பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

 

 

1.மாநகரக் கோவர்த்தனள்

 

புள்ளியாய்த் தொடங்கிய மழை

வலுக்க நேர்ந்ததும்

இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள்

இருள்கவிழ்ந்த பொழுதில்

ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள்

செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள்

துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள்

கடந்த ஆண்டு மழையோடு

இந்த ஆண்டு மழையை

ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள்

தார்ச்சாலையில் தவழ்ந்தோடும் தண்ணீரை

வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள்

 

அப்போது

யாரோ ஒரு பிச்சைக்காரி

தன் பிள்ளைகளுடன் ஒண்டிக்கொள்ள

தயங்கித்தயங்கி நெருங்கிவந்தாள்

உடனே ஒருவன்

கொஞ்சமும் தயக்கமின்றி

கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டினான்

நகர்ந்து நகர்ந்து

இடத்துக்காக அவள் யாசிக்கவேண்டியிருந்தது

விரல்நுழைத்த சாவிக்கொத்தை

சுற்றிக்கொண்டிருந்தவள்

அருவருப்பாக அவளைப் பார்த்து முறைத்தாள்

யாருக்கும்

அவளுக்கு இடம்தர மனமில்லை

 

இறுதியில்

பாராமுகங்கள் பார்க்கப்பார்க்க

கோவர்த்தன மலையைப்போல

ஈரமுந்தானையை தலைமேல் உயர்த்தி

குழந்தைகளோடு ஒடுங்கவைத்து

மழையிலேயே நின்றாள் அவள்.

 

2.இரண்டு விஷயங்கள்

 

கிணறு என்கிற சொல்லின்மூலம்

உங்கள் மனம் உருவகிக்கக்கூடிய

அமைப்புகளைப்பற்றி எதுவும் தெரியாது

நான் குடியிருக்கும் வீட்டில்

மாடிப்படிகளின் தொடக்கத்துக்கும்

குளியலறையின் சுவருக்கும்

இடையில் இருக்கிறது கிணறு.

நாலு சதுர அடியுள்ள மூடியால்

அதை எளிதில் அடைத்துவிடலாம்

ஒரு சமயத்தில் ஒரு வாளியைமட்டுமே

கிணற்றுக்குள் இறக்கமுடியும்

பக்கச்சுவர்களில் இடிபடாமல்

இறக்குவதும் எடுப்பதும் எளிதல்ல

ஒரு பேச்சுத்துணைக்குக்கூட

அருகில் யாரும் நிற்கமாட்டார்கள்

ஒருவர் குடத்துடன் நடந்த பிறகுதான்

இன்னொருவரால் நெருங்கிவரமுடியும்

நூறடி ஆழத்தில் சுரந்தளிக்கும்

நிலவின் விரல்தீண்டா நீர்

அபூர்வமான பலகோணத்திஉல் தகதகக்கும்

 

ஒரு விஷயம்

இந்தக் கிணற்றாங்கரையில்

கர்ப்பிணிப் பிச்சைக்காரிகளும்

நாடோடிகளும் பெருகிவந்து

ஒருபோதும் தண்ணீருக்குக் கையேந்தியதில்லை

 

இன்னொரு விஷயம்

தரைப்பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில்

தாகம் தணித்துக்கொள்ள

இறங்கிவந்ததுமில்லை

காக்கைகளும் குருவிகளும்

 

3. உருமாற்றம்

 

வலையை மெதுவாக இழுக்கிறார்கள்

இழுபட்ட பகுதிகள்

கொசுவம்போல தோளில் மடிபட

நெருங்கி வருகிறது நடுப்பகுதி

இருவர் தோள்களுக்கிடையே

ஊஞ்சலெனத் தொங்கும் வலைக்குள்

வகைவகையாக மின்னும் மீன்கள்

கரையேறிப் பிரிக்கப்பட்டதும்

தபதபவென மண்ணில் விழுகின்றன

உலுக்கப்பட்ட புளியம்பழங்களைப்போல

உதிராமல் வலையிலேயே

சிக்கிக்கொண்ட மீன்கள்

விரல்களால் நிண்டியதும் விழுந்துவிடுகின்றன

மூச்சுக்கு உதவாத காற்றில்

திறந்துதிறந்து மூடுகின்றன அவற்றின் வாய்கள்

இனியென்றும் திரும்பமுடியாத கடலைப் பார்த்தபடி

துள்ளி அடங்குகின்றன உடல்கள்

சிறிதும் பெரிதுமாக

சிதறியவை அனைத்தையும்

கூடைக்குள் வாரிப் போடுகிறார்கள்

அன்றைய பொழுதுக்கு வேண்டிய

அரிசியையும் மதுவையும் நினைத்தபடி

 

4. மழைப்பறவை

 

விடியத் தொடங்கும் நேரத்தில்

காற்றிலேயே நெளிந்து தாவுகிறது

காணக் கிட்டாத கம்பிமழைப் பறவை

அதன் சிறகுகள் மின்னுகின்றன.

அவற்றின் அசைவும் தெரிகிறது

ஈரம் வருடுகிறது கன்னத்தை

நுரைப்புள்ளிகள் ஒதுங்குகின்றன கூந்தலில்

கோலமிட வந்த நங்கை

மனமும் உடலும் சிலிர்க்க நிற்கிறாள்.

அதன் ரகசிய வருகையாக்

நந்தியாவட்டைப் பூவின் இதழ்கள்

அகன்ற குரோட்டன் இலைகள்

எங்கெங்கும் நிறைந்திருக்கின்றது ஈரம்

தரையில் மட்டுமில்லை தடம்.

 

5. நிறைதல்

 

மொழிபுரியாத கடற்கரை ஊரில்

தென்னந்தோப்போரம் நடந்து செல்கிறேன்

கொட்டாங்கச்சி மேளத்தைக்

குச்சியால் தட்டியபடி

காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரே ஒரு சிறுமி

அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது

ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்

அருகில் நிற்பதை உணராமல்

அவளது விரல் குச்சியை இயக்குகிறது

அவள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு

குரங்குக்குட்டிகள்போல

உருண்டும் புரண்டும்

எம்பியும் தவழ்ந்தும்

நாடகமாடுகின்றன அலைகள்

கீற்றுகளின் கைதட்டல் ஓசை

கிறுகிறுக்க் வைக்கின்றன அவற்றை

உச்சத்தை நோக்கித் தாவுகிறது ஆட்டம்

தற்செயலாகத் திரும்புகிறது சிறுமியின் பார்வை

நெத்துப்பல் காட்டிச் சிரிக்கிறாள்

அவளையே தொடரும்படி சைகைகாட்டுகிறான்.

கரையெங்கும் பரவி

நிறைகிறது மேள இசை

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    vaLava. duraiyan says:

    முதல் மூன்று கவிதைகளுமே அருமையான சிறுகதைகளாகக் கூடிய கவிதைகள். கோவர்த்தன மலை தூக்கியது நல்ல ஒப்பிடு. ஒருவகையில் முரண். கண்ணன் மலை தூக்கி வெற்றி பெற்றான். ஆனால் அந்ததாய்? அதுதான் கேள்விக்குறி. கிணறு பற்றிய கவிதையில் குருவிகள் வந்து தண்ணீர் குடிக்க முடியவில்லையே என்பதுதான் கவிஞனின் மனம் என்று புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *