காயா? பழமா?

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன்.
தமிழாய்வுத்துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை.

காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டங்களைத் தாண்டவேண்டும். கட்டங்களைத் தாண்டும்போது கோட்டினைத் தொட்டுவிட்டால் காய். தொடாமல் கடந்துவிட்டால் பழம். எப்படியிருக்கிறது இந்த காயா? பழமா? ஆட்டம்.இந்த ஆட்டத்தை அப்படியே நம் இல்லற வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
கணவன், மனைவி இருவரும் குடும்பத்தின் அடிப்படை சக்திகள். இவ்விருவரின் கூட்டுமுயற்சியால் இல்லறம் சிறக்கிறது. நல்லறம் விளைகின்றது. இருவரும் மனதளவிலும், உடலளவிலும், செயலளவிலும் ஒன்றி ஒன்றுபட்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கையாகின்றது. அவ்வப்போது ஒன்றுபட்டும், மனவேறுபாடு வந்து வேறுபட்டும் மீண்டும் கூடியும், ஊடியும் வாழும் வாழ்க்கையும் இல்லற வாழ்வின் ஒரு வகை. கணவனும் மனைவியம் முற்றிலும் வேறுபட்டுப் பிரிந்துபோதல் என்பது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். ஆனால் பிரிந்த வாழ்வை கணவனும் மனைவியும் எண்ணி ஏங்கி வாழும் வாழ்வையும் இல்லறத்தின் ஒரு வகையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
கணவன் மனைவிக்குள் சண்டை வரலாம். அந்த சண்டையின் கால அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும். அல்லது மிகக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரின் கடமையாகின்றது. சண்டைக்குப் பின்புச் சமதானம் அடைவதும், சமதானப்படுத்துவதும் உடன் நிகழ்ந்துவிடவேண்டும். கணவன் மனைவி இருவரின் இடையே நிகழும் கருத்து முரண்பாடுகளை மூன்றாகப் பிரிக்கின்றது தமிழ் மரபு. ஊடல், புலவி, துனி என்பன அம்மூன்றும் ஆகும்.
ஊடல்: என்றால் பிணக்கு அல்லது சண்டை என்று கொள்ளலாம்
துனி: என்றால் பிணக்கினை அல்லது சண்டையை நீட்டித்தல் ஆகும்.
புலவி: என்றால் பிணக்கினை அல்லது சண்டையை உணர்ந்து மீளுகின்ற நிலை என்று
கொள்ளலாம்.
இந்த மூன்று நிலைகளையும் நாள்தோறும் இன்றைய இல்லறத்து அரசர்களும், அரசிகளும் சந்தித்தே வருகிறார்கள். சிற்சிறு சண்டைகள், இந்தச் சண்டைகளில் இருந்து மீண்டு சமாதானம் ஆகுதல், மீண்டும் சண்டைபோடுதல் என்று வாழ்க்கை முழுவதும் ஊடலும், துனியும், புலவியும் கலந்தே நிற்கின்றன. இவற்றின் கால அளவையும், ஒன்று சேர்ந்து இருக்கின்ற கால அளவையும் ஒப்பு வைத்துப் பார்த்தால் ஊடலின் அளவே அதிகமாக இருப்பது தெரியும். யாருக்கு இவ்விரு காலங்களையும் ஒப்பு நோக்கிக் காண நேரம் இருக்கின்றது.
நாம் சந்தித்த இந்த சண்டை மிகுந்த வாழ்க்கை ஒரு புறம். வள்ளவர் சண்டையேயில்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறார். எண்ணிப் பார்த்திருக்கிறார். சுட்டிக் காட்டியிருக்கிறார். சண்டையே இல்லாத இல்லறவாழ்க்கை எவ்வளவு ருசியானது என்பதை வள்ளுவர்,
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி (1191)
என்ற குறளி;ல் காட்டியுள்ளார்.
மனைவி கணவனைக் காதலிக்கிறாள். அவனின் உடலும் உள்ளமும் மனைவிக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. கணவனும் முழுதாக மனைவியைக் காதலிக்கிறான். அவளின் உடலும் உள்ளமும் அவனுக்கே முழுதாகின்றது. இவ்விருவரின் முழுமை பெற்ற காதல் அல்லது காமம் என்பது கொட்டைப் பகுதியே இல்லாத பழம் போன்றது என்கிறார் வள்ளுவர்.
இப்போதெல்லாம் கொட்டையுள்ள திராட்சைகள், கொட்டையற்ற திராட்சைகள், கொட்டையுள்ள மாதுளை, கொட்டையற்ற மாதுளை என்று பற்பல வகைகள் பழங்களுள் வந்துவிட்டன. இவற்றில் கொட்டையில்லாத பழங்களின் விலை, கொட்டையுள்ள பழங்களின் விலையை விடக் கூடுதலாக இருக்கிறது. ஏன்? அக்கொட்டையற்ற பழங்களை உருவாக்கும்போது அவை சுவைப்பவருக்கு எந்தத் தடையையும் தருவதில்லை. மாம்பழத்தை உண்டு கொண்டு இருக்கிறோம். உண்டு கொண்டிருக்கையில் கொட்டைப் பகுதி வந்து இடையீடு செய்கின்றது. அந்தக் கொட்டைப் பகுதியில் ஒரு வண்டு வேறு கருப்புத் துளையில் இருந்து வெளிப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். மாம்பழத்தின் ருசி மறந்து, மாறி, உடலுக்குள்ளே ப+ச்சி சென்றிருக்குமோ என்ற கவலை தொற்றிக்கொள்கிறது. கொட்டையே இல்லாத பழங்களைக் கண்டுபிடித்துவிட்ட அறிவியல் வளர்ச்சி ஏன் சண்டையே இல்லாத குடும்பங்களை உருவாக்க முன்வரவில்லை?
முழுமையான காதல் பெற்ற கணவனும் மனைவியும் பெறும் இன்பம் கொட்டையில்லாத தசைப்பகுதி மட்டுமே கொண்ட பழத்தை ஒருவன் விரும்பி உண்ணும் தன்மை போன்றது என்று வள்ளுவர் காழில் கனிக்கு, முழுமையான கற்பு வாழ்க்கைக்கு விளக்கம் தருகிறார்.
கொட்டை என்பது சண்டை, பிணக்கு, புலவி, துணி. இவையில்லாத வாழ்க்கை கொட்டையில்லாத கனியைச் சாப்பிடுவது போன்றது. தற்காலத்தில் பிளம்ஸ் என்ற பழம் ஒன்று உள்ளது. அது உண்ணும்போது முழுச் சதைப்பகுதி உடையதாகத் தோன்றும். ஆனால் வாயில் இட்டதும் அதன் கொட்டை வாய்க்குள் அடங்காமல் வெளியே துப்பச் செய்துவிடும்.இதுபோலத் தான் இல்லறவாழ்வும். சண்டைகள் தோன்றிவிட்டால் உள்ளத்தின் அன்பு வெளியேறிவிடும்.

பழத்தின் இனிமையை அனுபவிக்கும்போது கொட்டை தடைசெய்கின்ற பாங்கைப் போன்றது சண்டைகள் நிறைந்த இல்லற வாழ்க்கை.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று (1306)
என்று மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மேற்சொன்ன குறளுக்கும் பின் சொன்ன குறளுக்கும் ஒரு நூறு குறள்கள் இடைவெளி இருந்தாலும் வள்ளுவர் தன் கொள்கை மாறாமல் குறள்களை வகுத்திருக்கிறார் என்பதற்கு இவ்விரு குறள்களும் சான்று.
துனி என்ற சண்டை நீட்டிப்பும், புலவி என்ற சண்டை உணர்ந்துத் திரும்பும் நிகழ்வும் இல்லாமல் இருந்தால் அந்த வாழ்க்கை கனி போன்றது. துனியும் புலவியும் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களைப் பார்த்து மற்ற கணவன், மனைவியர் ஏங்கலாம்.
சற்று சண்டையுடன் வாழ்பவர்கள் கொட்டையுடன் உள்ள பழம் போன்று இனிப்பவர்கள். சண்டையே வாழ்வாகக் கொண்டு இருப்பவர்கள் கருக்காய் போன்றவர்கள். நுங்கில் இளசு, கருக்காய் என்று இருவகை உண்டு. கடினமான நுங்கினைக் கருக்காய் என்கிறோம். அதுபோன்று சண்டைகளுடன் வாழ்ப்வர்கள் கருக்காய் உண்பவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்குப் புளியங்காயாக இல்லற வாழ்வு புளித்துப்போகின்றது,.
எனவே வள்ளுவ வாசகத்தின்படி இல்லறத்தில் சண்டையே இல்லாமல் வாழும் வாழ்க்கை என்பது நிறைவான வாழ்க்கை. அவ்வாழ்வி;ல் வாழும் கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் வீழ்ந்துத் திளைப்பவர்கள். இவர்கள் கொட்டையற்ற பழத்திற்கு ஒப்பானவர்கள்.
இல்லறத்தில் சற்று சண்டை போடுபவர்கள், பின் அதிலிருந்து மீளுபவர்கள் கொட்டையுடன் கூடிய பழத்திற்கு இணையானவர்கள்.
இல்லறத்தில் சண்டையையே போட்டுக்கொண்டிருப்பவர்கள் கருக்காய் போன்றவர்கள். அவர்கள் இருவரால் ஒருவருக்கும் மகிழ்வில்லாமல் காலம் கழியும். காமமும் கழியும்.
இல்லறத்தில் சண்டை போட்டு மீளவும் சேராமல் இருப்பவர்களைப் பற்றி வள்ளவர் இங்குப் பேசவே இல்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கணவன் மனைவி என்ற இருவரின் பிரிவை வள்ளுவரின் மனம் ஏற்கவே இல்லை என்பதால்தான அந்நிலையை வள்ளுவர் எண்ணிப் பார்க்கவே இல்லை.
படித்துக்கொண்டிருக்கும் நமக்குள் நம் வாழ்க்கையை அசைபோட வேண்டியுள்ளது. நம் வாழ்க்கை காயா? பழமா? கொட்டையில்லாத பழமா? ஆட்டம் தொடங்கட்டும். கண்களை மூடிக்கொண்டு நொண்டி விளையாடுங்கள்.கோட்டைத் தொட்டுவிடாதீர்கள். கோட்டைத் தொட்டுவிட்டால் நீங்கள் காய். கோட்டைத் தொடமால் கடந்தால் நீங்கள் பழம்.

Series Navigation
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *