மனம் பிறழும் தருணம்

author
1
1 minute, 6 seconds Read
This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

சிவக்குமார் அசோகன்

ஒரு சனிக்கிழமை அன்று இளங்கோ, தீபிகா வீட்டிற்கு என்னையும் அழைத்த போது முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் ஆசை வளர்ந்து கொண்டே வந்ததால் பிறகு சரி என்றேன். முதலில் மறுத்ததற்கும் பிறகு சரியென்றதற்கும் காரணம் இளங்கோ தான். அவன் தீபிகாவைத் தொடர்பு படுத்தி சொன்னக் கதைகள் தான். கதைகள் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இன்றுவரை அவை நிஜமா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.

 

தீபிகா அவனுடன் ஒரே கம்பெனியில் ஒரே ஷிஃப்டில் வேலை பார்ப்பவள். ஷிஃப்ட் முடிந்ததும் இளங்கோ எங்கள் ரூமிற்கு வர மாட்டான். நேரே தீபிகா வீட்டிற்குச் சென்றுவிடுவான். அவளுடன் வடபழநியில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் ரூபிணி, அம்சா, சரண்யாவும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ரெகுலர் ஷிஃப்ட். அதாவது காலையில் எட்டு மணிக்கு வெளியே வந்தால், வேலை முடித்து சென்னை ட்ராஃபிக்கை வென்று அல்லது தோற்று வீடு வந்து சேர இரவு எட்டு மணி ஆகிற துரிதகதி வாழ்க்கை. தீபிகாவிற்கும், இளங்கோவுக்கும் அதிகாலை 5 மணி ஷிஃப்ட்.

 

நான்கு பேரும் வேறு வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து, ஹாஸ்டல் ரூமில் பழக்கமாகி இப்போது வாடகைக்குத் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். தீபிகா மதியம் மூன்று மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவாள். இளங்கோவும் அவளுடனேயே சென்றுவிடுவான். அந்த வடபழநி வீட்டில் ஏனைய மூன்று பெண்களும் வரும் வரை இவர்கள் செய்யும் லீலைகள் தான் எனக்குத் தினப்படி இரவு நேரப் பொழுதுபோக்கு. பொதுவாக நான் சொல்லும்படி அவனைக் கேட்க மாட்டேன். அவனே சொல்லுவான். எப்போதும் இளங்கோவுக்கு ‘செய்ததைச்’ சொல்வதில் ஓர் அலாதி இஷ்டம். நான் யோக்கியனாக இருந்திருந்தால் ‘ச்சீ இதையெல்லாமா என்னிடம் சொல்வாய்?’ என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஏன் கேட்கவில்லை?

 

தஞ்சையில் பி.இ. முடித்துவிட்டு நானும் அவனும் ஒன்றாக வேலை தேடி அலைந்து, ஒன்றாக ரூம் எடுத்து இன்று வரை ஒன்றாகத் தான் இருக்கிறோம். அவன் ஆபீஸில் தீபிகா வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, இன்று வரை, அவளை அவன் மடக்க முயற்சித்ததிலிருந்து, நேற்றைக்கு முன்தினம் நடந்த இதழ் முத்தம்வரைக்கும் எனக்குத் தெரியும்.

 

என்னால் ஒரு பெண்ணைக் கூட பிக்-அப் பண்ண முடியாததாலோ என்னவோ அவன் சொல்வதையெல்லாம் கேட்க எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எப்போதும் ஒரு சின்ன சந்தேகமும் உண்டு. உண்மை தான் சொல்கிறானா அல்லது அவிழ்த்து விடுகிறானா?

 

இளங்கோ பற்றியும், அவன் அப்பா பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அவன் அப்பா தஞ்சையில் பெரிய டாக்டர். மிகுந்த கண்டிப்புப் பேர்வழி. இவனும் அப்பா பேச்சைத் தட்டாத நல்ல பிள்ளை வீட்டைப் பொறுத்தவரை. தீபிகாவை அவர்கள் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தன் அத்தை மகளைத் தான் மணந்து கொள்ளப் போவதாக இவனும் என்னிடம் சொல்லியிருக்கிறான். இடையில் இந்த தீபிகா ஒரு டைம்பாஸ். எப்போது பார்த்தாலும் அவளை எங்காவது தனியாக அழைத்துச் செல்வது, ஏதாவது ஆசை காட்டி அத்துமீற வேண்டியது, இது தான் வேலை நேரம் போக இளங்கோவின் தலையாய பொழுது போக்கு.

 

எனக்கு அவன் சொல்வதை குறுகுறுவென கேட்பதே வேலை. ஆனால் ஒரு முறை கூட நான் தீபிகாவை நேரில் பார்த்ததில்லை. செல்போனில் அவர்கள் கட்டியணைத்தபடி இருக்கும் போட்டோவை இளங்கோ என்னிடம் காட்டியிருக்கிறான். அதில் பார்த்த விதத்தில் அவள் நல்ல அழகி தான். முகத்தில் ஒரு வித சாந்தம் இருந்தபடியால் ‘இவளா இப்படி?’ என்று நான் நினைப்பதுண்டு.

 

அவளுடன் இளங்கோ வெளியே செல்லும் தருணங்களில் என்னையும் அழைப்பான். நான் நந்தி போல் உணர்வதால் தவிர்த்துவிடுவேன். சில வாரங்களுக்கு முன் சரண்யாவைப் பற்றிச் சொன்னதிலிருந்து எனக்கும் ஒரு வித ஆசை வளர்ந்து அந்தப் பெண்கள் வீட்டிற்குச் சென்று தான் பார்ப்போமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இதுவரை இளங்கோ மூன்றாம் பால் கதைகள் சொல்லும் போதெல்லாம் நான் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருந்த அந்த வீடு, ‘அந்த’ பெட்ரூம் எல்லாவற்றையும் நேரில் பார்க்கலாமில்லையா? ச்சே ஏன் இப்படி புத்தி போய்க்கொண்டிருக்கிறது? மனதின் இயல்பே அலைபாய்வது தான் போல.

 

அந்த நான்கு பெண்களில் சரண்யாவைத் தவிர மற்ற மூவருக்கும் ‘ஆள்’ உண்டாம். சரண்யாவிற்கும் உள்ளூர ஆசை உண்டாம். ஆனால் திறமை இல்லையாம். ‘உங்களுக்கென்னப்பா… ஜாலியா ஊர்சுத்துறீங்க… எனக்குத் தான் போரடிக்குது. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது சமர்த்துப் பையன் இருக்கானா?’ என்று ஒரு முறை இவனிடமே கேட்டாளாம்.

 

எனக்கு இளங்கோ சொன்னவுடன் சரண்யாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கிட்டத்தட்ட என் டைப்பில் இருக்கிறாள். தானாகத் தேடிக் கொள்ளத் திராணியில்லாமல் வந்தால் வாய் பிளந்து சுருட்டிக் கொள்ளும் தினுசு. சரண்யாவுடன் லவ்வாகி ஊர் சுற்றுவது போன்று கற்பனை செய்ய ஆரம்பித்திருந்த சமயத்தில் தான் அந்த சனிக்கிழமை வந்தது.

 

”நானும் சரண்யாவும் சினிமாவுக்குப் போறோம். நீயும் வர்றியாடா? சரண்யாவைப் பார்த்த மாதிரி இருக்கும்…”- இளங்கோ கண்ணடித்தான்.

 

”சரண்யாவும் வர்றாளா?” என்றேன்.

 

”அவ வர மாட்டா…நான் எதுக்கு நந்தி மாதிரிம்பா… நீ கொஞ்ச நேரம் சரண்யா கிட்ட பேசிட்டு கிளம்பிடு”

 

நான் சற்று யோசித்தேன். சரியாக வருமா? ”ஏண்டா இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்களே?” என்றேன்

 

”இருந்தா அவங்களையும் இண்ட்ரோ பண்ணிவிடுறேன். பட் அதுங்க எங்களை விட ரொம்ப ஸ்பீடு. நிச்சயம் பாய் ஃப்ரெண்ட்ஸோட கிளம்பியிருப்பாங்க! சரண்யா நிச்சயம் வீட்ல தான் இருப்பா, ஏதாவது நாவல் கீவல் படிச்சுட்டு!”- கிண்டல் செய்யும் தொனியில் இளங்கோ சொன்னான்.

 

அவரவர் பைக்கில் வடபழநிக்குக் கிளம்பினோம். அந்த அபார்ட்மெண்ட்டை நெருங்கி வண்டியைப் பார்க் செய்தவுடன் தலை வாரிக் கொண்டேன். என்ன பேசலாம், எப்படிப் பேசலாம், எந்த இங்கிலீஷ் வார்த்தைகள் உசிதம் என்றெல்லாம் யோசித்தபடி படியேறினேன்.

 

இளங்கோ காலிங் பெல்லை அழுத்தினான். தீபிகா தான் திறந்தாள்.

 

”ஹாய்!”

 

”ஹாய்… தீபி, நான் சொல்வேன்ல(என்ன சொல்லியிருப்பான்?) என் ஃப்ரெண்ட் கெளதம் இவன் தான்.” என்றுவிட்டு ”உள்ளே வாடா” என்றான் என்னைப் பார்த்து.

 

தீபிகாவும் ”ஹலோ உள்ளே வாங்க.. எப்படி இருக்கீங்க?” என்றாள். போட்டோவில் பார்த்ததை விட அழகாக இருந்தாள். உள்ளே பாலிமர் நாற்காலியில் உட்கார்ந்தபடி வீட்டை நோட்டம் விட்டேன்.

 

”இருங்க காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றாள் தீபிகா.

 

”நோ பேபி, ஆல்ரெடி மூவிக்கு டைம் ஆகிடுச்சு. கிளம்பலாம்!” – இளங்கோ

 

நான் அவர்கள் பேசுவதைக் கவனிப்பது போல வீட்டைக் கண்களால் சுற்றினேன். ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம், உடன் இணைந்த பாத்ரூம்.”

 

என் கண்கள் சரண்யாவைத் தேடுவதை இளங்கோ கவனித்தான். ”சரண்யா எங்கே?” என்றான் தீபிகாவிடம்.

 

உள்ளேயிருந்து அவளே வந்தாள். ”ஹாய், ரூம்ல தான் இருந்தேன்” என்றவள், என்னைப் பார்த்து ”வாங்க..!” என்றாள்

 

நான் பவ்யமாக ”ஹலோ” என்றேன்.

 

இளங்கோ குறும்பாக ”எனக்கு தெரிஞ்ச ஒரே சமர்த்துப் பையன் இவன் தான்!” என்றான். நால்வரும் ஒவ்வொரு மாதிரி சிரித்தோம்.

 

சரண்யா ”நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். சீரியஸா எடுத்துக்காதீங்க…” என்றாள் இளங்கோவையும் என்னையும் மையமாகப் பார்த்து.

 

நைட்டியில் இருந்த சரண்யாவை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தேன். சாயலுக்கு சமந்தாவை நினைவுபடுத்திய சிறிய கச்சிதமான முகம். எல்லாமே கஞ்சத் தனமாக இருந்தவளுக்கு இடுப்பு மட்டும் சற்று பாந்தமாக இருப்பதை அடக்கமான அந்த நைட்டி காட்டத் தான் செய்தது.

சரியாகத் தலை வாராத, பவுடர் பூசாத அந்த முகம் எங்களூர் வீடுகளில் முற்றத்தில் அமர்ந்து கண்மணி நாவல் படிக்கும் மேல வீதிப் பெண்களை நினைவு படுத்தியது.

 

”நீங்க வரலையா?” என்றேன் சரண்யாவிடம்.

 

”எங்கே?” அவள் புருவம் சுருங்கிற்று.

 

”ஏண்டா சொல்லலையா?” என்றேன் இளங்கோவைப் பார்த்து.

 

”அவ கிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. அவ வரலைனு தான் சொல்லுவா..” என்று தீபிகா சொன்னவுடன்

 

”இப்படிச் சொல்லியே என்னைக் கழட்டிவிட்டுட்டுப் போறது தான் இவ வேலை” என்று சரண்யா சொல்ல

 

”சரி நீங்க எங்களோட சினிமா வர்றீங்களா?” என்றேன்.

 

அவள் கொஞ்சமும் யோசிக்காமல் ”வர்றேன்” என்றாள்.

 

”ஹலோ சரண்யா நீ தான் வர்றேன்னு சொன்னியா இன்னைக்கு மழை நிச்சயம்” என்றான் இளங்கோ.

 

சற்றைக்கெல்லாம் இரு பெண்களும் கிளம்பிவிட்டனர். இடை நேரத்தில் இளங்கோ, ”வர்றேன்னு சொல்றா பார்த்தியா இண்ட்ரெஸ்ட் இல்லைன்னா வருவாளா? நைட்டு ட்ரீட் வை” என்றான்.

 

தீபிகா ஜீன்ஸ், டாப்ஸில் இருபுறமும் கால் போட்டு இளங்கோ பைக்கில் ஏறிக் கொள்ள, சரண்யா எளிமையான பச்சை நிற காட்டன் சுடிதாரில் ஒருக்களித்தபடி இதற்கு மேல் நகர்ந்தால் விழுவாள் போல என் வண்டியில் ஏறிக் கொண்டாள். முதல் தடவையாக ஒரு பெண்ணுடன் பைக் பயணம். வேகத் தடைகளைத் தேடியது மனசு. ஒரு நொடியில் தியேட்டர் வந்துவிட்டது போல் இருந்தது. ஒரு முறை கூட அவள் என் மீது படவும் இல்லை, தொடவும் இல்லை.

 

நான், சரண்யா, தீபிகா, இளங்கோ என்ற வரிசையில் தியேட்டரில் அமர்ந்தோம். உண்மையில் நான் படமே பார்க்கவில்லை. மனசு பூராவும் இவளைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. இடைவேளையின் போது நம்பர் வாங்கிக் கொண்டேன். அவள் சொந்த ஊர் திருவண்ணாமலை, அப்பா மளிகைக் கடை, அம்மா வீட்டில், ஒரு தம்பி- என்பதையும், எனக்கு ஒரு தங்கை, அப்பா ஓய்வு பெற்ற பேங்க் ஆசாமி, அம்மா வீட்டில் என்பதையும் தெரிந்து கொள்ளும் அளவிலே தான் எங்கள் பேச்சு இருந்தது.

 

அன்றிரவு மாடியில் படுத்திருக்கும் போது ”என்னடா சரண்யா எப்படி? ஆர்வமா இருக்காளா?” என்றான் இளங்கோ.

 

”தெளிவா கேளு! ஆர்வம்னா என்ன? ஒரே மீட்டிங்லயே லவ் யூ சொல்லிடுவாங்களா? அவளைப் பார்த்தா சிட்டி பொண்ணு மாதிரி தெரியலடா!”

 

”அய்… முதல் சந்திப்பிலேயே சினிமாவுக்கு பைக்ல வர்றா… எந்த கிராமத்துல இப்படி வர்றாங்க சார்? எவ எப்படினு கண்டுபிடிக்கறது கடவுளுக்கே கஷ்டம் மச்சான்!”

 

நான் மெளனமாக இருந்தேன். அவனே தொடர்ந்தான் ”சரி தீபிகாவைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? அவளைப் பத்தி நான் சொல்றதையெல்லாம் நீ சமயத்துல நம்பக் கூட மாட்டே… பட் அவ பயங்கரமான ஆளு!” இளங்கோ அந்த ‘பயங்கரமான’ என்ற வார்த்தைக்கு மட்டும் சற்று அழுத்தம் கொடுத்தான்.

 

”எனக்கு அந்த சந்தேகம் எப்போதும் உண்டுடா, நீ அவளை வெச்சு ஓவரா கதை விடுறியோனு” என்று உண்மையைச் சொன்னேன்.

 

”தோணும், தோணும். தோணாம இருக்குமா? அவ முகம் அப்படி…இன்னிக்குக் கூட…” என்று இளங்கோ ஏதோ ஆரம்பிப்பது போல் செய்து ”சரி வேணாம் விடு” என்றான்.

 

வழக்கம் போல என் மனசும் குறுகுறுக்க ஆரம்பித்தது. ‘சரி வேணாம் விடு’ என்ற சொல்ல முடியவில்லை.

 

”சரி சரி சொல்லுடா.. பிகு பண்ணாதே!” என்றேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டவன் போல சற்று புரண்டு என்னருகே நெருங்கி,

 

”தியேட்டர்ல அவ தோள் மேல கை போட்டு உட்கார்ந்திருந்தேன் பார்த்தியா?” என்றான்

 

”பார்க்கலை சொல்லு!” எனக்குள் ஓர் அவசரம் பரவிற்று.

 

”அப்படியே கையைக் கீழே இறக்கினேன். அவ தட்டிவிடுவானு பார்த்தா…”

 

”ம்!”

 

”வாட்டமா என் மேல சாஞ்சுட்டா…படமே பார்க்கலை மச்சி!”- விஷயத்தை ஒருவாறு ஏற்ற இறக்கமாக இளங்கோ சொல்ல, இப்படிப்பட்ட காரியங்கள் தீபிகாவின் வீட்டு பெட் ரூமில் ஏற்கனவே நிகழ்ந்திருந்ததை நான் அறிந்திருந்த போதிலும், தியேட்டரில் ஒரு சீட் தள்ளி இவை நடந்தேறியிருப்பது எனக்கு இரத்தச் சூட்டை ஏற்படுத்தியது.

 

கிளுகிளுப்பு விலகாமல் ”எப்படி டா… பக்கத்துல சரண்யா இருந்தாளே?”

 

”அவ தான் படம் பார்த்துட்டு இருந்தாளே…” என்றவன் கடைசியாக,

 

”யாருக்குத் தெரியும்? அவ எங்களை கவனிச்சுட்டு, நீயும் அந்த மாதிரி பண்ண மாட்டியானு கூட வெயிட் பண்ணியிருக்கலாம்” என்று விட்டு சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.

 

எனக்கு மட்டும் அன்றிரவு அவ்வளவு இலேசில் தூக்கம் வரவில்லை.

 

அதன் பிறகு எனக்கும் சரண்யாவுக்கும் தினப்படி சில மெசேஜ்கள், அவ்வப்போது சில செல்போன் அழைப்புகள், எப்போதாவது நேரில் சந்திப்பு என்கிற ரீதியில் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது. எந்த ஒரு தருணத்திலும் தீபிகா போல சரண்யாவும், இளங்கோ போல நானும் நடந்து கொள்ளவில்லை. அல்லது வாய்ப்பு கிடைக்க வில்லை.

 

ஒரு நாள் என்னை ஒரு புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றாள். ”உங்களுக்கு எந்த எழுத்தாளர் பிடிக்கும்?” என்றாள்

 

”கதையே படிக்க மாட்டேன். ஆனா காதல் கவிதைகள் படிப்பேன்” என்றேன்.

 

‘பார்த்தாலே தெரியுது’ என்பது போல் பார்த்தாள். இடைப்பட்ட இந்த நாட்களில் என் தங்கைக்கு திருமண ஏற்பாடாகி, கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பு சரண்யாவிற்கும் தீபிகாவிற்கும் பத்திரிக்கை வைக்க இளங்கோவுடன் சென்றிருந்தேன்.

 

”அவசியம் வர்றோம்” என்றனர். சரண்யா மட்டும் ”நான் இல்லாம உங்க தங்கச்சிக் கல்யாணம் நடந்திடுமா?” என்றாள். என் மீது அவள் கொண்டிருந்த அபிப்ராயத்தைக் காட்டும் விதமாகத் தான் அந்த வார்த்தைகள் இருந்தன.

 

திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பே நான் தஞ்சை வந்துவிட்டேன். கல்யாணம் ஞாயிற்றுக் கிழமையாதலால், சனி இரவே சென்னையில்

பஸ் ஏறி மறு நாள் காலை இளங்கோ, தீபிகா, சரண்யா எல்லோரும் ஆஜர். வந்த சில நிமிடங்களில் என் குடும்பத்திடம் ஒட்டிக் கொண்டுவிட்டாள் சரண்யா. என் அம்மாவை தீபிகா அம்மா என்று அழைக்க, அவள் ‘ஆண்ட்டி’ என்று அழைத்ததை தற்செயல் என்று சொல்லிவிட முடியாது.

 

இளங்கோ என் தோளை இடித்து ”விட்டா இங்கேயே தங்கிவிடுவாள் போல…” என்றான். அவன் அப்படிச் சொன்ன போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷம் எழுத்தில் உணர்த்த முடியாதது.

 

திருமணம் முடிந்தது. இளங்கோ சொன்னது போல சரண்யா அன்றிரவு அவர்களுடன் செல்லவில்லை. தீபிகா காரணம் கேட்டதற்கு தஞ்சாவூரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் எனவும், என்னுடன் திரும்பிவிடுவதாகவும் சரண்யா பதில் சொன்னாள்.

 

இளங்கோவும், தீபிகாவும் கோரஸாக ”சரியில்லை” என்று கிண்டலாகச் சொல்ல ”கிளம்புங்கப்பா நேரமாச்சு!” என்றாள் சரண்யா.

 

இரண்டு நாள் அவளுக்கு தஞ்சாவூரைச் சுற்றிக் காண்பித்துவிட்டு செவ்வாய் இரவு என் அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

 

”உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு… இந்த ஊரும் ரொம்ப அழகு. அடிக்கடி வர்றேன்” என்றாள்.

 

”இது உன் வீடு மாதிரி எப்ப வேணாலும் வரலாம்!” என்றாள் அம்மா. தொடர்ந்து ”பொறுப்பான பொண்ணும்மா நீ, நல்லா வளர்த்திருக்காங்க உன்னை..” என்று எதனாலோ பாராட்டினாள்.

 

ஒரு செமி ஸ்லீப்பர் ஏசி பஸ் பிடித்திருந்தேன். பஸ்ஸின் மத்தியில் அவளுக்கு ஜன்னலோரத்தைக் கொடுத்துவிட்டு, நான் அருகில் அமர்ந்தேன். பஸ் கிளம்பி ஒரு மணி நேரம் பேசிக் கொண்டேயிருந்தோம். பெரும்பாலும் கல்யாண சுவாரஸ்யங்களும், பெரிய கோயில் பிரம்மாண்டங்களுமே பேச்சில் பிரதானமாக இருந்தன. சீட்டின் நடுவில் இருக்கும் பொதுவான கைப்பிடியை விட்டுக் கொடுக்கும் விதம் இருவரும் அடிக்கடி இடித்துக் கொண்டோம்.

 

அவள் துப்பட்டா சற்று சரிந்து மடியில் கிடந்தது. மேலும் சற்று குனிந்தபடி உட்கார்ந்திருந்தபடியால் எனக்கு அவஸ்தை ஏற்படுத்தினாள்.

”எப்ப லைட் ஆஃப் பண்ணுவாங்க?” என்று அவள் கேட்ட போது, என் பார்வையைப் புரிந்து கொண்டு தான் கேட்கிறாளோ என்று தோன்றியது.

 

நான் ”தெரியலையே..?” என்று சொன்ன ஐந்தாவது நிமிடத்தில் லைட் ஆஃப் செய்யப்பட்டது.

 

”அப்பாடா தூங்கப் போகிறேன்!” என்று அவள் கண்களை மூடிக் கொண்டாள். கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டதால், அவள் முன்னழகு இன்னும் சற்றுப் பிதுங்கிய நிலையில் எனக்குக் கிட்டத்தட்ட இதயம் நிமிடத்திற்கு இருநூறு முறை துடிப்பது போலிருந்தது. சரியாக அரைமணி நேரம் கழிந்திருக்கும். இருட்டும், அவள் கவர்ச்சியும் கண்களுக்குப் பழகியிருந்தது. முன்னும் பின்னும் பார்த்தேன். பெரும்பாலோர் தூங்கிவிட்டதாகத் தெரிந்தது.

 

அவள் தன்னிச்சையாக உறங்கிய நிலையில் என் தோள் மீது சாய்ந்தாள். அப்படியே அவளை லாவகமாகத் தாங்கிக் கொண்டேன். கழுத்தின் தங்கச் சங்கிலி முடியும் இடத்தில் சிறு இதய டாலர் அவள் மாரின் ஆரம்பத்தில் தவழ்ந்தது. முதல் தடவையாக ஒரு பெண்ணின் விம்மிய மார்புகளை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறேன். இரத்தம் கொதிக்கிறது. மூளை குதிக்கிறது. மனசு கொந்தளிக்கிறது. காலம் கற்றுக் கொடுத்த ஒழுக்கமெல்லாம் காற்றில் பறந்தது. அவள் தூங்குவது போல் நடிப்பதாகவும், என்னை ஏதோ செய்ய ஏதுவாகிறாள் எனவும் நம்பினேன். கலப்படமான மனசு, இளங்கோ, தீபிகா, அந்த பெட்ரூம். அந்த இதழ் முத்தம், அந்த தியேட்டர் என்று ஏதேதோ சிந்திக்க, கட்டுப்பாட்டைக் கட்டோடு இழந்தவனானேன்.

 

கன்னம் வைக்கும் திருடன் போல மெதுவாக என் இடது கையை அவள் மார்பருகில் கொண்டு சென்றேன். ஒரே ஒரு விரலால் மெதுவாக மார்பைத் தொட்டேன். பஞ்சைத் தொடுவது போல் தான் இருந்ததென்றாலும் பற்ற வைத்ததென்னவோ அடங்காத அக்கினியை. எப்படித் தைரியம் வந்ததென்று இன்றைக்கும் தெரியவில்லை. ஐந்து விரல்களை ஒரு சேர கொஞ்சம் கொஞ்சமாக சுடிதாரின் கழுத்துப் பகுதி வழியே உள்ளே செலுத்தி, அணிந்திருந்த பிராவைக் கடந்து முற்றிலுமாக அவள் அழகைப் பற்ற எத்தனித்த நொடி, அவள் தேள் கொட்டியது போல வெடுக்கென எழுந்தாள்.

 

அவள் எழுந்த வேகத்தில் என் கை எக்குத் தப்பாய் சிக்கிக் கொள்ள, விடுவித்துக் கொள்ள முயற்சித்த போது அவள் ஆடை சற்றே கிழிந்தது.

அவள் என்னை ஒரே ஒரு நொடி ஆழமாகப் பார்த்தாள். இதுவரை அப்படிப்பட்ட ஒரு பார்வையை அவளிடத்திலும் வேறு எவரிடத்திலும் நான் பார்த்ததில்லை.

 

துப்பட்டாவால் தன்னை முழுதாகப் போர்த்தினாள். ஜன்னல் ஓரம் திரும்பிக் கொண்டாள். இதற்குமேல் தன்னைக் குறுக்க முடியாதபடி அவள் சாய்ந்திருந்த தோரணை, அவள் எப்படி பலஹீனமாகவும், பாதுகாப்பின்மையையும் உணர்கிறாள் என்பதைப் படம் போட்டுக் காட்டியது.

 

சென்னை வரும் வரை அவள் திரும்பவேயில்லை. பஸ் நின்றதும் அவள் பேக்கை எடுத்துக் கொண்டு, என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவள் பாட்டுக்குச் செல்வதைப் பார்த்த போது எனக்கு அவமானமாக இருந்தது. என் முகம் இருளடைந்திருப்பதை உணர முடிந்தது.

 

ஒரு ஆட்டோவில் அவள் ஏறிய போது நான் பின்னால் ஓடினேன். ”ஸாரி சரண்யா.. நானும் வர்றேன். அம் வெரி ஸாரி! என்னை மன்னிச்சிடு”

 

”உங்களோட வரணும்னு ஆசைப்பட்டு தான் வந்தேன். இப்ப நான் தனியா போகத் தான் விரும்பறேன். என்னைப் போகவிடுங்க!” என்றவள் என் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.

 

ஆட்டோ நகர்ந்தது. நகரம் என்பதால் நடுரோட்டில் நான் அழுவதை யாரும் கவனிக்கவில்லை.

 

                                                                                                                -சிவக்குமார் அசோகன்

 

Series Navigation
author

Similar Posts

Comments

  1. Avatar
    M.S.Rajendiran says:

    கதையா,சம்பவமா என பகுத்தறியாத அளவிற்கு இயல்பான நடை.ஒரு ஆணின் அவசரம்,பெண்ணின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை உணர்ச்சி…இவைகளை தொட்டுச்செல்லும் கதை.welldone.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *