தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014


சாலையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களைக் காணும் போதெல்லாம் என் மனம் பதை பதைக்கிறது. எந்த தாய்மாரின் தலைமகன்களோ,  வாந்தி பண்ணும் போது கருவிற்கு நோகக்  கூடாதென்று அடிவயிற்றைப் பிடித்திருப்பாள். சளி காய்ச்சலுக்கும் தாங்காமல் பத்தியம் என்று பட்டினி கிடந்திருப்பாள்.

 

குலம் விளங்க குலக்கொழுந்திற்காய் கோயில் வலம் வந்திருப்பாள். குடி போதையில் தரையில் விழுந்து புரளும் இவனைக் கண்டால் எப்படி தவித்துப் போய்த் துடிப்பாள் ?

 

குடிப்பழக்கம் ஏழையர் குடியைக் கெடுக்குது. வரிப்பணத்தை வாரிக் குவிக்கும் அரசாங்கத்துக்கு யார் கெட்டால் என்ன ? யார் பட்டால் என்ன ?

 

குடிப்பழக்கம் என்பதே தீங்கு தான். மனதின் அடிமைத்தனம் தான். இதில் மதுப் பழக்கம் என்பது மனிதனின்  அந்தஸ்த்தை உயர்த்துவதா என்ன?

 

மது பானங்கள் தொன்று தொட்டு இருந்தாலும், அதை ஆளும் மனப்பாங்கை எங்கே தொலைத்தான் மனிதன் ?  எதையும் தேர்ந்து ஆளுமை செய்யும் திறன் படைத்த மனிதன் ஒரு மயக்க பானத்திற்கு அடிமைப்பட்டு அதிலிருந்து விலக வழியின்றி தானும் வாழாமல்  தன்னுடன் பிறப்புகளின்  அனுதின வாழ்விலும்,  ஊதியத்திலும் ஏன் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் ?

 

மது குடிப்பவர்களை கொழுப்பெடுத்து குடிக்கிறார் என்று கிராமப்புறத்தில் வகை பிரித்து வைத்திருக்க, குடிப்பழக்கம் ஒரு சமூக நோய் என்று மருத்துவம் கூறுகிறது.

 

போதை மருந்துக்கு அடிமையாவது போல் குடிப்பழக்கமும் பழக்க அடிமை நோய். இதைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவம் கூறினாலும். நோய் உருவாக்கும் இந்த மதுபானத்தை அரசாங்கமே ஏன் விற்க அனுமதித்துக் கொண்டிருக்கிறது என்பது என் அழுத்தமான கேள்வி.  அப்படிக் குடிவெறி நோயாளி ஆனோரை அரசாங்கம் இலவசமாய்க் குணப்படுத்த வேண்டாமா ?

 

ஒவ்வோர் ஏழை மனிதனையும் நோயாளியாக மாற்றிவிட்டு, இந்த அரசாங்கம் அவரைக் குணப்படுத்தாது, யாருக்காக வீற்றிருக்கிறது ? அரசாங்கத் தலைவர்கள் மனிதர்களை பைத்தியங்களாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் !

 

இவ்விதக் கேள்விகள் மனதிற்குள் எழுந்தாலும் சக மனிதனைப் பற்றிய எந்த அக்கறை இன்மையும் நமக்கு இல்லாத போது, அல்லது தனக்கே தன் நிலையின் மீது பொறுப்பில்லாத போது உலகத்தைப் பற்றிக் கவலைப்பட எந்த நியதியும் இருக்க வேண்டியதில்லை.

 

இருப்பினும் சிலர் உள்ள ஏவுதலின் பொருட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக மதுவிலக்கு குறித்து, மனிதாபிமானமோடு வாதாடுபவர்களாகக் காட்சி  அளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பாசாங்குப் பின்னணி என்பது அரசியல் அணுகுமுறைக்கு மற்றொரு மனித நேய முலாம் பூசப்பட்டதாக இருக்கிறது.

 

குடிப்பழக்கம் மற்ற சிலருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கிறது.  மறுபக்கம் மறுவாழ்வு மையம் வைத்து, ஏழைகளிடம் பெரும்பணம் கறக்கலாம். சமூகப் பொறுப்புள்ளவர் போல் காட்டிக் கொள்ளலாம்.    குடி அடிமைகளுக்குத் திண்டாட்டம் என்றால் தொழில் ரீதியாக அணுகுபவர்களுக்கு கொண்டாட்டம் தான், எப்போது சாவு விழும் என்று எதிர்பார்க்கும் வெட்டியான் போல! அப்பொழுது தான் வெட்டியான் வீட்டில் அடுப்பெரியும். இந்த எதிர்பார்ப்பே பலரைக் கொல்லவும் செய்யும்.

 

அரசியல் தலைவர்கள் ஓட்டு கேட்கும் போதே ஒரு கோட்டர் வித் கோழி பிரியாணி தான். பிறகு எப்படி இந்த நிலை மாறும் ?  இந்த தமிழ்நாட்டில் என்றோ உலகத்தில் என்றோ பாடுவது.

 

ஒரு பக்கம் இவ்வுலகத்திற்கு தேவை ஆழமான அன்பு என்று யோசித்தாலும் மறு பக்கம் அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவுவதில்லை என்பது போல ராஜாங்கமும் நடந்து கொண்டிருக்கிறது.

 

குடிநோய் பரவிட , சமூகச் சூழலே முதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் ஆரோக்கியமாசொரு சமூகச் சூழலை உருவாக்கி யிருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில். சந்ததிகளைப் பற்றி நமக்கென்ன கவலை ?  நம் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அதை நம்முடைய விருப்பப்படி வாழ வேண்டும் என்ற சுய நலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது பொதுவாக ஒவ்வொருவரிடத்திலும்.

 

எல்லா காரணிகளுக்கும் ஒரு விழிப்புணர்வு முகாமைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள். அந்த விழிப்புணர்வு முகாமும் எந்த அளவிற்கு செயல்திறன் கொண்டதாக உள்ளது என்பது கேள்விக் குறி. இந்த நாட்டில் சுயநல நோக்கமின்றி, இலாப எதிர்பார்ப்பின்றி எந்தப் பொதுச் செயலும் நிகழ்வதில்லை.

 

ஒவ்வொரு மனிதனும் சுயச்சிந்தையில், பிறர் நலங் கருதிச் செயல்படாது, தன் மனதிற்கு எஜமானனாகாத வரை பழக்கங்களுக்கு அடிமையாகிக்கொண்டு தான் இருப்பான். அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது என்பது அவனின் சுயாதீனமே அன்றி வேறு இல்லை.

 

அரசாங்கம் குடிபோதை விற்பனைக் கட்டுப்பாடு, குடிநோயாளிகள் இலவசக் குணப்பாடு, குடிவெறித் தொல்லைக் குறைப்பு, காவல் துறைக் கண்காணிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துமா ?

 

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *