கவிதைகள்- கு.அழகர்சாமி

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 

 

(1)

சிறகுகளைக் கேட்கும் நான்

 

எப்படி

கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்?

 

எப்படி

குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்?

 

எப்படி

ஆகாயத்தின் முடிவில்லாக் கனவின் கதவுகளைத் திறந்து முடிவில்

ஒன்றுமில்லையென்கிறாய்?

 

எப்படி

சித்தம் போக்கில் திரிந்து வெட்ட வெளியில் கற்ற ஞானத்தைக் காற்றின் பாடலாய் எழுதுகிறாய்?

 

எப்படி

கோடுகளிழுக்காமல் பகலெல்லாம் நீ பறந்து வரையும் வானக் கோலங்களின் புள்ளிகள் நட்சத்திரங்களென்று இரவில் கூடடைகிறாய்?

 

எப்படி

எங்கிருந்தோ கொண்டு வந்த இரையைக் கரையும் குஞ்சின் வாயில்

கொஞ்சம் ஆகாயத்தையும் கொத்திச் சேர்த்து ஊட்டுகிறாய்?

 

எப்படி

சட்டென்று கண் பட்ட தருணத்திலேயே உனை உள் பொத்தி வைத்துக் கொள்ளும் எனைக் ’கண் கட்டிச்’ செல்கிறாய் ?

எப்படி

சிறகுகளால் மட்டுமல்ல ’நான் பறக்கிறேனென்று’ உன் சிறகுகளைக் கேட்கும் எனக்கு நீ சொல்கிறாய் பறவையே?

 

(2)

செய்தித் தாளை வாசிக்கையில்

 

செய்தித் தாளை வாசித்து விட்டு

சேர்த்த தகவல் சாம்பலை மூளைக் கிண்ணத்தில் தட்டுவேன்.

 

மூளைக் கிண்ணத்தில் நிரம்பி வழியும் தகவல் சாம்பலை அள்ளி

முழுதும் ’பொது அறிவு’ பூசிக் கொள்வேன்.

 

கொஞ்சமும்

குறைவில்லை கோரை போல் நாளும் வளரும் செய்திகளுக்கும்.

 

எந்தப் பக்கத்தை வாசிக்கா விட்டாலும்

இறந்தவர்களின் இரங்கல் பக்கத்தை வாசிக்காமல் இருக்க முடியவில்லை.

 

காலம் சதா புகைக்க

மெல்லச் சிகரெட்டாய் எரிந்து முடிவது தான் கழியும் வாழ் நாளா?

 

அறை மூலையில் குவிந்து கிடக்கும் பழைய செய்தித் தாள்கள்

இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளாய் நெடி கொள்ளும்.

 

இரவில் மின் விசிறிக் காற்றில் கொள்ளிவாய்ப் பிசாசு போல் அவை

கண் முழிக்கும்.

 

மூலை காலியாயிருந்தால்

பழைய செய்தித் தாள் குவியலின் பின்னால் சுவர்ப் பல்லிகளாவது ஒளியாமல் இருக்கும்.

செய்தித் தாளை இனி வாசிக்காமல் விட்டு விடலாமென்றாலும்

விட்டு விட முடியவில்லை.

 

செய்தித் தாளை வாசிக்கையில் சிகரெட்டைப் பற்ற வைப்பதாய் என் சித்தம் சொல்லும்.

(3)

பூ

பூ

பூக்கும் வேளையில் பூத்துக் கொண்டே இருப்பது இப்படித் தான் இருக்கும்.

 

பூ

’தொப்பென்று’ கீழே விழுந்து மீண்டும் பூத்தால் இப்படித் தான் இருக்கும்.

 

பூ

முன் பின் தெரியாத உன்னிடம் முறுவலிப்பது இப்படித் தான் இருக்கும்.

 

பூ

பதிலுக்கு நீ முறுவலித்து பரிவில் உன்னிடம் தாவினால் இப்படித் தான் இருக்கும்.

 

பூ

ஒளிரும் கண்ணாடியாய் ஒளிரும் கண்களில் பிரகாசிப்பது இப்படித் தன் இருக்கும்.

 

பூ

குழந்தையென்று கண்டு மெய்மறந்து பூ மூடிய வண்டாய் நீ சிறைப்பட்டால் எப்படித் தான் இருக்கும்?

                                                    

 

(4)

குழந்தையும் பொம்மையும்

 

அதன்

தலையில்

குட்டும்.

 

கண்களைக்

கிள்ளும்.

 

கைகளைத்

திருகும்.

 

கால்களை

இழுக்கும்.

 

’வீல் வீலெ’ன்று அழும்

குழந்தை.

 

ஏன் ‘திடீரெ’ன்று குழந்தை அழுகிறதென்று

யாருக்கும் தெரியவில்லை.

 

பொம்மை

வலி பொறுக்க முடியாமல் உயிர் பெற்றிருக்கும்.

 

கு.அழகர்சாமி

Series Navigation
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *