கவிக்கு மரியாதை

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

 

சித்ரா சிவகுமார்

யாழி படகு விழா, சீனாவில் டுவன் வூ, கான்டன் பிரதேசங்களில் டுஅன் இம் என்று அழைக்கப்படும் படகுப் போட்டி விழா, சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும் மிகவும் புகழ்பெற்ற நாடறிந்த பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் விழா.  சீனர்கள் இல்லாத நாடே இல்லை என்று சொல்லலாம்.  அவர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இன்று இவ்விழா சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடச் சொல்லலாம்.

நம் நாட்டில் கேரள மாநிலத்தில் சிறப்பாக நடக்கும் படகுப் போட்டிப் போன்று, ஆண்டு முழுவதும் பயிற்சி எடுத்துக் கொண்டு, தங்களின் உடல் உரத்தையும், படகோட்டும் திறத்தையும் வெளிக்காட்டும் விழாவாக இன்று இது இருக்கிறது.

இவ்வாண்டு ஜூன் 2ம் நாள் முதல் ஒரு வாரம் இது பல்வேறு இடங்களில் முழு உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.  ஜூன் 2ம் நாள் எல்லா இடங்களும் களைகட்டி இருந்தன.  அதிலும் கடற்கரைப் பகுதி, மக்கள் கூட்டத்துடன் கரைபுரண்டு காணப்பட்டது.

ஹாங்காங்கில் ஸ்டான்லி கடற்கரை, ஷாடின் நதிக்கரை, செக் கோ கடற்கரை, அபர்டீன் கடற்கரை, தீவுகளான லாமா கடற்கரை, தை ஓ கடற்கரை என்று எல்லா இடங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  சிம் சா சுய் என்ற இடத்தில் சர்வதேச படகுப் போட்டி ஜூன் 6 முதல் 9 வரையிலான மூன்று நாட்கள் போட்டி.

பல்வேறு நிறுவனங்களும், பள்ளிக் கல்லூரிகளும், ஆர்வமுள்ள இளைஞர்கள் என்று அனைவரும் குழுக்களை அமைத்துக் கொண்டு, பயிற்சி பெற்று அவற்றில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பைகளைத் தட்டிச் சென்றன.

 

இந்தப் போட்டிகளைக் கடற்கரையிலிருந்தும் பார்க்கலாம்.  சிறு கப்பல்கள் மற்றும் படகுகளில் பயணத்தொகைகளைக் கட்டி நடுக்கடலில் சென்றும் பார்க்க வசதிகள் இருந்தன.  நடுக்கடலில் சென்று பார்த்துக் கொண்டே, அன்றைய தினத்திற்கென்று சிறப்பாகச் செய்யப்படும் பதார்த்தங்களை உண்டு கொண்டு பார்க்கும் வசதியான படகுச் சவாரிகளும் உண்டு.

படகுகள் அனைத்தும் விதவிதமாக வண்ணமயமான யாழி முகப்பினைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒரு குழுவிலே சாதாரணமாக 21 பேர் இருப்பர். துடுப்புப் போட 20 பேர்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேளத்தை வாசிக்க ஒருவர். போட்டிகள் நடத்தப்படும் இடம் கூச்சலுடனும் கும்மாளத்துடனும் ஒரு போர்களம் போன்றே காணப்பட்டது..  வெற்றியை வேண்டி முரசினை அடிப்பதும், வேகத்தைக் கூட்ட குழுவினர் போடும் சத்தமும் இந்த இடத்தில் நிரம்பி காணப்பட்டது.

 

ஆம்.. இந்தப் படகுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன?

இதற்குப் பின் சுவையான ஆனால் வருத்தப்பட வைக்கும் நிகழ்ச்சி உண்டு.

2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சு யுஅன் (கி.மு. 340-278) என்பவரை பற்றியது.  அவர் சூ நாட்டின் அமைச்சராக இருந்தார்.  அப்போது சின் நாட்டின் மேல் சி நாட்டின் உதவியோடு போருக்கு அறைகூவல் விடுக்கச் சொன்னதை ஏற்காமல், உட்பூசல் சூழ்ச்சிகள் காரணமாக அவர் நாடு கடத்தப்பட்டார்.  அந்த நேரத்தில் அவர் அரிய பல காவியங்களை எழுதினார்.  நாட்டுப் பற்றையும், மக்கள் வாழ்க்கை நிலை பற்றியும், இலட்சம் சூழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதினார்.  சில ஆண்டுகளில் சின் நாடு சூ நாட்டை முழுமையாக கைக்குள் போட்டுக் கொண்டதை அறிந்து மனம் வெதும்பிய சு, தன்னுடைய 61ஆம் வயதில், ஐந்தாம் மாதம் ஐந்தாம் நாள் தன்னுடைய உடலில் ஒரு பாறையைக் கட்டிக் கொண்டு, மிலுவோ நதியில் (வடமேற்கு ஹ_னான் மாகாணம்) குதித்துத் தன்னை மாய்த்துக் கொண்டார். அவரது செய்கையை அறிந்த அவர் மேல் அன்பு கொண்ட அவ்விடத்து மக்கள், அவரது உடலைத் தேடி நதியில் பல படகுகளில் சென்று தேடினர்.  அவரது உடலைப் பாதுகாக்க எண்ணி, மீன்கள் அவரது உடலை தின்னாமல் இருக்க, அரிசி உருண்டைகளைச் செய்து படகுகளிலிருந்து ஏறிந்தனராம்.

இந்த நிகழ்ச்சியினை நினைவு கூறும் வகையில் தான் ஆண்டுதோறும் நதியிலே படகுகளின் அணிவகுப்புகள் நடந்து வருகின்றன என்ற கதை உண்டு.  கவிக்கு மரியாதை செய்யும் விழா இது.  சீனாவில் இது ‘கவிஞர் தின விழா’வாகவும் கொண்டாடப்படுகிறது.  2008 முதல் இந்நாளை விடுமுறையாக சீன அரசு அறிவித்தது.

டுவன்வூ விழா (இரட்டை ஐந்து விழா) தினதன்று, அவர் பிறந்த ஊரான குய்சௌ (ஹேபெய் மாகாணத்தின் சிகுவைய் மாவட்டம்) விழாக்கோலம் கொள்ளும்.  குழந்தைகள் அனைவரையும் குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து மகிழ்வர்.

 

நம் நாட்டில் பொங்கல் தினத்தன்று இனிப்புப் பொங்கல் செய்து உண்பது போல், விழா கொண்டாடும் இடங்கள் அனைத்திலும், சொங்சிர் என்று சொல்லப்படும் அரிசி உருண்டைகளைச் செய்து, அன்றைய தினம் உண்டு மகிழ்வர்.  சில வீடுகளில் இதை விழாவின் முந்தைய தினம், குடும்பத்தினர் அனைவரும் கூடிச் செய்வதும் உண்டு.  சிவப்பு அவரை, இறைச்சி, முட்டை என்று பல வகை உணவுப் பொருட்களை சமைத்த பசையுள்ள அரிசியுள் வைத்து, இலையில் கூம்பு வடிவத்தில் வைத்துக் கட்டி, நூல் கொண்டு கட்டி வைப்பர்.  இதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.  செய்ய முடியாதவர்கள் கடைகளிலிருந்து அதை வாங்கிக் கொள்வர். விழா நாளன்று அதைப் பிரித்து உண்டு மகிழ்வர்.

images 30f9edc9c508131cd7da03 images (1) W020090521402025323175 H_4 H_2 R_3 R_8 R_1 5845_1 dragonboatfest03 5changpu_1476 30f9edc9c508131cd80304 IMG_20110516_185053

இந்த நாளில் மக்கள் தங்கள் உடல் உரத்தை அதிகரிக்கவும் நோய்கள் அண்டாதிருக்கவும் சில காரியங்களைச் செய்வர்.  வீடுகளை சுத்தம் செய்து மூலிகைச் செடிகளால் அலங்கரித்து, நோய்களை விரட்ட முயல்வர்.  வசம்பு மற்றும் அபிசிந்தியம் இலைகளை வீட்டின் வாசலில் கட்டி விடுவர்.  இந்த இலைகளும் காம்புகளும் ஒரு வித வாசனையை வீடு முழுக்கப் பரப்பி கொசுக்களையும் இதர கிருமிகளையும் விரட்டி காற்றினை தூய்மைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வாசனைப் பொருட்கள் கொண்ட பைகளையும் ஐந்து நிற கயிற்றினை கைகளில் கட்டிக் கொள்வர். இந்த வாசனை திரவியப் பைகளை குழந்தைகள் கட்டிக் கொள்வதால் தீயன அண்டாது என்ற நம்பிக்கை.   அழகிய வண்ணங்களாலான சிறு பட்டுப் பைகளை ஐவண்ண நூலால் கட்டி உடைகளில் கட்டிச் கொண்டு சிறுவர் சிறுமியர் தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  நம் நாட்டில் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வது போல், ஐவண்ண நூலை கையிலோ, கழுத்திலோ, காலிலோ கட்டிக் கொள்வர். இந்நூலுக்கும் பைக்கும் நோயினை குணப்படுத்தும் மற்றும் மந்திரத் தன்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதைப் பெற்றோர் கட்டும் போது குழந்தைகள் பேசக் கூடாதாம்.  அதை குறிப்பிட்ட நாட்கள் வரை அவசியம் கட்டியிருக்க வேண்டுமாம்.  அதை கோடையில் வரும் முதல் மழை நாளன்று கழற்றி நதியில் எறிந்து விடலாமாம்.  இது குழந்தைகளை கொள்ளை நோயிலிருந்தும், மற்ற நோய்களிலிருந்தும் காப்பாற்றும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சீன விழாவினை இங்கு வாழும் வெளிநாட்டவர்களும் சீனர்களைப் போன்று உற்சாகத்துடன் கலந்து கொள்வதைக் காணும் போது, இவ்விழா அனைவரையும் உற்சாகப்படுத்தும் விழா என்றே சொல்லலாம்.

Series Navigation
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *