இப்படியும்……

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 மீனாள் தேவராஜன்

நான் ஒரு பேரிளமங்கை. எனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஊர் சிங்கப்பூர்..

பேருந்தில் பயணிக்கும் என்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிவிட்டேன். காலை நேரம். கூட்டம் நிரம்பி வழிந்தது. பரவாயில்லை. அடுத்த பேருந்துக்குக் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும். வேலைக்குத் தாமதமாகிவிடும் என்று நினைத்தேன். பலருக்கு அமர்வதற்கு   இடமில்லை. ஆனால் ஒரு நவ நாகரீகப் பெண் தன் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் தன்னுடைய கைப்பை ஒன்றையும் அதோடு மற்றொரு பையையும் வைத்திருந்தார். அடுத்த பேருந்து நிறுத்தம் வந்ததும் பலர் இறங்கி விட்டனர். நான் மட்டும்தான் நின்றுகொண்டிருந்தேன். மற்றவர்கள் எல்லாரும் அமர்ந்திருந்தனர். ‘சரி, நாம் அந்தப் பை வைத்திருந்த பெண்ணிடம் இடம் கேட்கலாம் ‘ என்று சென்று அவரிடம் பையை எடுத்துக் கொள்ளுங்கள். நான் அங்கு உட்காருகிறேன்.’ என்றேன். அவர் என்னை முறைத்துப் பார்த்தார். பின் தலையைத் திருப்பிக் கொண்டுவிட்டார். ஆனால் அவர் பைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.

நானும் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆட்கள் ஏறவுமில்லை, இறங்கவுமில்லை .அதனால் பேருந்து ‘சரென்று’ ஓடிக் கொண்டிருந்து, அதற்கு அடுத்த நிலையத்தில் பேருந்து நின்றது. அந்தப் பெண்மணி இறங்குவதற்கு முன்னால் தன் பைகளை எடுத்துக் கொண்டு என்னைப் பார்த்து, ‘நீ உட்கார்.’ என்று சொன்னார்.

எனக்கு வந்ததே கோபம். ஆனால் வெளியில் அவரிடம் காட்டாமல் அவரைப் பார்த்தேன். அப்போது, “ நீங்கள் அந்த இருக்கை உங்களுக்கு மட்டுந்தான் என்று இதுவரை நினைத்துக் கொண்டு பயணம் செய்தீர்கள். அந்த இருக்கையையும் உங்கள் வீட்டிற்குப் பிடுங்கிக் கொண்டு போக வேண்டியதுதானே!” என்று என் மனம் கூறியது. மேலும் ‘உங்களைப் போன்ற சுயநலவாதிகள்   இப்படிச் செய்தாலும் செய்வீர்கள்’ என்று என் மனம் கேலியாகச் சொன்னது. நான் கேலி கலந்த பார்வை ஒன்றை அவர் மீது வீசினேன்.

அதற்குப் பிறகு சில நாட்களில் கூட்டம் இல்லாவிட்டாலும் இருந்தாலும் அந்தப் பெண் அப்படித்தான் பயணம் செய்தாள். நானும் அவரும் பெரும் அதே பெருந்தில் தினமும் அதே நேரத்தில் பயணம் செய்ததால் அவளைப் பார்க்கும் போதெல்லாம் இவளுக்கு மற்றவர்களைப் பற்றிய சிந்தனையே இருக்காதா? இவள் மட்டும் இரு இருக்கைகளைப் பயன்படுத்த இரண்டு டிக்கெட்டுகளா வாங்குகிறாளா? ஏன் இவ்வளவு சுயநலம்? அல்லது இவர் புத்தி குறைந்தவரோ? என்றெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு.

மற்றொரு நாள் நான் பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது ஊன்றுகோலை ஊன்றிக்கொண்டு ஒருவர் பேருந்தில் ஏறினார். அவர் இந்தப் பெண்ணின் அருகில் வந்ததும் அவள் சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது போல் முகத்தைத் இருப்பிக் கொண்டு விட்டாள் அவர் பின் மெதுவாக வேறு எங்காவது இடம் இருக்கிறதா என்று கண்களைச் சுழலவிட்டார். எங்குமில்லை. அவர் நிலையை அறிந்து கொண்ட ஒரு பள்ளி மாணவன் தான் எழுந்து கொண்டு அந்த இடத்தை அவருக்கு அளித்தான். அவர் அவனுக்கு நன்றி கூறி விட்டு அவ்விடத்தில் அமர்ந்தார். இதனையும் அப்பெண் பார்த்தும் பாராதது போலிருந்தார்.

இன்னொரு நாள் என் கணவரும் என்னுடன் வந்தார். அந்தப் பெண்மணியும் அந்த பேருந்தில் இருந்தார். பைகளும் பக்கத்து இருக்கையில் சிம்மாசனம் பிடித்துக் கொண்டிருந்தன. இதைப் சுட்டிக்காட்டி நான் கணவரிடம் கூறினேன். என் கணவரோ “ மெல்லப் பேசு, அவர் காதுகளில் விழப் போகிறது.” என்றார். நான் சிரித்துக் கொண்டே என் கணவரிடம் கூறினேன், “ விழுந்தால் விழட்டும்.” என்று. அதற்குப் பிறகு சொன்னேன், “ அவருக்கு நாம் பேசும் தமிழ் தெரியமோ? தெரியாதோ?’ என்றேன்.

அதற்கு என் கணவர் சொன்னார், யாம் இந்த ஊரில் அப்படிச் சொல்லக் கூடாது. மற்ற மொழிகாரர்களில் சிலருக்குத் தமிழ் மொழி நன்றாகத் தெரியும். வெளித் தோற்றத்தை வைத்து நாம் எதனையும் சொல்லக் கூடாது.” என்றார். நான் அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை.

இதற்குப் பிறகு ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். அன்று விடுமுறை. நான் கடைக்குச் செல்ல பேருந்தில் ஏறினேன். அன்று அந்தப் பெண்ணைக் கண்டேன். என்ன வழக்கம் போல்தான் அவரும் அமர்ந்திருந்தார்.

அவர் இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் நானும் இறங்கினேன். முதலில் அவர் இறங்கிவிட்டார். நான் பிறகு நான் இறங்கினேன். எனக்கும் அவருக்கும் இடையே 10 அடி இடைவெளியில் நடந்து கொண்டிருந்தோம். அவர் நடைபாதையை விட்டு சற்று விலகி ஓர் அடர்ந்து வளர்ந்திருந்த புதரின் அருகில் சென்றார். இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

இவர் அங்கு என்னச் செய்யப் போகிறார்? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. நின்றுதான் பார்ப்போமே என்றும் தோன்றியது. நான் நின்று விட்டேன். அவர் தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு மற்றொரு பையைத் திறந்தார். திறந்ததுதான் தாமதம், புதரின் மறு பக்கத்திலிருந்த பூனை தன் குட்டி குழாத்துடன் அவரை நோக்கி ஓடி வந்தது. குட்டிகள் அவரை அண்ணாந்து அண்ணாந்து பார்த்தன. அவற்றின் முகங்களில் அவற்றின் எதிர்பார்ப்பு தெரிந்தது. எனக்கு வியப்பு மேலிட்டது. தன் பையிலிருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அதிலிருந்த உணவை இரண்டு மூன்று இடங்களில் வைத்தார். அவை ஆவலுடன் இரையைத் தின்ன ஆரம்பித்தன. பொட்டலத்தைக் குப்பைத்தொட்டியில் வீசி விட்டு அவை இரை தின்னும்போது அவரை பார்த்தன. அந்த அழகை ஆவலாகவும் அமைதியாகவும் அப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

*********************************************************************************************************************

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *