தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

          நாடகம் வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஒரு நாள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து பங்குபெற்ற அனைவரும் கூடினோம்.
          அப்போது சிங்கப்பூர் ஆசிரியர் கழகம் நான்கு மொழி  நாடகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.அதன் விளம்பரம் தமிழ் முரசில் வெளிவந்திருந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அது கேட்டு அனைவரும் உற்சாகமானார்கள்.
          நாடகத்தின் கதை வசனத்தின் மூன்று பிரதிகளை அனுப்பி பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். நான் அவ்வாறு ” கண்ணீர்த்துளிகள் ” நாடகத்தை முழுதுமாக மூன்று பிரதிகளை கையால் எழுதி அனுப்பி வைத்து போட்டியில் பதிவு செய்துகொண்டேன்.
          போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. நாங்கள் வாரம்  இருமுறை மட்டும் பயிற்சி செய்தோம். வசனம் எல்லாருக்கும் மனப்பாடம் ஆகிவிட்டதால் நடிப்பில் மட்டும் மேலும் கவனம் செலுத்தினோம்.
          ” கண்ணீர்த்துளிகள் ” நாடகத்தை போட்டியில் நடித்தபின் தொடர்ந்து வேறு புதிய நாடகம் எழுதி அரங்கேற்றம் செய்யலாம் என்றும் அன்று இரவே வெளியிட்டேன்.அதை அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர். அன்றைய விருந்து மகிழ்ச்சிக்  களிப்பில் நடந்து முடிந்தது.
           நாடக வெற்றியின் பெருமிதத்தில் இருந்த சில நாட்களில் சீனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளும் நெருங்கி விட்டது. அதிலும் நன் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றுவிட்டால் என்னுடைய களிப்பு இரட்டிப்பாகும்.
          அந்த நாளும் வந்தது.  நான்  காலையிலேயே எழுந்து குளித்து நன்றாக உடுத்திக்கொண்டு மிடுக்காக பள்ளிக்குப்   புறப்பட்டேன்.அப்போது பள்ளியில்தான் முடிவுகள் தெரியவரும். உடன் மதிப்பெண்கள் கொண்ட சான்றிதழ்கள் அன்றே வழங்கப்படும்.
          என்னுடைய எதிர்காலமே அந்த தேர்வு முடிவுகளில்தான் உள்ளது என்பதை நான்  நன்கு உணர்ந்திருந்தேன். தேர்ச்சியுற்றால் ஒளி  மயமான எதிர்காலம். ஒருவேளை எதிர்பாராத வகையில் தோல்வியுற்றால் –  வாழ்க்கையே சூன்யம்தான்!
          என்னுடைய எதிர்காலம் பற்றி பலவாறு எண்ணியவாறு பேருந்தில் பயணம் செய்து பள்ளியை அடைந்தேன். என் வகுப்பு மாணவர்கள் அனைவருமே உற்சாகத்துடன் காணப்பட்டனர். நிச்சயம் தேர்வில் வெற்றிதான் என்ற நம்பிக்கை  அவர்களுக்கு. பிறகு நான்  மட்டும் எதற்காக அஞ்ச வேண்டும்? எங்கள்  பள்ளியின் தரம் அப்படி!
          ஆனால் என்னதான் நம்பிக்கையுடன் சென்றிருந்தாலும் என் பெயர் வாசிக்கப்பட்டபோது நடுக்கத்துடன்தான் நடந்து சென்றேன். அந்தச் சான்றிதழைக் கையில் வாங்கியபோது நெஞ்சு படபடத்து! கண்கள் இருண்டன!
          கண்களை துடைத்துக்கொண்டு சான்றிதழை நோக்கினேன்.
          நான் அனைத்துப் பாடங்களிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளது கண்டு மகிழ்ந்தேன். ஆனால் ஏனோ  தெரியவில்லை கண்களில்  கண்ணீர்த்துளிகள் உதிர்ந்தன! அந்த  வெற்றியைப் பெறுவதற்கு நான் பட்ட பாடுகளை  எண்ணி கண்கள் கலங்கினவா? தெரியவில்லை!
          கண்களை மீண்டும் துடைத்துக்கொண்டு மதிப்பெண்களைப் பார்த்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதனமையான மதிப்பெண்கள் கிடைத்திருந்தன.அறிஞர் அண்ணா பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரைக்குக் கிடைத்த வெற்றி அது!
          அந்தச் சான்றிதழுடன் பள்ளியின் ரிப்போர்ட் புத்தகமும் தரப்பட்டது. அதைப் புரட்டிப் பார்த்தேன்.அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜேசுதாசன் , ” A GOOD ATHLETE AND A  GOOD TAMIL SCHOLAR ” என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்! அது கண்டு நான்  அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை!
          வேக வேகமாக வீடு திரும்பினேன்.அப்பாவிடம் பெருமிதத்தோடு அவற்றைக் காட்டினேன். அவர் அவற்றை உற்று கவனித்தார். பின்பு  என் கைகளைப் பிடித்துக் குலுக்கி , ” வெரி குட் . ” என்றார். அதோடு அவரின் சந்தேகம், நம்பிக்கையின்மை, ஓரளவு குறையும் என்று எண்ணினேன். இனிமேல் என்னைத் தொந்தரவு செய்ய மாட்டார் என்று நம்பினேன்.
          லதா பற்றி இனிமேல் பேசமாட்டார் என்றும் தோன்றியது. அவளும் நல்ல மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள். .நாங்கள் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம். கட்டித் தழுவிக்கொண்டோம்.
          ” இனி என்ன செய்யப் போகிறாய் ? ” என்று அவள் ஆவலுடன் கேட்டாள் .
          ” நான் ராபிள்ஸ் பள்ளியிலேயே எச்.எஸ். சி. வகுப்பில் சேரப் போகிறேன்.அது முடித்தபின் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்வேன்.” நம்பிக்கையுடன்  கூறினேன்.
          ” அப்படியே செய். உனக்கு நல்ல மூளை உள்ளது. நிச்சயமாக நீ டாக்டர் ஆவாய் . ” வாழ்த்தி ஆசீர்வதித்தாள்.
          ” ஆமாம். நீ என்ன செய்யப் போகிறாய்? ” அவளிடம் கேட்டேன்.
          ” நான் படித்தது போதும். இனிமேல் பணம் சம்பாதிக்கணும்.அக்கா வேலை பார்க்கும் அதே கம்பனியில் நான் ஸ்டெனோவாக வேலைக்குச் சேர்வேன். இனிமேல் மாலையில் எனக்கு வேலை முடிந்ததும் ஹை ஸ்ட்ரீட்டில் நாம் சந்திப்போம். ‘ என்றாள்.
          நான் தொடர்ந்து என் விருப்பப்படி எச்.எஸ்.சி. படித்தால் நிச்சயமாக எனக்கு சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் .எச்.எஸ்.சி. வகுப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்கள் இருந்தன.கதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும், நாடகம் ஒத்திகைப் பார்ப்பதிலும்
நாட்கள் இனிமையாகக் கழிந்தன.
          சில நாட்களில் கோவிந்தசாமியை அழைத்துக்கொண்டு சிங்கப்பூரின் வரலாற்றுச் சின்னங்களைப்  படம் பிடிக்க கிளம்பிவிடுவேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது ” எலிசெபெத் வாக்கில் ” அமைந்துள்ள இரண்டாம் உலகப் போர்ச் சின்னம். அதை எழுப்பியுள்ள ஆங்கிலேயர்கள் தமிழுக்கும் முக்கியத்துவம்  தந்து அதில், ” நம் உயிர் வாழ தம் உயிர் கொடுத்தவர் ” என்று பொறித்துள்ளனர். அதன் அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டோம் ( படங்கள் இணைத்துள்ளேன் )
          லதாவை அவளுடைய வீட்டிலேயே சந்தித்தேன்.அது  பற்றி அப்பாவுக்குத் தெரிந்ததோ என்னவோ, அவர் பிரச்னை பண்ணாமல் இருந்தது எனக்கு ஆறுதல்  தந்தது. வீட்டை விட்டு ஓடிப்போனபோது அருமைனாதனுடன் சேர்ந்து நான் தீட்டிய ஏழு அம்சத் திட்டம் போல் நாங்கள் அவசரத் திருமணம் செய்து கொள்ளத் தேவையில்லாமல் போனது. இனி அப்பாவை சரி செய்து மேற்கொண்டு படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்பதிலேயே நாங்கள் இருவரும் கவனம் செலுத்தினோம். அதனால் காட்டுக்குப் போய் சந்திப்பதை நிறுத்திக்கொண்டு அவளுடைய வீட்டிலேயே சந்தித்துக்கொண்டோம். அங்கு யாரும் எங்களை சந்தேகப்படவில்லை. அவ்வளவு நல்ல பெயர் எனக்கு! படிப்பில் ஒருவன் சிறந்து விளங்கினால் அவன் குணத்திலும் நல்லவன் என்றுதான் பெரும்பாலோர் நம்பினர்.. அது என்னைப் பொருத்தவரை உண்மைதான்.
          ஒரு நாள்  தமிழ் நேசனில் ஒரு விளம்பரம் வந்தது. ” ஸ்ட்ரெயிட்ஸ்  டைம்ஸ் ” ஆங்கிலப் பத்திரிகை அந்த விளம்பரம் செய்திருந்தது.  அதில் தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்றிருந்தது. அது எனக்கெனவே வந்தது போலிருந்தது. தற்காலிகமாக சில மாதங்கள் வேலை செய்யலாமே என்ற எண்ணத்தில் விண்ணப்பித்தேன்.
           மறு வாரமே எனக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது கண்டு வியந்துபோனேன்.
          குறிப்பிட்ட நாளில் ” ஸ்ட்ரெயிட்ஸ்  டைம்ஸ் ” அலுவலகம் சென்றேன்.அங்கு என்னைப்  போன்று இருபத்தைந்து இளைஞர்கள் வந்திருந்தனர். அது ஒரு தேர்வு எழுதுவது போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அனைவரும் ஓர் அறையில் அமர்த்தப்பட்டோம். ஒவ்வொருவருக்கும் அச்சடிக்கப்பட்ட இரண்டு தாள்கள் தரப்பட்டன. அவற்றில் ஒன்று தமிழிலும் இன்னொன்று ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழில் உள்ளதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் உள்ளதை தமிழிலும் ஒரு மணி நேரத்தில் மொழிபெயர்த்து எழுத வேண்டும். அதுவே அந்த நேர்முகத் தேர்வாகும்.
          நான் அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு ஒன்றுமே யோசிக்காமல் அரை மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டு முதல் ஆளாக வெளியேறினேன். அங்கு வந்திருந்த இருபத்தைந்து பேர்களில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்!
         மறு வாரமே எனக்கு கடிதம் வந்தது. அந்த ஒருவன் நானே! நான் அடைந்த வியப்புக்கும் மன மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!
          எனக்கு மொழிபெயர்ப்பாளர் வேலை சிங்கப்பூரின் பிரபலமான ஆங்கில பத்திரிகை அலுவலகத்தில் கிடைத்துவிட்டது! அதுவும்  எவ்வளவு சுலபமாகக் கிடைத்துள்ளது!
          கடிதத்தை எடுத்துக்கொண்டு லதாவிடம் ஓடினேன். அவள் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினாள்.
         ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், நாடகக் குழுவினர் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். எங்கள் குழுவில் நான்தான் முதலில் இவ்வாறு வேலைக்குச செல்லப் போகிறேன்.
          இனி என்ன கவலை? அப்பாவிடம் செலவுக்கு கையேந்தி நிற்க வேண்டியதில்லை. கை நிறைய சம்பளம் கிடைக்கப் போகிறது.! மதம் 250 சிங்கப்பூர் வெள்ளி! அப்போது அது பெரிய சம்பளம். ஆறு மாதங்கள் கழித்து அது 300 வெள்ளியாக  உயரும்!
          ஆனால், அப்பாவிடம் அக் கடிதத்தைக் காட்டியபோது அவரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அது எனக்கு வியப்பைத் தந்தது. . அவருக்கு என்ன ஆனது? அவர்தான் மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் ஊருக்கு அண்ணனுக்கும், அம்மாவுக்கும் பணம் அனுப்புகிறாரே? என்னுடைய சம்பளம் எங்களுக்கு உதவியாக இருக்குமே!
          ஒருவேளை சம்பளப் பணத்தை நானே வைத்துக்கொள்வேன் என்று பயப்படுகிறாரா?
          மேலே படித்து டாக்டர் ஆகப் போகிறேன் என்று சொன்ன நான் வேலைக்குப் போகப் போகிறேன் என்று சொன்னதால் உண்டான சந்தேகமா?
          படிக்கும்போதே லதாவைக் காதலித்தவன் இப்போது வேலைக்குப் போகப் போகிறானே, இனி இவன் சுதந்திர மனிதனாகிவிட்டால் லதாவைக் கூட்டிக்கொண்டு ஓடிவிடுவான் என்ற பயமா?
          அல்லது இவ்வளவு நாட்கள் அவர் செய்த அநியாயங்களுக்கு பழிக்குப் பழி வாங்கி அவரை இனி மதிக்க மாட்டேன் என்ற பயமா?
          என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
          கடிதத்தைப் பார்த்துவிட்டு அதை என்னிடம் திருப்பித் தந்துவிட்டார்.
          நான் மறுநாள் காலை வேலைக்குச் செல்ல தயாரானேன். விடிந்தபோது என்றும் இல்லாத உற்சாகத்துடன் இயங்கினேன்.. முழுக்கால் சட்டையும் முழுக்கைச் சட்டையும் அணிந்து கம்பீரத்துடன் புறப்பட்டேன்.
          அப்பா முகத்தில் களை இல்லை. வாட்டத்துடன் காணப்பட்டார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை.அவரால் இனி என்னை  ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு வேலை கிடைத்து விட்டது. இனி நான் யாரையும் நம்பி வாழ வேண்டியதில்லை.என்னுடைய செலவுகளுக்கு எனது சம்பளம் போதுமானது. அதோடு எனக்கு போலீஸ் பாதுகாப்பும் உள்ளது.
           புது மனிதனாக, புதுத் தெம்புடன் புறப்பட்டேன்.
          என்னுடைய இலக்கிய ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் பத்திரிகைத் துறையிலேயே வேலை கிடைத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
இனிமேல் என்னுடைய வாழ்க்கைப் பாதை இனிய இலக்கியப் பூஞ்சோலைதான் என எண்ணி மகிழ்ந்தேன். இலக்கிய ஆர்வம் உண்டெனில் படிப்பதிலும் எழுதுவதிலும் சலிப்பு உண்டாகாது என்றும் நம்பினேன். இலக்கியமே பொருளீட்டும் ஊழியமெனில் வாழ்கையே இன்பகரமாக மாறலாம் அல்லவா?
          தமிழ் ஆங்கில இரு மொழித்  திறனால் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது.முழு மனதுடன் இந்த வேலையைத் தொடர்ந்தால் மேலும் உயரலாம் என்ற நிலையும் உள்ளது. பதவி உயர்வு பெற்று எதிர் காலத்தில் ” ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ” ஆசிரியர் ஆகலாம்.
          அப்போதைய நிர்வாக ஆசிரியர் ஓர் ஆங்கிலேயர்.அவருடைய கட்டுக்கோப்பான பார்வையில் நிர்வாகம் சீராக இயங்கியது. அவருக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது.தினமும் ஒரு முறையாவது என்னை அவருடைய அறைக்கு அழைத்துப்  பத்திரிகை துறை பற்றிப் பேசுவர். தமிழ் பற்றியும் தமிழர் கலாச்சாரம், இலக்கியம் பற்றியும் என்னிடம் கேட்பார். என்னுடைய ஆங்கிலத்தின் மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது.
          தமிழ் நாட்டின் சில சிறப்புச் செய்திகளை மொழிபெயர்க்கச் சொல்வார். நான் சற்றும் யோசிக்காமல், அகராதியைப் பயன்படுத்தாமல் கடகடவென்று எழுதித் தருவதைப் பார்த்து அவர் பிரமித்துப் போவார்.
          தமிழிலும் ஆங்கிலத்திலும் இவ்வாறு புலமை பெற்றுள்ளதை பயனுள்ள வழியில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்.
          சங்க இலக்கியங்கள் பற்றி தமிழர்கள் தங்களுக்குள்ளாகவே பெருமை பேசி மகிழ்கிறோம். அவற்றை சரிவர மொழிபெயர்த்தால் அவற்றின் சிறப்புகளை உலகறியச் செய்யலாம். குறிப்பாக திருக்குறளை நல்ல முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் உலக மக்கள் அதன் சிறப்பை உணரலாம்.இதுபோன்று மொழிபெயர்ப்பாளர்களின் சேவை தமிழுக்கு ஆற்றும் சேவையாகும்.
          ” கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோ போல் வேறு கவிஞர்கள் கண்டதில்லை ” என்று பாரதியார் பாடியதை தமிழர்கள் மட்டும் கூறிக்கொண்டிருந்தால் போதுமா?
          கம்பன், வள்ளுவர், இளங்கோ போன்றோர்கள் யார்? அவர்கள் எழுதிய காவியங்களும் காப்பியங்களும் என்னவென்பதை உலகம் அறிய வேண்டுமெனில், அவற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக உலகில் பரவச் செய்தல் வேண்டும்.
          இதற்குத் தேவையானவர்கள் இரு மொழிகள் தெரிந்த மொழியியல் வல்லுனர்கள்.
          என்னிடம் இயற்கையிலேயே அமைந்துள்ள இந்த இரு மொழித் திறனை  பயனுள்ள வழியாக பயன்படுத்தி, தமிழுக்குப் பெருமை  சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் என்னுடைய வேளையில் கவனம் செலுத்தினேன்.
          நிறைய நூல்களை தோள் பையில் மாட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றேன். என் முழு நேர வேலையும் படிப்பதும் எழுதுவதுமே.இரண்டும் எனக்குப் பிடித்தவை. அதனால் நான்  வேலைக்கு வந்துள்ள எண்ணமே இல்லாமல், அதை  ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்றே கருதினேன்.
          வேலையில் நிறைவு என்பார்களே அதைக் கண்டேன். மாலையில் வீடு திரும்பும்போது மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *