முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசு
கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561
அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச் சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.
திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காணவந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப்பெருமான்.
‘‘நந்தி நாமம் நமசிவாயவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே ’’
(திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)
என்ற அவரின் நல்லூர்ப் பெருமண நிறைவுப்பாடல்- அ்னைத்து உயிர்களையும் பந்த பாசம் அறுத்து ஞானநிலைக்குக் கொண்டு சென்றதை அறிவிக்கின்றது. இந்நிலையே ஞானகுருவின் உன்னத பணியாகும்.
அனைத்து உயிர்களும் கடைத்தேறும் இனிய வழியை இப்பதிகத்தின் முதல்பாடல் பெற்றுள்ளது.
‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே’’
(திருநல்லூர்ப்பெருமணம், பாடல்.1)
காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பவர்கள் பந்த பாசம் கடப்பார்கள். ஞானநெறி பெறுவார்கள் என்ற தொடக்கத்தை உடைய இப்பாடல் காலம் காலமாகச் சமுதாயம் கடைத்தேறுவதற்கான வழியை எடுத்துரைப்பதாக உள்ளது.
ஞானசம்பந்தரின் இறைப்பாடல்கள் கோயில் தோறும் சென்று பாடப்பெற்றன. அவை ஓரிடத்தில் நின்று இருந்து பாடப்பெற்றன அல்ல. கோயில்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனை இறையனுபவத்தால் அனுபவித்துப் பாடப்பெற்றவை. இதன் காரணமாக அவை தனிமனித அனுபவமாக அமையாமல் சமுதாய அறங்களைப் போற்றுவதாகவும், சமுதாயத்திற்கு நல்லன செய்வனவாகவும் பாடப்பெற்றுள்ளன.
இவர் பாடிய முதல் பாடலே தந்தை, தாய் தவிர்ந்து மூன்றாமவரான இறைவனை முன்னிறுத்திப் பாடிய பாடல் ஆகும்.இந்த இறையனுபவத்தை அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காக நாளும் பாடிப் பரவித் தொழுது இறைவனைப் போற்றினார் ஞானசம்பந்தர்.
உயர் சமுதாய நோக்கு
‘‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுவமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாலோடும் பெருந்தகை இருந்ததே’
(திருக்கழுமலம், பாடல்.1)
என்ற இந்தப் பாடல் சம்பந்தரின் சமுதாய நோக்கினைம உணர்த்தும் தலையாய பாடலாகும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது என்பது சமுதாயம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அவ்வாழ்க்கை முறைக்கு கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் வாழ்வு சிறப்பானது. இறைவனும் இறைவியுடன் கலந்தே வீற்றிருக்கிறான் என்று சமுதாய நிலையை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.
ஞானசம்பந்தரும் அடியார் திருக்கூட்டமும்
ஞானசம்பந்தர் தனியாக எக்கோயில்களுக்கும் சென்றது இல்லை. அவர் வருகிறார் என்றால் அவருடன் அடியார் திருக்கூட்டமும் வரும். வருகின்ற ஊரெல்லாம் மலர்மாலைகள் புனைந்தேத்தி வரவேற்பு கூறுவர். இவ்வகையில் சைவ சமயத்தை சமுதாய இயக்கமாக ஆக்கியவர் ஞான சம்பந்தர்.
அவருடன் உடனுறைந்த அடியார்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர், குலச்சிறையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், நின்ற சீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார், முருகநாயனார், திருநாவுக்கரசர் போன்ற பலர் ஆவர். இவர்களுடன் பலரும் இணைந்து ஞானசம்பந்தக் குழந்தையுடன் சமுதாயப் பணிகளையும் சமயப் பணிகளையும் ஆற்றினர்.
அடியார் திருக்கூடத்தை நாளும் கோளும் தம் இயக்கம் காரணமாக இடையூறு செய்தாலும் அவற்றைப் போக்கவேண்டும் என்று பாடியவர் திருஞான சம்பந்தர். இக்காலம்வரை இப்பதிகமே அடியார் துயர்களைந்துவரும் பதிகமாகும்.
வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(திருமறைக்காடு. பாடல். 1)
என்ற அடியார்களை இறைவன் பெயரால் காக்கும் முறைமை பக்திச் சமுதாயத்தை ஞானசம்பந்தர் வளர்த்த முறையாகும்.
அடியார்கள் வருந்தும்போது அவ்வருத்தம் போக்கவும் ஞானசம்பந்தர் முயன்றுள்ளார். கொடிமாடச் செங்குன்றூர் (திருச்சேங்கோடு) என்ற ஊருக்குப் பனிக்காலத்தில் வந்துசேர்ந்தார் ஞானசம்பந்தர். அந்தப் பனிக்காலத்தில் குளிர் சுரம் வருவது இயல்பு. இக்குளிர் சுரம் வராமல் காக்க இறைகருணையை வேண்டிப் பாடல் இயற்றுகிறார் ஞானசம்பந்தர். அடியார்களைக் குளிர் சுரத்தில் இருந்து காப்பாற்றிய முயற்சி இதுவாகும்.
‘‘அவ்வினைக்கு இவ்வினையாம்
என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல்
போற்றது நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா திரு நீலகண்டம்
(திருக்கொடிமாடச் செங்குன்றூர், பாடல். 1)
இப்பாடலில் செய்வினை வந்து எமை தீண்டப்பெறாமல் இருக்க திருநீலகண்டப்பெருமானை அழைத்துக் காப்பு செய்து கொள்ளுகின்றார் சம்பந்தப் பெருமான். எமை என்ற குறிப்பு சமுதாயம் சார்ந்த குறிப்பு ஆகும். என்னை எனக் குறிக்காமல் எமை என்று தன்மைப் பன்மைநிலையில் தன்னையும் அடியார்களையும் உளப்படுத்தி இப்பதிகம் பாடப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
பஞ்சம் வந்துற்றபோதும் சம்பந்தப் பெருமான் அடியார் திருக்கூட்டத்திற்கு அமுதளித்துப் பாதுகாத்துள்ளார்.. திருவீழிமிழலையில் அடியார்களோடு சம்பந்தப் பெருமான் சென்றபோது அங்கு பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சத்தைப் போக்குவதற்காக பீடத்தின் மீது இறைவன் ஒரு பொற்காசினை ஒவ்வொரு நாளும் அளித்து அதன் வழி பொருள் பெற்று அடியார் பசி போக்க வழி செய்தான்.
சம்பந்தருக்கு இறைவனுக்கு அளிக்கப்பெற்ற காசு வட்டம் கொடுத்து அக்காலத்தில் சிறிது நேரம் கழித்தே மதிப்பு பெறுவதை அறிந்து நல்ல காசு நல்க அவர் பதிகம் பாடுகின்றார்.
‘‘வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீரு் ஏசல் இல்லையே’’
(திருவீழிமிழலை,பாடல்.1)
‘‘இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீரு்
கறைகொள் காசினை முறைமை நல்குமே’’
(திருவீழி மிழலை பாடல்.2)
என்ற பாடல் சமுதயாத்திற்கான பசிப்பிணியைப் போக்கச் சம்பந்தப் பெருமானால் செய்யப்பட்ட முயற்சிகளின் சான்றுகள் ஆகும்.
திருக்கொள்ளம்பூதூர் பதிக்கு ஞானசம்பந்தர் அடியார் கூட்டத்துடன் வந்து சேர்ந்தார். முள்ளி ஆறு இடைப்பட்டது. அவ்வாற்றில் வெள்ளம் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த வெள்ளத்தில் பரிசல் இட பரிசல்காரர்கள் முன்வரவில்லை. சம்பந்தப் பெருமான் பரிசலில் அடியார்களை ஏறச் செய்து பதிகம் பாட அந்தப் பதிகம் சமுதாயத்தைக் கரையேற்றுகிறது.
‘‘ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்குமாறருள் நம்பனே’’
(திருக்கொள்ளம் பூதூர் பாடல். 6)
என்ற பாடலில் ‘செல் உந்துக ’ என்ற தொடர் தானாக பரிசல் செல்லச் சொன்ன தொடராகும்.
திருவோத்தூர் (செய்யாறு) என்ற ஊருக்கு ஞானசம்பந்தர் சென்றபோது அக்கோயிலின் அருகில் ஒரு அடியவர் பனைமரங்களைப் பயிரிட்டு இருந்தார். வளர்ந்தபோது, அவை அனைத்தும் ஆண்பனைகள். அவை காய்க்காதவை என்பதறிந்து அவ்வடியவர் மிகவும் துயரப்பட்டார். அப்பனைகளைப் பெண்பனைகளாக மாற்றி திருவோத்தூர் மக்கள் சைவநெறி நிற்கப் பதிகம் பாடுகின்றார் ஞானசம்பந்தர்.
‘‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்பு வார் வினை வீடே’’
(திருவோத்தூர் பாடல். 11)
என்ற திருக்கடைக்காப்புப் பாடலில் ஆண்பனைகள் பெண்பனை ஆனதற்கான அகச்சான்று குறிக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு அடியார் திருக்கூட்டமாக விளங்கும் சைவ சமுதாயத்தின் இன்னல்களை அவ்வப்போது களைந்து இன்பமுடன் வாழ தமிழ்மாலை புனைந்தேத்தி, இறையருளை விளங்க வைத்துள்ளார் ஞானசம்பந்தப் பெருந்தகை.
பெண்கள் சமுதாயம்
ஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் பண்பாடும் ஒழுக்கமும் பெண்களால் மிகவும் போற்றப்பெற்று, பின்பற்றப் பெற்று வந்துள்ளன. பண்பாடும், ஒழுக்கமும், சைவமும் பேணிய பெண்களுக்கு இன்னல் நேர்ந்த காலத்தில், அவை தன் காதுகளுக்கு எட்டிய நிலையில் அப்பெண்களின் இன்னல்களைப் போக்க பதிகம் பாடியுள்ளார் ஞான சம்பந்தப் பெருந்தகை.
கொல்லிமழவன் மகள்
சம்பந்தர் காலத்தில் திருபாலச்சிரமம் என்ற ஊரை ஆண்டவன் கொல்லி மழவன் ஆவான். இவனின் மகள் முயலக நோயால் பாதிக்கப்பெற்று இருந்தாள். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கோயிலில் உள்ள இறைவனிடத்தில் இம்முயலக நோய் பெற்ற மகளை அடைக்கலப்படுத்தினான் கொல்லி மழவன்.
அவ்வூர்ப் பகுதிக்கு வந்த ஞானசம்பந்தர் இப்பெண்ணின் நோய் நீங்(க்)கப் பாடுகின்றார்.
‘‘துணிவளர் திங்களர் துளங்கி விளங்கச்
சுடர்ச் சுடைசுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
ஆரிடமும் பல தேர்வர்
அணிவளர் கோலம் எல்லாம் செய்து பாச்சில்
ஆச்சிரமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பே’’
(திருப்பாச்சிலாசிரமம் பாடல்.1)
என்ற இந்தப்பாடல் ‘மங்கை வாட நோய் செய்யலாமா’ என்றுப் பெண்ணுக்கு இரங்கும் நிலையில் அமைந்துள்ளது.
வைப்பூர் தாமன் மகள்
திருமருகல் என்னும் இடத்திற்கு ஞானசம்பந்தர் வந்துசேர்ந்தபோது வைப்பூர் தாமன் என்பவரின் மகளுக்கு ஏற்பட்ட இன்னலைத் தீர்த்தருள முனைகின்றார்.
வைப்பூரில் வாழ்ந்த தாமன் என்பவருக்கு ஏழுமகள்கள் இருந்தனர். இவர்களுள் அறுவரை தன் சொந்தமான இளைஞன் ஒருவனுக்குத் தருவதாகச் சொல்லி வேறு வேறு இடங்களுக்குப் பொருள் கருதி மணம் முடித்துக் கொடுத்துவிடுகிறான் வைப்பூர் தாமன். ஏழாமவளாகிய இவள் தன் சொந்த மாமன் மகனாகிய அவ்விளைஞனைக் கரம் பிடிக்க நினைத்து இவனுடன் உடன்போக்கு வருகிறாள். வந்த இடத்தில் இரவு நேரம் வந்துவிட திருமருகலில் இவர்கள் தனித்தனியாக உறங்குகின்றனர். அப்போது ஒரு பாம்பு மணக்க இருந்த ஆண்மகனைக் கடித்துவிட இவள் தந்தையின் சார்பினையும், மணக்க இருந்தவன் சார்பினையும் இழந்து தவிக்கிறாள். இந்நிலையில் ஞானசம்பந்தர் இப்பெண்ணுக்கு உதவிட முன் வருகிறார்.
‘‘வழுவால் பெருமான்கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாளுடை யாய் மருகற் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே’’
(திருமருகல். பாடல். 7)
துயர் பெற்ற இந்தப் பெண் ‘‘பெருமான் கழல் வாழ்க’ என்று யாராவது சொன்னாலோ அல்லது இந்தச் சத்தம் கேட்டாலோ இறைவனை நினைத்து எழுந்து வணங்குவாள். இரவு பகல் எந்நேரமும் இறைசிந்தனையுடன் இருப்பாள். அப்படிப் பட்ட இவளிடத்து எழுந்த் துயரத்தை- மழுப்படை கொண்ட பிரானே! நீக்குக என்று பதிகத்தின் வழி வேண்டுகோள் வைக்கின்றார் ஞானசம்பந்தப்பெருமான்.
சிவநேசர் மகள்
மயிலாப்பூரில் வாழ்ந்தவர் சிவநேசர் என்ற செல்வர். அவரின் அருமை மகள் பூம்பாவை. அவள் வளர்ந்து வரும் காலத்தில் அவளைச் சம்பந்தருக்கு உரியவளாகவே கருதி சிவநேசர் உளக்கருத்து கொண்டு வளர்த்துவந்தார். அவளை ஒரு நாள் அரவு தீண்டிவிட சம்பந்தருக்கு உரிய பொருள் – சம்பந்தருக்கே ஆகட்டும் என்று அவர் எண்ணினார். இதன் காரணமாக அவள் உடலை எரித்து அதனின்று கிடைத்த எலும்புகளை ஒரு பானையில் வைத்து சிவநேசர் காத்து வந்தார்.
இந்நேரத்தில் ஞானசம்பந்தர் திருமயிலைக்கு எழுந்தருள, அவரிடம் எலும்பு வடிவில் உள்ள தன் மகளை எழுப்பித் தந்து, அவளைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் சிவநேசர்.
ஞானசம்பந்தப் பெருந்தகை எலும்புகள் உள்ள கலயத்தை இறைவன் முன்வைத்துப் பதிகம் பாடுகின்றார்.
‘‘மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஓட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’’
(திருமயிலை, பாடல்.1)
என்ற இந்தப் பாடல் தொடங்கி பூம்பாவை பொருட்டு பதினோரு பாடல்கள் பாடுகின்றார். இந்தப் பாடல்கள் முடியும் நிலையில் பூம்பாவை அன்றைய நிலைக்கு எப்படி வளர்ந்திருப்பாளோ அதே எழிலுடன் தோன்றி அனைவரும் அதிசயப்படவைக்கிறாள். என்னால் இறை துணைகொண்டு பிறப்பிக்கப்பட்ட இவள் என் மகள் என்று ஏற்கிறார் ஞானசம்பந்தர்.
இவ்வாறு இறைவழி நின்ற பெண்களின் துயரங்களைப் போக்கி சமுதாயத்தில் இறைநலத்துடன் வாழும் பெண்களுக்கு உறுதுணை புரிந்துள்ளார் ஞானசம்பந்தப் பெருந்தகை.
அரசியல் சமுதாயம்
சமுதாயத்தின் ஒரு பங்கினரான அடியார்களையும், மற்றொரு பங்கினரான பெண்களையும் காத்து இறைநலம் பெருக்கிய ஞானசம்பந்தப் பெருந்தகை மதுரையில் அரசு நடத்தும் கூன்பாண்டிய மன்னனை சைவசமயச் சார்பால் நின்றசீர் நெடுமாறனாக்கி, சைவம் தழைத்தோங்க வழி செய்தார். மங்கையர்க்கரசியார் துணைகொண்டு, குலச்சிறையார் வழி பற்றி மதுரையில் நுழைந்து சமணரை அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் வென்று, அவர் செய்த சமுதாயப் பணி பாண்டிய நாட்டையே திருத்தியது.
மதுரைக்கு ஞானசம்பந்தரை வரவழைத்த மங்கையர்க்கரசியாரைப் பற்றியும், குலச்சிறையரைப் பற்றியும் பாடல்கள் பாடியிருப்பது என்பது யாருக்கும் கிட்டாத பேறு. பூம்பாவைக்காகத் தனித்த பதிகம் பாடிய சம்பந்தர் இவ்விருவருக்காகத் தனித்த பாடல்கள் பாடியிருப்பது சமுதாயத்தைத் திருத்த இவர்கள் கொண்ட நன்னோக்கத்திற்கு ஞானசம்பந்தர் காட்டிய நன்றியாகும்..
‘‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கசயச்செல்வி பாண்டிமாதேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயவாதும் இதுவே’’ (ஆலவாய். பாடல்.1)
என்ற பாடலில் பாண்டிமாதேவியாக இருந்தாலும் நாளும் சிவப்பணிகளைச் செய்யும் தன்மை பெற்றவர் மங்கையர்க்கரசியார். இவரின் பெருமைக்கு இப்பாடல் நல்ல சான்று.
வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீறு அணியும்
கொற்றவன் தனக்கு மந்திரியாய
குலச்சிறை குலாவிநின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையவன் உம்பரார் தலைவன்
உலகில் இயற்கை ஒழித்திட்ட
உற்றவர்க்கு அற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே’’
(ஆலவாய் பாடல்.2)
என்று அமைச்சர் குலச்சிறையாரை- வெண்ணீறு அணிந்தவர், சிவனடியார்களைப் பணிபவர். அக புறப் பற்றுகள் இல்லாதவர் என்று பெருமைப்படுத்துகிறது இப்பாடல்.
இவ்வகையில் சமுதாயத்தின் நன்மைக்காகப் போராடும் நல்லோரை நன்றியோடு நினைந்து பாடும் ஞானசம்பந்தப் பெருந்தகையின் பாராட்டு மொழிகள் இன்றும் சைவம் காக்கப் போராடும் அன்பர்களுக்கு ஊன்றுகோலாகும்.
மன்னன் அவையில் நடைபெறும் போட்டிகளில் ‘குழந்தையாக உள்ள ஞானசம்பந்தர் வெற்றி பெறவேண்டுமே’ என்ற கவலை மங்கையர்க்கரசியார் உள்ளத்தை வாட்டியது. அதனைப் போக்க
‘‘மானினேர்விழி மாதாராய் வாழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாய் ஒரு பாலன் ஈங்கு வன்
என்றுநீ பரிவு எய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு
ஆலவாய் அரன் நிற்கவே’’
(ஆலவாய்.(6).பாடல் 1)
என்ற இந்த ஞானசம்பந்திரன் பாடல் ‘‘பாலன் என்று கலங்கவேண்டாம்’’ என்று மங்கையார்க்கரசியாருக்கு மனவலிமையை ஏற்படுத்துகின்றது. ஆனைமலை போன்ற இடங்களில் உறையும் மாற்றுச் சமயத்தாரால் எனக்கு எவ்வகையிலும் துன்பம் வாராது அரன் காப்பார் என்ற நம்பிக்கை வெல்கிறது. ஞானசம்பந்தக்குழந்தை வெற்றிபெறுகின்றது.
வென்றபின் பாடிய பதிகத்தில் ஒருபாடல் பின்வருமாறு.
‘‘குற்றம்நீ குணங்கள் நீ கூடலாலவாயிலாய்
சுற்றம் நீ, பிரானும் நீ, தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்ற நூற் கருத்தும் நீ, அருத்தமின்பம் என்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே’’
(ஆலவாய், 8 பாடல்.3)
என்ற இந்தப்பாடல் வென்றபின் ஆலவாய் அண்ணலைப் பாடிய பாடல் ஆகும். இறைவனைச் சுற்றமாகவும், முற்றாவும் காணும் சமுதாய நெறியே சம்பந்தரின் நெறியாகும்.
அடியார் குழாத்தைக் காத்து, பெண்களின் துயரம் களைந்து, பாண்டிய நாட்டைச் சைவ நாடாக்கி ஞானசம்பந்தப் பெருந்தகை சமுதாயப் பணிகள் பலவற்றைச் செய்துள்ளார். ஞானசம்ப்ந்தப் பெருந்தகையின் சமுதாயப் பணிகள் சுரம் நீக்குவது, முயலக நோய் நீக்குவது, போட்டிகளில் வெல்வது, இறந்தவர்களை மீட்பது என்று படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக அவரின் அருளாற்றல் ஆண்டவனின் கருணையால் வளர்விக்கப்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. நிறைவில் தன்னுடன் தன்னை நாடிவந்த அடியார்கள் அனைவரையும் தன்னுள் அடக்கிச் சிவநிலை எய்தச் செய்தது அவரின் பெருமணப் பேரதிசயமாகும்.
தனிமனிதர் என்ற நிலைப்பட்டவர் ஞான சம்பந்தர் என்றாலும் சமுதாயத்தை நோக்கிய அவரின் வளமான எண்ணங்கள் சைவ ச
முதாயத்தை உருவாக்கி அவரைச் சைவத்தின் தலைப்பிள்ளையாக்கியுள்ளது என்பது நமக்குக் கிடைத்த பெரும்பேறு.
- இஸ்ரேலின் நியாயம்
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை
- ’ரிஷி’யின் கவிதைகள்
- வில்லும் சொல்லும்
- கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை
- தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !
- தளவாடங்கள்
- சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்
- முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.
- சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
- பாவண்ணன் கவிதைகள்
- வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
- டாப் டக்கர்
- சிநேகிதம்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்
- ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12
- தொடுவானம் 25. அரங்கேற்றம்