முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை

திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுப+தி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்n;தாண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில் ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

தேனூர்; வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டுஇ தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார்> ;செந்தில் வாழ் அந்தணர்> திருத்தணியிற்பிறந்தார்> தொண்டரடித்n;தாண்டர்> பாடாது விடுபட்டோர்> புராணிகர்கள்> முருகன் திருவருளைச் சிந்திப்போர்> முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர். >இப்புராணத்துள் ஒளவையார்> மீனாட்சி அம்மையார்> முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார்> அருணகிரிநாதர்> குமரகுருபரர்> நக்கீரர்> அகத்தியர்> கச்சியப்ப சிவாச்சாரியார்> பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

செந்தில்வாழ் அந்தணர் சருக்கம்> கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம்> வென்றி மலைச் சருக்கம்> அரஹாரச் சருக்கம்> காவடிச் சருக்கம்> குகனேரிச் சருக்கம்> கல்லாடச்; சருக்கம்> தென்பழநிச் சருக்கம்> நின்றசீர்ச் சருக்கம்> நாரதச் சருக்கம்> வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது> அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது.

இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

~~இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்

~றதல சேடனார்| என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்

மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்

சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே|| (1181)

என்று பாடுகின்றார்.

கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை

~~ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்

பரவசமாய் வீழ்ந்தெழுந்து

போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்

இனியென்று காண்பதென்று

சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி

படைத்த சம்பந்தாண்டன்

தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று

ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடைய+ற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது> முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

~~ அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில் ) அதிபன் பரிவோடு அம்

புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்

இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இ;ல்லையென்னலும் இம்மா

தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்

சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்

வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்

சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்ப+றிய திதைத்தம் (2582)

என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

~~முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்

இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா

அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்

கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண்|| (1324)

என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று> அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை>அவர்களின் வாழ்வை> தொண்டை> சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

Series Navigation
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *