சிவக்குமார் அசோகன்
சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் வசந்தியை அறிமுகம் செய்து வைத்தான்.
”ரூம் எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, அநேகமா ரெண்டு நாளுக்கு மேல நீங்க இங்கே தங்க மாட்டீங்கனு நினைக்கிறேன்!”
”இல்லை சுதாகர், அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நான் என்ன அவ்ளோ பெரிய பணக்காரியா? ஓவரா பிகு பண்றதுக்கு?”
”ஓகே, சரியா ஒன்பதரை மணிக்கு ஆபீஸுக்கு வந்துடுங்க. அண்ணா நகர்ல இருக்கு, ஆபீஸ் அட்ரஸ் உங்களுக்கு மெசேஜ் பண்றேன். டி. நகர் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் இருக்கு. பஸ் ஸ்டாண்ட் இங்கிருந்து நடை தூரம் தான். நீங்க விருப்பப்பட்டா பாஸ் இன்னிக்கு கார் அனுப்பறேன்னு சொன்னார்!”
”சுதாகர், நானே கேட்கணும்னு இருந்தேன். உங்க கம்பெனி என்ன கேக்ரான்-மேக்ரான் கம்பெனியா? இண்டர்வியூ சரியா பண்ணலை, ஆளை நேர்ல பார்க்கலை, சர்ட்டிஃபிகேட்ஸ் செக் பண்ணலை, அதுக்குள்ள நாப்பதாயிரம் சேலரி! சரி அது கூட ஓகே…. எதுக்குக் கார் அனுப்பறார் பாஸ்?”
”விட்டா ஓடிடுவீங்களே?” என்று சிரித்தான் சுதாகர்.
”எனக்கு சிரிப்பு வரலை! டவுட் தான் வருது!”
”ரிலாக்ஸ் வசந்தி, உங்களைப் பத்தி பாஸ்க்கு நல்லாத் தெரியும். அவர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டார்! நான் அவ்ளோ சொல்லியிருக்கேன்”
”நெனச்சேன்… உங்க வேலையாத் தான் இருக்கும்னு”
”பட் நான் ஒண்ணும் பொய் சொல்லலையே… உண்மை தான் சொன்னேன்.”
”ரொம்ப ஓவரா எதிர்பார்க்கறீங்க… நான் வந்து தத்துபித்துனு தடவப் போறேன்.” – என்றாள் வசந்தி, புது அலுவலகம் என்ற மெல்லிய பயத்துடன்.
சுதாகர் கிளம்பியவுடன் புது ரூம் தோழிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டாள். அரைத் தூக்கத்தில் ‘ஐ நீட் யூ!’ என்று குரு வந்தான் மனதில். தொடர்ந்து ‘மனசு மாறப் போறது உங்களுக்குத் தான்!’ என்று அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். மாறிடும் என்ன மாறிடும்? மாறித் தானே போய்விட்டது? மனசு மாறாமலா உன்னுடன் பழகினேன்? அலுவலகத்தில் யாருடனும் பேசாமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று தானே இருந்தேன்? எங்கிருந்து வந்தானோ? பேதலிக்க வைத்துவிட்டான். யாருக்குத் தான் உன்னைப் பிடிக்காது? பார்த்தால் பணக்காரன் என்று சொல்பவர்கள் பழகினால் சொல்வார்களா? ஒரே ஒரு குற்ற உணர்வு தான்டா எனக்கு… உனக்கு நான் பொருத்தமில்லை. அவ்வளவு தான். உன்னைப் போல் நானும் ஐ நீட் யூ என்றுவிட்டால் அது பேராசையில்லையா?
யாரோ தோளைத் தொட்டார்கள். திரும்பினாள். ரூம் தோழி ”மணி எட்டு. இப்பக் குளிச்சுக் கிளம்பினாத் தான் சரியான நேரத்துக்கு ஆபிஸ் போக முடியும்.” என்றாள்.
”இதோ!”- கிளம்பலானாள் வசந்தி.
அண்ணா நகர், ஐயப்பன் கோவில் அருகில், ஒர் உப சாலையில் இருந்த சிறிய கமர்ஷியல் காம்ப்ளக்ஸில் முதல் தளத்தில் இருந்தது வசந்தியின் புதிய அலுவலகம். சின்னது தான். அலுவலகம் முழுக்க புதிதாகத் திறக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன. பார்ட்டி பலூன்கள் சுவரெங்கிலும் ஓட்டியிருக்க, டெக்கரேஷன் இத்யாதிகள் அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்தது போன்ற பிரேமையை வசந்திக்கு ஏற்படுத்திற்று.
சரியாக ஒன்பது இருபதுக்கு வசந்தி அலுவலகத்தை அடைந்து விட்டாள். ஷாம்பூ போட்ட கேசத்தை லூஸாகப் பின்னி, மெஜந்தா கலர் சுடிதாரில், கழுத்திலிருந்து மேல் மார்புப் பகுதி மட்டும் சந்தனக் கலரில் சிறிய பூ டிசைன். அழகாக இருந்தாள். உடல் மொழியில் முடிந்தமட்டும் பெருநகரின் சுபாவத்தைக் கொண்டு வர முயற்சித்தாள். உள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
”ஓ… நீங்க தான் வசந்தியா..? லுக்ஸ் கார்ஜியஸ்… உங்களுக்காகத் தான் வெயிட்டிங்!” – என்று அவள் பீதியைக் கிளப்பி இண்டர்காமில் சுதாகரை அழைத்தாள். சுதாகர் வரவேற்பறைக்கு வந்து வசந்தியை வெல்கம் சொல்லி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
ஒவ்வொரு ஊழியர்களையும் அறிமுகப்படுத்தினான். டீலிங் ரூம், பேக் ஆபிஸ் ரூம், லன்ச் ஹால், ரெஸ்ட் ரூம் எல்லாவற்றையும் சுதாகர் காட்டினான்.
”ரொம்ப அழகா இருக்கு சுதாகர்! நம்ம ஆபிஸ் அளவுக்குப் பெரிசில்லைன்னாலும் கச்சிதமா அழகா இருக்கு!” என்றாள். பிறகு ”என் ஸீட் எங்கே?” என்றாள் மனத்தில் ஆர்வம் மேலிட.
சுதாகர் ”என்ன அவசரம் வசந்தி? காட்டுவோம்ல வாங்க…” என்று வசந்தியை ஒரு தனி கேபினுக்கு அழைத்துப் போனான். அந்தக் கேபினின் முகப்பில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
”உங்களுக்கு எந்த ஸீட்னு எம்.டி தான் முடிவெடுப்பார். அவரைப் பார்த்துடலாம்!’ என்றான் சுதாகர். தனக்கு இண்டர்வியூ செய்தவர், கம்பெனியின் முதலாளி என்ற மரியாதையுடன் வசந்தி உள்ளே சென்றாள். முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்த மாடர்ன், ஹைகிளாஸ் ரூமில் மேனேஜர் அமரும் சுற்றும் குஷன் நாற்காலி காலியாக இருந்தது.
வசந்தி சுதாகரைப் பார்க்க, சுதாகர் வசந்தியைப் பார்த்து அந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி ஜாடை செய்தான்.
”என்ன சுதாகர் உங்க பாஸ் இன்னும் வரலையா?” என்றாள் வசந்தி.
”நீங்க முதல்ல அந்த ஸீட்ல உட்காருங்க”
வசந்தி மேனேஜர் ஸீட்டுக்கு எதிரில் ஏனையோர் அமரும் ஸீட்டில் அமரப் போனாள்.
”நோ.. நோ.. அந்த ஸீட்!” என்று சுதாகர் காட்டிய ஸீட்… மேனேஜர் இருக்கை!
வசந்தியின் முகம் சிறிது கோபத்தையும், குழப்பத்தையும் கலந்து வெளிப்படுத்த, ”யெஸ்…யூ ஆர் ஜெனரல் மேனேஜர்!” என்றான் சுதாகர்.
வசந்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆரம்பத்திலிருந்தே நடக்கும் காரியங்களில் அவள் சொல்ல முடியாத குழப்பத்தில் இருந்தாளாகையால், தான் தான் பொது மேலாளர் என்ற உண்மையை அவள் நம்பவில்லை. எப்படிச் சாத்தியம் என்பதும் உறைக்கவில்லை. அந்த ஸீட்டில் அமர மறுத்தாள்.
”இது என்ன நாடகம்? என்ன நடக்குது இங்கே…? நான் தஞ்சாவூரே போறேன்!” என்று கிளம்ப எத்தனித்தவளை, சுதாகர் சிரித்துக் கொண்டே ”அதுக்குள்ளே என்ன அவசரம்? நீங்க ஸீட்ல உட்காருங்க.. எல்லாம் புரியும்!” என்று வற்புறுத்தினான்.
உண்மையைத் தெரிந்து கொள்ளும் அவசரத்தில் அவள் அந்த இருக்கையின் நுனியில் அமர்ந்தாலும், அந்த நொடி ஒரு பரவச உணர்வை
அடையத் தான் செய்தாள்.
”சரி நான் கிளம்புறேன். இனிமே எல்லாத்தையும் உங்களுக்கு எம்.டி விளக்குவார்!” என்ற சுதாகர், பதிலுக்குக் காத்திராமல் விருட்டென்று வெளியே சென்றான்.
ஆச்சரியம், குழப்பம், பெருமிதம் எல்லாம் கலந்தடித்து வாழ்நாளில் இது நமக்குப் புதிர்காலமா என்று யோசித்தபடி வசந்தி இரண்டு நிமிடம் அந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள்.
”மே ஐ கம் இன்?” என்று ஓர் ஆண் குரல் கேட்டது. பரிச்சயப்பட்ட குரலாக இருக்கிறதே என வசந்தி திரும்பிப் பார்க்க, எம்.டி உள்ளே வந்தார். சிம்பிளா இளம்பச்சை நிற காட்டன் சட்டையும், அடர் கறுப்பில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பளபளப்பான சவரம் செய்த முகம் பச்சைக் குழந்தையை நினைவு படுத்தியது. முகத்தில் நிரந்தரமாகக் குடியேறிய புன்னகை, பணக்காரக் களையை அள்ளித் தந்தது.
சின்ன வயது தான். எம்.பி.ஏ இளைஞர் என்பது நடை, உடை, பாவனையில் தெரிந்தது.
வசந்தி எழுந்திருக்கவில்லை. எம்.டி தான் வந்திருக்கிறார் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அல்லது நம்பவில்லை.
”குரு நீயா?” என்றாள் விந்தை விலகாத முகத்துடன். ஆம் எம்.டியாக வந்தது குரு தான்.
”யெஸ் நானே தான்.” – கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த வசந்தியிடம், அதன் பிறகு குரு சொன்ன ஒவ்வொரு விஷயமும் அவளை மயங்கி விழாதக் குறைக்குத் தள்ளின.
”மேடம், ஒரு ஆறு மாச உழைப்பு தான் இந்த ஆபிஸ்! போன வாரம் தான் திறப்பு விழா! ஒன்றரை கோடி கேபிட்டல். எக்ஸ்சேஞ் லைசென்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். போன வாரம் தான் ரெங்கராஜன் சாருக்கே விஷயத்தைச் சொன்னேன். இப்பக் கூட அங்கே யாருக்கும் தெரியாது. எல்லாமே சர்ப்ரைஸ். வாரன் பஃபெட் ஸ்டைல். சுதாகர் இங்கே வந்ததிலிருந்து இந்தப் புது ஆபிஸுக்குத் தான் மெனக்கெட்டுட்டு இருந்தான். நான் அடிக்கடி கார்மெண்ட்ஸ் பர்ச்சேஸ் விஷயமா சென்னை வருவேன்னு சொல்லுவேன் தெரியுமா? அது எல்லாம் இந்த வேலைக்காகத் தான். நான் புதுக் கம்பெனி ஆரம்பிக்க நினைச்ச போதே முடிவு பண்ணிட்டேன். நீங்க தான் என் கம்பெனி மேனேஜர்னு. அதனால தான் சுதாகரை விட்டு உங்களை அழைக்கச் சொன்னேன். அந்த இண்டர்வியூ கூட சுதாகர் குரல் மாத்திப் பேசினது தான். பட் லேட்டாத் தான் நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம் எனக்கு நடந்துச்சு!”
வசந்தி தண்ணீர் குடித்தாள். ”என்ன?” என்றாள்.
”நான் உங்க மேல வெச்சுருக்கிறது வெறும் நட்பு, மரியாதை மட்டும் இல்லேன்னு”
வசந்தி தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முதல் முறையாக அவள் வெட்கப்படுவதை குரு கவனித்தான்.
”என்னால் எதையும் நம்ப முடியலே குரு… ஏன் என்னை விரும்பறே… என்ன காரணம்?”
”தெரியலயே மேடம்! காரணமே இல்லைன்னு வெச்சுக்குங்க!” – அந்தக் காரணமேயில்லாத காரணம் வசந்திக்குப் பிடித்தே இருந்தது.
”எங்க அப்பாகிட்டேயும் இப்படித் தான் சொன்னேன். எங்க அப்பா என்ன சொன்னார் தெரியுமா?”
வசந்தி இப்படிக் கேட்டுவிட்டு இடை நிறுத்திய குருவை உற்று கவனித்தாள். அவன் சொல்லப் போவதில் தன் எதிர்காலம் இருப்பதாக உள்ளுக்குள் உணர்ந்தாள்.
”அம்மா இல்லாமலே வளர்ந்திட்டே… உன்னைக் கட்டிக்கப் போறவ உன்னைவிட வயசுல அதிகமா இருக்கிறது தப்பில்லைடா.. அவ ஒத்துக்கிட்டா அழைச்சுட்டு வான்னு அப்பா சொன்னார்!” என்று நிதானமாகச் சொல்லும் போது அவன் நா தழுதழுத்தது.
‘எங்கே இவள் இப்போதும் மறுத்துவிடுவாளோ?’ என்கிற பயம் அவனுக்கு இருந்ததை, அவன் குரல் சொல்லிற்று.
பொல பொலவென கண்ணீர் விட்டாள் வசந்தி. உலகின் ஒட்டுமொத்த அதிர்ஷ்டக் காற்றும் தன் பக்கம் வீசுவதாக உணர்ந்தாள். இக்கணம் உயிரே போய்விட்டாலும் நஷ்டமில்லை என்று நினைத்தாள். பட்ட கஷ்டமெல்லாம் இன்றோடு தொலைந்ததையும், இந்தப் பைத்தியக்காரனைக் காபந்து செய்ய வேண்டிய, போஷிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இறைவனால் அளிக்கப்பட்டதெனவும் உணர்ந்தாள். தன்னை விட அதிர்ஷடக்காரி யாரும் உலகில் இருக்க முடியுமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
மிக முழுமையானதொரு காதல் உணர்வுடன் ‘நானிருக்கிறேன் உனக்கு!’ என்று சொல்வது போன்ற உணர்வுடன் குருவின் கைகளை இறுகப் பற்றினாள். அவனை அருகே இழுத்தாள்.
”என்ன மேடம்?” என்றான் குரு சிறிய பதட்டத்துடன்.
”முதல்ல மேடம்னு சொல்றதை நிறுத்துடா ராஸ்கல்!” என்று கட்டியணைத்தாள் வசந்தி!
நீண்ட நாளைக்குப் பிறகு சென்னையில் சாரல் மழை!
__
சிவக்குமார் அசோகன்
- தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு
- மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014
- தொடுவானம் 28. திருப்புமுனை
- வாய்ப்பினால் ஆனது
- தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 87
- வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)
- அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்
- “ஒன்பதாம்திருமுறைகாட்டும்சமுதாயச்சிந்தனைகள்”
- நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
- பொருள் = குழந்தைகள் ..?
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு
- பாவண்ணன் கவிதைகள்
- தடங்கள்
- ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்
- திரும்பிவந்தவள்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 16
- தொடுவானம் 28. திருப்புமுனை
- தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?
- ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15
- மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு
- ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4