பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 26 in the series 1 ஜூன் 2014

வில்லவன் கோதை
8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !
மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில் வெளிப்பார்வை கிடைக்கிறது. தொலைநோக்கி வசதியும்கூட இருந்தது. கணிசமான சுற்றுலாப்பயணிகள் பரந்து காணப்பட்டனர்.
அந்த மேற்பரப்பின் வடதிசையில் ஒரு பழம்பெரும் கோயிலும் ஒரு பெட்டிக்கடையும் காணப்பட்டது.அந்த சின்னஞ்சிறு கோயில் கேரள பழங்குடியனர் வழிபடும் ராமசாமிகோயிலாம் ஆண்டின் மே மாதத்தின் மத்தியில் ஒருவார திருவிழா நிகழுமாம்.
இந்த காலங்களில் ஏற்காடு பிராந்தியமே விழாக்கோலம் பூண்டிருக்குமாம். ஏரியில் படகுப்போட்டி பரபரப்பாக நிகழும். பூங்காக்களில் மலர்க்காட்சி நடத்தப்படும். கொழுகொழு குழந்தைகளுக்கான பரிசுப்போட்டியும் நிகழும். செல்லப் பிராணிகளான நாய்களுக்குகூட போட்டிகள் உண்டாம்.
மே மாத்ததிய மத்திய நாட்களில் இங்கேவரும் சுற்றுலா பயணிகள் பரபரப்பாக கொண்டாடிக்கழித்துவிட்டு போகலாம்.
ராமசாமிக்கோயிலுக்கு எதிர்புறம் அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருக்கிறது.தகவல் தொடர்பு சாதனங்களுக்கான உயரமான நவீன ஆன்டெனாவும் பொருத்தப்பட்டிருந்தது. இயற்கையின் எதிர்பாராத சீற்றத்தை எதிர்கொள்வதற்காக இருக்கக்கூடும்.
ராமசாமிக்கோயிலுக்கு பின்புறம் கீழிறங்கும் சரிவான சாலையின் ஒருபுறம் உயர்ந்து கிளைபரப்பிய மரமொன்றின்கீழ் அருள்மிகு சேர்வராயன் ஆலயம் இருக்கிறது.
தென்திசை நோக்கி அமைந்திருந்த அந்த பாறைச்சரிவில் படிகளுடன் கூடிய ஒரு சமுதாயகூடத்தைப்போன்ற முகப்பு தென்படுகிறது. படிகளில் ஏறினால் ஒரு பத்தடி தூரத்துக்கு மலையை குடைந்து சேர்வராயன் கருவறை காணப்படுகிறது. கருவறை தரும் பொருளுக்கேற்ப உடலை தாழ்த்தி ஊர்ந்து போனால் அருள்மிகு சேர்வராயன் சாமியையும் அருள்மிகு காவேரி அம்மனையும் காணலாம். காவேரிக்கும் நமக்கும் உள்ள நெடுநாள் உறவின் அழுத்தம் ஒருகணம் நினைவில் தோன்றி அகன்றது. கருவறைக்குச்செல்லும் அந்த குறுகிய சுரங்கப்பாதை நெடுந்தூரம் நீண்டு கிடப்பதாக சொன்னார்கள்.
அந்தக்காலங்களில் உயிர்களை காத்துக்கொள்ள நமது பேரரசர்கள் எலிகளைப்போலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
அர்சகர் அளித்த பிரசாதத்துடன் கருவறையிலிருந்து வியப்போடு வெளியேறினோம்
சாலையின் எதிர்புறம் காணப்பட்ட வெட்டவெளியும் அதளபாதாளத்தில் மங்கலாக தோற்றமளித்த இயற்கையின் பேரழகும் பிரமிக்கச்செய்தன. ஒரு சில நீர் நிலைகள் கூட கண்களுக்குப் பட்டன. வெகுதூரத்தில் காணப்பட்ட ஒரு குன்றின்மேல் திட்டுத்திட்டாக குடியிறுப்புகள் கண்களுக்கு தோன்றின..
ஏற்காடு நகரைத்தவிற வேறு இடங்களில் பரவலாக மனித நடமாட்டத்தையோ வேறு உயிரினங்களின் உலாவையோ காணமுடியவில்லை. மக்கள் கூடும் இடங்களில் ஓரிரண்டு பெட்டிக் கடைகாரர்கள் மட்டுமே ஆங்காங்கே காணப்பட்டார்கள்.
இருந்தாலும் இந்த வனப்பகுதியில் குள்ளநரிகளும் ஒய்யார மான்களும் அச்சத்தை ஏற்படுத்தும் காட்டெருமைகளும் எரும்புத்திண்ணிகளும் வாழ்க்கை நடத்துவதாக சொன்னார்கள். எங்கள் பயணத்தின்போது அடிக்கடி இப்போதும் சந்திக்கிற கிளைக்கு கிளை தாவும் மந்திகளைத்தான் பார்த்தோம்.
அடுத்த நாற்பது நிமிடங்களில் ஏற்காட்டின் உயரமான அந்த பகுதியிலிருந்து எங்கள் வாகனங்கள் வழுக்கிக்கொண்டு இறங்கின.
விடுதிக்குத்திரும்பும்போது வரிசையாக கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைப்பார்த்தேன். அத்தனையும் இடைத்தேர்தலை மனதிர்க்கொண்டு அவசரம் அவசரமாக கட்டப்பட்டதாம். ஒருவேளை அரசு அறிவித்த பசுமை வீடுகளாக இருக்கக்கூடும். அத்தனையும் தேர்தல் முடிவுக்குப் பிறகு குட்டிச்சுவர்களாக நிற்பதைக்கண்டேன். முறையான திட்டங்களும் சிறப்பான செயல்பாடுகளும் இன்றி மக்கள்பணம் இப்படியெல்லாம் பாழடிக்கப்படுகிறது.
நாங்கள் மேற் கொண்ட பயணம் மிகமிகக் குறுகியது.
‘ அதர்க்கு மேல் பாக்க அங்கென்ன இருக்கு ’ என்று சிலர் முனகக்கூடும்.
வாழ்க்கையை செலவழிக்க நினைக்கிறவர்களுக்கு ஏற்காடு ஏற்றதல்ல. வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு அது உண்மையிலேயே சொர்கம்தான்.
ஒப்பந்த ஊர்தியில் சுற்றுலா வருபவர்கள் வேண்டுமானால் ஏற்காட்டை தொட்டுவிட்டு செல்லலாம். பரபரப்பை விரும்புகிறவர்கள் எல்லாம் மே மாத மத்தியில் வந்து போகலாம். ஏற்காடே விழாக்கோலம் பூண்டிருக்கும் காலம்..
நாங்கள் மேற்கொண்ட பயணம் அது போன்றதல்ல .பத்தாண்டுகளாக விலகி வெவ்வேறுதிசைகளில் வாழ்ந்த நட்பை புதிப்பிக்க முயன்றோம் .எங்களிடையே ஏற்பட்டிருந்த சந்தோஷங்களையும் சோர்வுகளையும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு மனதுக்கும் உடலுக்கும் இதமான ஒரு இடம் தேவைப்பட்டது. அதை ஏற்காடு பூர்த்தி செய்தது.
மரங்கள் முழுதும் அழிக்கப்பெற்று காங்ரீட் காடுகளில் வாழ்க்கையை கழிக்க நேர்ந்தவர்களுக்கு இளைப்பார ஏற்காடு கைகொடுக்கும்.
சுட்டெரிக்கும் கத்திரியில்கூட ஏற்காட்டின் வெப்பநிலை உடலுக்கு இதமாக இருப்பது அதன் சிறப்பு.
ஆண்டின் எந்த காலங்களிலும் ஏற்காட்டின் தட்ப வெப்ப நிலை 30 லிருந்து 12 டிகிரி சென்டிகிரேட்டை இருபுறமும் தாண்டியதில்லை என்ற தகவலை புள்ளிவிவரம் சொல்லுகிறது.
குளிர் காலங்களில் 25 டிகிரி யிலிருந்து 12 டிகிரி வரையிலும்
கோடை காலங்களில் 30 டிகிரியிலிருந்து 16 டிகிரிவரைதானாம்.
அந்த வனப்பிரதேசத்தின் மழைப்பொழிவு 1200 – 2000 mm வரையாம். செப்ட்டம்பரிலிருந்து டிசம்பருக்குள் ஏற்காடு வருபவர்கள் குன்றுகளின் உச்சியில் குளிர் மேகங்கள் தழுவுவதை பார்க்கவும் உணரவும் முடியும்.
DSC00148-horz
ஏற்காட்டுப்பேரழகை உணர்ந்து ரசிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது தங்கவேண்டும். நாங்கள் இன்னும் கண்டு அனுபவிக்க ஏற்காட்டில் பல்வேறு இடங்கள் இருந்தன. குறைந்த பட்சம் இன்னொருநாள் தங்கியிருந்தால் சாத்தியப்பட்டிருக்கும்.
முன்னதாக திட்டமிட்டபடி எங்கள் பயணம் முடிவுக்கு வந்தது
DSC00148
ஏறத்தாழ ஐந்து மணியளவில் சென்னை திரும்ப சேலத்தில் முன் பதிவு செய்திருந்தோம். விடுதியில் நேற்றையைப்போலவே சுவையான சைவச்சாப்பாடு பரிமாறப்பட்டது. மூன்று மணியளவில் நாங்கள் கிளம்புவதற்கு முன் நண்பர் வேதசிரோன்மணி மெல்லியகுரலில் பேசத்துவங்கினார். எங்கள் பயணத்தை இனிதாக்கித்தந்த நண்பர் தங்கவேலுவுக்கு அனைவர் சார்பாக நன்றியும் மகிழ்வும் தெரிவித்துக்கொண்டார். வரப்போகும் காலங்களிலும் இதுபோன்ற பயணம் தொடர்வது எல்லாவகையிலும் நல்லதென்ற மணி அடுத்தடுத்த பயணங்களில் அனைவருடைய பங்களிப்பு மகிழ்வைத்தருமென்றார். மேலும் சிலரும்கூட பங்கெடுக்கக்கூடுமென்றார். அடுத்த சந்திப்பு கொடைக்கானலாக இருக்குமென்பதை தெரிவித்தபோது அனைவரும் மகிழ்வுடன் ஏற்றனர்.
விடுதிக்காப்பாளரிடம் மகிழ்வைத்தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம். நண்பர்கள் இப்போது வண்டிகளில் மாறி அமர்ந்தோம்.நான் இருந்த வண்டியை இப்போது வண்டியோடு வந்த ஓட்டுநர் இயக்கினார்.
8
இரண்டு வண்டிகளும் வளைந்து வளைந்து சறுக்கிக்கொண்டு மலையிலிருந்து இறங்கின.போகப்போக வண்டிகளுக்கிடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டன.
சேலத்தின் பரபரப்பான கடைவிதியை எங்கள் வண்டி எட்டியபோது வண்டியை நிறுத்தி மறக்காமல் ஒரு சால்வையை வாங்கிக்கொண்டார் நண்பர் ஜெகநாதன். வண்டி இரயில் நிலையத்தை நோக்கிபயணித்தது. இந்த பயணத்துக்கு பக்கபலமாகயிருந்த காரோட்டிக்கு நண்பர் ஜெகநாதன் ஒரு பண அன்பளிப்பு கொடுக்க முயர்ச்சித்தார். அன்போடு அளிப்பதை தவறாக எண்ணிவிடக்கூடாதென்பதில் அவர் பேச்சு கவனம் காத்தது.
7 fotos (1)
இருந்த போதிலும் பணிவோடு மறுத்த அந்த ஓட்டுநர் தன்னுடைய பணியைத்தான் தான் செய்ததாக பதிலளித்தார். எங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அதே சிந்தனையில் வாழ்ந்தவர்கள்தாம் நாங்களும். எங்கள் பணிக்காலங்களில் உழைப்பிற்கான ஊதியத்தைத்தவிற வேறொன்றையும் எதிர்பார்த்தவர்கள் அல்ல நாங்கள்.
பின் எங்கே கீரல் விழுந்தது.
சேலம் ரயில் நிலையத்தில் நண்பர் தங்கவேலுவுக்கு சால்வையணிவித்து விடைபெற்றோம். ஈரோடு வழியாக பயணிப்பவர்கள் தங்கவேலுவுடன் சேர்ந்து கொண்டனர்.
கோவை எக்ஸ்பிரசில் வந்த நாங்கள் நால்வரும் இப்போது சென்னை திரும்பும் அதே எக்ஸ்பிரசுக்காக காத்திருக்கிறோம்.
அடுத்தமுறை சந்திப்போம்.!

Series Navigationநீங்காத நினைவுகள் – 48
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *