தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா

This entry is part 5 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

தினம் என் பயணங்களைத் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருக்க, மொத்த கட்டுரையும் எடுத்து படித்த போது சோர்ந்து போனேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? என் சோகத்தை உலகம் எங்கிலும் பந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்க, கூடி ஒப்பாரி வைப்போம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உண்மை எனக்கு புரிந்த போது, மனம் சோர்ந்தது. நான் எதை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேனோ அதைச் செய்கிறேன். அதைச் செய்ய முனையும் போது அதை செய்யாது திசை திருப்பவும், நான் செய்து கொண்டிருக்கும் தவறைச் சுட்டவோ அல்லது அந்த மனநிலையில் இருந்து மாற்றவோ யாரோ அல்லது ஏதோ ஒன்று வந்து விடுவதைக் கண்டு விடுகிறேன்.

இப்படியாக இனி சோகத்தையோ அல்லது அழுகையையோ நான் ஏன் எழுத வேண்டும் ? இந்த “தினம் என் பயணங்கள்,” கட்டுரையால் யாருக்கு என்ன உபயோகம் ? எப்படி பட்ட மனிதர்களை இந்த எழுத்துக்கள் தொடும் அல்லது உருவாக்கும் என்ற கேள்விகள் என்னை துளைத்துக் கொண்டிருந்த நாள் பொழு தொன்றில்தான் அந்த அழைப்பு வந்தது.

சில மாதங்களுக்கு முன்னதாகவே இது “நிகழாதிருந்திருக்கலாம்” என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பைப் போட்டிக்கு அனுப்பி வைக்கும்படி சௌமா ராஜராத்தினம், லட்சுமி, மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் மணப்பாறை கூறினார். அவரின் அறிவுரையின் பெயரில் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்காக அந்த கவிதைத் தொகுப்பை அளித்தேன்.

ஒரு பொது வெளியில் தன்னுடைய படைப்பு தேர்வு செய்யப்படவில்லை என்பது ஒருவித வலி என்பதை, சௌமா. ராஜரத்தினம் அவர்கள், மென்மை யாக நாகரீகமாக எடுத்துக்கூறி, விழாவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் அந்தக் கணம் ஏற்பட்ட உணர்வு சொன்னது.

எழுத்துலகில் சிலரின் பாராட்டுக்களாலும், சிலரின் உந்துதல் மொழி யாலும் வந்துவிட்ட நான், கடக்க வேண்டிய மைல்கள் அநேகம் உணரச் செய்தது அன்றைய நிகழ்வு.

விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்புகிறேன். நீ கண்டிப்பா வந்துடனும்மா என்றவருக்கு, சரிங்கப்பா நான் வந்துவிடுகிறேன் என்றும் கூறிவிட்டேன்.

அது வரையிலும் என்னால் பேருந்து ஏற முடியாது என்பதையோ, விழாக் கூட்டம் போன்ற ஜனரஞ்சகமான இடங்களுக்குத் தனித்து நான் போக முடியாது என்பதையோ சௌமா. ராஜரத்தினம் அவர்களிடம் ஏனோ கூற வில்லை.

விழாவிற்கு போவதா வேண்டாமா? எப்படிப் போவது ? இந்த விழா எப்படி இருக்கும், யார் எல்லாம் வருவார்கள்? விழா எப்படி நடக்கும்? என்ற கேள்விகள் எழுந்தன அடுக்கடுக்காய்.

ஒரு மனம் போ என்றும், மறு கணம் போகாதே என்றும் கூறிக் கொண்டிருந்தது.

மனதிற்கும் எனக்கும் சண்டையும் கூட வந்தது.

நீயா நானாவின் மிகச் சுவராசியமான வாக்கு வாதம் போல்.

முடிவாக இந்த மனதையும் அது கூறும் இயலாமையையும் மேற்கொள்ள வென என்னவானாலும் சரி இந்த விழாவிற்கு போவதென்ற முடிவோடு, அவ்வப்போது முரண்டு பிடித்த மனதிற்கு எடுத்த முடிவின் உறுதியை கூறிக் கொண்டிருந்தேன்.

ஆகஸ்ட்டு 2, 2014 அன்றுதான் விழா. ஆகஸ்ட்டு முதல் தேதி அன்று சௌமா.ராஜரத்தினம் அவர்களுக்குப் போன் செய்து, என்னால் பேருந்து ஏற முடியாது என்பதையும், ஒருவர் துணையின்றி வருவது கடினம் என்பதையும் கூறி எத்தனை படிகட்டுகள் இருக்கும், அரங்கம் மாடியிலா கீழா என்று விசாரித்தேன். அவரும் வேறு யாரிடமோ விசாரித்து உள் செல்ல சாய்தளம் இருப்பதாகவும் அதன் வழியாக சென்றுவிடலாம் என்றும் கூறினார்.

அவரோ இந்த விழாவில் கலந்துகொள்ள உனக்கு ஆர்வம் இருப்பின் கார் அமர்த்திக் கொண்டாவது வந்து விடு என்று கூறினார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் எதிலும் நான் முன்பு கலந்து கொண்டதில்லை என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டிருந்த கருத்தரங்கம் மற்றும் “மனுஷா மனுஷா”, நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும் கார் அமைத்துக்கொண்டு அந்த விழாவிற்கு போகத் தூண்டியது.

அந்த விழாவிற்கு நான் வந்தால் என் கவிதைப் புத்தகத்தைக் குறித்த கருத்துக்களும் விமர்சனங்களும் கிடைக்கும் என்று கூற, நான் அந்த பயணத்தை மகிழ்வோடு மேற்கொண்டேன்.

காலை எட்டு மணிக்கே தயாராகி காருக்காக நான் காத்திருக்க, (இந்த கார் கட்டணத்தை ஏற்றுக்கொண்ட நண்பருக்கு மிகவும் நன்றி உடையவளாக இருக்கிறேன். அவர் கேட்டுக்கொண்டதின் பெயரில் இந்த கட்டுரையில் அவருடைய பெயரைக் குறிப்பிட முடியவில்லை)

11 மணியளவில் பயணத்தைத் துவங்கினால் போதும் என்று கூறி, கார் வரத் தாமதமாகியது. நான் அலுவலகம் சென்று விழாவிற்கான அழைப்பிதழை எடுத்துக்கொண்டு, சார்ஜ் தீர்ந்து ஒரு பாய்ண்ட் மட்டுமே இருந்த என் போனுக்கு மாற்று பேட்டரியை நண்பனிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு (அன்று முழுநாளும் கரண்ட் கட்) மீண்டும் தம்பியின் கடைக்கு வந்த போதும் கார் வந்தபாடில்லை. அந்த கணம் ஏற்பட்ட தவிப்பு உணர்வுக்கு ஒரு தனி வகை பிரிக்கலாம்.

என் தம்பியைத் துணைக்கு அழைக்க, தான் பெங்களுர் போக வேண்டும் என்று முரண்டு பிடித்தான். பிறகு திருவண்ணாமலைக்கு போன் செய்து, என் சித்தி மகான தானியேல் தயாநிதியை உடன் வரும்படி அழைத்தேன்.

அவன் இங்கு தம்பியின் வீட்டில் விட்டுவிட்ட காலணிகளை எடுத்துக் கொண்டு போளுர் வந்துவிடும்படி கூறினான். அங்கிருந்து அவன் உடன் வருவதாக முடிவாயிற்று. ஒரு வழியாய் கார் வந்துவிட, கார் ஓட்டுநர் கேட்ட முதல் கேள்வி நீங்களும் வர்றீங்களா? இல்ல வருவது எங்க அக்கா என்பது தான்.

அட என்று அலுப்பாகிப் போனது எனக்கு, என்றும் இல்லா திருமொழியாக இளையவன் என்னை அக்கா என்றுவிட, ஓட்டுநரோ பயணிக்க போவது தன் தமக்கை என்று புரிந்துகொண்டதை எண்ணிக் கொண்டேன் (பிரசில்லா என்றே அழைப்பார்கள்)

வெளி வட்டங்களில் இருந்து எனக்கு விழும் வணக்கங்களுக்காக என் வீட்டிலும இப்படி மரியாதையைப் பொன் ஆடையாக போர்த்திவிடுகிறார்கள் போலும்.

டிரைவரோ என்னைப் பழச்சாறக அங்காடியில் இருந்து அழைத்துக் கொண்டு போய் அவன் வீட்டின் அருகாமை சாலையில் நிறுத்திவிட்டு சாப்பிட்டு வருவதாகப் போய்விட்டான்.

பாட்டுக் கேட்பீங்களா என்ற அவன் கேள்விக்கு பாட்டுக் கேட்கும் மனநிலை இல்லை என்றதில் பாட்டை நிறுத்தி சென்றது சற்று ஆறுதலாக இருந்தது.

சுற்றிலும் மலை அருகாமை தூரத்தில் தெரிய, காரின் இருக்கையில் இருந்து பார்த்த அந்த காட்சி அழகான தோற்றத்தைக் காட்டியது.

பல வருடங்களுக்கு பிறகு நீண்ட தூரப் பயணம், மீண்டும் எப்போது சென்னை வருவேனோ? மாட்டேனோ? என்ற அங்கலாய்ப்பில் நான் நட்பு பாராட்டும் நண்பர்களைச் சந்தித்து விடுவது என்ற முடிவில், தமிழ்ராஜா, வெற்றிநடை சிற்றிதழ் ஆசிரியர் பாலா, உதயசங்கர், ஹூண்டாய் ராஜவேலு, ராஜகுரு, தமிழ்ச்செல்வி, வையவன் இவர்கந்த் தொடர்பு கொண்டேன்.

தமிழ்ராஜா- வாங்க நான் படப்பிடிப்பிற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இருக்கிறேன் நீங்க திரும்பி வரும்போது நான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தா பார்க்கலாம் “எந்த வழியா வருவீங்க!”

பூந்தமல்லி

எப்படி வர்றீங்க

கார்லங்க

சூப்பருங்க

வெற்றிநடைச் சிற்றிதழ் ஆசிரியர் பாலா- நான் வரேன் பா வந்து பார்க்கிறேன்.

உதயசங்கர் – நான் மதுரையில் இருக்கிறேன்

ஹூண்டாய் ராஜவேலு – குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி இருக்கிறது தோழர்.

ராஜகுரு – போனை எடுக்கவே இல்லை

தமிழ்ச்செல்வி – அய்யோ அக்கா! நான் சென்னை இல்ல திருவள்ளுர் என்றுவிட.

வையவன் சென்னையில் இல்லை அன்று.

பயண வழியில் சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கு சென்னை வருகிறேன் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதோடு சரி. அவர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருக்கலாம். தொந்தரவு செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில்.

உள்ளுக்குள் இருந்த அந்த உயர் அழுத்த உணர்வு வெளிபுறக் காட்சிகளை காணாதிருக்கச் செய்தது. எப்போது சென்னை வரும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கியது. நேரம் கடக்க கடக்க குறித்த நேரத்தில் போக முடியாது என்ற நிலை வந்த போது ஓட்டுநரை சலித்துக் கொண்டேன். நான் சொன்ன நேரத்துக்கு வந்திருந்தால் போயிருக்கலாம் என்று.

இடையில் போளுரில் 10 நிமிட தாமதம் மற்றும் ஆற்காடில் தேநீர் அருந்த வென மணித்துளிகள் அப்போது கடையில் கண்ட திருநங்கை ஒருத்தி டீ ஏந்தியபடி வந்த ஓட்டுநரின் வயிற்றில் நளினமாய் குத்தியதும், அங்கிருந்த வர்களின் கன்னத்தை வருடியதும் எரிச்சல் மூட்ட வேறு திசை திரும்பிக் கொண்டேன்.

திருநங்கை என்று சொல்லமுடியாத அளவிற்கு அழகாய் பெண் உருவாகவே இருந்தாள். இன்னும் நன்றாக உடுத்தலாம். பொதுவெளியில் இந்த அதிகப் பிரசங்கித்தனம் மட்டும் இல்லாவிட்டால் அவள் அத்தனை அழகு போற்றுதலுக்குரிய பெண்மை உடையவள்.

அங்கிருந்த ஆண்களின் பார்வையில் தெரிந்தது ஏளனமா ? எரிச்சலா? அல்லது பரிதாபமா ? கேலியா ? கண்டுணர முடியவில்லை.

ஒரு வழியாய் ஓட்டுநரின் சென்னை சுற்றிக் காட்டும் பயணம் முடிந்து ஸர். பிட்டி தியாகராயா கருத்தரங்கம் வந்த போது, சென்னை துர்நாற்றம் வாந்தியை ஏற்படுத்த முனைந்திருந்தது. கொடியேற்றத்திற்கென சிற்றிதழ் ஆசிரியர் பாலமுரளி அளித்த சாக்லெட்டுகளில் ஒன்று வாந்தி உணர்வுக்கு மருந்தானது பிறகு.

முதலில் பார்த்தது பாலமுரளியைத்தான், கை தூக்குறேன் அடையாளம் தெரியுதா பாருன்னார். பேசுவதற்கோ நேரமின்றி போனது. அவரின் அண்ணா சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் அவரைப் பற்றிய சிறு விசாரிப்போடு நின்று போனது உரையாடல்.

அடுத்துப் பார்த்தது சௌமா.ராஜரத்தினம் அவர்கள், காரைவிட்டு இறங்கிவிட்ட என்னை காரிலேயே சாய்தளம் வழி அழைத்துச் சென்று அங்கிருந்து நான்கு படிகள் கீழ் இறங்கும் வரை உடன் இருந்து, முதல் வரிசை இருக்கையில் அமரும் வரை இருந்து விலகிச் சென்றார்.

என்னருகில் எழுத்தாளர் வாஸந்தி அவர்கள். நான் ரசித்த “மனுஷா மனுஷா” நாடகத்தைப் பற்றி எழுதப் பக்கங்கள் நிறை வேண்டும். அதை மற்றொரு சமயத்தில் கூறுகிறேன். அந்த நாடகத்தில் அரசாராக நடித்த நடிகர் மாத்திரம் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டார். அரை நிர்வாணமாக சபையில் காதா பாத்திரமாகவே நிற்க அதிக துணி வேண்டும்.

பரிசு பெற்றவர்களில் நிஜந்தன் திலகாபாமா பெயர்கள் மனதில் மறக்காமல் ஒட்டிக்கொண்டது. ஞாநி அவர்களோடு பேசியதும், விழாவின் முக்கியஸ் தர்கள் என்னிடம் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டதும் நெகிழ்ச்சியான தருணங்கள்.

விழாவிற்குப் பரிசு பெற்றவர்களையும் மற்றவர்களையும் சால்வை போர்த்திக் கௌரவித்துக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராது திடீரென என் பெயரைச் சொல்ல எனக்குச் சால்வைப் போர்த்திக் கௌரவித்ததும், அத்தனை கேமராக்களும் என் பக்கமாகத் திரும்பிவிட அரங்கத்தில் இருந்த அத்தனைக் கண்கள் பார்வையும் என்மீது விழுந்தது இனம் புரியா உணர்வில் கண்ணீர்த் துளிகளை விழ வைத்தது. இது ஓர் இன்ப அதிர்ச்சி எனக்கு.

எதற்காக இந்த கௌரவம் என்ற கேள்வி மனதில் விழாமல் இல்லை. அந்த கணம் அங்கீகாரத்திற்காக மகிழ்வதை விட்டு மனம் ஒரு வெற்று உணர்வில் இது ஒன்றுமில்லை. புகழும் போதையும் ஒன்று, பாராட்டைப் போன்ற கொடிய எதிரி வேறு எதுவும் இல்லை என்று தோன்ற வைத்தது.

நான் இன்னும் பேரளவில் [முதல் கவிதை நூல் தவிர] எதையும் எழுத வில்லை. எதையும் சாதிக்கவில்லை. என் இலட்சிய கனவான மாற்றுத் திறனாளிகளை தாழ்வுணர்வில் இருந்து கொண்டு வரும் பணியைச் செவ்வனே செய்யவில்லை. இன்னும் அநேகர் அடையாளமின்றி அங்கிகாரம் இன்றி எங்கோ ஒரு மூலையிலோ, அழுக்கேறிய துணியோடு சாலையிலோ, பரட்டைத்தலையோடு வயற்காட்டிலோ இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி இருக்கிறோம் என்பதைக் கூட அறியாமல். இந்த சமூகத்திற்கு அவர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. பெற்றோருக்கோ நான் இருக்குற வரை நாங்கள் போடுற சோத்தை தின்னுட்டுக் கிடக்கட்டும்; செத்தா எடுத்து போட்டுடலாம் அவ்வளவுதான்.

என் ஒருத்தியால் இத்தனையும் செய்துவிட முடியுமா? அங்கங்கே ஒத்த எண்ணமுடையவர் எழுந்தருள வேண்டும். நட்பு பாராட்ட! தாங்க தேற்ற அவர்களின் இயலாமையில் இருந்து வெளிகொண்டு வர உடல் ஊனம் என்பது எதுவுமில்லை என்ற மன உறுதியை தர. உங்கள் வீட்டிலோ, அல்லது அருகாமையிலோ கூட ஒரு உடல் ஊனமுற்றவன் தன் திறமைகளை இயலாமைக்குள் மறைத்தபடி வலம் வரலாம்.

நாம் முன்னேறும் போது நம்மிலும் கீழே இருப்பவர்களையும் கரம்பற்றி அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உலகம் முழுமையும் அன்பே பிரதானமாக இருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் எனக்கு துளி அங்கீகாரத்தைக் கொடுத்தது. சௌமா. ராஜரத்தினம் அவர்கள் எனக்கு பாராட்டிய அன்புதான். பேஸ்புக் நண்பரான அவர் என் மீது வைத்த தனிப்பட்ட அக்கறை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

விழா முடியும் முன்னே பாலமுரளி தான் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று கூறி விடைப்பெற்றார். அரங்கத்தில் இருந்த புத்தகங்களில் அழகின் குடில் கவிஞர். ரெ. மணிகண்டன், மற்றும் “விரல் தொட்ட வானம்” – “ஆற்றங்கரை பைரவி” இந்த இரு கவிதைப் புத்தகங்களும் எனக்குப் பால முரளி பரிசளித்தவை.

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வந்து உரையாடியதும், ஜெயந்தன் அவர்களின் மகன், மகள், மனைவி அவர்கள் வந்து என்னிடம் விசாரித்தும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் நான் காருக்குச் செல்ல மணப்பாறை வடிவேலு மற்றும் என் தம்பி தானியேல் தயாநிதி இருவரும் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்றார்கள்.

மணப்பாறை வடிவேலுவிற்கும் இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

தமிழ்ராஜாவை சந்தித்து, அவரின் தந்தை மற்றும் தமக்கைக்கு அறிமுகமாகி, அவருடைய திருமணப் பத்திரிக்கையைப் பெற்று அவர் வீட்டில் தோசையை உரிமையாய் உண்டு பின் ஹூண்டாய் ராஜவேலுவின் வீட்டிற்கு வரும்படியான அழைப்பை நேரமின்மையின் காரணமாக நிறைவேற்ற முடியாமல் வீடு வந்த போது மணி 3- ஆகஸ்ட்டு 3 ஆம் தேதியும் கூட.

நிறைவாய் இருந்த இந்த பயணத்தில் திரு. வையவன் அவர்களைச் சந்திக்க முடியாதது ஒன்றே குறையாக இருந்தது. நான் சென்னை வருகிறேன் தங்களை பார்க்க வேண்டும் என்ற போது, உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நிகழ்த்தி அன்று நேரில் சந்திப்போமே என்ற பதில் பாராட்டு விழா நிகழ்ந்துவிட்ட திருப்தியையும், இது “நிகழாதிருந் திருக்கலாம்“ கவிதைத் தொகுப்பிற்கான அங்கீகாரத்தையும் சிறந்த படைப்பாளியான அவரின் வார்த்தைகள் எனக்கு உறுதி தந்தன.

+++++++++++++

[தொடரும்]

Series Navigationவாய்ப்பினால் ஆனதுவால்ட் விட்மன் வசனக் கவிதை – 87
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

2 Comments

  1. Avatar
    yousuf rajid says:

    வணக்கம்மா. உங்களின் ஊர், வேலை செய்யும் இடம் குடும்பம் தெரிந்துகொள்ள ஆசை. உதவுவீர்களா? நன்றாக உள்ளவர்களே எழுதி எதைக் கண்டோம் என்கிற உணர்வில் இருக்கும்போது மாற்றுத் திறனாளியான நீங்கள் தெளிவாக சிந்திக்கிறீர்கள் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *