சதுரங்க வேட்டை

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

 

நேர்மை வாழ்வில் முன்னேற பயன்படாது என்பதை அனுபவத்தில் உணரும் ஒரு இளைஞன், ஏமாற்றும் வழியைக் கொண்டு, வெற்றியை அடைய நினைக்கும் கதை. வேட்டை விசாலமானதில், சுவாரஸ்யம் மிஸ்ஸிங். தமிழில் ஒரு புது முயற்சி!

முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து, ஷான் ரால்டன் ஒரு அற்புத இசையை தந்திருக்கும் படம். நகரமும் நவீனமும் இவருக்கு வசப்படும் என்பதை இந்தப் படத்தின் இசை உறுதியுடன் சொல்கிறது. வெல்கம் தோழா!

மும்பையில் கோலோச்சும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், தனித்தன்மை வாய்ந்த கதைகளுக்கு முதலிடம் கொடுத்து இந்தப்பக்கம் வருவார். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்தப் படத்தில் அவருக்கு அமைந்திருக்கிறது. அதிக அலட்டலில்லாமல் அவர் பயணிக்கும் விதம் மென் தென்றல் சுகம்.

‘ பப்பாளி ‘ இஷாரா நாயர், இதில் கொஞ்சம் கனமான வேடத்தை ஏற்று குறைவில்லாமல் செய்திருக்கிறார். செட்டியாராக வரும் இளவரசு, தனக்கு காமெடியும் வரும் என்பதை பளிச்சென்று காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

கதிரின் கலைத்திறமைக்கு, பொட்டல் காட்டில், அவர் கட்டியிருக்கும் பனை ஓலை குடிசை ஒன்றே சாட்சி. வெல் டன்! கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, கண்களை உறுத்தாமல் இருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். ராஜா சேதுபதியின் கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம் இயக்குனர் வினோத். படம் நீண்டு அலுப்பைத் தூண்டுகிறது.

வறுமையால் தாயையும் தங்கையையும் பறி கொடுக்கும் காந்திபாபு ( நட்ராஜ்) , இனி முன்னேற செல்வம் சேர்த்தலே சிறந்த வழி என்று முடிவு எடுக்கிறான். ஆனால், அவனது நேர்மையான வாழ்வு, அவனுக்கு அது கிடைக்க தடை போடுகிறது. இனி ஏமாற்றுதலே தன் வாழ்வின் லட்சியம் என மாறும் காந்திபாபு, மண்ணுளிப்பாம்பை, அரிய வகை அரவம் என ஏமாற்றும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது படம். பிறகு பல அடுக்கு வர்த்தக நிறுவனம், அதிர்ஷ்டம் தரும் கோபுர கலசம் என அவனது ஏமாற்று திட்டங்களுக்கு பலியாக பலரும் வருகின்றனர். ஒரு கட்டத்தில், அவனிடம் ஏமாந்தவர்கள் கூட்டமாக அவனைத் துரத்த, அவனுக்கு அடைக்கலம் தருகிறாள் பானு ( இஷாரா நாயர் ). தன் மனதிலும் இடம் தந்து அவனை மணந்தும் கொள்கிறாள்., ஏதோ ஒரு மலைக்கிராமத்தில், சின்னக் குடிசையில், உடல் உழைப்பால் வாழ்ந்து வரும் காந்தியை துரத்தி வருகிறது ரவுடிகள் கூட்டம். கடைசி முறையாக ஒரு ஏமாற்று திட்டத்திற்கு உதவ, அவர்களுடன் போகிறான் காந்தி. திட்டம் வெற்றி பெற்றவுடன் அவனையும் பானுவையும், அவனது வாரிசோடு தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறது ரவுடிகளின் கூட்டம். காந்தி, பானு கதி என்ன? என்பது க்ளைமேக்ஸ்.

ஆங்கில படப் பாணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், பெருநகரத்தைத் தாண்டி புரியுமா என்பது சந்தேகமே. அதிலும், காட்சி வடிவமாக காட்டப்படும் செயல் முறைகள், விஞ்ஞானிகளுக்கே வெளிச்சமாகும். பாமரனுக்கு அல்ல!

ஆரம்பக் காட்சிகளில் நகைச்சுவை அள்ளிக் கொண்டு போகிறது. மண்ணுளிப்பாம்பை, நாலு கிலோ எடையுள்ள அரிய வகைப் பாம்பு என்று காந்தி அளந்து விடுவதும், பேச்சுச் சத்தம் கேட்டால் அதன் எடை குறைந்து விடும் என்று அவன் சொல்வதை நம்பி, செட்டியார் இளவரசு வாயைப் பொத்தி, சைகைகளில் பேசுவதும் குபீர் சிரிப்பு காட்சிகள். அப்புறம் காமெடி, காற்றுப் போன பலூன் போல ஆகி, அமுங்கி விடுகிறது.

“ பொறப்பே நடப்பே” என்கிற ஆரம்பப் பாடல், வித்தியாச இசையமைப்பில், அட்டகாச மதுக்கூட செட்டிங்கில், மிதமான ஒளியுடன், அசத்தல் நடனங்களுடன் கவர்கிறது. “ முன்னே என் முன்னே” ஒரு மென்வேகப் பாடல். நாயகியின் மனக்குரலாக ஒலிக்கும் “ காதலா காதலா “ பாடல்களில் டாப் ஒன்! வெல்டன் சான் ரால்டன்!

“ நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போலாம். கெட்டவனா வாழ்ந்தா இருக்கற போதே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்”

“ கோழி மேலே பாவப்பட்டா, சில்லி சிக்கன் சாப்பிடமுடியாது!”

ஆங்காங்கே கோலமிடும் நச் வசனங்கள். இன்னும் எளிமையான முறையில் கதையை நகர்த்தி, நீளத்தை குறைத்திருந்தால், இந்தப் படம் பேசப்பட்டிருக்கும். ஆனால், என்னதான் பேசப்பட்டாலும், எந்தப் படத்திற்கும் ஆயுள் ஒரு வாரம் தான் என்றாகிவிட்ட நிலையில், இம்மாதிரி படங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகளால் மட்டுமே நினைவுட்டப்படும்.

இயக்குனர் வினோத், இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது, நறுக்கு தெரித்தாற் போல் காட்சிகள் சொல்லப் பட வேண்டிய அவசியம். இல்லையென்றால், தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு பார்சல் பண்ணி விடுவார்கள் ரசிகர்கள்.

0

இயக்கம் : எச். வினோத். இசை: ஷான் ரால்டன். ஒளிப்பதிவு: கே.ஜி. வெங்கடேஷ். எடிட்டிங்: ராஜாசேதுபதி. கலை : கதிர். நடிப்பு : நட்ராஜ், இஷாரா நாயர், இளவரசு, பொன்வண்ணன். நேரம் : 149 நிமிடங்கள்.

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *