மொழி பெயர்ப்புகள் என காலம்தோறும் வந்து தமிழை மேலும் இனிமையாக்கி வருகின்றன. இன்றைய காலகட்டதில் தொடர்ச்சியாய் குறிஞ்சிவேலன் போன்றோரின் சிறப்பான மொழி பெயர்ப்புகளால் தமிழ்த்தாய்க்கு அழகழகான அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் நான் சமீபத்தில் படித்த குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்த, மலையாள எழுத்தாளர் ‘சேது’வின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘அடையாளங்கள்’ நாவல் குறிப்பிடத்தகதாகும்.

உளவியலை பெரிதும மையமாகக் கொண்டுள்ள இந்த நாவல், வாழ்க்கையின் குழப்பமான புதிர்களை உருக்கமாகச் சொல்கிறது. மனித உறவுகளில் ஏற்படக்கூடிய பிளவுகளை -பிரியம்வதா என்ற தாயின் மூலமும், அவரிடமிருந்து புரிதலில்லாமல் விலகிக் கொண்டிருக்கும் மகள் நீதுவின் மூலமும் இதமான கதை சொல்லல் வழியே அற்புதமாய்ச் சித்தரிக்கிறது. ‘ஒரு பிறவியின் முழு இன்பதுன்பங்களையும் கறுப்பும் வெளுப்புமாக தம் உடலிலேயே கொண்டுள்ள பெங்குவின்களைப்போல ஏகாந்தமான பனிப்பிரதேசங்களில் தவம் செய்ய விதிக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்தவரான தாய் பிரியம்வதா மற்றும் அவருடைய மகளுடையதுமான பரிதாபக் கதை’யாக விரிந்து முடிவில் கனத்த இதயத்தோடு நம்மை விடை பெறச் செய்கிறது.

கனவைப் போன்றதோரு கதை சொல்லலில் கதை தொடங்குகிறது. கணவனைப் பிரிந்து தன் ஒரே மகள் நீதுவுக்காகவே வாழும் தன்னம்பிக்கை மிகுந்த பிரியம்வதா மேனன் ஒரு புகழ் பெற்ற கம்பனியின் ‘ஹ்யூமன் ரிசோர்ஸ்’ பிரிவின் தலைமை இடத்தில் இருப்பவர். அந்தக் கம்பனி குரூப்களின ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் மனிதசக்தியை முடிந்த மட்டில் பயன்படுதுவதுதான் அவரது முக்கியப் பொறுப்பு. அநதப் பொறுப்பில் ஈடில்லாத, தவிர்க்கமுடியாத தலைவராக – கம்பனியின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி கண்டு வருபவர். கோவாவில் நடக்கும் ஒரு கருத்தரங்குக்குச் சென்றபோது அவரது கட்டுரை வாசிப்பில் மயக்கம் கொள்கிறது சபை. எளிய உடையில் அவரது கவர்ச்சியான தோற்றம், வாசிப்பு அழகு, யாரையும் அவரது வாசிப்பினின்றும் மாறி அவரது முகத்தையே பார்க்க வைக்கும் கவர்ச்சி – பதின்ம வயதினரை மட்டுமல்லாது, அவர் தனது குருபீடத்தில் ஏற்றி வைத்திருக்கிற டாக்டர் ராய் சௌத்ரியையும் நிலைகுலைய வைத்து, தனிமையில் அவரிடம் வழியச் செய்கிறது. தன் குருபீடமதிப்பு குலைவதால் தடுமாறும் பிரியம்வதா விருப்பமற்றிருந்தும் அவரை உதற முடியாது போகிறது. அவரிடமிருந்து தப்பி கருத்தரங்கிலிருந்து திரும்பிய பின்னர் வீட்டில் வழக்கமான உற்சாகத்தை இழந்திருப்பதைப் பார்த்த மகள் துருவித் துளைத்துக் கேட்டு நடந்ததை அறிந்து ஆற்றுப் படுத்துகிறாள். பிறகு அதே அருமை மகள், தனக்கு அம்மாவைப் பற்றி வந்த மொட்டைக் கடிதங்களால் தன் அருமைத்தாய் கைநழுவிடுவாரோ என்ற திகைப்பில் தாயையே சந்தேகித்து, ஒரு மகள் தாயிடம் கேட்கக்கூடாத அந்தரங்கம் பற்றிய கேள்விக் கணைகளை வீசி தாயின் மனதைக் காயப் படுத்துவதோடு தாயிடமிருந்து விலகவும் தொடங்குகிறாள். சின்ன வயதில் விட்டுப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் தந்தையைத் தொடர்பு கொண்டு தனது கொழுககொம்பாய் படரத் துவங்குகிறாள். அதனால் பெரிதும் உடைந்து போகிற பிரியம்வதாவுக்கு மேலும் இடிவிழுந்த மாதிரி- தாயைப் பழி வாங்கும செயலாக நீது, ஹிப்பி இளைஞன் ஒருவனோடு சுற்றி சின்ன பின்னமாவதால் செய்லற்று, நோய்ப்படடது போல பணியிலும் சுணக்கம் காட்டி தவிக்கிறார் இறுதியில் மகள் ஆட்டமெல்லாம் சோகமாய் முடிந்து தாயின் அரவணைப்புக்கே திரும்புகிறாள்.

இவ்வளவு சுருக்கமாய் கதை முடிந்து விடவில்லை .பிரியம்வதாவின். தாம்பத்ய முறிவு, உதறியும் காலைச் சுற்றிக கழுத்தை இறுக்கும் ராய் சௌத்ரி, .அருமையாய் வளர்த்த மகளின் சொல்லம்புகளின் கொடுமை என பரபரப்பும் பதற்றமுமான நிகழ்வுகளை அலுப்பு ஏற்பாடாத வகையில் அருமையாய் அடுக்கிச் செல்கிறார் கதாசிரியர் சேது. சிக்கலற்ற லகுவான நடையும் அழகு வருணனைகளும் வாழ்க்கைச் சிக்கல்களை மனம் கொள்ளுமாறு ரசமாய்ச் சொல்லும் லாகவமும் படித்தால் மட்டுமே முழுமையாய் அனுபவிக்க முடியும். பாத்திரப் படைப்புகள் ஷேக்ஸ்பியரை நினைவூட்டும் தன்மையன. முக்கிய பாத்திரங்களான தாய் மகள மட்டுமல்ல உப பாத்திரங்களாய் வரும் நீதுவின் தோழி ஆலீஸ், பிரியமம்வதாவின் அலுவலக சசாக்களான ரேவதி, சேஷாத்ரி – அத்தனையுமே மிக அற்புதமாய் அமைய, எழுதி எழுதி மெருகேறிய கை ஒன்றினால் மட்டுமே முடியும் என்று வியக்க வைக்கிறார் ஆசிரியர். ஆண் – பெண் உறவு, தாய் – மகள் உறவு எல்லாமே சிக்லாய் நம்மால் தீர்க்க முடியாதபடி அமைவது விதியின் விளையாட்டன்றி வேறென்ன என்று தேம்பியழும் குழந்தையாய் மனித வாழ்வு அமைவதை நாவல் உருக்கமாய்க் காட்சிப் படுத்துகிறது.

– இந்த அற்புதமான் நாவலின் மூலம் சேது என்ற மலையாள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்தி தமிழுக்கு பெரும் சேவை செயதுள்ளார் மொழிபெயர்ப்பாளரான திரு.குறிஞ்சி வேலன் அவர்கள். அவரது மொழிபெயர்ப்பு – காண்டேகர் தமிழிலேயே எழுதியது போன்று உணர்த்தும் கா.ஸ்ரீ.ஸ்ரீ போல, தமிழிலேயே எழுதப்படடதாய் எண்ண வைக்கும் சிறப்பினைக் கொண்டது. எங்கும் எந்த இடத்திலும் குறிஞ்சிவேலன் தென்படவில்லை.என்பதுதான் அவரது வெற்றி. இவ்வளவு சரளமாய், மலையாள மொழியின் லாகவத்தையும், பணபாட்டினையும் அசலாய் உள்வாங்கித் தந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். மொழிபெயர்ப்பாளனும் ஒரு படைப்பாளியாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். திரு.குறிஞ்சிவேலனுக்கு அது ஒரு கொடுப்பினையாய் அமைந்திருக்கிறது. குறிஞ்சிவேலனின் மேலும் ஒரு அடையாளமான இந்த அற்புதமான மொழிபெயர்ப்புக்காகவே
இந்த நாவலைப் படிக்கலாம். 0

நூலின் பெயர்: அடையாளங்கள்.

ஆசிரியர் : சேது.

வெளியீடு : சாகிதய அகாதமி.

விலை : 290 ரூ.

—– 0 —–

Series Navigation
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *