ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

 

Ananda Bhavan pic -2

 படம் : ஓவியர் தமிழ்

 

இடம்: ஆனந்த பவன் ஹோட்டல்

 

பாத்திரங்கள்: ஹோட்டலின் வயது முதிர்ந்த சர்வர் ரங்கையர், ஹோட்டல் உரிமையாளர் ஆனந்த ராவ், வாசுதேவாச்சார், கிட்டு, வடிவேலு என்று மூன்று வாடிக்கையாளர்கள்.

 

நேரம்: காலை மணி ஏழு.

 

(சூழ்நிலை: சர்வர் ரங்கையர், கல்லா மேஜைக்குப் பின்னால் உயரத்தில் மாட்டியிருந்த ஸ்வாமி படங்களுக்குப் பூ மாட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாமென்று ஆனந்தராவ், மேடையிலிருக்கும் மேஜையை விட்டுக் கீழே இறங்கி நிற்கிறார்)

 

 

 

ஆனந்தராவ்: இன்னிக்கு வெள்ளிக்கிழமை பூக்காரன் கிட்டே சாயந்திரம் மாலைக்கு சொல்லியிருக்கியோ ரங்கா?

 

ரங்கையர்: சொல்லிட்டேன். அவன் ஹோட்டல்லே சாப்ட அக்கவுண்ட் அப்படியே நிக்குதேண்ணா.

 

ஆனந்தராவ்: இன்னிக்கு கவனப்படுத்து

 

ரங்கையர்: (அலுப்பாக) எத்தனையோ தரம் சொல்லியாச்சு. ஒங்களுக்கு அவன் கிட்டே செல்லம் (தனக்குள் முணுமுணுக்கிறார்) யார்கிட்டேதான் செல்லம் இல்லை! ஹோட்டல் நடத்தற வாளுக்கு கண்டிப்பு வேணும் இல்லேன்னா தொப்பி போட்டுட வேண்டியதுதான்! மாசத்துக்கு ஒருக்கா, வேலை மெனக் கெட்டு எல்லா கடங்காரன் களுக்கும் ஒரு கார்டு போட்டுட்டா போறுமா?  அந்தப் பொண்ணு ஜமுனா நான் கார்டு எழுதி எழுதி கை வலிச்சுப் போச்சுப்பா… இந்த மாசம் எத்தனை அக்கவுண்ட் செட்டில் ஆச்சுண்ணு கேக்கறா!

 

ஆனந்தராவ்: ஆனந்த பவன் காசு இன்னிக்கு இல்லேன்னாலும் ஒரு நா வசூல் ஆயிடும் ரங்கா… அலுத்துக்காதே.. அடடே வாங்கோ வாங்கோ ராஜப்பன்! நேத்து ராத்திரி ரேடியோவிலே நேஷனல் ப்ரோகிராமிலே படே குலாம் பாட்டு கேட்டேளோ?

 

ராஜப்பன்: கேட்டேன் ராயரே ரெண்டாவது ரெகார்ட் அற்புதமாயிருந்தது.

 

ஆனந்தராவ்: முதல் ரெக்கார்ட் மட்டுமென்ன. அந்நேரத்துக்கு தான் உம்மை நெனச்சுண்டேன். என்ன வக்கீலண்ணா… தயவே காணோமே! ரெண்டு நாளா தென்படலே… இன்னிக்கு நேரா போயிண்டிருக்கேன்!

 

வாசுதேவாச்சாரர்: போடா ஆனந்தராவ்! நீ தினம் இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டே, எனக்குக் காப்பி பழக்கம் ஒரு வீக் பாயிண்டாப் போச்சு… இன்னியிலேர்ந்து காப்பியை விட்டுடறதுண்ணு காலமேதான் டிஸைட் பண்ணினேன்!

 

ஆனந்தராவ்: காப்பியை விட்டுடுங்கோண்ணா நான் குறுக்கே நிக்கலே. காலைல வாக்கிங் வரச்சே எனக்கு ஒரு தரிசனம் காட்டிட்டிட்டு போயிடுங்கோ! ஒங்களை பார்க்கல்லேன்னா எனக்குக் காப்பி சாப்பிடாத மாதிரி ஆயிடறது (உள்ளே திரும்பி) மாதவா, வக்கீலண்ணா வந்திருக்கார்… காபியை விட்டுடப் போறேங்கறார் கவனி.

 

வாசுதேவாச்சார்: நீ எங்கே என்னை நல்ல கதிக்கு ஆளாக்கப் போறே? மாதவா… நீ போடா போயி சமர்த்தா ஒரு டிகிரி காப்பி கொண்டா!

(கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா கிட்டு, ஒரு வாடிக்கையாளர், கையில் பிளாஸ்கோடு வேகமாகப் படியேறுகிறான்)

 

ஆனந்தராவ்: என்ன கிட்டு, உன் ஆத்துக்காரிக்கு பிரசவ மாயிடுத்தா?

 

கிட்டு: இல்லீங்க ராயர்வாள். நைட் ஒம்பதுக்கு ஆரம்பிச்ச ‘பெய்ன்’ இன்னும் விட்ட பாடில்லே. இன்னும் ரெண்டு மணி ஆவுமோ மூணு மணி ஆவுமோ…

 

ஆனந்தராவ்: கவலைப்படாதே… தலைச்சனோல்லியோ… பெய்ன் இருக்கத்தான் செய்யும் உடுப்பி கிருஷ்ணன் காப்பாத்துவான். நல்லபடியே க்ஷேமமா ஆண் கொழந்தைதான். ஸ்வீட்டுக்கு எங்கிட்டே ஆர்டர் கொடுக்க வரப் போறே பாரேன்.

 

கிட்டு: சாந்தா துடியாத் துடிக்கிறா! ராயரே

 

ஆனந்தராவ்: த்சொ… த்சொ… பாவம்! கொழந்தைக்கு ஒல்லியான உடல்வாகு! ம்ம்ம் ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலை சாத்தறதா வேண்டிக்கோ, கிட்டு காப்பிக்கு வந்தியா?

 

கிட்டு: ஆமாம் ராயர்வாள்…

 

ஆனந்தராவ்: போ… போ உள்ளே பார்சல்லே உமாசங்கர் தான் நிக்கறான்… ம்ம்… நீயும் என்ன பண்ணுவே? ஒண்டிக் கட்டை… கூட மாட ஒத்தாசைக்கும் ஆளில்லே…

 

(கண கணவென்று மணி அடித்துக் கொண்ட வந்து நிற்கிறான் பால்கார வடிவேலு. சைக்கிள் காரியரின் பின்னால் பெரிய பால்கேன்)
ஆனந்தராவ்: வடிவேலு… இன்னும் கொஞ்சம் காலம் பறவா வந்துடப்படாதா முதலாளி?

 

வடிவேலு: நான் இன்னா சாமி பண்ணட்டும்? என் கிராக்கியிலே ரெண்டு பெரிய சீமை மாடு சீக்குன்னு பால் கறவை நின்னு போச்சு. ஒங்க ஹோட்டலுக்கு பால் டிமாண்ட் ஆயிடுமேண்ணு நாலு ஊரு சுத்தி பாலைப் பீறாஞ்சிக்குணு வர்றதுக்குள்ளாறே, எம்மாங் கறுக்கல்லே கௌம்பினாலும் தோ மணி ஏயு ஆயிடுச்சு! ஒங்கவூடு பக்கத்து சந்து. அஞ்சு மணிக்கு எயுந்து அஞ்சு பத்துக்கெல்லாம் வந்து டபக்ணு கல்லாவிலே குந்திக்குவே?

 

ரங்கையர்: காபிக்குப் பால் காய அரைமணி நேரமாவது ஆவும். காயாத பால்லே காப்பி போட்டா ஆனந்த பவன் வாங்கியிருக்கிற பேரு ரிப்பேராக வேண்டியதுதான்! ஏழு மணிக்குப் பால் கேனைக் கொண்டாறே. மாருதி கேப் காரனுக்கு மட்டும் அஞ்சு மணிக்கு ஊத்திட முடியறது… அங்கே மட்டும் எந்த மாடும் சீக்காக மாட்டேங்கறது.

 

வடிவேலு: (கோபமாக) இத பாருங்கோ… ராயரே! ஒங்க மூஞ்சியைப் பார்த்து இத சும்மா வுடறேன். இத்தினி வர்சம் பளகிட்டு ஐயிரு இன்னா கேழ்வி கேட்டாரு பாத்தியா… ஐய… சிரிச்சுணு குந்திக்கிணு கீறியே… மாருதி கேப்புக்கு பால் ஊத்தறேன்… இல்லேங்கல… வாஸ்தவம்! ஆனந்தபவனுக்கு மட்டம் தட்டிட்டா ஊத்தறேன்? இங்கே மன்சாள் கீறாங்க… டிலே ஆவுதுண்ணா இன்னின்ன காரணத்துக் கோசரம் ஆவுதுண்ணு சொன்னா புரிஞ்சுக்குவாங்கண்ற சொந்தத்திலே தான் வர்றோம்… சொல்லேன் ராயரே… இந்த மாசத்திலே என்னிக் காவது டிலே ஆச்சா?

 

ஆனந்தராவ்: விடுடா வடிவேலு! ஐயருக்குப் பால் காயணுமேங்கற கவலை. ஒனக்கு சைக்கிள் மிதிக்கிற தொல்லை. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் மெண்டுக்கு வாங்கோ.

 

ரங்கையர்: (மனசுள்) இப்படியே ஒவ்வொருத்தர்க்கும் செல்லம்

குடுத்துண்டே போங்கோ…

 

ஆனந்தராவ்: (பேச்சை மாற்றி) இன்னிக்குக் காலம்பற என்ன ஸ்பெஷல் போடச் சொல்லியிருக்கே ரங்கா?

 

ரங்கையர்: இட்லி கொத்ஸு, ஆமவடை, பொங்கல் அவியல்.

 

ஆனந்தராவ்: சாஹு போடலியா?

 

ரங்கையர்: சாஹுதான் நேத்திக்குப் போட்டுட்டோ மேண்ணா!

 

ஆனந்தராவ்: ஓஹோ?

 

ரங்கையர்: பூவை சாத்தியாச்சு! சுப்புணி சாம்பிராணி காட்டிட்டான். நீங்க கல்லாவிலே வந்து உட்காருங்கோ. (உள்ளே போகிறார்)

 

ஆனந்தராவ்: கிருஷ்ண கிருஷ்ண!

 

வாசுதேவாச்சார்: (பில் கொடுக்க வருகிறார்) ஆனந்தராவ்… நேக்கு ஒரு சந்தேகம்டா.

 

ஆனந்தராவ்: சொல்லுங்கோண்ணா.

 

வாசுதேவாச்சார்: இந்த ஹோட்டலுக்கு நீ ப்ரொப்ரைட்டரா… ரங்கையரா?

 

ஆனந்தராவ்: என்னண்ணா… எல்லாம் தெரிஞ்சுண்டு இப்படி ஒரு கேள்வி கேக்கறேள்! ஓட்டல் என்னிது மட்டுமா என்ன… இந்த ரங்கையன்… சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா ஸ்டோர் ரூம் மரியதாஸ்… நேத்திக்கு காபி சாப்பிடற தில்லேண்ணு சபதம் வச்சுட்டு இன்னிக்கு முறிச்சுணுட்ட நீங்க… எல்லோருடையதும் தாண்ணா… சும்மா ஒரு பொம்மையா பேருக்கு ஒரு சூத்திரமா நான் கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுண்டிருக்கேன்… ஒங்களுக்கு இந்தக் கட்டிடத்தைக் காலி பண்ணுண்ணு ஏழு வருஷத்துக்கு மின்னாடி சொந்தக்காரச் செட்டியார் கெடுபிடியா வந்து நிண்ணது நினைவிருக்குமேண்ணா.

 

வாசுதேவாச்சார்: ஏண்டா நினைவில்லாமே! நான் தானே ஸ்டே வாங்கிக் கொடுத்தேன்.

 

ஆனந்தராவ்: அப்போ ரங்கன் பேசின பேச்சு ஞாபகமிருக்காண்ணா… சப்ளையர், குக், சாமான் தேய்க்கறவா, வாடிக்கைக்காரர் எல்லாரையும் கூட்டமா கூட்டி நிறுத்திண்டு ரங்கன் பேசியது ஒவ்வொண்ணும் எப்ப நெனச்சாலும் கண கணன்னு ‘எக்கோ’ ஆறதண்ணா. (பின்னணியில் ரங்கையர் குரல் பேசுகிறது)

 

ரங்கையர்: செட்டியார்வாள்! இது வெறும் வியாபார ஸ்தலமில்லே. சாமான்யமான காபி கிளப் இல்லே. ஒரு குடும்பம். பதிமூணு வருஷமோ ஊரோட பழகிட்ட குடும்பம். பிடிவாதம் பண்ணி குடும்பத்தைக் கலைச்சிடாதீங்க. வாடகை ஏத்தறேளா… ஏத்துங்க… ஆனா குடும்பத்தைப் பிரிக்காதேங்கோ… எங்களுக்கு வேலை கெடைக்காமயும் போய்டாது… எங்க முதலாளியும் பட்டினியா இருந்துடப்போறதில்லே. ஆனா இந்தக் குடி சிதறிடும் நீங்க வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் அழுது காரியத்தை வேணும்னா சாதிச்சுடலாம்… ஊர்ப்பகை வந்தா நீங்க ஒரு தொழிலும் செய்ய முடியாது.

 

வாசுதேவாச்சார்: அதுவும் சரிதாண்டா… அதோ யார் வர்றா… ஒம் பிள்ளை இல்லே… இவன் தானே செகண்ட் இயர் பி.எஸ்.ஸி. படிக்கறவன்… ராஜாமணி தானே!

 

ஆனந்தராவ்: ஆமாண்ணா.

 

வாசுதேவாச்சாரி: கெமிஸ்ட்ரியா… பிஸிக்கா…

 

ஆனந்தராவ்: கெமிஸ்ட்ரின்னா!

 

வாசுதேவாச்சார்: கிரிக்கெட், பாட்டும் ஹேட்டுமா பெரிய பிளேயர் மாதிரி வந்து நிக்கிறான்! பி.எஸ்.ஸி. வேற படிக்க வச்சுண்டிருக்கே… ஒனக்கப்புறம் இவன்லாம் வந்து கேஷ்ல உட்கார்ந்து பில் வாங்கி எப்படிடா ஹோட்டல் நடத்தப் போறான்?

 

ஆனந்தராவ்: அதுக்குன்னு டயம் வரச்சே அதது நடக்கும்னா… என்ன ராஜா… வௌயாடப் போகலியா.

 

ராஜாமணி: இல்லேப்பா சந்துருவுக்கு ஜுரம் வரல்லியாம்… காப்டன் மெட்ராஸ் போறான். இவனுங்க ரெண்டு பேரும் போய்ட்டா வௌயாட ஆள் இல்லே. ஹோட்டலுக்கு போறேண்டாண்ணு வந்துட்டேன் நான் கேஷ்ல உட்கார்றேன்! நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்கோ… அடடே இருங்கப்பா… ஸ்டோர் ரூம்லே வேஷ்டி வச்சிருக்கேன். போய் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்; இல்லேண்ணா ரங்கையர் கல்லாவிலே எப்படி ஒக்காரணும்னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்… ஒன் மினிட் (அவசர அவசரமாக உள்ளே போகிறான்)

 

ஆனந்தராவ்: (தனக்குள்) இவனுக்குக் கூட ரங்கையர்னா ஒரு பயம் இருக்கு! ரங்கா… ரங்கா…

 

(திரை)

 

[தொடரும்]

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *