நாய்ப்பிழைப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

essarci

காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் ஒலி . இதோ இக்கணம் .பிறந்த அந்த நாய்க் குட்டிகள் எழுப்பும் ‘ ங்கொய் ங்கொய்’ சப்தம். அவன் மாடிப்படிக்குகீழாக சென்று பார்த்தான்.
இது செய்து தான் ஆகவேண்டும் என்றாலும் நேற்று மாலைதான் அதனைச் செய்யவும் முடிந்தது. அவன் அந்த மாடிப்படிகளின் கீழ் எல்லாம் துப்புறக் கூட்டிச் சுத்தம் செய்த விஷயம்தான் அது. ஒரு மனிதன் எத்தனையோ பாடுபட்டு நாக்கை ப்பிடுங்கிக்கொண்டாலும் அன்றைய தினம் மட்டும் பளிச்சென்று இருக்கும் பாத் ரூம் இத்யாதி வகையறாக்களில் மாடிப்படியின் அடிப்பகுதியும் சேர்த்துக்கொள்ளலாம்.
குட்டிகளை ஈன்ற . தாய் நாய் வாலும் தோலுமாக குப்பைக்கு என்றோ போய்விட்ட கோணிச் சாக்கு ஒன்றை அழகாய் .விரித்துக்கொண்டு அதனில் அப்பாடா என்று படுத்துக்கிடந்தது. அது கண்களை மூடி மூடித் திறந்து ஆகாயம் பார்த்தது..குட்டிகள் வளைந்து நெளிந்து அதன் மீது ஏறி ஏறி பிறாண்டிக்கொண்டிருந்தன. சில குட்டிகளுக்கு அந்தத் தாய் நாயின் முலைக்காம்புகள் வாய்க்குள் அகப்பட்டன. முலை பற்றிக்கொண்ட அவை பாலைக்குடிப்பதில் மும்முறம் காட்டின.
சில குட்டிகள் தாய் நாயின் உடலில் எங்கு ஏங்கோ சென்று முட்டிக்கொண்டன. அவை பசியில் கூச்சலிட்டன. தாய் நாயின் நைந்த உடல் மீது ஏறி நீட்டுவாக்கில் எம்பி எம்பிக் குதித்தன.
அவன் வந்து அங்கு நிற்பதைப்பார்த்துவிட்டது தாய் நாய். தான் ஏதோ செய்துவிட்ட ஒரு குற்ற உணர்வு மேலிட அது கண்களை இரண்டு முறை மூடி மூடி த்திறந்தது. ‘நீ எது வேண்டுமானாலும் செய்து கொள் எதற்குத்தான் நான் இப்போது என்ன செய்து விட முடியும்’ என்றபடிக்கு.அதன் பார்வை இருந்தது.
இது விஷயம் அவன் எதிர் பார்த்ததுவா என்ன. அவனுக்கு கரப்பான் பூச்சி ஒன்று வீட்டில் இருந்தாலே பிடிக்காது. அதற்கு முளைத்துவிட்டிருக்கும் நீட்டு ஊசி மீசை.அது இடும்அந்த உருண்டை உருண்டை. கருப்புக் கழிவுகள்தான் அப்பப்ா எத்தனை அருவறுப்பு. சகிக்கத்தான் முடிகிறதா என்ன.
வீட்டுச் சுவரில் தொற்றி மேயும் அந்த .பல்லிகள் கூட அப்படித்தான். மூலை முடுக்கு ஒன்றில் விரைத்துக்கொண்டு நிற்கும் அந்த தென்னம் விளக்குமாற்றால் ஒரு அடி .அடித்து அப்படியே த்தூக்கி எறிந்துவிடலாம் என்றால் ‘அது சகுனம் சொல்வது ஆக அது கட்வுளின் அம்சம்’ என்று யாரேனும் டக்கென்று குறுக்கே வருகிறார்கள். ஒரு வசனம் சொல்லி த்தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்
‘அந்தக்.கரப்பான்பூச்சி மட்டுமென்ன சும்மாவா அது அந்த மகாலட்சுமி யின் மறு சொருபம்’ அதனை அடித்து விடாதே என்கிறார்கள்.
அவ்னுக்கு நாய் வீட்டில் வளர்ப்பது என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. நாய்க்குட்டி அழகுதான். யார் இல்லை என்பார்கள். அது நம்மைத்தொடுவது நாம் அதனைத்தொடுவது இரண்டுமே ஆபத்தானது அவனுக்கு படித்தவர்கள்தான் சொல்லொயிருக்கிறார்கள்..அதற்

கு என்ன வியாதி வந்திருக்கிறது அது சமாச்சாரம் யாருக்கு எப்படித்தெரியும். நாயுக்கு தடுப்பூசி போட்டார்களா எதற்குப்போட்டார்கள் எப்போது என்பதெல்லாம் யாரைப்போய்க்கேட்பது.யார் உங்களுக்குப் பதில் சொல்வார்கள்.
அவன் பிறந்த தருமங்குடிப் பள்ளி நண்பன் விறகு மண்டி வைத்துப்பிழைத்த அந்த வாழைத்தோப்புக்கலியபெருமாள் நாய் கடித்து இறந்து போனதுதான் அவனுக்கு மறந்தா போகிறது.
உள்ளே இருந்து அவன் மனைவி வாயிலுக்கு வந்தாள். மாடிப்படிக்குகீழாய் அவன் நிற்பதைக்கவனித்தாள்.
‘அங்கே என்ன நடக்குது’
‘வந்து பார்’
அவன் மனைவி மாடிப்படி அருகே வந்தாள். படுத்திருக்கும் தாய் நாயும் தன் வாலை முடிந்தும் முடியாமலும் ஆட்டி தன் இயலாமையை அவளுக்கு அறிவித்தது
.தாய்மை அங்கு என்ன விஷயத்தை பரிமாறிக்கொண்டதோ உடனே அவள் சூரிய ஒளி நாயின் மீது படாமல் இருக்க கிழிந்துபோன ஒரு யூரியா சாக்கு எடுத்து ஆகாயம் தெரியும் சுவர் இடுக்கில் கட்டினாள் வீட்டினுள் சென்று, நேற்று இரவு மீந்துபோன சோறு கொணர்ந்து தட்டொன்றில் வைத்து தாய் நாயை அழைத்தாள்.தாய் நாய் பாதி கிழம்தான்.என்ன செய்வது. பூமி கொஞ்சம் சில்லிப்பு கண்டால் போதும் நாய்களைத்தான் மன்மத மலர்க்க்கணைகள் எப்போது விட்டு வைத்தன.ஒரு பெண் நாயை ச்சுற்றிச்சுற்றி எத்தனை ஆண் நாய்கள் மண்டியிட்டு க்காதல் வரம் கேட்டுக்கெஞ்சுகின்றன திருட்டுத்தனமாக எத்தனையோ நாமும் பார்த்துத்தானே இருக்கிறோம். .அது நேற்றைய கதை.
இங்கே பாருங்கள் நாய் குடும்பம் மாடிப்படிக்குக்கீழாகப் பிரத்தியட்சமாய்.
‘ஒரு நாய் ஆறு குட்டிகளைப்போடுமா என்ன’
‘இதுல என்ன கணக்கு’
‘இல்லை போட்டவைகளில் ஒரு குட்டியை அந்தத்தாய் நாய் தின்று விடும் என்று சொல்வார்களே’
‘அது யாருக்கு த்தெரியும். இப்போதுகூட அப்படி நடந்திருக்கலாம். நமக்குத்தெரியுமா என்ன’
‘ அப்ப ஏழு குட்டிகள் போட்டிருக்குமா ‘
அவள் பதில் ஏதும் சொன்னால்தானே.அவன் பேசுவது நிறுத்தினான்.
தெருவில் எட்டிப்பார்த்தான்.ஆண் நாயொன்று நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தது.முளைத்துவிட்ட இந்த பிரச்சனையின் கர்த்தாவாகக்கூட அந்த ஆண்நாய்.இருந்திருக்கலாம் பின்னர் அது தன் பாட்டுக்குத்தெருவில் ஒய்யாரமாய் நடந்துபோனது.
இப்போது எல்லாம் அவன் வீட்டுக்கு அடிக்கடி யாரும் வருவது இல்லை. வருகை குறைந்துபோனது.’நாய் குட்டி போட்டு இருக்கிற வீடு. அந்த பக்கம் போகாதே தாய் நாய் பிடுங்கிவிடும் ரொம்ப ஜாக்கிரதை’ தெருவில் போவோரும் வருவோரும் பேசிக்கொண்டார்கள். இத்தனையும் மீறிச் சில தெருக்குழந்தைகள் நாய்க்குட்டிகளை கிடைத்த இடுக்கு வழியாக எட்டிப்பார்க்கவே செய்தார்கள்.
தாய் நாய் என்னவெல்லாமோ மோடி வித்தை செய்து தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து தான் ஈன்ற குட்டிகளுக்கு கனக்கும் தன் முலைக்காம்புகளை காட்டி படுத்துக்கொண்டது. ஊரெல்லாம் சுற்றி வாயில் கவ்வி எதனையோ தூக்கிக்கொண்டு வந்து தாய் நாய் தன் குட்டிகளுக்கு க்கொடுத்தது.
குட்டிகளுக்கு கண்கள் மூடியே இருந்தன.அவை கண்கள் திறக்க அதிக பட்சம் ஒரு மாதம் கூட ஆகலாம் விஷயம் தெரிந்தவர்கள்தான் பேசிக்கொண்டார்கள். அவனால் ஒன்றுமே நினைத்து ப்பார்க்கமுடியவில்லை.உலகம் ஒரு புதிர் மூட்டைதான்.
வீட்டிற்கு பால் போடுபவன் பேப்பர் போடுபவன் தினம் குப்பை அகற்றும் தலை காய்ந்துபோன ஆந்திரப்பெண் எல்லோருக்கும் அவன் வீடு காட்சிப்பொருள் ஆனது. நாய்க்குட்டிகள் பார்க்கத் தாய் நாய் இல்லாத ஒரு சமயம் பார்த்து வந்த பக்கத்து வீட்டு வேலைக்காரப்ப்பெண் ‘ நாய் குட்டி போட்டதுல நான்கு கிடா ரெண்டு பொட்டை’ என்று கணக்குக்கொடுத்தாள். யாரும் இதைப்போய் அவளிடம் கேட்டார்களா என்ன ? ஒவ்வொரு குட்டியாய் அதன் காது பிடித்து த்தூக்கி அவைகளின் கத்தும் குரலின் கம்பீரம் அளந்தாள். தன் மனதிற்குள்ளேயே ஒரு கணக்குச் சொல்லிய அவள் ஏதோ சாதித்து விட்டமாதிரி தெருவில் பின் நடந்துபோனாள்
அவனுக்கு மாடிப்படியின் அடிப்பக்கம் போகவே அச்சமாகத்தான் இருந்தது.அந்த தாய் நாய் இல்லாத நேரம் பார்த்து குட்டிகளைத்தூக்கிப்பார்த்தான்.அவை அத்தனையும் அழகாகத்தான் இருந்தன.அவன் மனைவி பாலைக்காய்ச்சி ஆரவைத்து ஒரு தட்டில் ஊற்றி எடுத்துக்கொண்டு நாய் க்குட்டிகளை ஒவ்வொன்றாய்ப்பிடித்து அவைகளில் ஏதும் பால் குடிக்கிறதா என்று கவலையொடு பார்த்தாள். சில மொசுக் மொசுக் என்று பால் குடிக்க ஆரம்பித்தன.அவளுக்கு முகம் மலர்ந்து போனது.சில குட்டிகள் ஒன்றும் தெரியாமல் விழிக்கவும் செய்தன.’மேலைக்கு இதுங்க குடிக்கும்’ அவளே சொல்லிக்கொண்டாள்.
கண் திறவா நாய்க்குட்டிகள் ஒன்றையோன்று கட்டிப் பிடித்துக்கொண்டு விளையாடவும் தொடங்கின.விளையாட்டடாய் அவை கடித்துக்கொண்டன. முறைத்தன. கெஞ்சின செல்லம் கொண்டாடின சிணுங்கின கொஞ்சமாய் போரிட்டன எட்டிய மட்டில் ராஜ கம்பீரமாய் த்திரிந்தன பின் உறங்கின. எல்லாமாகச் சேர்ந்து ஒரு உருண்டை வண்ணக்கம்பள மூட்டையாய்க்காட்சி தந்தது.. அங்கிருந்தும் அந்த கோரஸ் முனகல் சப்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
விரிக்கப்பட்ட கித்தான் சாக்கில் படுத்துக்கிடந்த குட்டிகள் ஒரு நாள் அதிகாலை ஒன்றுக்குப்பின் ஒன்றாய்க் கண்கள் விழித்தன. அவைகளின் பிஞ்சு க் கால்கள் சுறுசுறுப்பு பெற்றன.மாடிப்படி, தெரு வாசல் வீட்டு நிலை வாயில், நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த டூவீலர், குப்பைத்தொட்டி என வேக வேகமாய்ச் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தன.தாய் நாய் தன் குட்டிகளை ஆளாக்குவதிலே மட்டும் முனைப்பாக இருந்தது.
குட்டி நாய்கள் மூத்திரம் மலம் எனப்போய் அவைகளை அவள் சுத்தம் செய்வதிலேயே முதல் மூன்று தினங்கள் திண்டாடினாள் திணறிப்போனாள்.அவன் தான் இன்னது செய்வது என்று தெரியாமல் விழித்தான்.குட்டிகள் சன்னமாக் குரைக்கவும் கற்றுக்கொண்டன.
‘இது தான் நேரம் குட்டிகளை வீட்டை விட்டு அனுப்பிவிடவேண்டியது’ அவள் சொன்னாள்.
‘அது எப்படி’
‘ குட்டிகள் இனி வளர்ந்து விட்டால் அவைகளை அப்புறப்படுத்தவே முடியாது’
‘என்னதான் செய்வாய்’
‘ நடு இரவில் தாய் நாய் இல்லாத ஒரு நேரம் பார்த்து அவைகளைத் தெருவில் கொண்டு போடவேண்டியதான். யாரேனும் தூக்கிக்கொண்டும் போய் வளர்ப்பார்கள்’
அவன் ‘சரி ‘என்றான் ஆக .ஒரு கூடையில் அவைகளை தூக்கிப்போட்டுக் கொண்டு போய் முச்சந்தியில் விட்டுவிடலாம் என ஒரு முடிவானது.
ஒரு குட்டியைத்தூக்கியபோதே அது அவனை க்கடிக்க வந்தது.
‘இனி இவைகளை இங்கு வைத்திருக்க இருக்க கொஞ்சமும் நியாயமில்லை’ அவள் அழுத்தமாகச் சொன்னாள்.ஒட்டடை அடிக்கும் நீட்டு குச்சி ஒன்றினால் அவள் ஒவ்வொரு குட்டியாய் நெட்டித்தள்ளி கேட்டுக்கு வெளியே கொண்டுபோனாள். அந்த நேரம் பார்த்து அந்த தாய் நாய் ஓடோடி வந்து விழுந்து கோலம் போடும் அந்த இடத்தில் தரை புரண்டது. பரிதாபமாய்க்குரைத்தது. ஓலம் வைத்தது.அவள் தாய் நாய் முன்பாகவே அனைத்துக்குட்டிகளையும் கேட்டுக்கு வேளியே கொண்டு போனாள்.
இப்படிக்கூட அவளால் செய்யமுடியுமா என்ன?அவன் இப்போது அதிர்ந்துபோய் அச்சத்தில் இருந்தான்.தாய் நாயின் கண்கள் நீரைச் சொரிந்தன. அவனுக்கு மனம் ரணமானது. வெகுவாய்க்கனத்துப்போனது.
தாய் நாய் மட்டும் லேசுப்பட்டதுவா அது உடன் சுறுசுறுப்பாகி ஒவ்வொரு குட்டியாகக் கவ்விக்கொண்டு போய் எதிர் வீட்டு குப்பைத்தொட்டி அருகே வைத்தது. ஆறு குட்டிகளும் தாய் நாயும் இப்போது அவன் வீட்டில் இல்லை.
அன்று இரவு ஏதோ ஒரு சின்ன உறக்கம் அவ்வளவுதான்.
மறு நாள் விடியற்காலை அவன் பல் துலக்கும் முன்னே அவசர அவசரமாய் வாயிலில் வந்து பார்த்தான்.தாய் நாயும் ரெண்டு குட்டிகளும்தான் பாக்கி இருந்தன. நான்கு குட்டிகள் இல்லை.
‘கிடா நாய்க்குட்டிங்களை பால் காரங்க இல்லை இன்னும் யாராவது தெருவுல போரவங்க வர்ரவங்க தூக்கி கிட்டுப்போயிருப்பாங்க. பொட்டைங்க இன்னும் போணியாவம பாக்கி கெடக்குது’
பக்கத்து வீட்டு வேலைக்காரப்பெண் தான் அவனுக்கு நியாயம் சொன்னாள். பாக்கிக்கிடக்கும் அவை ரெண்டும் பெண் குட்டிதானா என்பதையும் அவள் பார்த்து உறுதி செய்தாள்.தாய் நாயின் பின்னாலேயே அவை விழுந்தும் புரண்டும் பின் எழுந்து சென்றன.
சற்று நேரத்துக்கு எல்லாம் தாய் நாய் மாத்திரம் அவன் வீட்டு வாசலில் திரும்பவும் வந்து அமைதியாய்ப்படுத்து க்கொண்டது.. அதன் கண்கள் சிவந்து நீரைச் சிந்திக்கொண்டு இருந்தது
.’அந்த ரெண்டு குட்டிவுள பள்ளிகூடத்துபுள்ளங்க தூக்கிம் போயிருக்கும் அதான் இங்க காணும்’ அடுத்த வீட்டு வேலைக்காரப்பெண் ஓங்கிக்குரல் கொடுத்தாள். அவன் அந்த வேலைக்காரப்பெண்ணை ஒருமுறை கவனமாய்ப் பார்த்துக்கொண்டான்.
தன் மனைவியைத்தேடினான். அவள் பழைய உணவு வீட்டில் பாக்கி இருந்ததைக்கொணர்ந்து அந்தத் தாய் நாயின் அருகே வைத்தாள்.பைய அந்த தாய் நாய் வாலை ஆட்டிக்கொண்டே எழுந்து அவசர அவசரமாய் அதனை உண்ணத்தொடங்கியது. கச்சிதமாக அந்நேரம் பார்த்து இரண்டு ஆண் நாய்கள் எங்கிருந்துதான் வந்தனவோ தெரியவில்லை’ லொள்’ என்று குரைத்து அந்த உணவைப்பிடுங்கி பங்கு போட்டு .தின்று தீர்த்தன.
உண்வைதின்று முடித்த அந்த ஆண் நாய்கள் இரண்டும் சுருண்டு பட்டினியில் படுத்திருக்கும் அந்தத்தாய் நாயை ச்சுற்றி சுற்றி வந்து இளித்தன.
‘ வொலகத்தை வேடிக்கை பார்க்கறது நம்ம வேலயில்லை ஆயிரம் வேலைங்க நமக்கும் ஆவாம கெடக்குது’ அவள் குரல் கொடுத்தாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியாமலேதான் அவன் தன் வீட்டின் உள்ளே போனான்.
——————————

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    நான் சிறு வயதில் வளர்த்த நாய்களின் நினைப்பு வருகிறது. நாய்க்குட்டிகளை நாம் தூக்கி எறிகிறோம். மனிதக்குட்டிகள் வளர்ந்ததும் தாமாக வெளியேறி விடுகின்றன, அவ்வளவுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *