ஜோதிர்லதா கிரிஜா
1970 களின் நடுவில் ஒரு தமிழ் எழுத்தாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். வரவேற்பு நங்கையாகப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரியை முதலில் அவர் மயிலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாள நண்பருடன் சந்தித்தார். அப்போது சாப்பாட்டுக்கான இடை வேளையாதலால், ராஜேஸ்வரி தொலைபேசியில் சேதியைக் கூறி என்னைக் கீழே வரவேற்பறைக்கு வரச் சொன்னார். அந்த எழுத்தாளர் அப்போது கல்கி வார இதழில் ஓர் அருமையான சிறுகதையை எழுதியிருந்தார். அவர் அதிகம் எழுதியவர் அல்லர். அந்தக் கதையைப் படித்து ரசிப்பதற்கு முன்னர் அவரது வேறு எந்தக் கதையும் என் கண்ணில் பட்டு நான் அதைப் படித்ததில்லை. ஒருவர்க்கொருவர் அறிமுகம் ஆன பின் கல்கி கதைக்காக நாங்கள் மூவருமே அவரைப் பாராட்டினோம். மகிழ்ச்சியுடன் எங்கள் பாராட்டை அவர் ஏற்றுக்கொண்டார். திருச்சியில் அவர் ஒரு மைய அரசு அலுவலகத்தில் பணியில் இருந்தார். சென்னையில் இருந்த தம் தாயின் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். (அப்போது அவரது வயது முப்பத்துச் சொச்சம் இருக்கக்கூடும்.)
மறு நாள் தம் வீட்டுக்கு வருமாறு எங்களை அழைத்தார். அன்று வசதியாய் ஒரு சனிக்கிழமையாக இருந்ததால் ராஜேஸ்வரி, மயிலை எழுத்தாளர், நான் ஆகிய மூவரும் ஓர் இடத்தில் சந்தித்துப் பேருந்து பிடித்து அவரது வீட்டுக்குப் போனோம். அவர் அம்மாவின் வீடு சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தது என்பது ஞாபகமில்லை.
அவர் தம் மனைவி, மற்றும் தாயாரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். மற்றவர் வெளியே போயிருந்தார்கள். எங்களுள் இலக்கியம் பற்றித் தொடங்கிய பேச்சு எங்கெங்கோ சுற்றியது. திருச்சி எழுத்தாளர், ‘இந்தக் காலத்துப் பெண்கள் கெட்டுப் போகத் தொடங்கி இருக்கிறார்கள். அதைப் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும். இந்தக் காலத்துப் பெண்கள் – அதிலும் வெளியே வந்து வேலைக்குப் போகிறவர்களில் பலர் – எப்படிக் கெட்டுப் போய்விட்டார்கள், தெரியுமா?…. “ என்று கேட்டவர், ஓர் ஊரின் பெயரைச் சொல்லி, அந்த ஊர்த் தபால் அலுவலகத்தில் பணி புரிந்துகொண்டிருந்த ஓர் எழுத்தாளர் பெயரைச் சொல்லிவிட்டு, “இப்போதெல்லாம் திருமணம் ஆவதற்கு முன்னாலேயே பெண்கள் கெட்டுப் போகத் தொடங்கிவிட்டார்கள். தன் அலுவலகத்துப் பெண் ஒருத்தியைப் பற்றி அவர் என்ன எழுதியிருக்கிறார், தெரியுமா? கொஞ்சம் இருங்கள். அவரது கடிதத்தையே காட்டுகிறேன்…” என்றவர் எழுந்து ஓர் அறைக்குள் போனார். போனவர் சில் நொடிகளில் திரும்பி வந்து, “அது கிடைக்கவில்லை. கை தவறி எங்கேயோ வைத்துவிட்டேன்….” என்றபடி உட்கார்ந்தார்.
”அவர் என்னதான் சொன்னார் அப்படி அந்தப் பெண்ணைப் பற்றி? ஞாபகத்திலிருந்து சொல்லுங்கள். கடிதத்தைக் காட்டித்தான் உங்கள் கூற்றை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை!” என்றதும், “திருமணம் ஆகாத நிலையில் எவனுடனோ தாலி கூடக் கட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இப்படிப் பட்ட பெண்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். அம்மா-அப்பா இல்லையாம் அவளுக்கு. சித்தப்பா வீட்டில் இருக்கிறாள். அவர்களால் வரதட்சிணை கொடுத்து இவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முடியவில்லையாம்… அதனால் இப்படிச் செய்துகொண்டிருக்கிறாள். நாளைக்கு அவன் இவளைக் கைகழுவி விட்டுப் போனால் இவள் கதி என்ன?’” என்றார் நண்பர்.
”நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் எதனால் இப்படி நேர்கிறது என்று யோசித்துப் பார்த்தீர்களா?… வரதட்சிணைப் பிரச்சினையால்தானே? மற்ற எல்லாவற்றிலும் பெற்றோரை எதிர்க்கும் இளைஞர்கள் வரும்படி வுரும் விஷயத்தில் மட்டும் அவர்கள் சொல்லைத் தட்டாமல் இருக்கிறார்களே! அது சரியா? சொல்லுங்கள்.”
”அதெப்படி,மேடம்? அப்படி எல்லாம் எங்களால் பேசவே முடியாது, மேடம். உடனே வீட்டில் ரகளையும் சண்டையும் வெடிக்கும். நடக்கிற விஷயமாய்ப் பேசுங்கள். போகாத ஊருக்கு வழி சொல்லாதீர்கள்….ஆனால் அதற்காக ஒரு பெண் கல்யாணம் ஆவதற்கு முன்னால் கெட்டுப் போகவேண்டுமா? அதை நியாயப்படுத்துகிறீர்களே?”
”எந்த நிலையிலும், எப்படிப்பட்ட கட்டாயம் நேர்ந்தாலும் ஒரு பெண் தன் பாதுகாப்புக்குக் குந்தகம் விளையுமே என்கிற அச்சத்தாலேனும் அவ்வாறு எவனுடனாவது வாழத் தயாராக இருக்கக் கூடாதுதான். ஒரு தப்பைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் அந்தத் தப்பு எதனால் நேர்கிறது என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அதற்குக் காரணமானவர்களையும் கண்டிக்க வேண்டும். அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பி அவ்வாறு கூறினேன். எய்தவர்களை விடுத்து அம்பை நோவது சரியன்று… ஆண்களுக்குப் பண ஆசையும், பெற்றோரை எதிர்க்கும் நியாய உணர்வும் இல்லாததால் இப்படி நேர்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.”
”அதெப்படி, மேடம்? ஒரு வீட்டில் கல்யாண வயதில் ஒரு பெண் இருந்தால் அவளுக்கு வரதட்சிணை கொடுக்க வேண்டியிருக்கிறதே! அப்படி இருக்கும் போது, அந்த ஆண் – அவளுடைய அண்ணன் – எப்படிப் பெற்றோர் கருத்துக்கு எதிராய்ச் செயல்பட முடியும்?”
“நீங்கள் சொல்லுவது சரிதான். பெண் குழந்தைகளே இல்லாத குடும்பத்து ஆண்கள் நியாயமாக நடக்கிறார்களா?”
இந்தக் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்கும் பெற்றோரை எதிர்த்துச் செயல்படுவது நடக்காத காரியம் என்கிற பதிலையே சொன்னார்.
அதுமட்டுமல்லாது, அவரவர் ”ஸ்டேட்டஸ்” என்று ஒன்று இருப்பதால் அதன் படி வரதட்சிணைத் தொகை ஏறத்தான் செய்யும் என்கிற தினுசில் பேசினார். இதனால் என் கருத்தை நான் காரசாரமாய்த் தெரிவிக்க நேர்ந்தது. திருச்சி எழுத்தாளரின் முகத்தில் ஈயாடவில்லை. ராஜேஸ்வரி தானும் சேர்ந்து வாக்குவாதம் செய்யக் கூடாது என்கிற பண்பாடு கருதியோ என்னவோ மவுனகாக இருந்தார்.
காரசாரமான விவாதத்தின் விளைவாகச் சற்று நேரத்தில் அங்கே ஒரு மவுனம் விளைந்தது: “நீங்கள் எய்பவர்களை விட்டுவிட்டு அதனால் பாதிப்பு அடைபவர்களைக் குற்றம் சொன்னதால் நான் கடுமையாக வாதிட நேர்ந்துவிட்டது” என்றேன்.
”அதனால் என்ன? கருத்துப் பரிமாறல்தானே?” என்றார் அவர். அவருடைய அம்மாவும் சரி, மனைவியும் சரி எங்கள் வாக்குவாதத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் அம்மாவுக்கு வரதட்சிணை வாங்கிய சிறுமை, மனைவிக்குத் தன் தந்தை அதைக் கொடுத்த எரிச்சல் என்பதாய்ப் புரிந்துகொண்டோம். அதன் பின் பொதுவாக ஏதோ பேசிய பின் விடை பெற்றோம். மறு நாள் எங்கள் வீட்டுக்கு அவரும் அவர் மனைவியும் வந்தார்கள். வரதட்சிணை பற்றிய கருத்துப் பரிமாற்றத்தால் என் மனம் புண்பட்டிருக்குமோ என்கிற கரிசனத்தாலேயே அவர் வந்தது புரிந்தது. என் கருத்துகளால் தாம் புண்படவில்லை என்பதாய்க் காட்டிக்கொள்ளும் பண்பாட்டின் நிமித்தமாகவும் இருந்திருக்கக் கூடும்.
காரசாரமாக எதுவும் பேசாமல் பொதுவாய்ப் பேசினோம். அப்போது அவர் ஒரு விஷயம் தெரிவித்தார். எங்கள் பேச்சு வடமொழிபற்றித் திரும்பிய கணத்தில் அவர் தெரிவித்த வியப்புக்குரிய விஷயம் அது. ஒலிகளுக்கு வடிவம் உண்டு என்பது மேற்கத்திய விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் புதிதாய்க் கண்டு பிடித்த விஷயம் என்றும் ஆனால் இந்திய மகரிஷிகளுக்கோ அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னரே தெரிந்திருந்தது என்றும் அவர் தெரிவித்தார். அந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் சம்ஸ்கிருத மொழியை இந்திய மகரிஷிகள் இயற்றினார்கள் என்றும் அவர் கூறினார். உதாரணமாக, “காகஹ” (காகம்) எனும் வடமொழிச் சொல்லை உச்சரிக்கும் போது வெளியாகும் ஒலி அலைகளைப் படம்பிடித்தால் திரையில் காக்கை போன்ற பறவையின் வடிவம் பதிவதாகவும், அதே போன்று ” மனுஷ்யஹ” எனும் சொல்லுக்குரிய வரிபடம் ஒரு மனிதனின் உருவமாய்த் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்த போது பெரு வியப்பாக இருந்தது.
எனவே, சம்ஸ்கிருதம் ஒலிகளின் அடிப்படையிலான விஞ்ஞான மொழி என்று அவர் கூறி எங்களை அயர்த்தினார். அதே போல் சம்ஸ்கிருத சுலோகங்களை உச்சரிக்கையில் வெளியாகும் ஒலிகளின் வரிவடிவம் அவற்றின் பொருளுக்கேற்ற வடிவங்களைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். சம்ஸ்கிருதத்துக்கும் மூத்த மொழியான தமிழுக்கும் இத்தகைய சிறப்பு இருக்கக் கூடும். அதுவும் ஆராய்ச்சிக்கு உரியது.
சிறிது நேரத்துக்குப் பின் அவர் விடை பெற்றார். அவர் கூறிய செய்தி மிகுந்த வியப்பூட்டுவதாக இருந்தது. “நான் இந்தியாவில் பிறந்திருந்தால், இப்போதையும் விட மிகச் சிறந்த விஞ்ஞானியாகி யிருந்திருப்பேன்” என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் கூறியதுதான் நினைவுக்கு வந்தது. நம்மவர்களோ தம்மைத் தாமே மட்டந்தட்டிக்கொள்ளுவதில் பெருமையடைபவர்களாக இருந்து வருகிறார்கள்.
அந்த எழுத்தாள நண்பர் தெரிவித்த தகவல் சிந்திக்க வைத்தது. சில சம்ஸ்கிருத சுலோகங்கள் காதில் விழுந்தாலோ அவற்றை உச்சரித்து ஒருவர் இசைத்தாலோ சில நோய்கள் தீருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மொழியின் ஓசைகள் செவி வழியே உட்புகுந்து நோய்வாய்ப்பட்ட குறிப்பிட்ட அங்க அவயவங்களில் மாற்றத்தை ஏற்படுக்கும் வல்லமை படைத்தவையாக ஒருகால் இருக்குமோ எனும் ஐயம் வருகிறது. இந்த வழியிலும் விஞ்ஞானிகள் சிந்தித்து இதில் உண்மையான விஞ்ஞானம் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்கலாமே.
………
- புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 8
- வாழ்க்கை ஒரு வானவில் 7.
- நீங்காத நினைவுகள் – 50
- திண்ணையின் இலக்கியத் தடம்-39
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1
- முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்
- ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக
- காவல்
- நீள் வழியில்
- ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-
- பெரு நகர மக்களின் வாழ்வியல் நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து….
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3
- நிலை மயக்கம்
- தொடுவானம் 20. மனதில் உண்டான வலி
- மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள் இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச் சுட்டிக் காட்டும்
- தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்
- எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!
- வார்த்தைகள்
- Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan