வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா
5.
ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது. அவன் சோர்வுடன் அதை மூடி வைத்தான். மாலாவும் அந்தக் கதையைப் படித்திருந்திருப்பாள் என்று தன்னையும் அறியாது அவன் எண்ணமிட்டான்
அன்றிரவு உணவு அருந்துகையில், ‘அந்தப் பையன் – அதான் உன் சிநேகிதன் ரமணி – மட்டும் பணக்காரப் பையனா இல்லாம இருந்தா நம்ம மாலாவை அவனுக்குக் கொடுக்கலாம். எதுக்கும் கொடுத்து வெச்சிருக்க வேண்டாமா?’ என்று தன் அம்மா மாலாவின் எதிரிலேயே சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது. தன் அம்மா சொன்னது ஒருவேளை அவள் மனத்தில் வேலை செய்கிறதோ என்று அவன் நினைக்கத் தலைப்பட்டான். அவன் கண்களை மூடிப் படுத்துக்கொண்டான்.
அரிசியிலிருந்து கல் பொறுக்கிக் கொண்டிருந்தாலும், மாலாவின் மனம் ரமணியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. ‘என்ன கனிவான முகம் அந்த ரமணிக்குத்தான்! அந்த முகவாய்க் குழி ஒண்ணு போதுமே! பெரிய, பெரிய கண்ணு, அடர்த்தியான புருவஙளுக்குக் கீழே என்னமாய்ப் பளபளக்கிறது! சிரிச்ச முகம். பணக்காரத்தனம் அந்தச் செழுமையான உடம்பில துல்லியமாத் தெரியறதே! அம்மா சொலாறாப் போல எனக்குக் கொடுத்து வைக்கல்லையோ! ஏனாம்? அந்தக் கொடுத்து வச்சவ நானா யிருக்கக் கூடாதுன்னு ஏதாவது சட்டமா என்ன! கதவிடுக்கு வழியாப் பார்த்தது நாந்தான்கிறதை ரமணி தெரிஞ்சிண்டிருப்பான். ராஜாவோட நெருங்கின சிநேகிதன்தானே? மனசு வெச்சா என்னை மனைவியா ஏத்துக்க முடியாதா என்ன! … ஆனா, மனசு வைக்கணுமே! எனக்குத் தெரிஞ்சு ரமணி நல்லவன்தான். சின்ன வயசுலேர்ந்து வந்து போயிண்டிருந்தவன் தானே? இப்பதானே கொஞ்ச நாளா வர்றதில்லே? … ராஜாதானே அவனுக்கு சிநேகிதன்? அவனை அப்பப்போ வெளியில் சந்திச்சிண்டிருந்ததால இங்க வர்றதில்லே. ஒருக்கா, இனிமே வருவானோ? … ஆனா இனிமே எதுக்கு வரணும்? என்னைப் பிடிச்சிருந்தா, வருவான். அது நடக்கக் கூடும்தான்! … சினிமாவிலதான் இப்படி யெல்லாம் நடக்கும். நிஜம் வேற, நிழல் வேற! நான் ஒரு பயித்தியம். அதான் இப்படியெல்லாம் தாறுமாறா யோசிக்கிறேன்…. ஆனா ஒண்ணு. பார்த்துக் கொஞ்ச நாளாயிட்டதால அவனோட தோற்றத்துல ஏற்பட்டிருக்கிற கம்பீரம், ஆண்மை இதெல்லாம் என் மனசைக் கவர்ந்துடுத்துன்றதும் உண்மைதானே! ஆனா அது உண்மைன்றதால மட்டுமே ஜெயிச்சுடுமா? சத்யமேவ ஜயதேன்ற தத்துவம் இதுக்கெல்லாம் பொருந்துமா என்ன! தத்துப் பித்துனு இதென்ன முட்டாள்தனம்!…’
அரிசியைப் புடைத்து முடித்த பிறகும் மாலா முறத்துக்கு முன்னால் அசைவற்று உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
படுப்பதற்குப் பாய் விரிக்க அப்போது அங்கு வந்த பருவதம், “என்னடி, தரையை வெறிச்சுப் பார்த்துண்டு உக்காந்துண்டிருக்கே?” என்றதும் “ஒண்ணுமில்லேம்மா,” என்று அசடு தட்டிய குரலில் பதில் சொல்லிவிட்டு, மாலா எழுந்துகொண்டாள்.
நடந்துசென்ற மகளின் முதுகைப் பார்த்தவாறு பருவதம் சன்னமாய்ப் பெருமூச்செறிந்தாள். ரமணியின் தரிசனம் மகளை ஒரு கலக்குக் கலக்கியிருந்ததை அந்தத் தாயால் புரிந்துகொள்ள முடிந்தது.
அன்றிரவு மாலாவுக்கும் சரி, ராமரத்தினத்துக்கும் சரி நல்ல தூக்கமில்லை. புதிதாக ஒரு வேலையில் சேர்ந்திருந்த பரபரப்பில் அவன் உறங்காதிருக்க, அவளோ ரமணியைப் பற்றிய மயக்கத்தில் தூங்காதிருந்தாள். விட்டு விட்டு வந்த கனவுகளில் ஒன்றில், ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’ என்று ரமணி அவளைக் கேட்டான். ‘அதெல்லாம் நடக்காது’ என்றாள் அவள். ‘ஏன் நடக்காது? என் கல்யாணம் என் சொந்த விஷயம். யாரும் என்னைத் தடுக்க முடியாதாக்கும்!’ என்றானே. அப்போதுதான் அவள் முற்றாக விழித்துக்கொண்டு விட்டாள் … இரவெல்லாம் சரியாகத் தூங்காவிட்டாலும், அதிகாலயில் எப்போதும் போல் விழித்துக்கொண்டுவிட்டாள் காலைக்கடன்களை முடித்துவிட்டு அடுக்களையில் அவள் தன் கனவுகள் பற்றிச் சிந்தித்தவாறே காப்பிக்கு ஆவன செய்துகொண்டிருந்தாள். தன் கனவுகள் ஒருகாலும் ஈடேறப் போவதில்லை என்பது புரிந்தாலும், ‘அட! அதுக்காகக் கனவு காண்றதுல கூட எதுக்குக் கஞ்சத்தனம் காட்டணும்?’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
அந்தச் சிரிப்பு மறையாத முகத்துடன் அவள் காப்பியை ராமரத்தினத்திடம் நீட்டிய போது, “என்ன, மாலா? ரொம்பக் குஷியில இருக்காப்போல இருக்கு?” என்ற அவன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.
கணம் போல் திகைத்த பின் சமாளித்துக்கொண்ட அவள் “பின்னே? அண்ணாவுக்கு வேலை கிடைச்சா தங்கைக்கு சந்தோஷமா யிருக்காதா?” என்றாள்.
“அதானே?” என்று சிரித்துவிட்டு அவன் காப்பியைப் பருகினான்.
பிறகு, கம்பெனிக்குப் போவதாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப் போனான். வழியெல்லாம் அவனுக்கு மாலாவின் நினைப்பாகவே இருந்தது. அவளது திருமணத்தைத் தான் எப்படித்தான் நடத்தப் போகிறானோ என்று அவனுக்கு எந்தக் காரணமும் இன்றி மற்ற நாள்களை விடவும் அன்று அதிக மலைப்பாக இருந்தது. சேதுரத்தினத்துக்குத் திருமணம் ஆகாதிருந்திருப்பின் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் அர்த்தமற்ற வீண் கற்பனையில் திரும்பத் திரும்ப ஈடுபட்டவாறு இருந்தான்.
முந்திய நாள் அவன் வீட்டுக்குத் திரும்பியதும் வீட்டார் அனைவரும் ஆளாளுக்கு எத்தனை கேள்விகள் கேட்டார்கள்! அவனது கம்பெனியைக் காட்டவேண்டும் என்று அவன் தம்பி ஜெயமணி சொன்ன கணத்தில் அவன்தான் எப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான்!
‘அதெல்லாம் இப்ப தேவை இல்லே. அங்கே யெல்லாம் யாரும் வரக்கூடாது. மேலதிகாரிகளுக்குப் பிடிக்காது’ என்று மறு கணமே வெடித்தானே! அப்போது எல்லாருமே அவனை வியப்பாகப் பார்த்தார்கள் – இந்த அற்ப வேண்டுகோளுக்கு இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்பது போல!
‘இதுக்கு ஏண்டா அவன் மேல இப்படி வள்னு விழறே? நாங்க என்ன, உள்ளே யெல்லாம் வந்து உன்னைத் தொந்தரவா பண்ணப் போறோம்? வெளியில கட்டடத்தைக் காட்டினாக் கூடப் போதும். நீ வேலை செய்யற இடம் எங்கே இருக்குன்னு கூடத் தெரிஞ்சுக்காம நாங்க இருக்கலாமா? சொல்லு.’ என்று அவன் அம்மா சொன்னதை எல்லாருமே ஆமோதித்தார்கள்.
‘அதெல்லாம் இப்ப வேணாம்மா. கொஞ்ச நாள் கழிச்சுத் தெரிஞ்சுக்கலாம். எனக்கு ஏதானும் ஆச்சுன்னா வீட்டுக்கு சேதி வந்துடும். கவலைப்படாதே!’ என்றான் அவன்.
‘அசத்து மாதிரி துக்கிரித்தனமா வாய்க்கு வந்ததைப் பேசாதேடா!’ என்று அவன் அம்மாதான் எப்படிக் கூவினாள்!
அவன் தங்கை கோமதிதான் சமயோசிதமாக, ‘அது சரி அண்ணா. ஆனா எங்க்ள்லே யாருக்காவது ஏதாவதுன்னா உனக்கு எப்படிச் சேதி சொல்றது?’ – அவன் செல்லமாய் அவள் தலையில் குட்டிவிட்டுச் சிரித்துக்கொண்டே அப்பால் நகர்ந்துவிட்டான்.
‘எப்படியாவது ஒரு நல்ல கம்பெனியில வேலைக்கு அமர்ந்துடணும். அப்பதான் அதோ அந்தக் கட்டடம்தான் என்னோட ஆஃபீஸ்னு காட்ட முடியும். இப்ப கூட ஓட்டல்னு சொல்லிடலாம். ஆனா எல்லாருக்கும் ஏமாத்தமாயிருக்கும்….ஆனா, என்னைத் தெரிஞ்சவங்க யாரும் ஓட்டலுக்கு வந்தா, குட்டு வெளிப்பட்டுடும். அதுக்கு முன்னாடி ஒரு நல்ல வேலை கிடைச்சுட்டா நல்லது. எதுக்கும் ரமணியோட வீட்டுக்குப் போய் அவனை ஒரு வார்த்தை கேட்டுட்டு அவன் அப்பாவைப் பார்த்துப் பேசுறது நல்லது…அம்மாவோட தொணதொணப்புத் தாங்க முடியல்லே. அம்மாவைச் சொல்லியும் குத்தமில்லே. பொண்ணுகளைப் பெத்த அம்மாவாச்சே!…’
… அன்றும் சேதுரத்தினத்தைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.
தான் கொணர்ந்து வைத்த பூரியை விண்டு மசாலாவில் தோய்த்தபடியே, “என்ன, ராமு, ஒரு மாதிரி டல்லா இருக்கே?” என்று சேதுரத்தினம் அவனை விசாரித்தான்.
“வீட்டில எல்லாருக்கும் என்னோட ஆஃபீசைப் பார்க்கணுமாம். அது எங்கே இருக்குன்றதையாவது தெரிஞ்சுக்கணுமாம்!” என்று கூறிவிட்டு அவன் கசப்புடன் சிரித்தான்.
பிறகு அவர்களுக்கும் தனக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை அவன் தெரிவித்தான். அன்றும் ஓட்டலில் கூட்டமில்லாததாலும், அடுத்த மேசை காலியாக இருந்ததாலும் அவனால் பேச முடிந்தது.
பிறகு, “அது மட்டுமில்லே, சார். என் தங்கைகள் ரெண்டு பேரையும் எப்படித்தான் கரையேத்தப் போறெனோன்னு நினச்சாலே மனசு பக்குன்றது!” என்றான். அவனது குரலிலேயெ அவனது மலைப்புத் தெரிந்தது.
“நீங்க சாப்பிடுங்க, சார். … நான் பாட்டுக்குப் பேசி உங்க மூடைக் கெடுத்துட்டேன்…”
“அதெல்லாமில்லை, ராமு… நான் சாப்பிடறேன்…” என்றபடி சேதுரத்தினம் பூரியை மெல்லலானான்.
சாப்பிட்டுக்கொண்டே, “நீ கவலைப்படாதேப்பா. கடவுள் நல்லவங்களுக்கு நல்லதே செய்வார். அந்த நம்பிக்கை இருக்கிறவங்க கவலையே பட மாட்டாங்க!” என்றான் ஆறுதலாக.
“எவ்வளவு சுளுவாச் சொல்லிட்டீங்க, சேதுசார்? கவலைப்படாம இருக்கிறதுன்றது அவ்வளவு சுலபமா!”
“கஷ்டந்தான், ராமு.. ஆனா அந்தப் பக்குவத்தை அடைய நாம் எல்லாருமே முயற்சி பண்ணணும்.”
“பண்ணணும்தான். முடியல்லையே! அது ஞானிகளுக்குத்தான் சாத்தியம். என்னைப்போல சாதாரண மனுஷங்களுக்கு இல்லே. அதிலேயும் நான் ரெண்டுங்கெட்டான் இளைஞன்! …”
சேது சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“காப்பி கொண்டு வரலாமா, சார்? “
“கொண்டு வாப்பா.”
சற்றுப் பொறுத்து அவன் கொண்டுவந்த காப்பியைப் பருகிவிட்டு, சேதுரத்தினம், “எல்லாம் நல்லபடியா நடக்கும். நானும் எனக்குத் தெரிஞ்ச நல்ல் பையன் எவனாவது மாட்டுவானான்னு பார்க்கறேன்..உன் பாஷையில் இளிச்சவாயன்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டு, ”ஆமா? இந்த ஓட்டல்ல டிப்ஸ் கொடுக்கக் கூடாதுன்னு போர்டு போட்டு வெச்சிருக்காரே உங்க முதலாளி? அவருக்குத் தெரியாம கொடுக்கலாந்தானே?”
“அதெல்லாம் நான் வாங்க மாட்டேன், சார். தப்பு. நீங்க கல்லாவுக்குப் போய்ப் பணம் கொடுங்க,”என்று கூறிவிட்டு அவன் பில்லை நீட்டினான்.
பெற்றுக்கொண்ட சேதுரத்தினம், “சரி. நான் வர்றேன், “ என்று சொல்லிவிட்டுக் கல்லாவை நோக்கி நடந்தான்.
…. சேதுரத்தினம் தன் பிரிவுக்குள் நுழைந்த போது சரியாக மணி பத்து. வேறு எவரும் வந்திருக்கவில்லை. இரண்டு நிமிடங்களுக் கெல்லாம் ரங்கன், “காலை வணக்கம், சேது!” என்றபடி தன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
“காலை வணக்கம், ரங்கன்!” என்ற சேதுரத்தினம்,“என்னப்பா? திடீர்னு தூய தமிழ்ல காலை வணக்கம்ன்றே?” என்றான்.
“ஒரு பட்டி மன்றம் நேத்து ராத்திரி எங்க தெருவில இருக்கிற ஒரு கல்யாண மண்டபத்துல நடந்தது. எல்லாருமே நல்ல தமிழ்ல பேசினாங்க. அதைக் கேட்டதோட எதிரொலி!”
“என்ன விஷயம் பத்திப் பட்டி மன்றம்?”
“மனைவிக்குக் கணவன் மீது அன்பு அதிகமா, கணவனுக்கு மனைவி மீது அன்பு அதிகமாங்கிறது தலைப்பு! எல்லாருமே சிரிக்கச் சிரிக்கப் பேசினாங்க. இது மாதிரியான் பட்டிமன்றங்கள் ரொம்ப அவசியம்ப்பா. எந்த ஒரு விஷயத்துக்கும் பல கோணங்கள் உண்டுன்றதை உணர்த்தி எல்லாருமே நம்மைச் சிந்திக்க வைக்கிறாங்க.”
“உன்னோட ஒய்ஃபும் வந்திருந்தாங்களா?”
“பின்னே?’
“என்ன தீர்ப்பு ஆச்சு?”
“தெரிஞ்சதுதானே? மனைவிக்குத்தான் அன்பு அதிகம்னு சொன்னாரு தலைவர்.”
“ஒருக்கா அவரோட மனைவியும் வந்திருந்திருப்பாங்க. பயந்துண்டு அப்படி ஒரு தீர்ப்பைச் சொன்னாரோ என்னமோ!”
“இருக்கலாம்.”
“அது போகட்டும். ஆனா உங்க மனைவி என்ன சொன்னாங்க?”
“வழக்கம் போல், ‘பாத்தீங்களா. எனக்குத்தான் அதிக அன்பு. நீங்க அடுத்தபடிதான்’ அப்படின்னு மிரட்டுற தொனியில ஒத்தை விரலை நீட்டிண்டே சொன்னாங்க!” என்று ரங்கன் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நாடகப் பாணியில் தானும் ஒற்றை விரலை நீட்டியவாறு சொல்ல, சேதுரத்தினம் சிரித்தான்.
“அந்த அதிகாரம் பண்ற குணந்தான், சேது, பிடிக்கல்லே. சாதாரண விஷயங்களைக் கூட மிரட்டுற மாதிரிதான் சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் ஒரு மிரட்டல், உருட்டல், அதட்டல்தான். அவங்க அன்பாப் பேசி நான் கேட்டதே இல்லே. எங்க ஹனிமூன்ல மட்டுந்தான் கொஞ்சம் பரவாயில்லாம இருந்தாங்க.”
“பாவந்தாம்ப்ப நீ. ஆனா நான் சொன்னபடி நீ பொறுமை காட்டினா, என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பாத் திருந்திடுவாங்க.”
“எப்ப திருந்துறது? நான் கெழவனானதுக்குப் பிறகா?”
“உங்க வீட்டுக்கு ஒரு நாள் என்னைக் கூட்டிண்டு போ. நான் அவங்களைப் பார்க்கறேன். அவங்களோட பேச்சுக் கொடுக்கறேன். என்ன கோளாறுன்னு கண்டுபிடிக்க முடியறதான்னும் பார்க்கலாம்.”
“அது உடம்போட பொறந்த திமிர்டா. ஒண்ணும் பண்ண முடியாது. இருந்தாலும், என் வீட்டுக்கு வா ஒரு நாள். அவங்களோட சகஜமாப் பேசு. ஆனா அவங்களைப் பார்த்ததும் நீயே பயந்து போகப் பேறே, பாரு!” என்று ரங்கன் பெரிதாய்ச் சிரித்தான்.
சேதுரத்தினம், ‘ஒருவேளை அழகாய் இருக்க மாட்டாளோ?’ என்று நினைத்தான்.
அவனது நினைப்பைப் புரிந்துகொண்டு, “ லட்சணமாத்தான் இருப்பாங்க. பாம்பு கூடப் படம் எடுத்து ஆடுறப்ப அழகாத்தானே இருக்கும்?” என்றான் ரங்கன்.
தலைமை எழுத்தர் அப்பிரிவுள் நுழைய, அவர்கள் பேச்சு நின்று ஒருவர்க்கொருவர் காலை வணக்கம் சொல்லிக்கொள்ளுவதில் முடிந்தது.
…. நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன….
இதன் பின் ஐந்தாம் நாள், பிற்பகல் ஒரு மணிக்கு ராமரத்தினத்துக்கு அவனது ஓட்டலில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முதலாளி அவனைப் பேசச் சொல்லிக் கூப்பிட்ட போது, அவனுக்கு வியப்பாக இருந்தது.
‘யாராக இருக்கும்? சேது சாராய்த்தான் இருக்கும்,’ என்றெண்ணியவாறு ஒலிவாங்கியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டான்.
“ஹலோ! யாருங்க?”
பதில் சொன்னது யாரென்று தெரிந்ததும் அவனுக்குச் சொல்லி மாளாத வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
“சரி, சார். இன்னைக்கு ஓட்டலை விட்டுக் கிளம்பினதும் நேரே உங்க வீட்டுக்கு வர்றேன்.”
நெஞ்சு படபடக்க அவன் தன் வாடிக்கையாளரிடம் சென்றான். அவன் மனம் ஏதேதோ சிந்திக்கலாயிற்று. ஏனெனில் பேசியவரின் குரல் கடுமை கொண்டிருந்தது.
– தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *